Advertisement

“என்ன டி இன்னும் தூங்கிட்டு இருக்க? பால் கரக்க நேரம் ஆச்சு? ஒழுங்கா எழுந்து வா. குழந்தை தூங்க தானே செய்றான். போ போ வீட்டு வேலை செய்ய ஆரம்பி. உன் ஆத்தா காரி நல்லது சொல்லி வளத்துருந்தா இதெல்லாம் தெரிஞ்சிருக்கும். நல்ல கும்பகர்னி மாதிரி என் பேரனை சாக்கு வச்சு தூங்கிட்டு இருக்க?”
“இனி சரியா செய்றேன் அத்தை”, என்று சொன்னவள் மணியைப் பார்த்தாள். மணி நான்கு என்று தான் காட்டியது. 
“இத்தனை மணிக்கே வா?”, என்று எண்ணிக் கொண்டு கீழே வந்தாள். 
அதன் பின் கூட்டிப் பெருக்கி, சாணம் தெளித்து, கோலம் போட்டாள். பால் கரக்க தெரியாது என்பதால் சீனிவாசன் கறந்து கொடுத்தார்.  பின் குளித்து முடித்து பாலைக் காச்சும் போது அனைவரும் எழுந்து வர ஆரம்பித்தார்கள். 
வைதேகிக்கு டீ போட்டுக் கொடுத்தாள் “து, டீயா இது?”, என்று பிரச்சனையை ஆரம்பித்தாள். 
அதன் பின் வந்தனாவுக்கு பூஸ்ட், வள்ளிக்கு காப்பி என்று போட்டுக் கொடுத்தாள். 
அதன் பின் சமையல் செய்ய ஆரம்பித்தாள். அந்நேரம் கிரிதரனும் நிரஞ்சனும் வர அவர்களுக்கும் சேர்த்து டிபன் செய்து என்று முதுகு பெண்டு நிமிர்ந்தது. உதவிக்கு கூட யாரும் வர வில்லை. 
அவர்கள் செய்த ஒரே உதவி குழந்தையை கவனித்துக் கொண்டது தான். அதன் பின் மதிய சமையல், அவர்களுக்கு பரிமாறுவது என பாதி நாள் கடந்தது. அதற்கு பின்னர் சாயங்கால வேளை காப்பி என்று கடக்க மொத்தத்தில் மூச்சு முட்டிப் போனாள் சரண்யா, 
அன்று இரவு “எனக்கு சப்பாத்தி வேண்டாம், தோசை தான் வேணும்”, என்று வந்தனா சொல்லிக் கொண்டிருக்க “மாவு இல்லை வந்தனா, இன்னைக்கு ஒரு நாள் சாப்பாத்தி சாப்பிடு”, என்றாள் சரண்யா. 
“ஏன் நீ மாவு எதுக்கு அரைக்கலை? அதை விட உனக்கு என்ன வேலை?”, என்று கேட்டாள் வைதேகி. 
“இப்ப தான் அத்தை அறைச்சு வச்சேன். இன்னும் புளிக்கலை”, என்று சரண்யா விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த சீனிவாசன் “ஏன் வந்தனா உன்னோட தொண்டைல சப்பாத்தி இறங்காதா?”, என்று கோபத்துடன் கேட்டார். 
“எதுக்கு என் மகளை அரட்டுறீங்க? பிறந்த வீட்டுக்கு வந்து ஆசைப் பட்டதை என் மக சாப்பிட நினைக்க கூடாதா?”, என்று கேட்டாள் வைதேகி. 
“உன் மக ஆசைப் பட்டான்னா நீ செஞ்சி கொடு. எதுக்கு சரண்யாவை வேலை வாங்குற?”
“அப்படித் தான் வாங்குவேன். பணம் வேணும், பெரிய வீட்டுக்கு மருமகளா ஆகணும்னு தானே ரெண்டாந்தாரமா வாக்கப் பட்டு வந்துருக்கா இந்த வெக்கங் கெட்டவ? அப்ப, இந்த வேலை எல்லாம் செஞ்சு தான் ஆகணும்”
“நீ வேணும்னு…”, என்று சீனிவாசன் சொல்ல ஆரம்பிக்க “மாமா, நானே பாத்துக்குறேன். இதுக்காக நீங்க சண்டை போட வேண்டாம்”, என்று அவரை சமாதானப் படுத்தினாள் சரண்யா. 
“இல்லை மா, நீ எப்படி? உனக்கு கஷ்டமா இருக்கும் மா”
“இது என் வீடு தானே மாமா? அப்ப என் வீட்ல நான் தானே எல்லா வேலையும் செய்யனும். நான் பாத்துக்குறேன்”, என்றதும் சீனிவாசன் அரை மனதாக அங்கிருந்து சென்றார். 
வெற்றிச் சிரிப்பை சிந்திய வைதேகி “கடைக்கு போய் தோசை மாவு வாங்கிட்டு வந்து வந்தனாவுக்கு தோசை ஊத்திக் கொடு”, என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்று விட்டாள். . 
வேறு வழியில்லாமல் கடைக்கு செல்ல கிளம்பினாள். அதை பார்த்த சீனிவாசன் “கொடு மா நான் வாங்கிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றார். 
கோதை சரண்யாவுக்கு எல்லாம் வேலையையும் கற்றுக் கொடுத்திருந்தாலும் எந்த வேலையையும் செய்ய விட மாட்டாள். அவ்வளவு பாசமாக மகளைப் பார்த்துக் கொண்டாள். ஆனால் இன்றோ…
இரண்டு நாட்கள் எப்படியோ சென்றது. ஆனால் வைதேகி வாய் மட்டும் சரண்யாவை குத்தி கிழித்துக் கொண்டிருந்தது.  அவர்களுக்கு பிடித்த சாப்பாடு செய்து கொடுத்தால் “சி இது எல்லாம் ஒரு சாப்பாடு வாயில் வைக்க முடியலை. நாளைக்காவது ஒழுங்கா செய். என் மருமக எப்படி எல்லாம் சமைப்பா தெரியுமா?”, என்று பேச்சு வாங்கினாள் சரண்யா. 
 
கெட்டியாக காப்பி கொடுத்தால் “எதுக்கு பாயாசம் மாதிரி இருக்கு?”, என்பாள். தண்ணீராக காப்பி இருந்தால் “கழனி தண்ணீர் மாதிரி இருக்கு”, என்பாள். சரியான அளவில் கொடுத்தால் “கூட கொஞ்சம் இனிப்பு போட வேண்டியது தானே? உன் அப்பன் வீட்டு சொத்தா?”, என்று வாயால் கொடுமை செய்தாள் வைதேகி. 
அனைத்துக்கும் சிரித்துக் கொண்டே அங்கிருந்து செல்ல பழகிக் கொண்டாள் சரண்யா. 
நடக்கும் அனைத்தையும் சொல்லி வாசுவிடம் புலம்ப வேண்டும் போல் அவள் மனது பரபரத்தது. சாதாரண கணவன் மனைவியாக இருந்தால் சொல்லியிருப்பாள். ஆனால் அவள் வாழ்க்கை தான் புரியாத புதிர் ஆயிற்றே. 
ஆனால் ஊருக்கு சென்ற வாசு தந்தையை அழைத்து, வந்து சேர்ந்ததை சொன்னான். ஆனால் சரண்யாவிடம் பேசக் கூட இல்லை. சீனிவாசன் சொல்ல வருவதையும் காது கொடுத்து கேட்க வில்லை. அவனது வேலையும் அப்படி இருந்தது. 
சரண்யா இந்த வீட்டுக்கு வந்து ஒரு வாரம் ஆன பிறகு ஒரு நாள் வெளியே கீரை விற்கும் சத்தம் கேட்க அதை வாங்கச் சென்றாள். 
கீரை விற்றது அவளுடன் பள்ளியில் படித்த வேம்பு என்பவன் தான். சரண்யாவைக் கண்டதும் “எப்படி இருக்க சரண்யா?”, என்று கேட்டான்.
“நல்லா இருக்கேன் வேம்பு, பொண்டாட்டி பிள்ளைங்க எப்படி இருக்காங்க? இது உன் தோட்டத்து கீரையா?”, என்று இவள் பதிலுக்கு புன்னகையுடன் விசாரித்தாள். 
அவனும் கதை பேசிக் கொண்டே அவளுக்கு கீரை கொடுத்து விட்டு சென்றான். கீரையை வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் வந்ததும் “என்னடி பேச்சு ஓவரா இருக்கு? புருஷன் இல்லைன்னதும் கீரைக்காரன் கிட்ட பேச ஆரம்பிச்சிட்டியா?”, என்று கேட்டாள் வைதேகி. 
அதைக் கேட்டு துடித்து போன சரண்யா “அத்தை”, என்று கத்தினாள். 
“என்ன கத்துற? உண்மையைச் சொன்னா எரியுதா? நீயும் சின்ன வயசு தானே? உனக்கும் ஆசை இருக்க தானே செய்யும்?”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் வைதேகி. 
அதிர்ச்சியில் உறைந்து போய் நின்ற சரண்யா அங்கிருந்து செல்ல பார்க்க அப்போது வாசல் பக்கம் ஏதோ நிழல் ஆடியது. திரும்பி பார்த்தால் வேம்பு தான் நின்றான். 
அவன் முகத்தில் இருந்த அதிர்வே அவன் அனைத்தையும் கேட்டு விட்டான் என்று புரிந்தது. தன்னை சமாளித்துக் கொண்டு “என்ன வேம்பு?”, என்று கேட்டாள் சரண்யா. 
“நீ அதிகமா பத்து ரூபா கொடுத்துருக்க. திருப்பிக் கொடுக்க வந்தேன்”, என்றவன் அவளிடம் கொடுத்து விட்டு சென்றான். 
வீட்டுக்கு சென்ற வேம்பு உடனடியாக தன்னுடைய நண்பன் கதிரைத் தான் தேடிச் சென்றான். 
இன்று நடந்தவற்றை அப்படியே அவனிடம் சொன்னான் வேம்பு. 
“என்ன டா சொல்ற?”, என்று அதிர்ச்சியாக கேட்டான் கதிரேசன். 
“ஆமா டா, சரண்யா நல்லாவே இல்லை. ரொம்ப மெலிஞ்சு போய் இருக்கா. இப்படி எல்லாம் பேசுராங்க அவளை. எனக்கே அவளைப் பாத்தா பாவமா இருக்கு. பேசாம அவ உன்னையே கட்டிருக்கலாம்”, என்று மனது கேட்காமல் புலம்பி விட்டுச் சென்றான். 
இப்படியே நாட்கள் கடக்க வைதேகி வாசுவை போனில் அழைத்து குழந்தைக்கு பேர் வைப்பதை பற்றி கேட்டாள். ஆதி தேவ் என்று வாசு சொன்னதும் குழந்தைக்கு அந்த பெயரே வைக்கப் பட்டது. வீட்டாள்கள் மட்டுமே பெயர் வைத்தார்கள். 
பெயர் வைப்பதற்கு வந்த கோதை மகளின் நிலையைக் கண்டு கண்ணீர் வடித்து விட்டே சென்றாள். 
அடுத்த ஒரு மாதம் கடந்த நிலையில் ஒரு நாள் ஏதோ காய்கறி விற்பவனும் சரண்யாவின் நிலையை வந்து கதிரேசனிடம் சொன்னான். அதனால் நேராக கோதை முன்பு போய் நின்றான் கதிரேசன். 
“அத்தை”
“சொல்லு கதிரு”
“சரண்யாவை பாக்க போனியா இல்லையா?”
“போகலை”
“ஏன்?”
“பாத்து பாத்து பூரிச்சு போற வாழ்க்கையவா என் மக வாழ்ந்துட்டு இருக்கா? மூணு ராட்சசிங்களும் சேந்து என் மகளை பந்தாடுறாங்க? அதை பாத்த அப்புறம் எனக்கு அங்க போக மனசே இல்லை. அண்ணன் தான் வந்து புலம்பிக்கிட்டு இருக்கு. அண்ணனும் இங்க அவளை கூட்டிட்டு வறேன்னு சொல்றாராம். ஆனா அவ வர மாட்டிக்கா. அவளே அவ தலையில மண்ணை அள்ளிப் போட்டுக்கிட்டா என்ன செய்ய?”, என்று தளர்ந்து போய் சொன்னாள் கோதை. 
பெற்ற தாயாலே ஒன்றும் செய்ய முடியவில்லை. தாய் மாமனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. தான் மட்டும் என்ன செய்து விட முடியும் என்று எண்ணிக் கொண்டு அமைதியாகி விட்டான் கதிரேசன். 
“காபி சாப்பிடுங்க மாமா”, என்று சீனிவாசனிடம் காப்பி டம்பளரைக் கொடுத்தாள் சரண்யா. 
“இப்ப எனக்கு காப்பி ஒண்ணு தான் மா குறைச்சல். உன் வாழ்க்கையை இப்படி கெடுத்துட்டனே? கோதை கிட்ட கொண்டு போய் உன்னை விட்டுருவா மா?”
“அங்க போனா அம்மா நான் முன்னமே சொன்னேன் கேட்டியான்னு கேக்கும்? இல்லைன்னா என்னை நினைச்சு அழும். எனக்கு ஆதரவா தான் நீங்க இருக்கீங்களே? நான் இங்கயே இருக்கேன் மாமா. எனக்கு மரியாதையும் இது தான்”
“இந்த வைதேகி பண்ணுறது சரியே இல்லை மா. நான் ஏதாவது சொல்ல வந்தா என்னையும் ஊமை ஆக்கிடுறா மா? ஆ ஊன்னா வீட்டை விட்டு போறேன்னு மிரட்டுறா. கூடவே புது மருமக தான் என்னை வீட்டை விட்டு துரத்திட்டான்னு எல்லார்க் கிட்டயும் சொல்லுவேன்னும் சொல்றா. அப்படி ஏதாவது நடந்தா குடும்ப மானம் சாந்தி சிரிச்சிரும்னு தான் பொறுமையா இருக்கேன்”
“விடுங்க மாமா, எல்லாம் மாறும். மாமா பேசினாங்களா?”
“அவனைப் பத்தி பேசாத. அவன் போனும் பண்ணலை. நான் பண்ணாலும் எடுக்கலை”
“அப்படிச் சொல்லாதீங்க மாமா. வாசு மாமாவுக்கு என்ன பிரச்சனையோ தெரியலை. இன்னைக்கு நைட் பேசிப் பாருங்க”
“சரிமா”, என்றவர் அன்று இரவு வாசுவை அழைத்தார். 
அப்போது அவன் எடுக்க வில்லை. ஆனால் சிறிது நேரத்தில் திருப்பி அழைத்தான் வாசு.
“வாசு”
“சொல்லுங்கப்பா”
“எதுக்கு நான் போன் பண்ணா எடுக்கவே இல்லை?”
“இங்க அதிகம் வேலைப்பா. இப்ப தான் முடிஞ்சது. எல்லாரும் எப்படி இருக்கீங்க?”
“வாசு நான் மறுபடியும் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. சரண்யாவை கூட்டீட்டு போ. இல்லைன்னா வேற ஏதாவது வழி பண்ணு. உங்க அம்மா பண்ணுறது சரி இல்லை”
“அப்பா, திருப்பி திருப்பி இதையே சொல்லாதீங்க? ஏன் இப்ப அவளுக்கு என்ன? அம்மா ஏதாவது பேசிட்டு போறாங்கன்னு கண்டுக்காம விட வேண்டியது தானே? இருக்குற பிரச்சனைல வீட்டு பிரச்சனை எல்லாம் என்கிட்ட கொண்டு வராதீங்கப்பா”
“அது இல்லைப்பா, உன் அத்தையும் வந்தனாவும் இங்க தான் இருக்காங்க. அவங்களையாவது ஊருக்கு போகச் சொல்லு”
“அப்பா, அவங்க பேரனை பாக்க வந்துருப்பாங்க. வந்தனா நம்ம வீட்டு பொண்ணு. அவங்களை எப்படி போகச் சொல்ல முடியும்? எதுக்கு தான் உங்க பேச்சைக் கேட்டு கல்யாணம் பண்ணினேன்னு இருக்கு. சும்மா சும்மா குறை சொல்லிட்டு இருக்காதீங்க. நான் அப்புறம் பேசுறேன்”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டான். 
அதற்கு மேல் அவனிடம் பேசி பலன் இல்லை என்று புரிந்து கொண்ட சீனிவாசன் அவனிடம் பேசுவதையே விட்டு விட்டார்.
ஆனால் கதிரேசன் சும்மா இருக்க வில்லை. கோதையிடம் சொன்ன பிறகு அவன் அமைதியாக தான் இருந்தான். ஆனால் மீண்டும் சரண்யா கஷ்டப் படும் செய்தி அவன் காதை வந்தடைந்தது. எப்படியாவது சரண்யா கஷ்டத்தில் இருந்து விடு பட வேண்டும் என்று எண்ணி வாசுவை போனில் அழைத்து விட்டான். 
காதல் தொடரும்…

Advertisement