Advertisement

கடைசியாக பாயாசம் பரிமாற பட்டது… அனைவரும் உண்டுவிட்டு புகழ்ந்து விட, பாட்டியோ சிறிது உண்டு விட்டு யோசிக்கவும், ‘சே.. நான் எஸ்சாம் ரிசல்ட்க்கு கூட இப்படி டென்ஷன் ஆனது இல்லை…. இந்த ஒரு பாயாசத்தை பண்ணிட்டு நான் படுற பாடு  இருக்கே… முடியாலடா சாமி….’என்று மனதில் புலம்பிக் கொண்டு இருக்க…
“ம்ம்ம்… நல்லா இருக்கு…” என்று விட்டு மீண்டும் ஒரு முறை வாங்கி உண்டார் நீலுஅம்மாள்.
என்ன ஒரு சந்தோஷம் மஹாவிற்கு , சமையலின்  ராணி  என்று  தலையில்  கீரிடம்  வைத்து யாரோ அவார்ட் தந்தது போல ஒரு பூரிப்புடன் முகம் பிரகாசமானது….அடுத்த நந்தனின் பாராட்டை கேட்க மனதில் எழுந்த பேர்ராவலுடன் அவனை பார்க்க…  காற்று போன பலூன் போல் ஆனது அவள் முகம்….
‘இவ எப்படி சமைச்சா… வாய்ப்பில்லையே… ஒருவேலை இங்க எல்லாரும் இருங்காங்கன்னு பண்ணி இருப்பாளோ… ‘என்று சந்தேக பார்வை பார்த்து கொண்டு இருந்தான்…
‘சந்தேககோழி… எப்ப பாரு சந்தேக படுறதே வேலையா வச்சு இருப்பான் போல… பன்னி…கஷ்டப் பட்டு யூடிப் பார்த்து வேர்வை சிந்தி சமைச்சா எருமைமாடு சந்தேக படுது பாரு…. ‘மனதில்  திட்டியவள். அவனை கண்டு முறைக்கும் போது அம்சவேணி அவள் அருகில் வந்து சிரிக்க மஹாவும் பதிலுக்கு சிரித்து வைத்தாள்.
அதை கண்ட நந்தன் ‘அடியேய் பிராடு… அத்தை சமைச்சு குடுத்ததை தான் நீ சமைச்சேன்னு சொல்லி பீலா விடுறியா… கேடி…’ ஏளனமாக அவளை பார்த்து வைத்தான்…
அவனது பார்வைக்கான அர்த்தம் புரியாமல் விழித்த மஹா… அவனிடம் என்னவென்று கேட்க முடிவு செய்தாள்… 
அனைவரும் உண்டுவிட்டு எழுந்துவிட, நந்தன் மஹாவை பார்த்துக் கொண்டே தன் விரல்கள் ஒவ்வொன்றையும் நன்றாக சூப்பிக் கொண்டே எழுந்து சென்று கையை கழுவினான்.
‘இவன் லுக்கே சரியில்லையே… என்னாவா இருக்கும்…’அவளது யோசனையை தடை செய்தது  அம்சவேணியின் இனிப்பான வார்த்தைகள்… 
“என்னமா யோசனை…? உட்காரு சாப்பிடலாம்…”என்று அழைக்க, நந்தனின் எண்ணம் பின்னுக்கு தள்ளப்பட்டது அவளுக்கு….
“சரிங்க அத்தை….”வாய் எல்லாம் பல்லாக பதில் அளித்தாள்.
பின் டேப்பிலில் இருந்த மற்றவர்கள் உண்ட தட்டினை எடுக்க போக அவளை தடுத்தவர், “அது எல்லாம் வேலையாட்கள் பார்த்துப்பாங்க நீ உட்காரு…”என்றவர் நந்தன் அமர்ந்த நாற்காலியில் அமர செய்தவர் அவர்களும் அமர்ந்தனர்…. 
தன் முன் இருந்த தட்டை கண்டவள், அவன் உண்ண விதம் நினைவுக்கு வர, முகத்தை சுளித்தாள் ஒரு பக்கமாக. 
“லூசு…. எருமை மாடு… மனுசனை மாறிய சாப்டான்.. உவேக்……”மெல்ல முணுமுணுக்க… 
பின் தன் அத்தைமார்கள் அவர்கள் கணவர் உண்ட தட்டில் உணவை பரிமாறி கொள்வதை கேள்வியாக பார்த்தாள் புரியாமல்… அதை கண்ட அம்சவேணி, “புருஷன் சாப்பிட்ட தட்டுல பொண்டாட்டி சாப்பிடுறது இந்த வீட்டோட பழக்கம் மா… நீயும் நந்தனின் தட்டிலேயே சாப்பிடு மா… இல்லாட்டி பெரியம்மா பார்த்தா ஏதாச்சும் சொல்லுவாங்க…”என்றவரை அதிர்ந்து பார்த்தவள்,
‘இது தெரிஞ்சு தான் அந்த காண்டாமிருகம் அப்படி சாப்பிட்டானா… டேய் எருமை மாடு… ‘என்று எண்ணிக் கொண்டு இருக்கும் போது நந்தன் தண்ணீர் அருந்துவது போல் வந்து மஹாவை நக்கலாக ஒரு பார்வை பார்க்க, மஹாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது… ‘உன்னை கொல்லாம விட மாட்டேன் டா தடிமாடு…’என்று கருவியவளை பார்த்து கண்ணடித்து விட்டு நந்தன் செல்ல ஐயோவென்று இருந்தது மஹாவிற்கு….
அவனை எண்ணை சட்டியில் வருத்துக் கொண்டே அம்சவேணி பரிமாறிய உணவை உண்டாள் மஹா…
அதை ஓரமாக நின்று பார்த்து சிரித்தவன்,”இதுக்கே இப்படி டென்ஷன் ஆனா எப்படி கொசுக்குட்டி… நாளைக்கு இத விட பெருசா இருக்கே… அதை என்ன பண்ண போற…”என்றவன் அவ்விடத்தை விட்டு அகன்றான்…. 
பின் பெரியவர்கள் அவர்கள் வேலையை பார்க்க, இளையவர்கள் மாடியில் அரட்டையில் இருந்தனர்…. 
மதிய உணவை முடித்துவிட்டு அத்தையுடன்  சிறிது நேரம் பேசிவிட்டு தன் ஆருயிர் பதியை கும்பிபாகம் செய்ய அவனை தேடி சென்றாள் மஹா… இளையவர்கள் அடித்துக் கொண்டு இருந்த கூத்தில் அவனை காணாது அங்கு இருந்து விலக போனவளை இழுத்து பிடித்து அமர வைத்தவர்கள்… அவளையும் நந்தனையும் வைத்து ஒரு படம் ஓட்ட, விட்டால் போதும் என்று அங்கு இருந்து தப்பித்து வருவதற்கு முன் மூச்சு திணறி போனாள் என்பது உண்மை.
பின் அவனை தேடி அவர்கள் அறைக்கு செல்ல அங்கு அவள் கண்ட காட்சியில் தன் தலையில் இடி விழுந்தது போல் ஸ்தம்பித்து நின்றாள். பின் தான் வந்த அரவம் தெரியாமல் வெளியே வந்தவள் தோட்டத்திற்கு சென்று அங்கு இருந்த கல்மேடையில் அமர்ந்துக் கொண்டாள் அழும் மனதை அடக்கி கொண்டு…
பல்லாயிரம் யோசனைகளுடன் இருந்தவள்  விடையை தேடி அலைந்தாள் உண்மையை அறிய….
சில நிமிட  நேர போராட்டத்தின் முடிவாக அவள் உணர்ந்த ஒன்று ‘ஸ்டேடஸ்’… அதனால் தான் நந்தனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்று தீர்மானித்தவள்… சற்று நேரத்திற்கு முன்பு அவள் கண்ட காட்சியும், அவனது வார்த்தைகளும் அவளை அவ்வாறே நினைக்க வைத்தது…
மாலை ஆனதும் கோவிலுக்கு கிளம்புவதற்காக தன் அறைக்கு செல்ல அங்கு நிம்மதியான நித்திரையில் இருந்தான் நந்தன்… அவனை கண்டதும் அவளுக்கு கோபம் வர, தன் உடமைகளை எடுத்துக் கொண்டு அவள் துணிமாற்றும் அறையினுள் சென்று தயாராகி வர… அப்பொழுதும் அவன் எழுந்த பாடில்லை…
‘இப்படியே தூங்கட்டும்… அப்புறம் லேட் ஆச்சுன்னு திட்டு வாங்கட்டும்… காலைல இருந்து என்னை அசிங்க படுத்திட்டு, கஷ்ட படுத்திட்டு இருக்கான்ல… இப்ப இவன் திட்டு வாங்கட்டும்… ‘மனதில் திட்டம் வகுத்து அவனை எழுப்பாமல் வெளியே சென்றுவிட அப்பொழுது தான் அவள் மூளை வேலை செய்தது…
‘அடியேய்… லூசு… அந்த காண்டாமிருகம் இந்த வீட்டு பய்யன்… அவனை எப்படி திட்டுவாங்க… ? லூசா நீ…. உன்னை தான் இந்த கேப்புல நல்லா டேமேஜ் பண்ணும் அந்த பாட்டி…. ஒரு பொண்டாட்டினா நீ தான் எழுப்பி விடணும், ஊட்டி விடணும்னு சொல்லுவாங்க… உனக்கு அது தேவையா… பேசாம போய் எழுப்பி விட்டுரு… ‘என்று முடிவெடுத்து அவசரமாக தன் அறைக்கு சென்று அவனை எழுப்ப, அவனோ தூக்கத்தில்….
“வர்ஷு மா… பிளீஸ் மா… கொஞ்ச நேரம்…”என்று உளரிவிட்டு புரண்டு படுக்க, 
மஹாவின் தலையில் ஒரு கூடை தனலை  கொட்டியது  போல துடித்து போனாள்… 
‘என்ன சொன்னதும் விட்டுட்டா… எப்பவும் டார்ச்சர் பண்ணுவாளே… வர்ஷு’ என்று எண்ணி அவன் திரும்பி பார்க்க அங்கு மஹாவை கண்டு, “சே… நீயா… நானும் வர்ஷுவோன்னு நினைச்சேன்…  ” அவன் பேசிக் கொண்டே அவளை பார்த்தவன், “ஐயோ… கோவிலுக்கு போகணும் இல்ல… நீ ரெடி ஆயிட்டியா… முன்னாடியே எழுப்பி விட்டு இருக்கலாம்ல… “என்று விட்டு அவசரமாக குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்….
மஹாவிற்கு தான் அவனது வார்த்தையையும் இச்செயலை எவ்வாறு எடுத்துக் கொள்ளவது என்று புரியாமல் குழம்பி நின்றாள்….
 
அவன் தயாராகி வெளி வந்ததும் பிரம்மை பிடித்தவள் போல் உணர்ச்சியற்று அவனுடன் நடந்தாள் குழப்பத்துடன்…. 
கீழே வந்தவர்களை பார்த்து நந்தனின் பாட்டி ஏன் இத்தனை நேரம் என்று கேட்க, 
“மஹா என்னை லேட்டா எழுப்பி விட்டுட்டா பாட்டி அதான் லேட்….” அழகாக தன் மனைவியை மாட்டி விட, 
‘அட பேய்யே… உனக்கு என்னடா அவ்வளவு கொலவெறி என்மேல….’ என்று அவனை பாவமாக பார்க்க, அவனோ அவளை கண்டு கொள்ளாமல் வெளியே சென்று வர்ஷுவுடனும், தன் அத்தை மகள் ரத்தினங்களுடனும் அரட்டையில் இறங்கினான்….
இங்கு அவனது பாட்டி ஒரு மூச்சு திட்டி முடிக்க… மஹா தலை குனிந்து விதியே என்று அனைத்தையும் வாங்கிக் கொண்டு நின்று இருந்தாள்…. 
பின் அவர் சென்று விட, ‘இந்த பாட்டி வாய்ல ஒரு நாள் பட்டாசை கொளுத்தி போடணும்… சப்பபபபபபா…. எப்படி திட்டுராங்க… முடியலடா சாமி…. ‘மனதில் எண்ணிக் கொண்டே வெளியே வர,
நந்தன் மஹாவை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை… கோவிலில் பொங்கல் வைக்கும் போதும் நந்தன் அவள் புறம் திரும்பவே இல்லை.. 
ஆனால் பாட்டியிடம் மட்டும் சரியாக அவளை  கோர்த்து  விட்டு கொண்டு  இருந்தான்… 
அன்று இரவு உணவை மஹாவை சமைக்க சொல்ல பெரிதும்   தடுமாறி போனாள்… விரகடுப்பில் கையை சுட்டுக் கொண்டு அம்சவேணியின்  உதவியுடன் சமையலை வெற்றியுடன் சமைத்து முடித்தாள்… 
அன்று முழுவதும் மஹாவிற்கு துணையாக நின்றது அம்சவேணி மட்டுமே… அவர் மீது பாசமும் மரியாதையும் ஒருங்கே எழுந்தது… அவர் இல்லையெனில் மஹாவிற்கு தனிமையாகவும் நிர்கதியாகவும் இருப்பது போல் உணர்ந்து இருப்பாள்… 
இரவில் தங்கள் அறைக்குள் நுழைந்த  மஹாவிற்கு அங்கு நந்தனை காணாமல் அறை வெறிச்சோடி இருக்க…பால்கனிக்கு சென்ற மஹா  ஒரு விரக்தி புன்னகையை சிந்தியவள், “கொஞ்சம் கூட என்னை பத்தி அவன் யோசிக்கவே இல்ல… வர்ஷு கூட இவ்வளவு கிளோஸா இருக்கான்…. மதியம் ரெண்டு பேரும் கட்டிபுடிச்சுட்டு நிக்குறாங்க…. அவனுக்கு வர்ஷுவை ரொம்ப பிடிக்கும்னா ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான்…?”என்று அவனது நினைவில் புலம்பிக் கொண்டு இருந்தவளுக்கு தான் கல்யாண வாழ்க்கையில் பெரிதாக தோற்றுக் கொண்டு இருக்கிறோம் என்று  புரிந்தது… 
மனதில் எழுந்த வலியுடன் நின்றுக் கொண்டு இருந்தவள், அறைக்குள் நந்தன் நுழையும் அரவம் கேட்டு அவள் உள்ளே வர, நந்தனோ மகிழ்ச்சியான மனநிலையுடன் படுக்கையில் படுத்துக் கொள்ள, மஹாவிற்கு என்னவோ போல் இருந்தது… 
பின் ஒரு தலையணையை எடுத்துக் கொண்டு சோஃபாவில் படுத்துக் கொள்ள… அவளின் செயலை கண்டவன் “ஸ்ரீ…பெட்லையே படு… ஏன் கஷ்ட்ட பட்டு அங்க படுக்கணும் இங்க வா…”என்க,
“தேவையில்லை….” என்ற ஒற்றை பதிலை அளித்துவிட்டு அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்…
அதற்கு, “திமிரு டி… உடம்பு முழுக்க திமிரு… எப்படியோ போ… எனக்கு என்ன வந்துச்சு…. ” என்று சத்தமாக முனகியவன் படுக்கையில் மீண்டும் படுத்து தன் தூக்கத்தை தொடர்ந்தான்….
‘நாளை அத்தை மாமா எல்லாரும் வந்துருவாங்க… அப்புறம் பிரச்சினை இல்லை… இவன் பண்ண எல்லாத்தையும் போட்டுக் கொடுக்கணும்…..’மனதில் எண்ணி நிம்மதி அடைந்தவள் மெல்ல உறங்கியும் போனாள்….
சென்னையில் மஹா தன் குடும்பத்துடன் இயல்பாக ஒன்றிக் கொண்டதை கண்டு இங்கும் அவ்வாறே இருப்பாள் என்று எண்ணி நந்தன் தன் பட்டாலத்துடன் ஐக்கியமாகி விட, அதற்கு நேர்மாறான தனிமை நிலையில் தவித்தாள் மஹா… 
காலை அவள் எழுந்து தயாராகி வரும் முன் அவளது அத்தைமார்களும் மாமன்களும் வந்து இருக்க… பசுவை கண்டவதும் துள்ளி குதித்து ஓடும் கன்றை போல் ஓடி சென்று கார்த்திகாவையும், வித்யாவையும் இறுக அணைத்து தன் மனதின்  கஷ்டத்தை  போக்கிக் கொள்ள முயன்றாள்…
அவர்களும் இவளின் பாசத்தை உணர்ந்து…பின் அணைத்து ஆறுதல் படுத்தியவர்களை விட்டு இம்மி அளவு கூட பிரியாமல் இருந்தாள்… காலை உணவை முடித்துவிட்டு தன் அத்தைமார்களுடன் கோவிலுக்கும், தோப்புக்கும் சென்றவள் மதியம் போல் வீடிற்கு திரும்பினாள்.
மதிய உணவிற்காக, டேபிளில் அடுக்கி இருந்த பதார்த்தங்களை கண்டு ஆணி அடித்தார் போல் நின்ற இடத்திலேயே நின்று விட்டாள் மஹா…
அவளை உரசிக் கொண்டு நின்ற நந்தன், “எல்லா ஐட்டமும் செம்ம ஸ்மெல் இல்ல… “என்று அவளிடம் கேட்க, அதிர்ந்து அவனை பார்க்க,
“ஸ்மெல்லே செமையா இருக்கே…அப்ப டேஸ்ட் எப்படி இருக்கும்? இன்னைக்கு ஒரு கட்டு கட்டிட வேண்டியது தான்… “என்று அவளை பார்த்து கண்சிமிட்டியவன் இரு கைகளையும் பரபரவென தேய்த்துக் கொண்டே இருக்கையில் சென்று அமர்ந்தான்…
டேபிளில் இருந்த அனைத்தும் வானில் பறப்பவையும், நீரில் நீந்துவதும், தரையில் நடப்பதுவும் என  அசைவமாக இருந்தது… மஹா அசைவம் உண்ண மாட்டாள் என்று நந்தனுக்கும் தெரியும் திருமணம் முடிந்து விருந்திற்கு சென்ற போது அறிந்து கொண்டான்… இருந்தும் அவளை சீண்டும் எண்ணத்தோட சுற்றிக் கொண்டு இருந்தான் நந்தன்…
வித்யா அனைவருக்கும் பரிமாற சொல்லவும், வேறு வழியின்றி பரிமாரியவளுக்கு வாந்தி வாராத குறைதான்… இருந்தும் அனைவருக்காகவும் அதை பொறுத்துக் கொண்டாள்… 
நந்தனோ… அவளை பார்த்துக் கொண்டே லெக் பீஸை ஒரு பிடி பிடிக்க….மஹாவிற்கு அவனை ரூம் போட்டு  அடிக்கும் அளவுக்கு கோபம் வந்தது…
பின் அவள் அதே தட்டில் உண்ண வேண்டும் என்று எண்ணியவளுக்கு தன் நிலையை நினைத்து முகம் சுருங்க தலை குனிந்துக் கொண்டாள்…
மனதில் காதல் இருந்த போதிலும் அதை தன் இணையுடன் பகிராமல், தன் மேல் தன் துணைக்கு அன்பில்லை என்று எண்ணி மருகி கொண்டு இருப்பவளுக்கு கணவன் உண்ட தட்டில் உணவு   உண்ண மனசு ஒப்பவில்லை போலும்… 
இருமனங்களும் காதல் கொண்டு வாழும் போது ஒருவர் உண்டது மற்றவருக்கு முக சுளிப்பை அளிக்காது அதில் காதலே தெரியும்…. ஆனால் இங்கோ இதயம் முழுக்க காதலை சுமந்துக் கொண்டு இருந்தும், அவர்களின் நடுவில் ஈகோ, பிடிவாதம் என்னும் திரை இருப்பதை இரு உள்ளங்களும் அறிந்தாலும் அதை உடைத்தெரியாமல் தங்கள் கூட்டிற்குள் அடைப்பட்டு இருந்தனர்…
நொடிக்கொருமுறை அவளையே பார்த்துக் கொண்டே உண்ண, அவள் முறைப்பை ரசித்தவன் அவள் முகம் கசங்கவும் தன் விளையாட்டை சற்று குறைத்துக் கொண்டான்…
அனைவரும் உண்டுவிட்டு எழுந்துவிட, அவன் உண்ட தட்டையே வெறித்துப் பார்த்தவளுக்கு அழுகை வரும் போல் இருந்தது… ‘இதுக்கு பேசாம நாம பட்டினியாவே இருந்து இருக்கலாம்… ‘என்று எண்ணி தன் கைகளை பிசைந்துக் கொண்டு அமர்ந்து இருந்தவள் முகம் ஒரு வித தவிப்புடன் இருந்தது….
‘அத்தை கிட்ட பேசாம சொல்லிறலாம்… நான் அசைவம் சாப்பிட மாட்டேன்னு… எதுக்கு வீண் பரிட்சை செஞ்சுகிட்டு…’மனதில் எடுத்த முடிவுடன் தன் அருகில் இருந்த கார்த்திகாவை ஏக்கத்தோடு பார்த்தவள் பேச வாயெடுக்கும் முன், 
“என்ன சாப்பிடுற எண்ணம் இருக்கா இல்லையா… தட்டையே பார்த்துட்டு இருந்தா பசி அடங்கிருமா…’என்று பாட்டி குரல் எழுப்ப இவளின் வாய் சட்டென்று பூட்டு போட்டு கொண்டது…
“சா… சாப்பிடுறேன்… பா… பாட்டி…”என்று திணறினாள், கார்த்திகா அவள் புறம் திரும்பி தட்டில் சாதத்தை வைக்க போக அவரை தடுத்து தானே வைத்துக் கொள்வாதாக கூறியவள்…
ஒரு வித பரிதவிப்புடன் நடுங்கும் கைகளால் சாதத்தை எடுக்க போனாள்….

கண்டிஷன்ஸ் தொடரும் …….

Advertisement