Advertisement

UD:26
அன்று வரவேற்பு முடிந்து இரவு நந்தனின் அறையில் நடந்த சண்டையை நினைத்து பார்த்தவளுக்கு ஒன்று விளங்கியது அது நந்தனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்றும், அதற்கு காரணம் ஸ்ட்டேடஸ் என்றும் எண்ணினாள்….
அதனால் தான் அன்று தான் செய்யாத தவறுக்கு தன் மேல் வீண்பழி சுமத்தினான், நேற்று தான் கஷ்டத்தில் இருக்கும் போது தன்னை மீட்க அவன் வரவில்லை, தன் மேல் சந்தேகமும் கொண்டுள்ளான் என்று அவளது மூளை தன் தீய வேலையை செவ்வென செய்தது…
அப்பொழுது அவளுடன் வேலை புரியும் பெண்ணிடம் அவளது டீம் ஹேட்,”ரோகிணி, இன்னைக்கு கண்ணன் கம்பிளிட் பண்ண டாக்குமெண்ட்ஸ் பத்தி ஒரு மெயில் பண்ணிடுங்க… அவர் என்னைக்கு வரல சோ அவர் டேப்பில் இருக்கும் பேப்பர்ஸை வெரிப்பை பண்ணிக்கோங்க…”என்று விட்டு செல்ல, அவரிடம் ஏன் கண்ணன் வரவில்லை என்று அந்த பெண் வினவியதற்கு உடல்நிலை சரியில்லை என்றும் கையில் அடிப்பட்டு விட்டதாகவும் அவர் கூற சற்று நேரம் அதை பற்றி யோசித்தவளுக்கு,  மீண்டும் நினைவுகள் நந்தனின் பின் சுற்ற ஆரம்பித்தது… 
அன்று மாலை தன் நிறுத்தத்தில் இறங்கியவளுக்கு வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் அருகில் இருந்த கோவிலில் சென்று அமர்ந்து கொண்டாள்…
நினைவுகள் முழுவதும் நந்தனே ஆட்சி புரிய, மிகவும் சோர்ந்து போனாள்… திருமண பந்தத்தின் அடிப்படை விஷயமே நம்பிக்கை தான் அதுவே நந்தனுக்கு தன் மேல் இல்லை என்று மிகவும் வருந்தினாள்….
அவளது காதல் கொண்ட இதயம் முந்தினம் நடந்ததை எண்ணி சுக்கு நூறாய் உடைவது போல இருக்க கண்களில் கண்ணீர் குலம் கட்டியது…
ஒரு மணி நேரம் கழிய, மெதுவாக எழுந்து தன் வீட்டை நோக்கி நடந்தாள்….
வீட்டின்னுள் நுழைந்ததும் ஏதோ வித்தியாசமாக உணர, என்னவென்று புரியவில்லை மஹாவிற்கு…. ஒரு முறை வீட்டை சுற்றி பார்த்தவள், பின் ஷூ ரேக்கை பார்க்க, நந்தன் வீட்டில் தான் உள்ளான் என்று அவனது ஷூவை வைத்து அறிந்துக் கொண்டவள், 
‘என்ன ஒரு மாதிரி ஸ்மெல் வருது… பக்கத்து வீட்டுல இருந்து வருதோ… ‘என்று சந்தேகம் கொண்டு மீண்டும் கதவை திறந்து வெளியே தலையை நீட்டி மோப்பம் பிடித்தவளுக்கு ஏமாற்றமே….
‘இல்லையே… நம்ம வீட்க்குள்ள தான் வருது… சம்திங் ஸ் ராங்….’என்று முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு உதட்டை பிதுக்கி தலையை வலமும் இடமும் ஆட்டியவள் டைனிங் டேபிளின் அருகில் சென்று பார்த்தவள் ஸ்த்தம்பித்து போனாள்…
‘இப்ப எதுக்கு இவன் இப்படி எல்லாம் செஞ்சு வச்சு இருக்கான்…’மனதில் எண்ணியவள் கண் இமைக்காமல், எச்சிலை கூட்டி விழுங்கி, ஒரு வித ஏக்கத்தோடு அனைத்தையும் பார்வையிட்டாள்… 
டேபிளின் மேல், பன்னீர் மசாலா, ரொட்டி, பூரி, கோபி மஞ்சூரியன், வெஜிடபிள் குருமா என இருக்க மிதமுள்ள பதார்த்தங்கள் அனைத்தும் மூடி வைக்க பட்டு இருந்தது… ஆனால் அதன் வாசனை மஹாவின் பசி உணர்வை தூண்ட இப்பொழுதே ஒரு கட்டு கட்ட வேண்டும் போல் தோன்றியது…. 
அவளையே பார்த்துக் கொண்டு இருந்த நந்தன் எந்த ஒரு உணர்ச்சியையும் வெளி காட்டாது இமைக்காது பார்த்து இருந்தான்….
அப்பொழுது அவளது ஃபோன் அலற, டேபிளில் இருந்ததை ஏக்கமாக பார்த்துக் கொண்டே அழைப்பை ஏற்று , டைனிங் டேபிளின் இருக்கையை இட கையால் இறுக பற்றிய படி பேசிக் கொண்டு இருந்தவள் பின் ஒரு வித இயலாமையுடன் பெருமூச்சொன்றை  விட்டு  விட்டு  அவை அனைத்தையும் பார்த்துக் கொண்டே தன் அறையை நோக்கி நடந்தாள்…. 
அப்பொழுது வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, யாரென்று தெரியாமல் காதவை பார்த்தப் படி அவள் நின்றிக்கும் சமயம் , நந்தன் கிட்சனில் இருந்து வேகமாக வந்தவன் மஹாவை கண்டுக் கொள்ளாமல் கதவை திறக்க செல்ல…
‘இவ்வளவு நேரம் கிட்சன்ல தான் இருந்தானா காண்டாமிருகம்… ஐயோ நம்மளை பார்த்து இருப்பானோ… நம்ம சாப்பாட்டை வெறிக்க வெறிக்க வேற பார்த்து வச்சோம்மே… சை… மானம் போச்சே….’என்று எண்ணியவள் அவன் தன்னை கண்டு கொள்ளாமல் போனது மனதில் வலியை ஏற்ப்படுத்த மௌனமாக அறைக்குள் செல்ல போகும் போது,
“ஹாய் மச்சான்… எப்படி டா இருக்க… நல்லா இருக்கியா… சிஸ்டர் எங்க?” என்று ஆர்ப்பாட்டமாக நுழைந்தனர் கிஷோரும், கௌத்தமும்.
“டேய் ரொம்ப பண்ணாத டா…. இப்ப ஈவினிங் தானே பார்த்து பேசுனோம், டெயிலியும் பார்க்குற மூஞ்சு தானே நான் எப்படி இருக்குன்னு தெரியாதா… அதுக்குள்ள என்னடா..”என்று நந்தன் கிஷோரை வார, 
“அது எல்லாம் அப்படி தான்… அது கம்பெனி, இது வீடு ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு மாப்ள….” என்று கௌதம் கிஷோர்க்கு உதவி புரிய, 
கிஷோர்,”நண்பேன்டா….” என்று அவனை தோளோடு அணைத்துக் கொண்டான்….
அதை கண்டு, தன் நெற்றியில் அடித்துக் கொண்ட நந்தனை,
“சரி இன்னும் எவ்வளவு நேரம் இப்படி வெளிய நிக்க வைக்க போற… இல்ல இப்படி வாசல்ல வைச்சு தட்டுல சோறு போட்டு அனுப்புறதா பிளானா…?” என்று கௌதம் கேட்கவும் நந்தன் அவர்களை உள்ளே அழைத்து வந்தான்…. 
 
அறைக்குள் செல்ல இருந்தவள் அவர்களின் பேச்சு சத்ததில் திரும்பி அவர்களை பார்த்துக் கொண்டு நின்றிருந்தவளின் முகத்தில், அவளையும் அறியாமல் புன்னகை வந்து அமர்ந்தது… 
மஹாவை பார்த்ததும், கிஷோரும் கௌதமும் அவளிடம் நலம் விசாரிக்க சிரித்த முகத்துடன் பேசியவளை கிஷோர்,”ஏன்மா ஒரு மாதிரி டல்லா இருக்க….?” என்று கேட்க,
என்ன சொல்வது என்று தெரியாமல் ஒரு நொடி முழித்தவள் பின் சுதாரித்து “இல்ல அண்ணா ஒர்க் கொஞ்சம் ஜாஸ்தி… அதுவும் இல்லாமல் நான் இப்பதான் வீட்டுக்கே வந்தேன் அதான் டையர்டா தெரியுது…”என்று கூற,
“ஓ… சரிமா… கொஞ்சம் உடம்பையும் பார்த்துக்கோ மா….. “என்று அக்கறையுடன் கௌதம் கூற அதை புன்னகை முகத்துடன் ஏற்றாள் மஹா…
“சரி அண்ணா… நீங்க பேசிட்டு இருங்க நான் போய் பிரஷ் ஆயிட்டு வர்றேன்…”என்று விட்டு தன் அறையை நோக்கி செல்ல போக,
அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தவன் சட்டென்று, “ஸ்ரீ…. “என்று அன்போடு, மென்மையாக நந்தன் அழைக்கவும்,
மஹா அவனது அழைப்பில் ஏக்கத்தோடு, ஒருவித பரிதவிப்போடு அவனை திரும்பி பார்க்க நந்தன் தான் என்ன மாதிரி உணர்ந்தோம் என்று அவனுக்கே தெரியவில்லை…. 
“அம்மா ஃபோன் பண்ணி இருந்தாங்க… “என்று ஏதோ சொல்ல வந்தவன் நண்பர்களை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு, 
“டூ மினிட்ஸ் டா… டிவி பார்த்துட்டு இருங்க… நான் வந்துற்றேன்… “நண்பர்களிடம் கூறிவிட்டு மஹாவை பார்த்து தன் அறைக்கு வருமாறு கண் ஜாடை காட்டி விட்டு அறையை நோக்கி நடந்தான்… 
அவளது மனம் அவனது அன்பிற்கும் , அரவனைப்புக்கும் ஏங்க அவன் பின்னால் குட்டி போட்ட பூனையை போல் சென்றாள்… 
இதுவே அவனது அறைக்குள் நுழைவது முதன்முறை மஹாவிற்கு… ஆனால் அவள் அதை கருத்தில் கொள்ளாமல் நந்தனின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள் ஒரு வித எதிர்பார்ப்புடன்…
“அவங்களுக்கு எதுவும் தெரிய வேண்டாம்… நீ இந்த ரூம்லையே பிரஷ் ஆயிட்டு வா… “என்று எங்கோ பார்த்து சொன்னவன் அறையை விட்டு வெளியே செல்லும் முன், 
“அப்புறம் நாளை நாம ஊருக்கு போறோம்…. கோவில்ல பொங்கல் வைக்கணுமாம்… மூன்னு நாள் ஊர்ல தான் இருக்க போறோம்… மன்டே(Monday) ஒரு நாள் ஆஃபீஸ்ல லீவ் சொல்லிடு… இங்க இருந்து காலைல 7 மணிக்கு கிளம்பணும்… ரெடியாயிரு….”என்று அவள் புறம் திரும்பாமலே கூறிவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினான்….
வெளியே வந்தவனை நண்பர்கள் இருவரும் ஓட்டி தள்ளி ஒருவழி ஆக்கி விட்டு இருந்தனர்…. 
மஹா அவன் சென்ற திசையை பார்த்து கொண்டு இருந்தவள், “ஏன் என் முகத்தை கூட பார்த்து சொல்ல மாட்டானா… திமிர் பிடிச்சவன்… ஓவரா தான் பண்ணுறான் காண்டாமிருகம்…  இவன் ஒரு நாள் கூட அவன் ஹஸ்பண்ட் டியூட்டிய பண்ணது இல்ல… இதுல என்னை சந்தேக படுறான்… தடிமாடு போடா…”என்று மனதின் வலியில் வாய் விட்டு புலம்பியவள், 
தன்னை பிரெஷ் ஆக்கி கொண்டு அந்த அறையில் இருந்த கண்ணாடியில் தன்னை பார்த்தவள் அப்பொழுது தான் தன்னையே கவனித்தாள். சரியாக சாப்பிடாமலும், மனதின் சோர்வாலும் முகத்தில் பொலிவிழந்து, மெலிந்து போய், சோபையுடன் இருந்தாள்… 
“இந்த மாசம் சம்பளம் வாங்குறதுக்குள்ள நான் அரவேக்காடா ஆயிருவோம் போல…’ என்று  புலம்பியவள் ”மாச சம்பளம் வரும்வரை உயிரோட இருந்தா சரி… முருகா என்னை காப்பாத்து….” என்று கைகளை மேல் தூக்கி பிராத்தனை செய்துக் கொண்டாள்….
பின் வெளியே வந்தவள், அனைவரிடமும் சகஜமாக பேசி அரட்டை அடித்துக் கொண்டு இருந்தவளுக்கு, மனதில் ஒரு மூளையில் சந்தோஷமும் மற்றொரு மூளையில் சுயபட்சாதாபமும் உண்டானது… அதற்கு காரணம் இன்று இரவு அவள் உண்ண போகும் உணவு பதார்த்தங்கள்…..
அதன் விளைவு அவள் அடிக்கடி டைனிங் டேபிளை நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தாள்…. 
‘சை… நம்ம நிலைமை இவ்வளவு மோசமாவா இருக்கணும்…..’ மனம் வலித்தாலும் வெளியே சிரித்தப்படியே இருந்தாள்…
பேசிக் கொண்டு இருக்கையில் நந்தன், “சரி வாங்க டா சாப்பிடலாம் ரொம்ப டைம் ஆச்சு… “என்க, 
மஹாவிறுக்கு ஏதோ சொர்க்கத்திற்கு செல்வதை போல் இருந்தது  அவள்  மனக்கண்ணில், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா….’என்ற  பிம்பம் தான்  வந்து  போனது 
அனைவரும் டேபிளின் அருகில் சென்று அமர, மஹா ‘தயவு செஞ்சு சீக்கிரம் சாப்பிட்டு முடிங்க பிளீஸ்….’என்று மனதில் மூவருக்கும் வேண்டுதலை அனுப்பிட்டு அவர்களுக்கு பரிமாற தொடங்கினாள்…
“சிஸ்டர் என்ன பண்ணுற…. நீயும் உட்காரு மா… சேர்ந்தே சாப்பிடலாம்… நோ பார்மாலிட்டீஸ்… ” என்று கிஷோர் கூற, கௌதமும் அதை ஆமோதித்தான்…
நந்தன்,”உட்காரு ஸ்ரீ… செல்ப் ஸர்வ்  பண்ணிக்கலாம்…. “என்று அவள் கைப்பிடித்து இழுத்து அவன் அருகில் இருந்த இருக்கையில் அமர செய்தான்… 
நண்பர்கள் முன் தங்கள் சண்டையை காட்டிக் கொள்ளாமல் அன்யோனியமாய் வாழ்வது போல் காட்ட எண்ணி, நந்தன் மஹாவுடன் இனக்கமாய் இருக்க அதை புரிந்துக்கொண்டு மஹாவும் அவனுடன் சகஜமாக இருந்தாள்…
அனைவரும் உணவை எடுத்துக் கொண்டு உண்ண, மஹா தன் பிளேட்டில் இருந்ததை ஆசை தீர ஒரு முறை பார்த்தவள், பின் ஒரு வாயை எடுத்து உண்ண… கண்களில் அடக்க மாட்டாமல் வெளியே வந்து அவள் தட்டிளே விழுந்தது, ‘கண்ணீர்’…. 
கிட்டதட்ட ஒரு வார காலம்  வெறும்  தயிர்சாதமும், பாலும், பிரெட்டும் உண்டவளுக்கு இப்பொழுது சுவையான உணவை உண்டதும் தன் நிலையை எண்ணி கண்ணீர் சட்டென வந்து விழுந்தது….  குனிந்து இருந்ததால் அவளையும் அவளது கண்ணீரையும் யாரும் கவனிக்கவில்லை…. 
நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்த நந்தன் சட்டென அவள் தட்டில் இருந்த காலிஃப்ளவர் சில்லியை எடுத்து சாப்பிட அவனை அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தவள் அவன் தன்னை கண்டுக் கொள்ளாமல் அவன் நண்பர்களுடன் மும்முரமாக பேசிக் கொண்டு இருந்தான்…
முன்பு போல் நண்பர்கள் முன் நடிக்கின்றான் என்று புரிந்துக்கொண்டு கொண்டவள் பின் தட்டில் உள்ளதை கபளிக்கரம் செய்வதில் தன் கவனத்தை செலுத்தினாள்… 
ஒருவனின் வாழ்கையில் எதை அள்ளிக் குடுத்தாலும் வேண்டாம் என்று சொல்ல தோன்றாது… ஆனால் உணவு… ஓர் அளவுக்கு மேல் வேண்டும் என்று நினைத்தாலும் உண்ண முடியாது…. அப்படி பட்ட நிலையில் தான் மஹாவும் இருந்தாள்  அதோடு  உணவு  தரும்  நிறைவை  வேறு எந்த  ஒரு  விசயத்தாலும்  கொடுக்கவும்  முடியாது … 
தன் முன் இருந்த பதார்த்தங்கள் அவளை வா வா என்று அழைப்பது போல் உணர்ந்தவளால் ஓர் அளவிற்கு மேல் உண்ண முடியாமல் அவற்றை பரிதாபமாக பார்த்து வைத்தாள்…
மற்ற மூவரும் தீவிரமாக ஒருவரையொருவர் கலாய்த்து கொண்டு இருக்க மஹாவோ, ’ஏன் முருகா… மனுஷனையும் கேமல்(camel) மாதிரி படைச்சு இருக்கலாம்ல… சாப்பாட்டை எல்லாத்தையும் சேவ் (save) பண்ணி வச்சு…. கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டுற மாதிரி இருந்து இருந்தா எவ்வளவு நல்லா இருந்து இருக்கும்… ‘மனதில் கடவுளிடம் தன் ஆலோசனையை சொல்லி  கொண்டு இருந்தாள் தன்பாட்டில்…
“என்ன சிஸ்டர் யோசனை எல்லாம் பலமா இருக்கு…. எங்க கிட்ட சொல்லலாம்ல…. நாங்களும் கொஞ்சம் யோசிப்போம்….” கிஷோர் மஹாவை வம்பிழுக்க…
“ஐயோ என்னை விட்டுருங்க அண்ணா… நான் எதுவும் யோசிக்கல… உங்க டேலன்டை என் கிட்ட காட்டதீங்க… நான் தாங்க மாட்டேன்…. ” கிஷோரிடம் சிக்கினால் கலாய்த்தே நூடில்ஸ் ஆகி விடுவான் என்று இந்த சில மணி துளிகளே அறிந்துக் கொண்டாள் மஹா….

Advertisement