Advertisement

அத்தியாயம் 14
நிலவின் நிழலில் உறங்கும்
இன்பத்தை தருகிறது
உந்தன் நினைவுகள்!!!
“அதெல்லாம் முடியாது. ஆதி என் மகன். அவன் எனக்கு தான் சொந்தம். எனக்கு என் குழந்தை வேணும். ஊர்ல உள்ள பெரியவங்க எல்லாம் இனிமே அது உன் குழந்தை, நீ தான் அதை நல்லா பாத்துக்கணும்னு சொல்லி தானே என்னை மாமாவுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தீங்க? அதனால எனக்கு குழந்தையை வாங்கித் தாங்க”, என்று கேட்டாள் சரண்யா. 
“தர முடியாது”, என்றான் வாசு. 
“எனக்கு வேணும்”
“முடியாது”
இப்படி மாற்றி மாற்றி இருவரும் சண்டை போட்டுக் கொள்வதைக் கண்டு அனைவரும் பே என்று வேடிக்கை பார்த்தார்கள். இருவருமே தங்கள் கருத்தை தெளிவாக தான் முன் வைத்தார்கள். ஆனால் இருவருமே தீவிரமாக சண்டை போட வில்லை. ஏதோ விளையாட்டுக்கு பேசுவது போல இருந்தது அவர்களின் சண்டை. 
“ஐயோ, ரெண்டு பேரும் அமைதியா இருங்க. மாத்தி மாத்தி இப்படி விட்டுக் கொடுக்காம பேசினா எப்படிப்பா? வாசு நீ குழந்தைக்காக தானே சரண்யாவைக் கட்டிக்கிட்ட? அப்புறம் அவளை அம்போன்னு விட்டுட்டு உன் பாட்டுக்கு கிளம்பி போயிட்ட. உன் குடும்பத்துல அந்த பொண்ணு சிக்கி சின்னா பின்னமா ஆகிருச்சு. இப்பவும் நீ ஊருக்கு கிளம்பித் தான் போக போற? அதுக்கு உனக்கு எதுக்கு குழந்தை? குழந்தை சரண்யா கிட்டயே இருக்கட்டும்”, என்றார் ஊர் நாட்டாமை. 
“சரிங்க நான் குழந்தையை அவனோட அம்மா கிட்டயே தரேன். ஆனா குழந்தையும் அவனோட அம்மாவும் எனக்கு வேணும்”, என்று வாசு கேட்டதும் சரண்யா நே என்று விழித்தாள். அவளுடைய முழியைக் கண்ட வாசுவுக்கு சிரிப்பு தான் வந்தது. 
சீனிவாசனும் கோதையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். 
அனைவருமே அவனைத் திகைப்பாக தான் பார்த்தார்கள். பின் அனைவரின் உதடுகளிலும் சிறு புன்னகை உதயமானது. 
“என் மேலயும் தப்பு இருக்கு. இல்லை இல்லை, என் மேல தான் எல்லாத் தப்புமே இருக்கு. தாலி கட்டிட்டு அவளை கண்டுக்காம போனது தப்பு தான். அதுக்கப்புறம் அவ கிட்ட போனில் கூட பேசாம அவ நிலைமையை கேக்காம இருந்தது தப்பு தான். எங்க வீட்ல தானே இருக்கான்னு நம்பினேன். என்னோட பொண்டாட்டியை எங்க அம்மாவும் தங்கையும் நல்லா பாத்துக்குவாங்கன்னு நம்புனேன். ஆனா, அவங்க நடந்து கிட்டதுலே அவங்களுக்கு நான் முக்கியம் இல்லைன்னு காட்டிட்டாங்க”, என்றான் வாசு. 
“வாசு அப்படிச் சொல்லாதப்பா. நாங்க உன்னை முக்கியம் இல்லைன்னு நினைப்போமா?”, என்று இடையில் புகுந்து பேசினாள் வைதேகி. 
“அப்படி என்னை முக்கியமா நினைச்சிருந்தா என்னோட பொண்டாட்டியையும் தானே முக்கியமா நினைச்சிருப்பீங்க? நான் அவ கூட வாழுறேன், வாழலை. அது எங்க தனிப்பட்ட விஷயம். ஆனா அவ கழுத்துல தாலி கட்டினதுல இருந்து அவ என்னோட பொண்டாட்டி தானே? அவ என்னோட சொந்தம்னு பாத்துருந்தீங்கன்னா அவளை இப்படி எல்லாம் பந்தாடிருப்பீங்களா?”, என்று வாசு கேட்டதும் “ஏண்டி, உன் மாமன் எப்ப டி இவ்வளவு நியாயஸ்தனா மாறினான்? ரொம்ப நல்லவன் மாதிரியே பேசுறான்?”, என்று தன் மகளின் காதில் முணுமுணுத்தாள் கோதை. 
அதைக் கேட்டு கோதையை பலமாக முறைத்த சரண்யா “என் மாமன் எப்பவும் நல்லவன் தான்”, என்றாள். 
“அதான பாத்தேன், நீயாவது உன் மாமன் மேல கோப படுறதாவது?”, என்று சொல்லி பதிலுக்கு முறைத்தாள் கோதை. 
“வைதேகி, நீ பண்ணினது ரொம்ப தப்பு மா. வீட்டுக்கு விளக்கேத்த வந்த மருமகளை அப்படி பேசினதுக்கு நானே உன்னை போலீஷ்ல சொல்லணும்னு நினைச்சேன்”, என்றார் நாட்டாமை. 
“பிரேமா இடத்துல சரண்யாவை வச்சு பாக்க முடியல. அதான் அவ மேல பொய்யான பழி போட்டோம். நாங்க பண்ண தப்பை உணர்ந்துட்டோம். இனி அப்படி நடக்காது. எங்களை எல்லாரும் மன்னிச்சிருங்க”, என்று சொல்லிக் கொண்டே சரண்யா அருகில் சென்றாள் வைதேகி. 
வள்ளி, மற்றும் வந்தனாவும் வைதேகியுடன் சரண்யாவை நெருங்கினார்கள். 
அவர்கள் தன்னருகே வந்ததும் சரண்யா கண்கள் முழுவதும் ஆதி மேலே இருந்தது. “எத்தனை நாள் ஆயிட்டு இவனைப் பாத்து?”, என்று ஏக்கத்தோடு அவனைப் பாக்க அவள் மன நிலை உணர்ந்த வந்தனா குழந்தையை சரண்யாவிடம் நீட்டினாள். 
அவசரமாக அவனை வாங்கி தன்னுடைய பாசத்தை காண்பித்தாள் சரண்யா. அவள் குழந்தையைக் கொஞ்சுவதைத் தான் ஊரே பார்த்துக் கொண்டிருந்தனர். 
அவளோ தன்னுடைய குழந்தையுடன் ஒன்றிப் போனாள். சுற்றி அத்தனை பேரும் இருந்த போதும் யாரும் அவள் கண்களுக்கு தெரியவில்லை. வாசு பக்கம் கூட அவள் பார்வை செல்ல வில்லை. அவள் கவனம் முழுவதும் குழந்தையிடத்திலே இருந்தது. அவள் பாசத்தைக் கண்டு வாசு கண்கள் பனித்தன.  
“எங்களை மன்னிச்சிரு சரண்யா”, என்று சொல்லிக் கொண்டே வைதேகி சரண்யா காலில் விழ அவள் பின்னே வந்தனாவும் வள்ளியும் கூட விழுந்தனர். 
அனைவர் முன்னிலையிலும் சரண்யா காலில் இப்படி விழுவார்கள் என்று யாருமே எதிர் பார்க்க வில்லை. 
கோதையும் சீனிவாசனும் கூட அதிர்ந்து தான் போனார்கள்,. 
“ஐயோ அத்தை, என்ன இது? அதெல்லாம் வேண்டாம்”, என்று பதறினாள் சரண்யா. 
“என்னை மன்னிச்சிரு மா. உன்னோட நல்ல மனசு புரியாம அசிங்க படுத்திட்டேன். தப்பானவங்களைப் பத்தி தெரியும் போது தான் நல்லவங்களைப் பத்தியும் புரியுது…”, என்று வைதேகி சொல்லிக் கொண்டிருக்கும் போது “அம்மா…”, என்று அழைத்த வாசு அனைவர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினான். 
“என்னோட பொண்டாட்டிக்கு நான் முக்கியத்துவம் கொடுக்காததுனால தான் ஆள் ஆளுக்கு அவளை பேசிருக்காங்க. அதனால அடுத்த வாரம் நான் என் பொண்டாட்டி பிள்ளையை என் கூடவே டெல்லிக்கு கூட்டிக்கு போறேன். யாரை நம்பியும் நான் அவளை இங்க விட்டுட்டு போறதா இல்லை”, என்றதும் சரண்யா கண்கள் விரிந்தது. அதுவும் அந்த பொண்டாட்டி என்ற வார்த்தை அவள் உயிர் வரை இனித்தது. 
கோதையோ வைதேகி பேசிய பேச்சைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தாள். “இவங்க எப்படி திருந்தினாங்க? இப்ப கூட ஏதோ உளற வந்தாங்களே? ஒரு வேளை பிரேமா பத்தி வாசு எல்லார் கிட்டயும் சொல்லிருப்பானோ? அதான் எல்லாரும் மனசு மாறிட்டாங்களோ? இது நல்லதா கெட்டதா?”, என்று யோசித்துக் கொண்டிருந்தாள். 
“அத்தை, நான் உங்க மகளை என் கூடவே அழைச்சிட்டு போறதுக்கு உங்க அனுமதி தேவை”, என்று வாசு சொன்னதும் தான் நடப்புக்கு திரும்பினாள் கோதை. 
கோதை ஆசை பட்டதும் அது மட்டும் தானே?  அதனால் அவள் சந்தோஷமாக புன்னகைத்தாள். சீனிவாசனும் மகனின் முடிவைக் கேட்டு நிம்மதியாக இருந்தார்.  ஆனால் வைதேகியை ஏறெடுத்தும் அவர் பார்க்கவில்லை. 
“பிறகு என்னப்பா, எல்லாரும் தப்பை உணர்ந்துட்டாங்க. வாசு இனிமே இப்படி நடக்காம பாத்துக்கோப்பா. பஞ்சாயத்து கலையலாம்”, என்று சொன்னதும் வீட்டாள்கள் மட்டும் அங்கே இருந்தார்கள். வேடிக்கை பார்க்க வந்தவர்கள் “என்ன இப்படி சப்புன்னு போச்சு”, என்று எண்ணிக் கொண்டு சென்றனர். 
அதன் பின் கிரிதரனும் நிரஞ்சனும் வள்ளி மற்றும் வந்தனாவை முறைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள். 
கதிரும் வசந்தாவும் அங்கே இருந்து செல்லப் போக அப்போது “என்னை மன்னிச்சிரு மாப்பிள்ளை, நான் பேசுனது எல்லாமே கோபத்துல தான். என்னை மன்னிச்சிரு”, என்று கதிரிடம் மன்னிப்பு கேட்டான் வாசு. 
“அதெல்லாம் விடு டா. இப்ப தான் நிம்மதியா இருக்கு. எனக்கு ஒரே ஒரு குழப்பம் தான்”
“என்ன டா?”
“அப்புறம் சொல்றேன். சாயங்காலம், நம்ம பிரண்ட்ஸ் எல்லாரும் மீட் பண்ணுற இடத்துக்கு வா. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”
“சரி டா, என் மேல கோபம் எல்லாம் இல்லை தானே?”
“கோபம் இருக்கு தான். ஆனா வெறுப்பு இல்லை. நீ வா சாயங்காலம் பேசலாம்”, என்று சொல்லி விட்டு வசந்தாவை அழைத்துக் கொண்டு சென்றான் கதிரேசன். 
“அத்தை நான் சரண்யாவை என் கூட அழைச்சிட்டு போறதுல உனக்கு வருத்தம் இல்லையே?’, என்று மீண்டும் கேட்டான் வாசு. 
அதற்கு கோதை பதில் சொல்வதற்கு முன்னர் “அம்மா நான் அந்த வீட்டுக்கு போக மாட்டேன்”, என்றாள் சரண்யா. 
“ஏய் அவசரக் குடுக்கை வாயை மூடு டி. நான் இப்ப என்னோட அத்தை கிட்ட தான் பேசுறேன்”, என்று சொல்லி அவள் தலையில் கொட்டினான் வாசு. ஏனோ அந்த நிமிடம் அவளுக்கு பழைய வாசுவைப் பார்ப்பது போலவே இருந்தது. 
“அட நீ வேற, உன் பொண்டாட்டி நீ நரகத்துக்கு கூப்பிட்டாளே உனக்கு முன்னாடி கிளம்பி நிப்பா. இப்ப கேக்கவும் வேணுமா? எங்க வேணும்னாலும் கூட்டிட்டு போ. எனக்கு ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா போதும்”, என்று சரண்யாவை வாரியது வேறு யாரும் அல்ல. கோதையே தான். 
“சரி அத்தை, நான் இப்ப சரண்யாவை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்”, என்று தன்னுடைய வீட்டுக்கு அழைத்தான் வாசு. 
“நான் அங்க வரலை”, என்றாள் சரண்யா. 
கோதைக்கும் அவளை அங்கே அனுப்பவா வேண்டாமா என்ற கேள்வி எழுந்தது. என்ன தான் வைதேகி சரண்யாவிடம் மன்னிப்பு கேட்டாலும் ஒரே வீட்டில் இருந்தால் மீண்டும் பிரச்சனை வராது என்று என்ன நிச்சயம். ஆனாலும் வாசு இந்த ஊரில் இருக்கும் வரை சரண்யா அங்கே தானே இருக்க வேண்டும் என்று எண்ணிய கோதை “அதான் வாசு கூப்பிடுறான்ல? போடி”, என்றாள். 
“நான் போக மாட்டேன் மா”
“என் மேல உண்மையாவே உனக்கு அன்பும் மரியாதையும் இருந்தா என் கூட வா”, என்று வாசு சொன்னதும் “சரி வரேன்”, என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டே சொன்னாள். 
அப்போது “நானும் வீட்டுக்கு வரேன்”, என்று சீனிவாசனும் அவர்களுடன் வீட்டுக்கு கிளம்பினார். 

Advertisement