Advertisement

“ஏன் இப்படி முறைக்குறீங்க…. ” கேள்வியாக வினவிய வித்யாவை பார்த்து, 
“இல்ல அத்தை… கதவை ஒழுங்கா கிளோஸ் பண்ணுனு பல தடவை சொல்லியும் இப்படி பண்ணிட்டா…. அதான்…” பல்லை கடித்தப்படி ரம்யாவை முறைக்க, 
“விடுமா…. அவ இப்படி பண்ணனால தானே உன்னோட இந்த தரிசனம் கிடைச்சுது….” என்று வித்யா சிரிக்க, 
மஹா கூச்சத்துடன் நெளிய, நந்தன் சோஃபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு, ஒரு கையை சோஃபாவின் சாய்வில் விரித்து வைத்து, மற்றோரு கையை கால் முட்டியின் மேல் வைத்து கொண்டு, அவளை மேல் இருந்து கீழ் வரை கண்களால் ரசித்துக் கொண்டு இருந்தான். 
பெண்கள் நால்வரும் சிறிது நேரம் பேசி அரட்டை அடித்துவிட்டு, நாளை துணி கடையில் பார்க்கலாம் என்று விட்டு, ஜாக்கிரதையாக இருக்கும் படி அறிவுரை கூறி நந்தனும், வித்யாவும் விடைபெற்று சென்றனர். 
அவர்கள் சென்றதும், வீட்டின் கதவை சாத்திவிட்டு திரும்பிய மஹா. காளியின் மறுஉருவமாக காட்சி அளித்தாள். அடுத்த அரைமணி நேரம் அவளது வீடு போர்க்களமாக மாறியது.
“ஏய் விடுங்கடி…. போதும் டி…. ஏதோ என்ஜாய் பண்ணுற நினைப்புல மறந்துட்டேன்…. ” என்று ரம்யா கூறியும் விரட்டி விரட்டி அடித்தவரகளை பார்த்து , “நிறுத்துங்கடி…. “.
“அதான் அவங்க எதுவும் சொல்லல… ஜாலியா தானே பேசிட்டு போனாங்க… அப்புறம் ஏன் இப்படி அடிக்குறீங்க…” ஆங்காரமாக கேட்க,மஹா அடிப்பதை விட்டுவிட்டு. சோஃபாவில் பொத்து என்று அமர்ந்து சம்மணம் இட்டு கொண்டவள் கைக்களால் தலையை தாங்கியபடி அமர்ந்து, “எனக்கு ஒரே ஷேம் ஷேமா போச்சு…” என்று பாவமாக கூற. சந்தியா ரம்யாவை பார்த்து முறைத்து வைத்தாள். 
பின் சமாதானம் பேசி, வீட்டை சுத்தம் செய்து விட்டு,  இரவு உணவை உண்டு விட்டு அங்கேயே மூவரும் உறங்கினர். அதிகாலையில் மஹாவின் வீட்டில் அனைவரும் வந்து விட. 10 மணி அளவில் முகூர்த்த பட்டு எடுக்க அனைவரும் பத்தாவின் புது கடையில் குழுமினர். 
முதலில் மஹாவிற்கு பட்டு எடுப்பது என்று முடிவு செய்யப்பட, முகூர்த்த பட்டு பகுதிக்கு சென்றனர். முகூர்த்தத்திற்கும், வரவேற்ப்பிற்கும், மேலும் மூன்று புடவைகள் எடுப்பது என்று முடிவானது. பெண்கள் புடவையை எடுக்க துவங்கியதும் ஆண்கள் ஒதுங்கி அமர்ந்துக் கொண்டு தங்கள் தொழில் பற்றியும், சிறு வயது நியாபகங்களை பற்றியும் பேசி கொண்டு இருக்க. அவர்களை விட்டு சற்று தள்ளி அமர்ந்த நந்தனும், மஹாவின் அண்ணனும் பொது விஷயங்களை பற்றியும் பேசிக் கொண்டு இருந்தனர். நந்தன் தன்னிடம் பேசிக் கொண்டு இருந்தாலும் அவனது பார்வை மஹாவை அடிக்கடி தழுவி செல்வதையும், சில சமயங்களில் அவளின் சிறு பிள்ளை செயலால் நந்தன் அவளையே பார்க்க, ஹரி பேசியதை காதில் வாங்காமல் மீண்டும் என்னவென்று கேட்க ஹரி அவனது மனநிலையை புரிந்து சற்று நேரத்தில் அமைதியாகி  நந்தனுக்கு முழு சுதந்திரம் கொடுத்து   ஒதுங்கி கொண்டான். 
பதினைந்து நிமிடங்கள் கடந்த நிலையில், நந்தனுக்கு ஒன்று புரிந்தது. மஹாவிற்கு புடவை எடுக்க தெரியாது என்று. பெரியவர்கள் எடுக்கும் புடவையை தொட்டு பார்ப்பதும், விலையை பார்ப்பதை மட்டுமே செய்து கொண்டு இருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனை கார்த்திகா கவனித்து விட, வசுந்தராவின் காதில் ஏதோ ரகசியம் பேசிவிட்டு மஹாவின் புறம் திரும்பியவர்கள், 
“மஹா… நீயும் நந்தனும் சேர்ந்து எடுங்க, ஏன்னா… கட்ட போறது நீ, முக்கியமா பார்க்க போறது அவன். நாங்க நடுவில் எதற்கு? ” அவர் கூறி முடிக்கும் முன் இடைபுக நினைத்த மஹாவை தடுத்து மேலும் தொடர்ந்தார், 
“நாங்க போய் எங்களுக்கு வாங்கிட்டு வந்துறோம்….” கன்னம் தட்டி கூற, அனைவருக்கும் ஜாடை காட்டி அங்கு இருந்து விலகி சென்றனர்.
செய்வது அறியாமல் முழித்துக் கொண்டு இருந்த மஹா “அம்மா….” என்று  அவர்களுடன்  செல்லும்  தன் தாய்யை பார்த்து முனங்கினாள்.
இவை அனைத்தையும் பார்த்தும் பார்க்காதது போல தன் ஃபோனை நோண்டி கொண்டு இருந்தான் நந்தன். அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவள், 
“உட்கார்ந்து இருக்குறத பாரு…. எந்திரிச்சு வந்து உதவுனாதான் என்ன… எல்லாம் இவனால தான் வந்தது. இப்ப இங்க இவன் வரலைன்னு யாரு அழுதா? காண்டாமிருகம்….” லேசாக அவனை பார்த்து முணுமுணுக்க, தன்னை கண்டு கொள்ளாதவன் போல் இருந்த அவனது பாவனையில் வெகுண்டவள், “இவனோட உதவி எனக்கு ஒன்னும் வேண்டாம்… நானே எடுத்துப்பேன்…. ” என வெடுக்கென்று திரும்பி கொண்டாள்.
திரும்பியவளின் முன்பு மலை போல் குவிந்து இருந்த புடவையை கண்டு இவள் மலைத்து போனாள் அடுத்த நொடி. வேறு வழியில்லாது ஒவ்வொரு புடவையாக பார்க்க, எவ்வாறு தேர்வு செய்வது என்று புரியாமல் மலங்க மலங்க விழிக்க, ஏதோ அத்துவானா காட்டில் தணித்து இருப்பதை போல் உணர்ந்தாள் மஹா. 
இன்னும் சில புடவைகளை எடுத்து வருவதாக கூறி  விற்பனையாளர் சென்றுவிட, என்ன செய்வது என்று தெரியாமல். உதட்டை பிதுக்கி தன் தாய் எங்கே என்று தேடிய விழிகளில், சற்று தொலைவில் நின்று இருந்த ஒரு ஜோடியை கண்டு இமைக்காமல் பார்த்து இருந்தாள். அவர்களும் பார்ப்பதற்கு திருமண ஜோடிகள் போல் தோன்ற, இருவரும் சிரித்து பேசி, மகிழ்ச்சியுடன் புடவையை எடுப்பதை ஒரு வித இயலாமையில் பார்த்து இருக்க, அவளது ஏக்கத்தை நந்தனின் விழிகள் பார்த்து இருந்தது. 
பின் மெதுவாக தலை கவிழ்ந்து கொண்டவள், எதற்கோ முடிவு செய்து, வாழ்வில் தான் அனுப்பவிக்க வேண்டிய சின்ன சின்ன சந்தோஷத்தை எல்லாம் இழந்து விட்டதாக தோன்றியது மஹாவிற்கு. அனைத்து பெண்களை போலவும் திருமண ஆசை கொண்டவள் தான். ஆனால் இன்று அது அவள் கண்முன் ஏதோ கானல் நீர் ஆவதை போல் உணர்ந்தாள். அவளது நினைவை விற்பனையாளர் கலைக்க, புடவையை எடுத்தாக வேண்டுமே என்று சலிப்புடன் கைக்கு கிடைத்த ஐந்து புடவையை தேர்ந்தெடுத்து விட்டு ஒரு பெருமூச்சுடன் அவ்விடம் விட்டு நகர போனவளின் கைப் பிடித்து நிறுத்தினான் நந்தன்.
எதிர் பாராத விதமான அவனது தொடுகையில் அதிர்ந்தவளை மேலும் கண்கள் விரிய அதிர வைத்தான் அவளது மணாளன். மெல்ல குனிந்து தன் இடையில் பதிந்த அவனது கைவிரல்களை பார்த்து விட்டு அவன் முகத்தை பார்க்க. தான் எதுவும் செய்யவில்லை என்பது போல் மிக தீவிரமாக அவள் தேர்ந்தெடுத்த புடவைகளை ஆராய்ந்து பார்க்க. அவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவனே சில புடவைகளை பார்வையிட்டான்.
‘டேய் காண்டாமிருகம்…. நீ புடவை எடுக்க என் இடுப்பை ஏன்டா இப்படி புடிச்சு இருக்க? லூசு… ‘ மனதில் திட்டியவள் வெளியே யாருக்கும் தெரியா வண்ணம், அவன் கைகளை விடுவிக்க எண்ணி லேசாக நெளிய, அவன் புடவையை ஆராய்ந்து கொண்டு இருக்கும் ஆர்வத்தில் இதை அவன் கருத்தில் கொள்ளவில்லை. 
அவன் புடவையை ஆராய்ந்து கொண்டு இருக்க, அவள் தன்னை விடுவித்துக் கொள்ள நெளிந்துக் கொண்டு இருந்தாள். சிறிது நேரத்தில் அவனே தன் கையை விலக்கி கொண்டு புடவையை முழு முனைப்போடு தேர்ந்தெடுத்துக் கொண்டு இருக்க முடிந்த மட்டும் அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள். 
சிறிது நேரம் கழித்து அவன் தேர்வு செய்த பத்து புடவையையும் அவளுக்கு அணிவித்து காட்ட உத்தரவிட, அதை மறுத்தாள் மஹா, 
“என்னால முடியாது… நான் சூஸ் பண்ணதை விட்டுட்டு நீ சூஸ் பண்ணதை எல்லாம் என்னால் கட்ட முடியாது….” கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டியபடி முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.
“அடியேய் கொசுக்குட்டி….” அடக்கப்பட்ட குரலில் சீற,
அவனது அழைப்புக்கு வெடுக்கென்று திருப்பி பார்த்து முறைத்தவளை கண்டு,”ம்க்கும்…. இந்த லுக்குக்கு மட்டும் குறைச்சல் இல்ல…. கண்ணு ரெண்டையும் நோண்டிருவேன்டி…. ” என்று ஓர் அடி முன் வைக்க, 
அவன் கூறிய தோரணையில் அநிச்சையாக ஒரு அடி பின்  சென்றாள். 
“இங்க பாரு எனக்குனு ஒரு ஸ்டேடஸ் இருக்கு… கல்யாணத்திற்கு விஐபி’ஸ் எல்லாம் வருவாங்க…. அப்ப நீ பஞ்சு மிட்டாய் கலர்ல புடவை கட்டிகிட்டு நின்னா நான் சும்மா இருப்பேன்னு நினைச்சியா…. ” கூர் பார்வையுடன் கேட்டவனை கண்டு எதுவும் பேசாது அமைதி காத்தவளின் பார்வைக்கான அர்த்தம் புரியாமல் அவன் குழம்ப…. 
அவள் எடுத்த புடவையை திருப்பி பார்க்க, ஐந்தில் நான்கு புடவைகளும் ஒரே நிறத்தில் இருந்தன. அவன் சொன்னது பிங் கலரில் இருக்க, “அது ஒன்னும் பஞ்சு மிட்டாய் கலர் இல்ல…. பிங் கலர். மை ஃபேவரிட் கலர்….” மெல்லிய குரலில் உறைத்துவிட்டு தலை கவிழ்ந்து கொண்டாள். 
“ஓஓஓ….அப்படியா மேடம்…. அப்ப சரி…இனி தினமும் ஒரு அண்டா சாப்பாடு சேர்த்து சாப்பிடு…. அப்பதான் கரெக்டா இருக்கும்…” என்று நக்கலாக கூறியதை கேள்வியாக பார்க்க, 
“என்ன புரியலையா….? நீ எடுத்து வச்ச புடவைய உன்னால் தூக்க முடியுதானு பாரு… நீ எடுத்த எல்லா புடவையும் பார்த்தா உன்னை விட வெய்டா இருக்கும் போல…” நமட்டு சிரிப்பை உதிர்த்தவனை கண்டு விழி விரித்தவள். பின் அவசரமாக புடவையின் புறம் திரும்பியவள் அவன் கூறியது போலவே ஒவ்வொரு புடவை ஆஃஸ்போர்டு டிக்ஸ்னறி சைஸ்ஸில் இருந்தை கண்டு அதிர்ந்தாள்.
‘சை…. இத எப்படி பார்க்காமல் விட்டேன். ஐயோ…. முருகா… இதை கட்டிகிட்டு எப்படி நின்னு இருப்பேன். நினைச்சு பார்த்தா இப்பவே மூச்சு முட்டுது…’ கர்ப்பனையில் அந்த புடவையில் தன்னை கண்டு அதிர்ந்து போனவள் அவனை பாவமாக பார்த்து வைத்தாள். 
“என்ன தினமும் ஒரு அண்டா சாப்பாடு சாப்பிட ரெடியா?” புருவம் உயர்த்தி கேட்டவனை பரிதாபமாக பார்த்து வைத்தாள். 
இதுவரை மிடி, ஸ்கர்ட், சுடியிலே சுற்றி வந்தவள். வசுந்தரா தான் அவளுக்காக புடவையை எடுத்து வைப்பார். அதனாலோ என்னவோ இது வரை புடவையின் மீது அவள் அதிக நாட்டம் கொண்டது இல்லை. அதனால் வந்த வினையே இப்பொழுது நிகழ்ந்தவை. 
“ம்ஹூம்….” என்று மறுப்பாக தலை அசைத்து, மனதில் தோன்றிய வலியை மறைத்து தலை கவிழ்ந்து நின்றாள்.
“அப்ப போய் நில்லு…. ” என்று ஆணையிட மறுப்பு கூறமால் தலை கவிழ்ந்த நிலையிலே செல்ல எத்தனித்தவளை தடுத்து நிறுத்தினான் நந்தன். 
அவளது அமைதி அவனை ஏதோ செய்வது போல் உணர்ந்தான். அவளது குறும்பு பேச்சும், சண்டையிடும் குணமும் தான் அவனை அவள் பால் ஈர்த்த ஒன்று. அவளுடன் சமாதானமாக பேசாவிடிலும், சண்டையிட்டு, அவளை சீண்ட வேண்டும் என்று அவன் உள்ளம் பரபரக்கும். அவ்வாறு இருக்க இப்பொழுது அமைதியாக இருப்பவளை கண்டு மனம் பொறுக்காதவன் அவளை தடுத்து நிறுத்தினான்.
“இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி மூஞ்ச வச்சு இருக்க….” மனதில் தோன்றிய இணக்கத்தை  வெளிக்காட்டாமல், கோபத்தில் கேட்பவனை போல் முகத்தை வைத்துக் கொண்டு வினவினான். 
அவனது முகத்தை ஏறிட்டு பார்த்தவள், கனிவு இன்றி கடுமையை கண்டு, எதுவும் கூறாது “ஒன்றும் இல்லை” என்று கூற, 
கடை ஊழியர்கள் தங்களை கவனிப்பதை உணர்ந்து பிறகு பேசி கொள்ளலாம் என்று எண்ணி, எதுவும் கூறாது அவளை போகும் மாறு சைகை செய்ய, எதுவும் கூறாது அங்கு இருந்த மூன்று கண்ணாடிகள் முன் சென்று நின்றாள்….
அவளது அமைதி அவனை வதைத்தாலும் பேசும் இடம் இதுவல்ல என்று உணர்ந்து அவனும் பொறுமை காத்தான்.
அவன் தேர்ந்தெடுத்த பத்து புடவைகளில் முதல் புடவையை அவள் மேல் வைத்துக் காட்ட அவன் ஆராய்ச்சி செய்யும் விதமாக அவளை மேல் இருந்து கீழ் வரை பார்க்க, மஹா தான் ஏனோ கூச்சமாக உணர்ந்தாள். 
‘அய்யோ…இவன் ஓப்பனா சைட் அடிக்க நானே நிக்குறேன் பாரு…. காண்டாமிருகத்திற்கு வந்த வாழ்வு பாரு…. இப்படி பார்க்குறான்… டேய் இதுக்கு நீ கண்டிப்பா அனுபவிப்படா பண்ணி….’ மனதில் புலம்பியவள் வெளியே பொம்மை போல் அவன் முன் நின்றாள். 
அடுத்ததை உடுத்த சொல்ல, மெல்லிய குரலில் அவன் மட்டும் கேட்கும்படி, “ஏன் சார் உங்க ஸ்டேடஸ்க்கு இந்த புடவை சரி இல்லையா….? நீங்கதானே தேர்வு செஞ்சீங்க….” உணர்வை கட்டுப்படுத்த நினைத்தும் முடியாமல் குத்தலாக வந்தது அவளது வார்த்தைகள்.
இதை சற்றும் எதிர்பார்க்காத நந்தன் அவளை அதிர்ச்சியாக பார்க்க, தான் செய்த தவறை உணர்ந்தான்… உணர்ந்தும், கொட்டிய வார்த்தையை அள்ள முடியாது என்பதை அவன் அறியும் போது அவனது மனம்  சுக்கு நூறாய் உடையுமோ….

கண்டிஷன்ஸ் தொடரும் …….
 

Advertisement