Advertisement

UD:27
வீட்டினுள் நுழைந்தவர்களை அனைவரும் வரவேற்க… நந்தனிடம் உரிமை காட்டியவர்கள் தன்னை  சற்று விலக்கியே வைத்தது போல் இருந்தது மஹாவிற்கு….
 
அப்பொழுது உள்ளரையில் இருந்து வந்தார் அந்த வீட்டின் மூத்தவர் நீலுஅம்மாள் நந்தனின் தந்தை வழி பாட்டி….. வந்தவர் மஹாவையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருக்க….
அவரது பார்வையை தாங்கிக் கொள்ள முடியாமல் தலையை தாழ்த்தி கொண்டாள் மஹா… ஏனோ இனம் புரியாத ஒரு வித பயம் அவள் மனதை சூழ ஆரம்பித்தது…. 
மஹாவின் மீது இருந்த அவரது பார்வையை உணர்ந்து, நந்தன் மஹாவின் கைக்குள் தன் கையை கோர்த்து கொள்ள… அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு நந்தன் தன்னை கண்டு  கொள்ளாதது  போல  பாட்டியை பார்த்துக் கொண்டு இருப்பதை போல் தோன்றியது…
பின் சிறிது நேர நலன் விசாரிப்பு, சிலரின் அறிமுக பேச்சு என அனைத்தும் முடிந்து, விருந்தினர் அறையின் படுக்கையில் அமர்ந்து தன் நினைவில் உழன்று கொண்டு இருந்தாள் மஹா…
‘அவன் ஏன் எதுவுமே எனக்காக பேசல… ஒரு கணவனா  அவன் எனக்கு ஒன்னுமே பண்ணல… ஏன்… எல்லார் கூடவும் சேர்ந்து அவனும் தானே சிரிச்சான்… அப்ப அவனும் அவனைவிட தகுதி குறைஞ்ச என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதா நினைச்சு கவலை படுறானா…?” கேள்விகள் மண்டையை குடைய அவனது ஸ்டேட்டஸ் வார்த்தையும் அதன் பின் நடந்த பல நிகழ்வுகளையும் யோசித்துக்கொண்டு இருந்தவளுக்கு நந்தனின் பாட்டி பேசியது மீண்டும் நினைவில் வந்தது.. 
மஹாவையே பார்த்துக் கொண்டு இருந்த நீலுஅம்மாள், “என்ன நந்தா கண்ணா… பத்மாநந்தன் என்னமோ என் மருமக அப்படி இப்படின்னு சொன்னான், பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே… இவள போயா உனக்கு கட்டி வச்சான்…?”என்று அவளை நோக்கி  கையை காட்டி கேட்டார் அலட்சியமாக…
நந்தனின் பாட்டி கேட்ட விதத்தில் அதிர்ந்தவள்,அங்கு இருந்த சில உறவினர்கள் அவர் கேட்ட விதத்தில் லேசாக சிரித்துவிட மஹாவின் தன்மானம் பெரிதாக அடி வாங்கியது… அப்படியே பூமிக்குள் புதைந்து விட மாட்டோமா என்று இருந்தது… 
நந்தனோ அவர் கூறியதை வேறு அர்த்தத்தில், அதாவது அவளது குறும்பு தனம், சண்டைக்கு நிற்பது, பார்ட்டி என்று மாட்டிக் கொண்டதை எண்ணி சிரிக்க… அதை அவன் மனையாள் பார்த்துவிட பாட்டி சொன்னதிற்கு தான் சிரிக்கின்றான் என்று எண்ணி அவள் யாருமற்ற தனி காட்டில் முள்ளின் மேல் நிற்பதை போல் உணர்ந்தாள்…. 
அப்போது  மஹாவையே  பார்த்து  கொண்டு  இருந்த நந்தனின்  அத்தை பாட்டியின் வார்த்தையில்  அவள்  அதிர்ந்ததும் பின் அனைவரின் சிரிப்பிலும் முகம் சுருங்க நந்தனை இமைக்காமல் பார்த்துவிட்டு தலை கவிழ்ந்ததையும் கண்டு அவள் மனநிலையை புரிந்து  கொண்டவர் ,
“பெரியம்மா…. மஹாவை பார்த்தா நல்லா பொண்ணு மாதிரி தெரியுது… ஒருமுறை பார்த்தவுடனே முடிவு பண்ணா எப்படி …?மஹா நம்ம வீட்டுக்கு ரொம்ப பொருத்தமான பொண்ணா…. முக்கியமா அதுக்கும் மேல நம்ம நந்தாக்கு ஏத்த பொண்ணு மாதிரி தான் தெரியுது….” மஹாவை விட்டு கொடுக்காமல் பேசியவரை திரும்பி பார்த்தவள்,
முகத்தில் புன்னகையை கொண்டு வர முயற்சித்தவள் அது   முடியாமல் போக தலையை குனிந்துக் கொண்டாள்… மனதின் வேதனையை அவளால் ஜீரணிக்க முடியாமல் போனது… 
அம்சவேணி, நீலு அம்மாளின் தங்கை மகள், சாந்தமும் பாசமும் நிறைந்தவர். நீலுஅம்மாள் குடும்பத்தின் மூத்தவர்  என்பதால் அவரது ஆளுமை சற்று அதிகமாகவே இருந்து வந்தது…அவர்களின் குடும்பம் ஒரு மிக பெரிய கூட்டு குடும்பம்…. பத்மாநந்தனும் அவரது அண்ணன், தம்பியும் மட்டும் சென்னை வந்து தொழில் தொடங்கினர்… ஆனால் அங்கும் அனைவரும் ஒரே குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர்….
நீலு  அம்மாள் ,”அவ ஸ்ட்டேடஸ் என்னனு அவ போட்டு இருக்குற உடையிலேயே தெரியுதே… கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட ஆகல… பெரியவங்களை பார்க்கும் போது கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும்னு கூட தெரியல…. ம்ம்ம்… என்ன சொல்லி என்ன பிரயோஜனம்…  நம்ம தகுதிக்கு தகுந்த மாதிரி பார்த்து இருந்தா மரியாதைனா என்னனு தெரிஞ்சு இருக்கும்…” என்று அவர் சலிப்புடன் கூறவும், 
மஹாவின் கைகளை பற்றி இருந்தவன் அவளை இழுத்துக் கொண்டு சென்று அவர் கால்களை தொட்டு வணங்கி ஆசிர்வாதம் வாங்கினான். மஹாவும் முடக்கி விட்ட பொம்மையை போல் அவனை பார்த்து அதே போல் செய்தாள்…
“ம்… ம்… நல்லா இருங்க… இது எல்லாம் நானே  சொல்ல வேண்டி இருக்கு….”என்க,
நந்தனுக்கு அவனது பாட்டியை பற்றி தெரியும், தகுதி அதிகம் பார்ப்பவர் தான், ஆனால் நந்தனின் மேல் அளவில்லாத நேசம் கொண்டவர்.. அதை பற்றி அவரிடம் பேசினால் அது பிரயோஜனம் இல்லாதா ஒன்று என்று அறிந்ததால் எதுவும்  பேசாமல் அமைதிக் காத்தான்…
அனால் புதிதாக வந்த தன் மனைவிக்கு அவரை பற்றி தெரியாது என்பதையும், அவள் வருத்த பட கூடும் என்பதை பற்றி யோசிக்க தவறினான்..
மஹாவிற்கு அவரது பேச்சிலும், நந்தனின் அமைதியிலும் வருத்தப்பட மட்டுமே முடிந்தது….
“இங்க பாரு மா… எங்க குடுப்பத்துக்குன்னு ஒரு கவுரவம் இருக்க… அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்க…முன்னாடி நீ எப்படி வேண்டுமானாலும் இருந்து இருக்கலாம் இனி  நீ எங்க குடும்பத்திற்கு தகுந்த மாதிரி தான் நடந்துக்கணும்… என்ன புரிஞ்சுதா…?” என்று கேட்டதுக்கு, 
தன் மண்டையை உருட்டி ‘புரிந்தது..’ என்பது போல் ஆட்டி வைத்தாள்….
“உன்னை மட்டும் சொல்ல முடியாது… உனக்கு ஒன்றுக்கு மூன்று மாமியார் இருந்தும் இதை எடுத்துச் சொல்ல தான் யாருக்கும் தெரியல போல… எல்லா வழக்கமும் மாறிடுச்சுன்னு நினைக்குறேன்…”என்று பெருமூச்சு விட,
நந்தன், “பாட்டி… போதும்… டையர்டா இருக்கு… இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே உட்கார்ந்து இருக்குறது… ?” பேச்சை திசை திருப்ப முயல, அது வேலையும் செய்தது… 
“ஐயோ ஆமால… நான் பாரு தேவையில்லாம பேசிட்டு இருக்கேன்…நீ போ பா… போய் ரெஸ்ட் எடு… சாயந்திரம் கோவில்ல பொங்கல் வைக்க போகணும்…”,
 
அதற்கு பதிலாக புன்னகையை தந்தவன், மஹாவின் புறம் திரும்பி, “நீ போ… நான் அப்புறம் வரேன்…”என்றுவிட்டு திரும்பி தன் மாமன் மகள் வர்ஷினியுடன் பேச முற்பட,
“எங்க போகணும்னு சொல்லாம நீ பாட்டுக்கு போன்னு சொல்லுற…” மெல்லிய குரலில் தான் கேள்வியை நந்தனிடம் கேட்டாள்…
அது அச்சு பிசுறாமல் நீலு அம்மாளின் காதில் விழுந்துவிட பொங்கி விட்டார் மஹாவின் மீது…
“ஏய்…. என்ன புருஷன்னு கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம என் பேரனை நீ, வா, போன்னு பேசுற… இனி அப்படி பேசுனா அவ்வளவு தான் சொல்லிட்டேன்….” அவர் குரல் உயரந்ததும் அரண்டு விட்டாள் மஹா….
அப்பொழுது நந்தன் மஹாவை கேலி செய்ய அவள் புறம் திரும்ப மிரண்டு போய் நிற்பவளை பார்த்து மனம் ஏனோ கனத்தது… 
“என்ன சும்மா கல்லு மாதிரி நிக்குற… புரியுதா இல்லையா….”அவளது பதிலுக்காக மீண்டும் அவளிடம் கேட்க,
புரிந்தது என்பது போல் தலையை ஆட்டி வைத்தவள் படு வேகமாக, பின் நந்தனை பரிதாபமாக பார்த்துவிட்டு இருக்கையில் இருந்து எழ போக,
 
நந்தன், அந்த வீட்டில் வேலை பார்க்கும் சரசுவை அழைத்து அவர்களது பொருட்களை தன் அறையில் வைக்குமாறு கூறினான்… மஹா அவ்விடம் விட்டு நகர போகும் நேரம், 
“ஏய் நில்லு… எப்படி கூப்பிடுவ இனி உன் புருஷனை…. ?” என்று நீலுஅம்மாள் கேள்வி கேட்க,
“எப்படி கூப்பிடணும்… பாட்டி….” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு உதட்டை சுளித்து கேட்க,
அவளையே பார்த்துக் கொண்டு இருந்த நந்தனுக்கு அவளது பாவனையில் சிரிப்புதான் வந்தது…. 
“சுத்தம்…..தெரியாம தான் புரிஞ்ச மாதிரி மண்டைய ஆட்டுனியா.,.. ? “தலையில் கை வைத்துக்கொண்டு பெருமூச்சு விட்டு தொடர்ந்தார், “இனிமேல் நீங்க, வாங்க, போங்கன்னு பேசணும், கூப்பிடுறதுக்கு என்னங்க, ஏங்கன்னு கூப்பிடணும் புரியுதா….?” என்க,
அவர் கூறியதை கேட்டு கேலி செய்ய அவள் குறும்பு தனம் தூண்டினாளும், அவள் நிற்கும் நிலை உணர்ந்து சரியென  மண்டையை உருட்டி வைத்தவள்… நந்தனின் புறம் திரும்பி, “என்னங்க….”என்று ராகம் போட்டு அழைக்க,
சட்டென அவள் அழைத்த ரீதியில் அவனும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, “ஏங்க….” என்று இவனும் ராகம் போட்டு கேட்க, அனைவரும் சிரித்துவிட, பாட்டியோ பல்லை கடித்தார்… 
“நான் போகட்டுமா….ங்க….” என்று கேட்க, நந்தன் அவள் கேட்ட விதத்தில் ஏதோ வேறுபாட்டை உணர்ந்து  அமைதியாக தலையை அசைத்து சம்மதம் தெரிவித்தான்….
“திமிர் பிடிச்சவளா இருப்பா போல… நான் சொன்னேன்னு வேண்ணும்னே பண்ணுறா… “என்று மஹாவின் மீது பாய்ந்தார் நீலுஅம்மாள்…,.
“பெரியம்மா…. மஹா சின்ன பொண்ணு அதான் இப்படி பண்ணிட்டா… நான் இப்ப சொல்லி புரிய வைக்குறேன்…”பவ்வியமாக பேச, அதற்கு தலையசைத்து சம்மதம் தெரிவித்தார்… 
அதன் பின் அவளை அவசரமாக அவ்விடத்தை விட்டு தள்ளிக் கொண்டு வந்தார் நந்தனின் அத்தை அம்சவேணி….
அவர்கள் சென்றதும் நந்தன்,”பாட்டி… இனி நீங்க என் மனைவிய இப்படி பேசுறத நான் அனுமதிக்க மாட்டேன்… அவளை பத்தி எதுவும் தெரியாமல் குறைவா பேசுறது எனக்கு புடிக்கல… நானோ , வீட்டுலையோ அவ தகுதியை பார்க்கல கல்யாணம் பண்ண… அதுனால என் மனைவியை இனி எதுவும் சொல்ல மாட்டீங்கன்னு நினைக்குறேன்… இப்படி பேசுனாதான் மரியாதை இருக்கும்ன்னு அர்த்தம் இல்லை…” உறுதியான இறுகிய குரலில் பேசியவனை கண்டு நீலுஅம்மாள் வாயடைத்துப் போய் பார்க்க, மற்றவர்கள் அவனை மெச்சுதலாக பாத்தனர்…
“ஓஓஓ…. பேரனுக்கு பொண்டாட்டிய ஒரு வார்த்தை சொன்னதும் கோவம் வந்துருச்சு போல… “கேலியாக கேட்க,
“என் மனைவியை யார் என்ன சொன்னாலும் நான் என்னனு கேட்பேன்… ஏன்னா அவ என்னை நம்பி வந்தவ… அவளை எங்கேயும், யாருக்காகவும் தலைகுனிய விட மாட்டேன்…” என்று நெஞ்சை நிமிர்த்தி கூறியவனை வெறுமனே பார்க்க மட்டுமே முடிந்தது அவனது பாட்டியால்.
பின் எழுந்து  வர்ஷுவுடன் வெளியே சென்றுவிட…  ஹாலில் நந்தனின் உரையாடலை கேட்காத மஹா, நந்தன் தனக்கு  உருதுணையாக நிற்கவில்லை என்று எண்ணி வருந்திக் கொண்டு இருந்தாள்… 
பாட்டியின் பேச்சும் ரணத்தை ஏற்படுத்த  நொந்து போனாள்.. தன் நினைவில் வருத்திக் கொண்டு இருக்க நந்தனின் அத்தை அம்சவேணி வரும் அரவம் கேட்டு தன் முகத்தை இயல்பாக மாற்றிக் கொண்டாள்… 
“இந்தா பாப்பா… இந்த புடவையும், நகையையும் போட்டு சீக்கிரம் ரெடியாகி வா… இல்லாட்டி அதுக்கும் ஏதாவது சொல்ல போறாங்க…” என்று வாஞ்சையுடன் கூறிய அம்சவேணியை கண்டு மெல்லிதாக சிரித்து சரி என்று தலையை ஆட்டி வைத்தாள் அமைதியாக…
பின் விரைவில் தயாராகி வெளியே வந்தவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை… ஒரு நிமிடம் நின்று முழித்தவள் பின் கிட்சனுல் நுழைந்தாள்…
அம்சவேணி,”வா… மா….” புன்னகைமுகத்துடன் அழைக்கவும்….
அவரது புன்னகை முகத்தை  பார்த்தவளுக்கு அவளது அத்தைமார்களின் நினைவு வரவும் மனதில் இருந்த சங்கடம் விலகி சந்தோஷம் எழ, இருக்கும் இடம் மறந்து….. 
“வந்தேன்… வந்தேன்… மீண்டும் நானே வந்தேன் அத்தை….” என்று ராகம் இழுத்து லேசாக ஆடியபடி அவரின் அருகில் சென்று நின்றாள்…
அதை கண்டு கிட்சனில் இருந்து அம்சவேணியும், வேலையாட்களும் புன்னகை புரிய….அவளுக்கு லேசாக வெட்கம் வந்தது விட்டது தன்னைப்போல்…
“சாரி அத்தை…. ஒரு ஆர்வகோளாறுல ஆடிட்டேன்… ” அசடு வழிந்தபடி கூறியவளை கண்டு,
“நீ உன் இஷ்டம் போல இரு பாப்பா… உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க… ஆனா பாட்டி முன்னாடி மட்டும் கொஞ்சம் அடக்கமா இரு போதும்…. அவங்க ஓல்டு ஜனரேஷன் சோ இதை எல்லாம் விரும்ப மாட்டாங்க…” என்று வாஞ்சையுடன் கூறி எச்சரிக்க,
“அம்சவேணி… “என்று நீலுஅம்மாள் அழைக்கவும்,
 
பெரியம்மாவின் அழைப்பை கேட்டு பயபக்தியுடன் செல்லும் தன் அத்தையை கண்டு பாசமும், மரியாதையும் கூடியது மஹாவிற்கு…
அத்தையின் பின்னோடு சென்றவள் பாட்டி அத்தையிடம்,”சமையல் எல்லாம் தயாரா…?” ஆளுமையுடன் கேட்டு கொண்டு இருக்க,
“எல்லாம் தயார் பெரியம்மா… டேப்பில் எடுத்து வைக்கணும்… வச்சுரட்டுமா பெரியம்மா…”என்று பவ்வியமாக கேட்டவரை திரும்பி பார்த்த நீலுஅம்மாளின் விழி வட்டத்தில் மஹா நின்று இருப்பதை பார்த்து அருகில் அழைத்தார்.
அவர் அழைக்கவும், திடுக்கிட்ட மஹா ‘ஆஹா.. வேடிக்கை பார்க்க வந்து மாட்டிக்கிட்டியே மஹா… பேசாம உள்ளேயே இருந்து இருக்கலாம்… ‘மனதில் புலம்பியவள்  வெளியில்  எதையும்  காட்டாமல்  அவர் முன் நின்றாள்…
தன் முன் பட்டு புடவை உடுத்தி எளிமையான நகைகள் அணிந்து தேவதை போல் நின்று இருந்தவளை உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்தவர் மனதில், ‘பரவாயில்லை நல்லா அழகா லட்சனமா சாமி சிலையாட்டம் தான் இருக்கா…’என்று எண்ணியவர் வெளியே அதை வாய் திறந்து சொல்லவில்லை…
‘முருகா… வாட் ஸ் திஸ் யா….? இந்த வீட்டுல பேரனுக்கும், பாட்டிக்கும் என்னை ஓப்பன் சைட் அடிக்குறதே வேலைன்னா…. அத்தை, மாமாக்கு என் ஹார்ஸ்டைலை கலைக்குறது வேலை… முடியல முருகா…. ஹெல்ப் மீ பிளீஸ்…’ மனதில் முருகனிடம் வேண்டுதல் வைக்க, அதை அடுத்த நொடியே நிராகரிக்க பட்டு அவள் தலையில் அடுத்தடுத்து இடியை இறங்க போவதை உணராமல் நின்று இருந்தாள் அப்பாவி போல்…
“நானே உன்னை இப்ப கூப்பிடணும்னு நினைச்சேன் பரவாயில்லை நீயே வந்துட்ட… “என்ற பாட்டியை புரியாது பார்த்து வைக்க…..
“இன்னைக்கு  சாப்பாடோட சேர்த்து பாயாசம் பண்ண சொல்லணும்னு நினைச்சு மறந்துட்டேன்… சாப்பாடு எல்லாம் செஞ்சாச்சு அதனால நீ பாயாசம் மட்டும் வச்சுடு… உன் கைபக்குவம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்… முதல் தடவையா நான் உன் கைபக்குவத்தில் சாப்பிட போறேன் அதனால் இனிப்புல பண்ணு… யாரும் கிட்சன்ல இருக்க கூடாது…. எல்லாத்தையும் எடுத்து டேப்பில்ல வச்சுடு அம்சவேணி… அப்புறம் இங்க இருக்குற வரை நீயும் சமையல் செஞ்சு தான் ஆகணும்… விருந்தாளின்னு நினைச்சுட்டு வேலை செய்ய கூடாதுன்னு ரூம்லையே உட்கார்ந்து இருக்கலாம்னு நினைக்காத… “என்று விட்டு தன் அறையை நோக்கி அசைந்தாடி போகிறவறையே பார்த்துக் கொண்டு இருந்தவள்…
‘என்ன இந்த பாட்டி இப்படி ஆப்படிச்சுட்டு போகுது நமக்கு… முருகா உன்னை காப்பாத சொன்னா கோத்து விட்டுட்டியே… இது நியாயமா… இது எனக்கு நீ பண்ணுற துரோகம் இல்லையா… இப்படி பண்ணலாமா சொல்லு…?’ என்று முருகனிடம் முறையிட்டு கொண்டு இருந்தவளின் நினைவை அம்சவேணி கலைக்க, இருவரும் சேர்ந்து கிட்சனிற்கு சென்று விஷயத்தை சொல்ல அடுத்த ஐந்தாவது நிமிடம் கிட்சன் வெறிச்சோடி போனது …
“கொடுமையே…. எங்க அம்மா அப்பவே சொல்லுச்சு சமைக்க கத்துக்க கத்துக்கன்னு கேட்டேனா… “என்று சினிமா டைலாக்கை பேசியபடி நெற்றியில் அறைந்து கொண்டாள்….
அனைவரும் அமர்ந்து இருக்க, அந்த குடும்பத்தின் மருமகள்கள் மட்டும் நின்று பரிமாறிக் கொண்டு இருந்தனர் அதில் நம் நாயகியும் அடக்கம்…
ஏதோ சரி இல்லை என்று புரிந்து கொண்ட மஹாவிற்கு அது என்னவென்று தான் புரியவில்லை…. 
ஒவ்வொரு முறையும் நந்தனை காண்ணும் போது ஐந்து விரல்களை நக்கி தட்டை வழித்து வழித்து உண்ணுவதை பார்க்கும் போது மஹாவிற்கு உமட்டலாக வர… அவனை கண்டு முகம் சுளித்து திருப்பி கொள்வாள்…. 
‘ஏன் இப்படி சாப்பிடுறான் நேத்து கூட டீசன்டா தானே சாப்பிட்டான் இன்னைக்கு என்னமோ ஒரு மாசம் பசில வாடுனவன் கணக்கா சாப்பிடுறான்… அதுவும் நக்கி நக்கி சாப்பிடுறான் லூசு காண்டாமிருகம்… ‘மனதில் அவனை பற்றி யோசித்து திட்டிக் கொண்டு இருக்க…. 

Advertisement