Advertisement

காதல் அணுக்கள் – 7
யார் பேச்சை தொடுங்குவது என தெரியாமல் சற்று நேரம் அமைதியே அங்கு ஆட்சிசெய்தது . எங்கே தன்னை தவறாக எண்ணி விடுவாரோ என்று கிஷோரின் முகம் பார்ப்பதை தவிர்த்து கோர்த்திருந்த தன் கைகளையே பார்த்திருந்தார் சித்ரா. ஆயிரம் தான் இருந்தாலும் அவரும் ஒரு பெண்ணை பெற்றவர் ஆயிற்றே ஒரு பெண்ணின் தந்தையாய் அவர் நிலைமையை நன்கு உணரமுடிந்தது.
காபி எடுத்துக்கோங்க அங்கிள் என்னும் சுபியின் குரலில் அனைவரும் கொஞ்சம் நடப்புக்கு வந்தனர். அங்கிள் அண்ணாவும் சந்தியாவும் ஒருத்தருக்கொருத்தர் விரும்புறாங்க. பெரியவங்க சம்மதத்தோடவும் ஆசிர்வாதத்தோடவும் கல்யாண பண்ணிக்க நினைக்குறாங்க.
அண்ணா அம்மா கிட்ட இன்னைக்கு மதியம் தான் சொன்னாங்க. அம்மாக்கு சந்தியாவை ரொம்ப புடிக்கும். அவ மருமகளா வரத்துலே அவங்களுக்கு இஷ்டமிருந்தாலும் உங்க முடிவு தான் அவங்க முடிவுன்னு சொல்லிட்டாங்க. அவங்க வாயை திறந்து அண்ணனுக்காக உங்ககிட்ட எதுவும் பேசவும் மாட்டாங்க . இப்போ கூட நீங்க எதாவது தப்பா நினச்சுருவீங்களோனு தான் யோசிச்சுட்டு இருப்பாங்க .
அதனால தான் எங்க அண்ணனுக்காக நான் பேசுறேன். நீங்க பார்த்து வளந்தவங்க நாங்க. அண்ணா நல்ல வேலையிலே பொறுப்பான பதவிலே இருகாங்க. கூடிய சீக்கிரம் ப்ரமோஷன் வரப்போகுது. அப்புறம் சென்னைக்கே வந்துருவாங்க. சந்தியாவை நல்ல பார்த்துப்பாங்க. அண்ணா மட்டுமில்ல நாங்க எல்லாரும் சந்தியாவை நல்ல பாத்துக்குவோம்.
சந்தியா இங்க வந்தா நிச்சயம் சந்தோசமா இருப்பா.  அப்புறம் அம்மாவை பத்தி சொல்லவே வேண்டாம் மாமியார் கொடுமை எல்லாம் இருக்காது அவ மாமியாரை கொடுமை பண்ண தான் உண்டு. அண்ணாவும்  சாப்ட் நேச்சர் . சந்தியா அடிச்சா கூட வெளியே சொல்லமாட்டான் . உங்க பொண்ணு உங்க கண்ணுமுன்னாடியே கூப்புடுறே தூரத்திலே இருப்பா . எல்லாத்தையும் விட இந்த சுபி மாதிரி ஒரு நந்தனார் கிடைப்பா என்று அவள் துப்பட்டாவை தூக்கி விட்டாள் .
கடகடவென தான் சொல்ல நினைத்ததை ஒருவாறு சொல்லிவிட்டு அனைவர் முகத்தையும் பார்த்தாள் .
தன் பெண்ணா இவ்வளவு பொறுப்பாக பெரிய மனுஷி போல் நிலைமையை கையாண்டது என்று மனதுக்குள் மெச்சினாலும் வெளியே முறைத்துக்கொண்டு ஏய் வாலு என்ன இது பெரியவங்க பேசும் போது நடுவுலே பேச்சு . கொஞ்சம் பேசாம இரு.
ஆமா நீங்க அப்படியே அண்ணனுக்காக பேசிட்டாலும் என்று மனதினுள் நொடித்து கொண்டாள்.
எப்பொழுதும் டேய் அண்ணா என்றும் அண்ணா டேய் என்றும் கொஞ்சிக்கொண்டிருப்பவள் இன்று தனக்காக இவ்வளவு பேசியதில் அவள் தன் மேல் கொண்ட பாசத்தை உணர்ந்தவன் மனம் முழுக்க மகிழ்ச்சியில் இருந்தது .
கிஷோருக்கு அவள் பேசியதில் மனம் சிறிது லேசானது போல் உணர்ந்தார். தன் நண்பன் குமரனும் இப்படி தான் நெருக்கடியான சூழ்நிலைகளில் எதாவது பேசி இறுக்கத்தை குறைத்துவிடுவார் . இன்று சுபியின் மூலம் குமரனே தன்னை குழப்பத்தில் இருந்து மீட்டதாக நினைத்தார். என்னை மன்னிச்சுடு குமார நான் இவ்ளோ யோசிச்சுருக்க வேண்டியதில்லை . சற்று மனம் தெளிந்தவர் சித்ராவை நோக்கி
சித்ரா நீ இதில் சங்கடப்பட ஒண்ணுமில்லைமா . புள்ளைங்க அவங்க விருப்பத்தை சொல்லிருக்காங்க நாம தான் அவங்களுக்கு நல்ல வாழ்கை அமைச்சி தரணும். என்ன இது வரைக்கும் நான் பாலாஜியை மாப்பிள்ளையாய் நினைச்சுபாத்ததில்ல அது தான் கொஞ்சம் யோசனை ஆயிடுச்சு என்றார் மனதை மறையாமல் .
சந்தியாக்கு ஜாதகம் பார்த்தலில் இன்னும் 4 மாசத்தில கல்யாணம் பண்ணனும் சொல்லிருக்காங்க அதைவிட்டா 5 வருஷம் கிட்ட தள்ளி போயிடும்னு சொல்லறாங்க . உனக்கு சம்மதம்னா நாள் பார்க்க ஆரம்பிக்கலாம் .
உண்மையில் சித்ரா சுபிக்கு திருமணம் செய்த பின்னே பாலாஜிக்கு செய்யலாம் என்றிருந்தார் ஆனால் இன்னும் 4 மாதத்தில் திருமணம் நடக்கவேண்டும் என்றால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார்.
அங்கிள் சுபிக்கு கல்யாணம் பண்ணாம நான் இப்போ பண்ணா நல்லா இருக்காது . வேணும்னா 4 மாதத்துக்குள்ள நிச்சயம் பண்ணிட்டு அப்புறம் சுபி கல்யாணம் முடிஞ்சதும் எங்க கல்யாணம் வச்சுக்கலாம். நீங்க என்ன சொல்றீங்க ?
சித்ராவிற்கும் இந்த யோசனை பிடித்தே இருந்தது ஆனால் சாரதாவிற்கு ஜோசியம் ஜாதகத்தில் அதிக நம்பிக்கை இருந்ததால் முடிவை அவர்களிடமே விட்டுவிட்டார்.
கிஷோருக்கு தான் தர்மசங்கடமாக இருந்தது. அவர் சந்தியாவின் திருமணத்தை ஒத்திப்போட விரும்பவில்லை . அதே சமயம் தந்தையில்லா குடும்பத்தில் ஒரு அண்ணனாய் பாலாஜியின் பொறுப்பும் அவருக்கு புரியாமல் இல்லை .
சுபிக்கு தான் அய்யோ என்றிருந்தது . அவ அவ இங்க ஒரு சோடா கூட இல்லாம மூச்சு வாங்க பேசி இவங்களை  சரிகட்டுனா இந்த அண்ணன் இப்படி கடைசி நிமிஷத்துல எல்லாத்தையும் கெடுத்துருவான் போலிருக்கே .
ஏன் மா சித்ரா சுபிக்கு எதாவது வரன் பார்த்திருக்கியா ? உங்க சொந்தத்துலே யாருக்காவது கொடுக்கணும்னு விருப்பம் இருக்கா ?
அப்படியெல்லாம் இல்லைங்க அண்ணா. இனி தான் சொல்லிவெக்கணும் . ஊருக்கு போன சங்கத்துல பதிவு பண்ணனும் .
நம்ப சந்தீப்புக்கு சுபியா குடுக்க உனக்கு சம்மதமா ? இது இப்போ எடுத்த முடிவில்லை . இவங்க சின்ன பசங்கள இருந்தப்பவே நானும் குமரனும் பேசிவெச்சது . சுபிக்கு கல்யாணதுக்கு பார்க்க ஆரம்பிக்கும் போது இது பத்தி பேசலாம்னு இருந்தேன் என்று கிஷோர் சித்ராவின் முகத்தை பார்த்தார் .
பாலாஜிக்கு சொல்லமுடியாத சந்தோஷம் . சந்தீப்பை மணக்கும் பெண் குடுத்து வைத்தவள் என்று பலமுறை எண்ணியதுண்டு அது தன் தங்கையே என்று நினைக்கையில் அவனுக்கு சொல்லவும் வேண்டுமா
சித்ரா தான் சற்று யோசனை ஆனார் . பெண் குடுத்து பெண் எடுப்பது சரிப்பட்டு வருமா ? அதிலும் சாரதாவின் குணத்திற்கும் சுபியின் குணத்திற்கும் ஏட்டிக்கு போட்டியாக தான் இருக்கும் எப்போதும் . வாழ்நாள் முழுவதும் அதை எப்படி எதிர்கொள்ள முடியும் ? சந்தீப் போன்ற ஒரு நல்ல மாப்பிள்ளை அமையும் போது இந்த காரணங்களுக்காக வேண்டாம் என்று கூற தோன்றவில்லை. தனது கணவரின் ஆசை அதுவாக இருந்தது என்று அறியும் போது எல்லாம் அவர் பார்த்துக்கொள்வார் என்று நம்பினார் .
சுபியோ அதிர்ச்சியில் உறைந்திருந்தால் . தன் அண்ணனின் காதலை சேர்த்து வைக்க போய் தான் சிக்கலில் மாட்டிகொண்டோமே . எந்த காரணத்திற்காகவும் இதில் காம்ப்ரமைஸ் ஆகக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள் . அவளை பொறுத்தவரை தன் கணவன் காதல் கணவனாகவே இருக்க வேண்டும் சின்ன சின்ன விஷயங்களில் கூட காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினாள் ஆதலால் நிச்சயம் சந்தீப் தனக்கு பொருத்தமானவன் இல்லை என்று நம்பினாள் .
நாம முடியாது என்று சொல்லிவிடுவோம் என நினைத்த நேரம் சித்ரா தனக்கு இதில் சம்மதம் என்று தெரிவித்தார். தன்னை ஒரு வார்த்தைகூட கேட்காமல் தாய் எடுத்த முடிவு அவளை கோபதில் தள்ளியது . கோபத்தை வெளிக்காட்டாமல் முகம் சிவந்து நின்றவளை பார்த்து பாலாஜியும் கிஷோரும் வெட்கம் கூச்சம் என்று நினைத்து கொண்டனர் . ஆனால் சித்ராவுக்கு தெரியும் கிஷோர் கிளம்பியவுடன் இங்கு ஒரு எரிமலை வெடிக்க காத்திருக்கிறதென்று.
அண்ணா ரெண்டு கல்யாணமும் ஒரே மேடையில் வச்சுக்கலாம் . இல்ல அது வேண்டாம்னு நினைச்சீங்கனா சந்தியா பாலாஜிக்கு கல்யாணமும் சுபி சந்தீப்புக்கு நிச்சயமும் நடத்திடலாம். நீங்க அண்ணிகிட்ட கேட்டு சொல்லுங்க .
சரிம்மா ரொம்ப சந்தோஷம் . ஒரு கல்யாணம் பேச வந்தேன் இப்போ ரெண்டா முடிவாயிருக்கு. நான் வீட்லே பேசிட்டு சொல்றேன் . அப்போ நான் கிளம்புறேன் . அப்புறம் மாப்பிள்ளை மருமகளே வரட்டுமா என்று விடை பெற்றார் .
வீட்டிற்கு வந்தவர் நேரே சந்தீப்பை அழைத்து கொண்டு மாடிக்கு சென்றார் . சந்தீப் அப்பா உன்னை கேட்காம ஒரு முடிவு எடுத்திருக்கேன் . அதுவும் உன் கல்யாண விஷயம் . நீயாவது நான் பாக்குறே பெண்ணை கல்யாணம் பண்ணிக்குவேனு நம்புறேன். உன் தம்பி மேல அந்த நம்பிக்கை எனக்கில்லே . உன் தங்கச்சியும் எனக்கு ஒரு ஷாக் குடுத்துட்டா . எனக்கு பாலாஜியை பிடிக்காதுன்னு இல்ல ஆனாலும் நான் என் பெண்ணுக்கு ஆரம்பத்திலே இருந்து ஒன்னொன்னா பார்த்து செய்யணும்னு ஆசைப்பட்டேன் . சரி விடு அந்த பேச்சு எதுக்கு இப்போ . நான் சுபியை  உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு ஆசைப்படுறேன் நீ என்னப்பா சொல்றே
தந்தை தனக்கு பெண் பார்த்துவிட்டார் என்று சொன்னவுடன் அதிர்ந்து தான் போயிருந்தான். அதிலும் மறுத்து பேச முடியாதபடி அவர் எமோஷனலாக பேசவும் செய்வதறியாது இருந்தான் ஆனால் பெண்ணின் பெயரை கேட்டதும் ஒரு நொடி இதெல்லாம் நிஜம் தானா குழம்பி பின் தெளிந்து  யாஹூ என்று கத்தவேண்டும் போல் இருந்தது. தான் எதை பற்றி தந்தையிடம் பேசவேண்டும் என்று நினைத்திறந்தானோ அதை தந்தை முடித்தே வந்திருந்தார் . அவரை கட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது .
தான் சொல்ல போகும் பதிலுக்காக தன் முகத்தையே  பார்த்திருந்த தந்தை அப்பொழுது தான் அவன் கருத்தில் பட்டார் . எப்படியும் தான் விரும்பிய பெண்ணே மனைவியாக வரப்போகிறாள் பின் எதற்காக அவரிடம் அவன் காதலை பற்றி கூறவேண்டும் இது அவர் ஆசைப்பட்டபடி அவர் பார்த்த பெண்ணாகவே இருக்கட்டும். அவர் மகிழ்ச்சியை கெடுக்க வேண்டாம்  என்று முடிவு செய்து எனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் பா என்றான் .
– தொடரும்

Advertisement