Advertisement

சீனிவாசனும் சரண்யாவும் வீட்டுக்கு வருகிறார்கள் என்று வந்தனா மற்றும் வைதேகிக்கு நிம்மதியாக இருந்தது. அனைவரும் வீட்டைப் பார்த்து நடந்தார்கள். 
கோதை மட்டும் போகும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். இனியாவது எல்லாரும் நல்லா இருக்கணும் என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய வீட்டை நோக்கிச் சென்றாள் பூங்கோதை. 
வீட்டுக்கு சென்றதும் குழந்தையை சரண்யாவிடம் இருந்து வாங்கிய வாசு “நம்ம ரெண்டு பேரோட பொருள், குழந்தையோட பொருள் எல்லாம் பேக் பண்ணு”, என்று அவள் காதில் முணுமுணுத்தான். 
“எதுக்கு மாமா?”
“சொன்னதை செய். நாம கிளம்பணும்”
“இன்னைக்கேவா எதுக்கு மாமா?”
“சொல்றதை செய் சரண்யா”
“சரி”, என்று அவள் எல்லாம் எடுத்து வைத்தாள்.  அதே நேரம் தன்னுடைய பொருள்களை எல்லாம் வேறு ஒரு பையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் சீனிவாசன்,. அதை வைதேகி திகைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் எவ்வளவோ பேச முற்பட்டும், மன்னிப்புக் கேட்டும் சீனிவாசன் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. 
எல்லாம் எடுத்து வைத்தவர் அனைவரையும் ஹாலுக்கு அழைத்தார், 
“நான் இந்த வீட்டுக்கு வந்ததுக்கு காரணம் எல்லா தப்பையும் மன்னிச்சு இல்லை. என்னோட பொருளை எல்லாம் எடுக்க தான் வந்தேன். இந்த வீட்டுக்கு நான் தான் குடும்பத் தலைவர்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா என்னோட பேச்சுக்கு இங்க எந்த மதிப்பும் இல்லை. அதனால நான் போறேன். என்னோட கடைசி காலம் வரை என் தங்கச்சி கூடவே தான் இனி இருக்க போறேன்”, என்றார் சீனிவாசன். 
“என்னங்க, நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேனே? இனி இப்படி நடக்காதுங்க. நான் செஞ்சது எல்லாம் தப்பு தான். இனி நீங்க சொல்றதை மட்டும் தான் கேப்பேன். வீட்டை விட்டுப் போவாதீங்க. கோதையை வேணும்னா இங்க வந்து இருக்க சொல்றேன். எல்லார் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்ட அப்புறம் நீங்க இப்படி செய்யக் கூடாது. நாம எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்ங்க”, என்றாள் வைதேகி. 
“ஆனா நான் உன்னை மன்னிக்கலையே?  இந்த ஜென்மத்துல மன்னிப்பேனான்னும் எனக்கு தெரியாது. வாசு உன் அம்மாவுக்கு இந்த வீட்டை கொடுக்குறேன். மத்த சொத்தை எல்லாம் நான் பாத்துக்குவேன். எனக்கு அப்புறம் அது உனக்கு வந்து சேரும். இவளும் உன் தங்கையும் கடைசி வரைக்கும் இங்கயே இருந்து இங்கயே சாகட்டும். நான் கிளம்புறேன் பா”, என்றார். 
“இருங்கப்பா, நாங்களும் அத்தை வீட்டுக்கு தான் வரோம். சரண்யா பையை எல்லாம் எடுத்துட்டு வா. நாமளும் கிளம்புவோம்”, என்று வாசு சொன்னதும் அதிர்ந்து போய் நின்ற வைதேகி “வாசு என்னப்பா சொல்ற?”, என்று கேட்டாள். 
“எனக்கு இங்க இருக்க பிடிக்கலை. நான் போறேன். உங்க மூணு பேரோட நிழல் கூட என் பொண்டாட்டி பிள்ளை மேல படக் கூடாது. இனி நானும் இந்த வீட்டுக்கு வர மாட்டேன்”
“வாசு வாசு…. நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேன்ல?”
“மன்னிப்பு கேட்டா எல்லாம் ஆச்சா? என்னோட குடும்பம் சொந்தம், என்னோட உணர்வுகள் எல்லாம் மறைச்சிட்டு அங்க நாட்டுக்காக கஷ்ட படுறேன். வீட்டுக்காகவும் தான். கஷ்டப் பட்டு படிச்சு வாங்கின வேலை. அதை என்னால நிம்மதியா பாக்க முடிஞ்சதா? வீட்டை விட்டு பிரிஞ்சு இருக்குற பையனுக்கு நிம்மதியான வாழ்க்கையை கொடுக்கணும்னு உங்களுக்கு தோணுச்சா? இல்லைல்ல? அப்ப நான் மட்டும் எதுக்கு உங்களைப் பத்தி யோசிக்கணும்?”
“தப்பு தான் பா. உங்க அப்பாவும் இங்க இருந்து கிளம்புறார். நீயும் போறேன்னு சொல்ற? அப்ப எனக்குன்னு யார் இருக்கா?”
“அதான் கூட ரெண்டு பிடாரிங்களும் இருக்கே? வேற குடும்பத்தை பிரிக்க திட்டம் போடுங்க”
“அண்ணா, நிஜமாவே நான் பண்ணின தப்புக்கு மன்னிப்பு கேட்டுட்டேன்ல அண்ணா?”, என்று அழுது கொண்டே சொன்னாள் வந்தனா. 
“கழுத்தை அறுத்துட்டு என்ன மன்னிப்பு? உனக்கும் ஒரு பொம்பளைப் பிள்ளை இருக்குள்ள? அதை நினைச்சு பாத்தியா?”
“சரண்யா, நீயாவது சொல்லு மா. இனி அப்படி எதுவும் நடக்காதுன்னு வாசு கிட்டயும் உன் மாமா கிட்டயும் சொல்லு மா. யாரும் இங்க இருந்து போக வேண்டாம். நீ சொன்னா கேப்பாங்க. சொல்லு மா”, என்று அவளிடம் கேட்டாள் வைதேகி. 
சரண்யா இன்னும் திகைப்பில் இருந்து வெளியே வரவே இல்லை. சீனிவாசனும் வாசுவும் இப்படி ஒரு முடிவை எடுப்பார்கள் என்று அவள் எதிர் பார்க்கவே இல்லை. 
டெல்லி கிளம்புவது வரை இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று எண்ணி தான் சரண்யா இங்கு வந்தாள். ஆனால் உடனே வாசு கிளம்பச் சொன்னதும் திகைப்பு வந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது. என்ன தான் அவர்களை மன்னித்தாலும் சரண்யாவுக்கு அந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. பழைய நினைவுகள், பிரேமாவுடன் வாசு வாழ்ந்த அறை என ஒவ்வொன்றும் அவளுக்கு வலிகளைத் தான் நினைவு படுத்தியது. 
இருந்தாலும் வைதேகி முகத்தை பார்த்தால் பாவமாக இருந்ததால் “மாமா, என்ன இதெல்லாம்? நாம கிளம்புற வரைக்கும் இங்கயே இருப்போமே? அத்தை வந்தனா எல்லாம் தான் திருந்திட்டாங்களே?”, என்றாள். 
“எல்லாம் நம்ம நல்லதுக்கு தான் சரண்யா சொல்றேன். எனக்கு இனியாவது நிம்மதியான வாழ்க்கை வேணும். கிளம்பு. இங்க இருந்தா எனக்கு வேண்டாத நினைவுகள் அதிகம் வரும்”, என்று வள்ளியைப் பார்த்துக் கொண்டே சொன்னான் வாசு. அவளோ சேலைத் தலைப்பால் வாயை மூடி அழுது கொண்டே இருந்தாள். 
“டேய், என்னை விடு டா. நான் வாழ்ந்து முடிச்சவ. நான் பண்ணின பாவத்துக்கு தண்டனையா இதை அனுபவிச்சிட்டு போறேன். ஆனா உன் தங்கச்சி வாழ்க்கையையாவது சரி பண்ணி கொடுத்துட்டு போ வாசு. நீயும் உங்க அப்பாவும் நிரஞ்சன் கிட்ட பேசுங்க. நிரஞ்சன் போனைக் கூட எடுக்க மாட்டிக்கான். இன்னைக்கு பஞ்சாயத்துல இருந்து அப்படியே போய்ட்டான். அண்ணனும் போனை எடுக்க மாட்டிக்கார். என் மக வாழ வேண்டிய வயசுல பிள்ளையை வச்சிக்கிட்டு தனி மரமா நிக்குறா”, என்று அழுதாள் வைதேகி.
“உன் மக உன்னை மாதிரியே இருந்து அவ வாழ்க்கையை அழிச்சிக்கிட்டா. அதுக்கு நான் என்ன பண்ண? என்னோட வாழ்க்கையை அழிச்ச இவ வாழ்க்கையை நான் சரி பண்ணனுமா?”
“மாமா, நீங்க பண்ணுறது ரொம்ப தப்பு. நிரஞ்சன் அண்ணன் கிட்ட பேசுங்க”, என்றாள் சரண்யா. 
உடனே அவனை அழைத்தான் வாசு.  போனை எடுத்த நிரஞ்சனிடம் வாசு, வந்தனா வாழ்க்கையைப் பற்றி கேட்டதும் . “எனக்கு அவளை மன்னிக்க முடியலை மாப்பிளை. எனக்கு கொஞ்சம் டைம் கொடு”, என்று சொல்லி போனை வைத்து விட்டான் நிரஞ்சன். 
“அவன் கோபம் குறையுறதுக்கு நீ காத்துட்டு இருந்து தான் ஆகணும் வந்தனா. இதுக்கு மேல நான் ஒண்ணும் பண்ண முடியாது. வா சரண்யா. அப்பா வாங்க போகலாம்”, என்று சொல்லி கிளம்பி விட்டார்கள். 
அவர்கள் சென்றதும் வைதேகி ஏங்கி ஏங்கி அழுதாள். அருகில் நின்ற வள்ளியைப் பார்த்தவள் “இப்ப உனக்கு சந்தோஷமா? என் குடும்பத்தையே இப்படி பிரிச்சிட்டியே? போச்சே? புருஷன், பிள்ளை, பேரன்னு எல்லாரும் என்னை விட்டு போறாங்க. என் மக வாழ்க்கை வேற அம்போன்னு நிக்குது. இது எல்லாமே உன்னாலயும் உன் மகளாலயும் தான். அவளை நம்பி அவ மேல பாசம் வச்சதுனால தான் நான் சரண்யாவை அப்படி பண்னினேன். எனக்கு இது தேவை தான்”, என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள். 
தனக்கு ஆறுதலாக வந்தனா ஏதாவது சொல்லுவாள் என்று வள்ளி எதிர் பார்க்க அவளோ அழுது கொண்டே அறைக்குள் ஓடி விட்டாள். 
இதற்கு மேல் இங்கே இருந்தால் தனக்கு மரியாதை இல்லை என்று உணர்ந்த வள்ளி தன்னுடைய வீட்டை நோக்கி சென்றாள். 
அங்கே மகனும் கணவரும் அவளை உள்ளேயே அனுமதிக்க வில்லை. வேறு வழியில்லாமல் தன்னுடைய பிறந்த வீட்டுக்கு சென்று அண்ணன் மனைவிக்கு அடிமை வாழ்வை வாழ முடிவு செய்து விட்டு அங்கிருந்து சென்றாள் வள்ளி. 
போகும் வழியிலே அவளை வழி மறைத்த நிரஞ்சன் “என்னைப் பெத்த பாவத்துக்காக நான் உன்னை பாக்க தான் செய்யனும். அது என் கடமை. அதனால வீட்டுக்கு வா. நான் அப்பா கிட்ட பேசிட்டேன். அவரும் நீ வீட்ல இருக்கலாம்னு சொல்லிட்டார். ஆனா வீட்டுக்கு வந்து நீ எங்களுக்காக எதுவும் செய்ய கூடாது. வீட்டுக்கு வா”, என்று அழைத்தான். 
இப்போதைக்கு இதுவே போதும் என்று எண்ணிக் கொண்டு வீட்டுக்கு சென்றாள் வள்ளி. 
ஆனால் மகன் மற்றும் கணவர் இருவரின் பாரா முகம் அவளை வாள் கொண்டு அறுப்பது போல தான் இருந்தது. அவர்களிடம் அவளால் பேசக் கூட முடியவில்லை. வந்தனாவை அழைத்து வா என்று மகனிடம் கூட சொல்ல முடியவில்லை வள்ளியால். 
வைதேகி யாரும் இல்லாமல் அநாதை என்றால் வள்ளி அனைவரும் இருந்தும் அநாதை தான். அது அவர்கள் செய்த பாவத்தின் சம்பளம். வந்தனா வாழ்வு நிரஞ்சன் மனதை பொறுத்து தான் இருக்கிறது. அவன் அவளை மன்னித்து ஏற்றுக் கொள்ளலாம். இல்லை ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கலாம். ஒரு வேளை குழந்தைக்காக கூட அவர்கள் சேர்ந்து வாழலாம். அது விதியின் கையில்…..
“கோதை, கோதை”, என்று வெளியே நின்று ஆர்வமாக அழைத்தார் சீனிவாசன். 

Advertisement