Advertisement

“என்ன, அண்ணன் சத்தம் மாதிரி இருக்கு. திருப்பியும் ஏதாவது பிரச்சனையா?”, என்று எண்ணிக் கொண்டே வெளியே வந்த கோதையின் கண்களில் வாசுவும், வாசுவின் அருகில் மகனை கையில் வைத்துக் கொண்டு நின்ற சரண்யாவும் பட்டார்கள். 
தன்னுடைய மகளை கணவன் குழந்தையுடனும், முகம் முழுவதும் சந்தோசத்துடனும் பார்த்ததும் கோதையின் அகமும் முகமும் மலர்ந்தது. 
“கல்யாணம் முடிஞ்சு முதல் முறையா வீட்டுக்கு வந்துருக்கீங்க? அப்படியே இருங்க. ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வரேன்”, என்று சந்தோஷமாக உள்ளே ஓடினாள் அந்த பாசமான தாய். 
ஆரத்தி கரைத்து எடுத்து வந்தவள் வாசு, சரண்யா, ஆதி மூவருக்கும் ஆரத்தி எடுத்தாள். அதை வெளியே கொட்டி விட்டு வந்த கோதை “இப்ப தான் எனக்கு மனசுக்கு நிறைவா இருக்கு. ரொம்ப நன்றி வாசு. 
இன்னைக்கு தான் இந்த கழுதை முகத்துல சிரிப்பையே பாக்குறேன். நீ மனசு மாறி வந்தது எங்க எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம் பா”, என்று அவர்களை உள்ளே அழைக்க வேண்டுமே என்பதை கூட மறந்து பேசிக் கொண்டிருந்தாள். 
“கோதை அவங்களை முதல்ல உள்ளே கூப்பிடு மா”, என்று நினைவு படுத்தினார் சீனிவாசன். 
“நான் ஒரு பொச கெட்டவ. வாசல்லே நிக்க வச்சு பேசுறேன் பாரு. வாங்க உள்ள வாங்க. சரண்யா வா வா, வாசு வாப்பா”, என்று சொல்லி அவர்களை வரவேற்றாள். 
சிறிது நேரத்தில் சிறு விருந்தையே தயார் செய்ய ஆரம்பித்தாள் கோதை. 
“அம்மா ரொம்ப கஷ்ட படாத. நாங்க ஊருக்கு போற வரை நம்ம வீட்ல தான் இருக்க போறோம். அதனால ஒண்ணு ஒண்ணா செஞ்சு கொடு”, என்றாள் சரண்யா. 
“என்ன டி சொல்ற?”, என்று கோதை கேட்டதும் நடந்ததை சொன்னாள். 
“அண்ணே, என்ன இதெல்லாம்? மதினி மனசு என்ன பாடு படும்?”, என்றாள் கோதை. 
“அவளைப் பத்தி இனி பேசாத மா. நான் பேரனை கொஞ்ச போறேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டார். வாசுவும் அவர் பின்னேயே சென்று விட்டான். 
“உன்னை குடும்பமா பாத்த அப்புறம் தான் சரண்யா என் மனசே குளிருது. இனிமே நீ நல்லா இருப்பன்னு எனக்கு நிம்மதியா இருக்கு”, என்றாள் கோதை. 
“ரொம்ப சந்தோஷப் படாத மா. இப்போதைக்கு உன் மதினி கிட்ட இருந்து மட்டும் தான் விடுதலை கிடைச்சிருக்கு. மத்தது எல்லாம் அப்படியே தான் இருக்கு. நான் இன்னும் வாசு மாமா மனசுல இடம் பிடிக்கலை. இன்னும் அந்த பிரேமா தான் அவர் மனசுல இருக்கா”, என்று சொல்லி விட்டு சரண்யா சென்றதும் “வாசு மனசுல பிரேமா இருப்பா தான். ஆனா பாசமான பொண்டாட்டியா இல்லை. ஒரு துரோகியா தான் இருப்பா. கூடிய சீக்கிரம் அவன் மனசு உன் பக்கம் சாயும் சரண்யா”, என்று எண்ணிக் கொண்டாள் கோதை. 
அன்று இரவு உணவை உண்டதும் அனைவரும் தூங்கத் தயாரானார்கள். அங்கே இரண்டு அறைகள் தான். ஒரு அறையில் சீனிவாசன் தங்கியிருந்தார். மற்றொரு அறை சரண்யா அறை. அங்கே தான் கோதையும் சரண்யாவும் உறங்குவார்கள். சில நேரம் சரண்யா மட்டும் தான் அங்கே படுப்பாள். கோதை வெளி வராண்டாவிலே உறங்குவாள். இன்றும் சீனிவாசன் உறங்கச் சென்றதும் கோதை வராண்டாவில் படுக்கையை விரித்து அதில் அமர்ந்து ஆதியைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். 
சரண்யா அறையில் இருப்பது ஒற்றை கட்டில். அதில் அமர்ந்து தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான் வாசு. 
அப்போது அந்த அறைக்குள் நுழைந்தாள் சரண்யா. அவளை நிமிர்ந்து பார்த்தான் வாசு. 
“கொஞ்சம் எந்திரிங்க மாமா. போர்வை மாத்தி தரேன். படுங்க. அங்க இருந்து வரும் போது நல்லா உறங்கிருக்க மாட்டீங்க”, என்று சொல்லி அவனுக்கு கட்டிலை ஒதுங்க வைத்துக் கொடுத்தவள் தரையில் பாயை விரித்தாள். 
அவள் செய்கையைத் தான் அவனும் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது தான் இருவரும் ஒரே அறையில் இருக்கவே செய்கிறார்கள். அதனால் இருவருக்குள்ளும் சிறிது தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது. 
அப்போது “சரண்யா இங்க வா, உன் மவன் உன்னைத்  தேடி அழுறான் பாரு’, என்று குரல் கொடுத்தாள் கோதை. 
“இருங்க மாமா, அவனை தூக்கிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு வெளியே சென்றவள் மகனுடன் தான் உள்ளே வந்தாள். 
“செல்ல குட்டி அம்மாவை தேடுனியா?”, என்று கொஞ்சி கொண்டே அவள் விரித்த பாயில் அமர்ந்த சரண்யா அதன் பின் அந்த அறையில் வாசு என்ற ஒருவன் இருக்கிறான் என்பதையே மறந்தாள். குழந்தையும் அவளும் ஒன்றிப் போய் இருந்த அந்த காட்சியைப் பார்க்க அவனுக்கு கவிதையாக இருந்தது. அந்த குடும்பத்தில் நுழைய அவனுக்கும் ஆசையாக இருந்தது. ஆனால் தயக்கம் வந்து தடுத்தது. 
அவன் அவர்களை பார்த்துக் கொண்டே கட்டிலில் படுத்தான். வெகு நாட்கள் கழித்து குடும்ப சூழ்நிலையை உணர்ந்தான் வாசு. சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டான். வெகு நாட்கள் கழித்து நன்கு உறங்கிய வாசு காலையில் சீக்கிரமே கண் விழித்து விட்டான். 
அவன் எழுந்து அமர்ந்த போது குழந்தையும் சரண்யாவும் நன்கு உறங்கிக் கொண்டிருந்தார்கள். 
இருவரின் முகத்திற்கும் அவனுக்கு எந்த வேறுபாடும் தெரியவில்லை. இனி இருவருமே அவனுக்கு குழந்தைகள் தான். இருவரையும் நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது. 
அதன் பின் சரண்யா மேல் அவன் கவனம் சென்றது. இவள் தான் எவ்வளவு நல்லவள் என்று எண்ணினான். 
“கடவுள் ஏன் முதல்லயே இவளை என் கூட சேத்து வைக்காம அந்த பிரேமாவை என் கூட இணைச்சார்? இந்த அம்மாவுக்கு இவளை எதுக்கு எனக்கு கட்டி வைக்கணும்னு தோணலை? அப்பாவாது இவளை எனக்கு கட்டி வச்சிருக்கலாமே? அப்படின்னா இப்படி ஏமாந்து போயிருக்க மாட்டேனே?”, என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது. அப்போது அவளிடம் அசைவு தெரியவும் தன்னுடைய நினைவுகளில் இருந்து வெளியே வந்தான் வாசு. 
அவள் மீண்டும் தூங்க ஆரம்பிக்கவும் இவன் சத்தமில்லாமல் வெளியே வந்தான். அப்போது தான் கோதை வாசல் தெளித்துக் கொண்டிருந்தாள். 
“வாசு எந்திச்சிட்டியா? காப்பி போடவாப்பா?”
“இப்ப வேண்டாம் அத்தை”
“அப்புறம் வாசு, உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்”
“சொல்லு அத்தை”
“பிரேமா பத்தி மதினி கிட்ட எல்லாம் சொல்லிட்டியாப்பா?”
“ஆமா, தெரியட்டுமே எல்லாருக்கும்”
“சரி முடிஞ்சதை மாத்த வேண்டாம். ஆனா இனி யாருக்கும் தெரியாம பாத்துகோ. முக்கியமா அண்ணனுக்கும் சரண்யாவுக்கும் இந்த விஷயம் தெரிய வேண்டாம்”
“நீ எதுக்கு சொல்றேன்னு புரியலை அத்தை. ஆனா நான் இதைப் பத்தி இனி யார் கிட்டயும் பேசுறதா இல்லை. நான் சொல்ல மாட்டேன். சரி நான் வெளிய போயிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு வீதியில் இறங்கி நடந்தான். 
அப்போது தன்னுடைய வீட்டில் இருந்து வெளியே வந்தான் கதிரேசன். 
அவனைக் கண்டதும் தான் நேற்று அவன் பேச வேண்டும் என்று சொன்ன விஷயமே நினைவில் வந்தது வாசுவுக்கு. 
“என்ன மாப்பிள்ளை? இங்க தான் இருக்கியா? நான் உன் வீட்ல தான் இருக்கேன்னு நினைச்சேன்”, என்றான் கதிர். 
“நேத்தே இங்க வந்துட்டோம் டா. சாரி, நீ நேத்து நைட் பேச வரச் சொன்ன. நான் வரலை”
“அதுக்கென்ன? இன்னைக்கு பேசிட்டா போச்சு. அப்படியே வா, பேசிட்டே போவோம்”, என்று சொல்லி அழைத்துச் சென்றான். 
“என்னைக்கு கதிர் கல்யாணம், பொண்ணு எந்த ஊரு?”, என்று கேட்டான் வாசு. 
“நம்ம பக்கத்து ஊரு தான் டா. இன்னும் நாள் குறிக்கலை. கல்யாணத்துக்கு வருவியா டா?”
“இன்னும் லீவ் கேட்டா செருப்பால அடிச்சிருவாங்க டா. கொஞ்சம் நிலைமையை புரிஞ்சிக்கோ”
“புரியுது டா”
“சரி, நீ என்ன விஷயம் பேசணும்னு சொன்ன? உனக்கு என்ன குழப்பம்?”
“இல்ல, அன்னைக்கு நான் போன் பேசினப்ப, என்னோட பேச்சை நம்பாம என்னைத் திட்டின. அப்புறம் கோதை அத்தை பேசனப்பவும் நீ அப்படி தான் பேசின. அப்புறம் பஞ்சாயத்துல வேற மாதிரி பேசின. எப்படி?”
“புத்தி வந்துருச்சுன்னு வச்சிக்கோயேன்”
…..
“என்ன நம்பலையா? சரி உண்மையை சொல்றேன். அம்மாவே என் கிட்ட உளறிட்டாங்க டா. அப்ப தான் உண்மையை தெரிஞ்சிக்கிட்டேன்”
“ஹிம், நல்லது தான்”
“வேற என்ன பேசணும்னு நினைச்ச?”
“இல்லை சொல்றதை நீ எப்படி எடுத்துப்பேன்னு தான் தெரியலை. நான் சரண்யா மேல உள்ள அக்கறைல மட்டும் தான் இதைக் கேக்குறேன். அவளுக்கு தாய் மாமாவா இதைக் கேக்குறேன்னு வச்சிக்கோயேன்”
“நான் தப்பா நினைக்க மாட்டேன் டா. நீ கேளு”
“இல்லை இறந்து போனவளை நினைச்சு உயிரோட இருக்குறவளைக் கஷ்டப் படுத்தனுமா?”, என்று கதிர் கேட்டதும் வாசு ஏதோ சொல்ல வந்தான். 
“நான் முழுசா பேசிறேன் மச்சான்.  உன் முதல் மனைவியை மறக்குறது கஷ்டம் தான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா உன்னோட அன்புக்கு அந்த பொண்ணு தகுதியானவ இல்லை டா”
“கதிர்”
“ஆமா டா, நான் உண்மையைச் சொல்லிறேன். என்னைத் தப்பா நினைக்காத. நான் சொல்றது எங்க அம்மா மேல சத்தியமா உண்மை டா. சரண்யா வாழ்க்கைக்காக நான் இந்த உண்மையைச் சொல்லித் தான் ஆகணும்”, என்று ஆரம்பித்து பிரேமா பழைய கதையை சொன்னான் கதிர். 
அனைத்தையும் கேட்ட வாசு “எனக்கு இந்த விஷயம் தெரியும் டா”, என்று நிதானமாக கேட்டு அவனுக்கே ஷாக் கொடுத்தான். 
வாசுவுக்கு கதிருக்கு இந்த விஷயம் தெரிந்ததும் அசிங்கமாக இருந்தது. வேறு யாருக்காவது தெரிந்தால் தன்னை எப்படி எண்ணுவார்கள் என்று எண்ணி அவனுக்கு பிரேமா மற்றும் வள்ளி மீது ஆத்திரமாக வந்தது. 
காதல் தொடரும்…

Advertisement