Advertisement

அத்தியாயம் 9
சிதைந்து போய் இருக்கும்
என் இதயத்தை சாந்த படுத்தும்
காரிகை நீயாகினாய்!!
அன்று இரவு சமையல் வேலை செய்து கொண்டிருந்த சரண்யாவைப் பார்த்த சீனிவாசன் “என்ன மா நீ சமையல் செஞ்சிட்டு இருக்குற? சரசு எங்க?”, என்று கேட்டார். ‘
சப்பாத்தியை உருட்டிக் கொண்டே “அவங்க வரலை மாமா”, என்றாள் சரண்யா. 
“எதுக்காம்? உடம்பு கிடம்பு சரியில்லையா?”
“அப்படி எல்லாம் இல்லை மாமா”
“பின்ன எதுக்கு மா வரலை? குழந்தை சிணுங்குற சத்தம் கேக்குது. அதான் உன்னை தேடி வந்தேன். என்னன்னு போய் பாருமா. நான் இங்க பாத்துக்குறேன்”
“அப்படியா மாமா? ஐயையோ, தூங்குறான்னு நினைச்சேனே?”
“அழுற சத்தம் கேக்கலை. இப்ப தான் முழிப்பானா இருக்கும். மெதுவா போ”
“சரி மாமா, நான் பாக்குறேன்”, என்றவள் அடுப்பை அணைத்து விட்டு ஓடினாள். 
“இந்த சரசு எங்க போய் தொலைஞ்சா?”, என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார் சீனிவாசன். 
குழந்தை அப்போது தான் முழித்தான். அவளைக் கண்டதும் அவன் மாயக் கண்ணனாய் புன்னகை புரிய அவன் புன்னகையில் மயங்கி தான் போனாள். 
“பட்டுக் குட்டி அம்மாவைத் தேடுனியா?”, என்று கேட்டுக் கொண்டே அவனை தூக்கிக் கொண்டே கீழே வந்தாள்.  
“மாமா, உங்க பேரனை கொஞ்ச நேரம் வச்சிக்கிறீங்களா? நான் சமைச்சிட்டு வரேன்”, என்ற படி அவனைத் தூக்கி அவர் கையில் கொடுத்தாள் சரண்யா. 
“கொடு மா”, என்று அவனை வாங்கியவர் “சரசு எதுக்கு மா வரலை? குழந்தையை வச்சிகிட்டு சமையலும் எப்படி உன்னால செய்ய முடியும்? அதுக்கு தானே அவளை வேலைக்கு வச்சது? எங்க போய் தொலைஞ்சா?”, என்று கேட்டார். 
“அது.. அது வந்து மாமா..”, என்று சரண்யா பதில் சொல்ல முடியாமல் தடுமாறும் போது “அதை எதுக்கு அவ கிட்ட கேக்குறீங்க? என்கிட்ட கேளுங்க”, என்ற படி வந்தாள் வைதேகி.
“சண்டை போடணும்னு முடிவுல இருக்கியா வைதேகி? சரி உன் கிட்ட தானே கேக்கணும்? கேக்குறேன் பதில் சொல்லு. சரசு எங்க?”
“நான் அவளை வேலையை விட்டு நிறுத்திட்டேன்”
“என்ன, வேலையை விட்டு நிறுத்திட்டியா? என்ன சொல்ற நீ? அவளை எதுக்கு நிறுத்தணும்? அவ என்ன தப்பு செஞ்சா?”
“அவ ஒரு தப்பும் செய்யலை. எனக்கு அவ வேண்டாம்னு தோணுச்சு. அதான் நிறுத்துனேன்”
“என்னைக் கேக்காம எதுக்கு நிறுத்தின?”
“எதுக்கு உங்களைக் கேக்கணும்? நான் தான் அவளை வேலைக்கு சேத்தேன். என் மருமக பிரேமா சமைய கட்டுல கஷ்டப் படக் கூடாதுன்னு தான் அவளை வேலைக்கு வச்சேன். என் மருமகளே போனதுக்கு அப்புறம் இனி சரசு இங்க எதுக்கு?”
“பிரேமா உன் மருமக தான், நான் இல்லைன்னு சொல்லலை. அப்ப சரண்யா மட்டும் யாராம்? அவளும் உன் மருமக தானே?”
“இவ என் மருமகளா? கண்டிப்பா இவ என் மருமக கிடையாது. இவளை எல்லாம் ஒரு நாளும் நான் மருமகளா ஏத்துக்க மாட்டேன்”, என்று கத்தினாள் வைதேகி. 
“பஜாரி மாதிரி முதல்ல கத்துறதை நிறுத்து. இப்ப பேச்சு அதை பத்தி கிடையாது. எதுக்கு சரசுவை வேலையை விட்டு நிறுத்தின?”
“எதுக்கு இந்த வீட்டுக்கு வேலைக்காரி வேணும்? அதுக்கு தான் நீங்க கூட்டிட்டு வந்த இந்த சனியன் இருக்குதே?”
“வார்த்தையை அளந்து பேசு வைதேகி. எல்லாத்தையும் நான் பொறுத்துட்டு இருக்க மாட்டேன். சரண்யாவால குழந்தையையும் பாத்துட்டு வீட்டு வேலையையும் எப்படி செய்ய முடியும்?”
“ஏன் பாத்தா என்ன? அவ பாத்து தான் ஆகணும்”
“அப்படின்னா அவ வேலை செய்யும் போது நீ குழந்தையை பாத்துக்கோ”
“நான் எதுக்கு பாக்கணும்? நான் என் பேரனை பாத்துக்குவேன்னு சொன்னப்ப என்னோட பேச்சைக் கேக்காம, இவ தான் வந்து என் பேரனை வளக்கணும்னு சொல்லி தானே இவளை என் மகனுக்கு கட்டி வச்சீங்க? அப்ப இவ தான் குழந்தையை பாக்கணும்”
“அப்ப வீட்டு வேலையை நீ செய்”
“எல்லாருக்கும் சமைச்சு போட நான் என்ன இந்த வீட்டு வேலைக்காரியா?”
“வேணும்னு சண்டை இழுக்காத வைதேகி. சரண்யாவால எப்படி முடியும்?”
“முடியனும்? ஏன் ஊருல உலகத்துல பிள்ளையை பெத்து வச்சிக்கிட்டு வீட்டு வேலையை யாரும் செய்யலையா? செய்ய தானே செய்றாங்க? நான் வாசு பிறந்தப்ப எல்லா வேலையும் செய்யலையா? அப்ப நம்ம வீட்டுக்கு எந்த வேலைக்காரி இருந்தா? அப்ப இவளால செய்ய முடியாதா? இங்க என்ன இவளா பிள்ளை பெத்தா? குழந்தைக்கு ஆயாவா வந்தவ தானே?”, என்றதும் அந்த வார்த்தை சரண்யாவை அதிகம் பாதித்தது. 
வைதேகியை பேச விட்டால் அவள் மனதை தான் குத்திக் கீறுவாள் என்பதால் “மாமா, விட்டுருங்க மாமா. நான் எல்லா வேலையும் பாத்துக்குறேன். மூணு பேருக்கு சமைக்கிறதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை”, என்று ஊடே புகுந்து பேசினாள் சரண்யா. 
சீனிவாசன் என்ன சொல்ல என்று தெரியாமல் வைதேகியை முறைத்து பார்த்தார். அவர் பார்வையை சட்டையே செய்யாமல் அறைக்குள் சென்ற வைதேகி அன்று நடந்த விஷயத்தை வள்ளியிடம் போனில் சொல்ல ஆரம்பித்தாள். 
அடுத்த நாள் என்ன செய்ய வேண்டும் என்று இருவரும் திட்டம் போட்டார்கள். அதன் படி அடுத்த நாளே வள்ளியும் வந்தனாவும் வாசு வீட்டுக்கு வருவது என்று முடிவு எடுத்தார்கள்.  
அதற்கு அனுமதி வாங்க “என்னங்க நாம பிரேமா வீட்ல போய் நாலஞ்சு நாள் இருந்துட்டு வருவோமா? உங்க தங்கச்சிக்கு தனியா இருக்குற போல இருக்காம்?”, என்று கிரிதரனிடம் கேட்டாள் வள்ளி. 
“வள்ளி, நம்ம மக இறந்த பிறகு அது நம்ம மக வீடு கிடையாது. அதை முதல்ல புரிஞ்சிகோ. நம்ம மக போன அப்புறம் நாம அங்க போக கூடாது. அது மரியாதையாவும் இருக்காது. இப்ப அங்க வேற பொண்ணு வேற மருமகளா வந்திருக்கா. இப்ப நாம அங்க போய் இருந்தா நல்லா இருக்காது மா. வேணும்னா வைதேகியை இங்க வந்து இருக்க சொல்லு”
“எனக்கு என் பொண்ணு நினைவாவே இருக்குங்க. அங்க போய் என் பேரனைப் பாத்தா எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்”
“அப்படியா? சரி நீ போய் பாத்துட்டு வா”
“நம்ம வந்தனாவையும் கூட்டிட்டு போறேன்”
“சரி வள்ளி, நிரஞ்சன் கிட்ட சொல்லிட்டு வந்தனாவையும் அழைச்சிட்டு நாலு நாள் இருந்துட்டு வாங்க”
“சரிங்க, நீங்க சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க?”
“தெரியலை, பாக்கணும்”
“அப்ப சாப்பாடுக்கு மட்டும் அங்க வந்துறீங்களா? நம்ம மகளோட வீடு இல்லாம போனாலும் அது உங்க உங்க தங்கச்சி வீடு தானேங்க? வந்தா என்ன?”
“சரி நான் நிரஞ்சன் கிட்ட கேட்டு சொல்றேன், என்று அவர் சொன்னதும் நிம்மதியானாள் வள்ளி. 
நிரஞ்சனிடம் கேட்டதற்கு அவன் “சரி, போயிட்டு வாங்க. ஆனா நான் அங்க வரலை”, என்று மட்டும் சொல்லி விட்டான். ஆனால் அவனையும் பேசியே கரைத்தாள் வந்தனா. அவனும் சாப்பாடுக்கு வரேன் என்று ஒத்துக் கொண்டான். 
அதனால் அடுத்த நாள் காலையிலே வந்தனாவும், வள்ளியும் இங்கே கிளம்பி வந்து விட்டார்கள். 
அவர்களைக் கண்டதும் சீனிவாசனுக்கு திகைப்பாக இருந்தாலும் வாங்க என்று மட்டும் சொன்னார். 
“என்ன அண்ணே, வேண்டா வெறுப்பா கூப்பிடுறது மாதிரி இருக்கு”, என்று வம்பிழுத்தாள் வள்ளி. 
“நீ இப்படி நினைச்சா நான் பொறுப்பா மா? இது வந்தனா வீடு. உன் மருமக வீட்டுக்கு நீ வந்துருக்க, நான் எதுக்கு வேண்டா வெறுப்பா நினைக்கணும்?”
“இது மருமக வீடு மட்டும் இல்லைண்ணே. என் மக வீடும் இது தான். என்னோட மக இறந்து போனாலும் இது என்னோட மக வீடு தானே? என் பேரனை பாத்துட்டு போகலாம்னு வந்தோம்”, என்று வள்ளி சொன்னதும் அவள் கையில் இருந்த பெரிய பேக் அவர்கள் உடனே செல்லப் போவதில்லை என்று சீனிவாசனுக்கு உணர்த்தியது. 
இவர்கள் ஏதாவது உள்நோக்கத்துடன் வந்திருக்கிறார்களோ என்று எண்ணி குழப்பமாக வள்ளியையும் வந்தனாவையும் பார்த்தார் சீனிவாசன். 
அப்போது குழந்தையுடன் இறங்கி வந்தாள் சரண்யா. இவர்களை கண்டு அவளுக்கும் திகைப்பு தான். 
அவளுடைய ஒரு நொடி திகைப்பைக் கண்ட வள்ளி “என்ன அண்ணே, வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு கூட சொல்ல மாட்டிக்கா உங்க புது மருமக. இப்படி வளமை தெரியாதவளையா இந்த வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வந்தீங்க?”, என்று கேட்டாள். 
“ஆமா ஆமா உன் மக மட்டும் எல்லாரையும் விழுந்து விழுந்து தான் கவனிச்சா”, என்று மனதுக்குள் சீனிவாசன் எண்ணிக் கொண்டிருக்கும் போதே “பிச்சக்கார குடும்பத்துக்கு இந்த வரைமுறை எல்லாம் எப்படிங்க மதினி தெரியும்?”, என்று கேட்ட படி அங்கே வந்தாள் வைதேகி. 
சீனிவாசன் எதுவோ சொல்ல போக அவரை கண்களால் தடுத்தாள் சரண்யா. 
“கொஞ்ச நேரம் சும்மா இருங்க”, என்று அதட்டிய வந்தனா சரண்யா அருகில் சென்று “என் மருமகனை என்கிட்ட கொடு”, என்று சொல்லி வாங்கிக் கொண்டாள். அப்படிச் சொல்வதை விட பிடுங்கிக் கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும். 
அதில் சரண்யாவுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. கேட்டால் கொடுத்திருக்க போகிறாள்? அதற்கு இப்படி ஒரு குழந்தையை பிடுங்க வேண்டுமா என்று தோன்றியது. 
“என்ன மசமசன்னு நின்னுட்டு இருக்க? வந்தவங்களுக்கு டீ போடு போ”, என்று சரண்யாவிடம் சொன்னாள் வைதேகி. 
“சரிங்க அத்தை”, என்று சொல்லி விட்டு சென்றாள் சரண்யா. 
“நீங்க உள்ள வாங்க அண்ணி, வா வந்தனா”, என்று வரவேற்ற வைதேகி “வர்ஷினி குட்டி”, என்று சொல்லி தன்னுடைய பேத்தியை தூக்கிக் கொண்டே உள்ளே சென்றாள்.
போகும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த சீனிவாசனுக்கு அவர்களின் வரவு என்ன பூகம்பத்தை ஏற்படுத்துமோ என்ற பயம் வந்தது.
அன்று முழுவதும் சரண்யாவுக்கு வேலை வேலை தான். குழந்தையையும் அவர்களே வைத்துக் கொண்டது வேறு கஷ்டமாக இருந்தது.
அன்று இரவு குழந்தை அழுது கொண்டே இருக்கவும் சரண்யா நேராக சீனிவாசனிடம் போய் நின்றாள். 
“என்ன மா?”
“குழந்தையை வாங்கி தாங்க மாமா. அழுதுட்டே இருக்குறது கஷ்டமா இருக்கு”, என்று கேட்டதும் உடனே வந்தனாவை அழைத்த சீனிவாசன் “வந்தனா, குழந்தை என்ன செய்றான்? அவனை தூக்கிட்டு வா மா”, என்றதும் அவரை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றாள். 
“உங்க அப்பாவுக்கு என்னவாம் வந்தனா?”, என்று கேட்டாள் வைதேகி. 
“சரண்யா குழந்தையை கேக்குறா போல? அப்பா தூக்கிட்டு வரச் சொல்றார். என்ன மா செய்ய?”
“இன்னைக்கு தூக்கிட்டு போய் கொடு. நாளைல இருந்து அவளைப் பாத்துக்கலாம்”, என்று வைதேகி சொன்னதும் வந்தனா வெளியே வந்து அவரிடம் குழந்தையைக் கொடுத்தாள். 
அடுத்த நொடி சரண்யாவிடம் குழந்தையைக் கொடுத்து விட்டார். அவளிடம் வந்ததும் அழுகையைக் குறைத்தான் அவள் மகன். குழந்தையை தூக்கிக் கொண்டு மாடிக்கு சென்றவள் அதன் பின் அவனுடனே ஒன்றி விட்டாள். 
வெகு நேரம் தன்னுடைய வாழ்க்கையை பற்றி யோசித்துக் கொண்டிருந்தவள் பின்னர் தான் தூங்கினாள். அவள் தூங்கி சிறிது நேரம் தான் இருக்கும். அப்போது அவள் அறைக் கதவு பட படவென்று தட்டும் சத்தம் கேட்டது. 
திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் சரண்யா. கதவு தட்டப் படும் சத்தம் கேட்டதும் அவசரமாக எழுந்து வந்து கதவைத் திறந்தாள். 
அங்கே அவளை முறைத்த படி நின்றாள் வைதேகி. 

Advertisement