Advertisement

இரவு ஒன்பது மணி…. ‘வாசுதேவன் வெட்ஸ் பிரேமா’ என்ற பெயர் பலகை நியான் விளக்குகளால் ஒளி பெற்று மின்னியது. விடிந்தால் திருமண முகூர்த்தம் என்பதால் வீட்டருகே இருந்த திருமண மண்டபத்தில் வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. வாசு வீட்டிலும் சீரியல் விளக்குகள் மின்னின. 
மகனுக்கு திருமணம் என்னும் போது பல வேலைகள் சீனிவாசனுக்கு குமிந்திருந்தன. ஆனால் எந்த வேலையையும் செய்ய பிடிக்காமல் மாட்டுத் தொழுவத்தில் அமர்ந்திருந்தார்.
அவருக்கு சரண்யாவை நினைத்து மனது வெகுவாக வலித்தது. விவரம் தெரிந்ததில் இருந்து தகப்பன் இல்லாமல் வளர்ந்த பிள்ளை அவள். கடைசி வரை தான் தான் அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி தான் வாசுவுக்கு அவளைக் கட்டி வைக்க எண்ணினார். 
இடையில் வைதேகி இப்படி சகுனி வேலை செய்வாள் என்று அவர் எதிர் பார்க்கவில்லை. தன்னுடைய மனதில் இருக்கும் ஆசை வைதேகிக்கு தெரிந்தும் இப்படி செய்ததை அவரால் மன்னிக்கவும் முடிய வில்லை. தன்னை மதிக்காத மனைவி மேல் அவருக்கு ஆத்திரமாக வந்தது,  
“மாமா, வாசு மாமா போன் பண்ணுனாங்களா? என்னைக் கேப்பாங்களா?”, என்று எப்போதும் கண்கள் மின்ன ஆசையுடன் கேட்கும் சரண்யா முகம் நினைவில் வந்தது. அவளை பார்க்க கூட அவருக்கு தைரியம் இல்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளைப் பார்க்க என்று கவலையில் இருந்தார். 
“பிள்ளை அழுதே கரைவாளே? அவ மனசுல ஆசையை வளத்துட்டு இப்படி செஞ்சிட்டேனே?”, என்று எண்ணியவரின் கண்கள் கூட கலங்கியது. 
அதை எண்ணிய படியே அமர்ந்திருந்தவரின் மனதில் என்ன முயன்றும் உற்சாகம் வரவில்லை. தங்கையை திருமணதிற்கும் இன்னும் அழைக்க வில்லை. பத்திரிக்கை கொடுக்க கூட அவர் செல்ல வில்லை. வைதேகிக்கு அது தெரிந்தாலும் “அவரே அந்த சனியன் பிடிச்ச வீட்டுக்கு பத்திரிக்கை கொடுக்க போகலை. நம்ம எதுக்கு அதை நினைவு படுத்தணும்?”, என்று எண்ணி அதை ஒதுக்கி விட்டாள். 
அப்போது தன்னுடைய அறையில் படுத்திருந்த வாசுதேவன் போன் அடிக்கவும் எடுத்துப் பார்த்தான். அவனுடைய நண்பன் மைக்கேல் தான் அழைத்திருத்தான். 
அப்படியே பேசியே படியே மொட்டை மாடிக்கு சென்றவன் “சொல்லு மைக்கேல்”, என்றான். மைக்கேலும் மிலிட்ரியில் அவனுடன் பணி புரிகிறான். 
“என்ன சொல்றது? என் மேல கோபமா இருக்கியா டா?”, என்று கேட்டான் மைக்கேல். நண்பனின் திருமணதிற்கு வர முடியவில்லையே என்று அவன் வருந்துவது வாசுவுக்கு புரிந்தது. 
“அதெல்லாம் இல்லை. லீவ் இல்லைன்னா நீ என்ன செய்வ?”, என்று சமாதானமாக பேசினான் வாசு. 
“சாரி டா, மூணு மாசம் முன்னாடி தான் எனக்கு டிவின்ஸ் பிறந்திருக்குன்னு மனைவியையும் பிள்ளையையும் பாக்குறதுக்கு லீவ் போட்டுட்டேன். உன்னோட கல்யாணமும் உடனே வரும்னு யோசிக்கலை. அவளாலயும் உங்க ஊருக்கு வர முடியாது டா. அவ உடம்பு இன்னும் தேரலை”
“விடு டா மச்சான். சிஸ்டர் எப்படி ரெண்டு குட்டிசையும் வச்சிட்டு இங்க வர முடியும்? பரவால்ல. அதான் விடியோல கல்யாணத்தை பாக்கலாம்ல? நான் அனுப்பி விடுறேன். உன் நிலைமை எனக்கு புரியுமே டா. அப்புறம் உங்க வீட்டு அட்ரஸ் அனுப்பு. அங்க வரதுக்குள்ள நானும் பிரேமாவும் உன் பிள்ளைகளை பாத்துட்டு வரோம்”
“சரி டா அனுப்புறேன். ஆனா நீ தான் பிசியா இருப்பியே? நேரம் கிடைச்சா வேணா போயிட்டு வா”
“எனக்கு என்ன பிஸி? நிரஞ்சன் அத்தானே எல்லா வேலையும் அவங்க பிரண்ட்ஸை வச்சு பாத்துக்குறாங்க”
“நான் அந்த பிசியை சொல்லலை. ஹனிமூன் போறப்ப பிஸியா இருப்பல்ல? அதைச் சொன்னேன்?”
“ஹா ஹா நீ வேற ஏண்டா? கிண்டல் பண்ணாம போனை வைங்க சார்”
“அது எப்படி மாப்பிள்ளையை கிண்டல் பண்ணாம இருக்க முடியும்? நாளைக்கு நைட் இந்நேரம் உன்கிட்ட பேசக் கூட முடியாது. ஐயா போன் பண்ணினாலும் எடுக்க மாட்டாங்க”
“அடேய், ஏண்டா. இன்னைக்கு நான் உனக்கு டார்கெட்டா?”
“ஆமா ஆமா, ஆறு மாசத்துக்கு இனி நீ தான் டார்கெட். சரி உன் அத்தை மக கிட்ட பேசினியா? ஏதாவது கிஸ்ஸ்… ஹக்.. ஏதாவது கிடைச்சதா?”
“எங்க? என்னைப் பாத்தாலே தலை குனிஞ்சிக்கிறா?”
“அதெல்லாம் நாளைக்கு மாறிருவாங்க. சரி கனவு கண்டுட்டே தூங்கு மச்சான். நான் வைக்கிறேன்”
“எங்க கனவு காங்க? கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசத்துல அவளை விட்டுட்டு வரணும்?”
“என்ன பண்ணுறது? நம்ம நிலைமை அப்படி இருக்கு”
“பார்டர்ல இருக்கும் போது நாடு முக்கியம்னு தோணுது. வீட்டுக்கு வந்துட்டா பார்டர்க்கு வர தோணுறது இல்லை. சரி டா. இன்னைக்கு வேலை எப்படி போச்சு”, என்று அதன் பக்கம் பேச்சு திசை மாறியது. 
சிறிது நேரம் பேசி விட்டு மைக்கேல் போனை வைத்ததும் அப்படியே வானத்து நிலவை பார்த்துக் கொண்டு அமர்ந்து விட்டான் வாசு. 
கை பிடிச் சுவரைப் பிடித்துக் கொண்டு அவன் நின்ற போது தான் பின் பக்கம் இருந்த மாட்டுக் கொட்டகையில் தன்னுடைய தந்தை அமர்ந்திருப்பது தெரிந்தது. 
“என்ன அப்பா இந்த நேரம் இங்க உக்காந்துருக்கார்?”, என்று எண்ணியவன் மெதுவாக இறங்கி கீழே சென்றான். 
வீட்டுக்குள் உறவினர்கள் குவிந்திருக்க அனைவரின் கிண்டலையும் ஏற்றுக் கொண்டு மெதுவாக நழுவி தந்தை அருகில் சென்றான். அவனைக் கண்டதும் சீனிவாசன் திகைத்தார், 
“என்னப்பா, இந்நேரம் இங்க உக்காந்துருக்கீங்க?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை வாசு. சும்மா தான்”
“இல்லையே, ஏதோ டல்லா இருக்கீங்க? ஏதாவது உடம்பு சரியில்லையாப்பா?”
“எனக்கு என்ன? குத்துக்கல்லாட்டம் நல்லா தானே இருக்கேன்?”
“இல்லைப்பா உங்க கிட்ட ஏதோ வித்தியாசம் இருக்கு. இல்லைன்னா இப்படி இருக்க மாட்டீங்க? பணம் ஏதாவது தேவைப் படுதா?”
“நம்ம கிட்ட பணத்துக்கு என்ன குறை வரப் போகுது? விவசாயத்துல ஓரளவு வருமானம் வருது. நீயும் கை நிறைய சம்பாதிக்கிற. அதெல்லாம் ஒண்ணும் இல்லை”
“அப்ப என்ன தான் பிரச்சனைன்னு சொல்லுங்கப்பா”
“சொல்லாமல் விட மாட்டான்”, என்று புரிய “இல்லை என்னோட மகளுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு.  உனக்கும் முடியப் போகுது. ஆனா என்னோட தங்கச்சி மக இன்னும் தனியா நிக்குறாளேன்னு யோசிச்சேன். அவ அப்பனும் இல்லை. நானும் அவளைக் கண்டுக்கலையோன்னு தோணுது”
“இதுக்கு எதுக்கு இவ்வளவு கவலைப் படுறீங்க? சரண்யாவுக்கு ஒரு நல்ல பையனா பாத்து கட்டி வச்சிறலாம். இது பெரிய விஷயமா?”
“அது அவ்வளவு எளிதல்ல?”, என்று மனதில் நினைத்தவர் ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்து சிரித்தார். 
“இப்படிக் கவலைப் பட்டுட்டு இருக்காதீங்க பா. கஷ்டமா இருக்கு. முன்னாடியே சொல்லிருந்தா நம்ம வந்தனா கல்யாணம் நடக்கும் போதே சரண்யாவுக்கும் முடிச்சிருக்கலாம். இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. அம்மா ஏதாவது சொல்லுவாங்கன்னு நினைக்காதீங்க? ஒரு நல்ல மாப்பிள்ளையா பாருங்க, அவ கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்திரலாம்”
“சரிப்பா, நீ உள்ள போ. நான் உன் அத்தை வீட்டு வரைக்கும் போய் ஒரெட்டு பாத்துட்டு வரேன்”
“ஆமா கேக்கணும்னு நினைச்சேன்? அத்தையும் சரண்யாவும் எதுக்கு இன்னும் இங்க வரலை? நேத்தே அவங்க வீட்டுக்கு போகணும்னு அம்மா கிட்ட சொல்லிட்டு இருந்தேன். ஆனா அம்மா வேற வேலை கொடுத்துட்டாங்க. அவங்களை வரச் சொல்லுங்கப்பா. நானும் உங்க கூட வரவா?”’
“இந்நேரம் நீ வர வேண்டாம். உங்க அம்மா பாத்தா ஏசுவா. நான் கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றார். 
எப்போதும் தன்னுடைய அப்பாவுக்கு சரண்யா மேல் தனி பாசம் உண்டு என்று அவனுக்கு தெரியும். அதனால் அவளுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று மனதில் முடிவெடுத்தவன் அதன் பின் அந்த நினைவையே ஒதுக்கி திருமண கொண்டாட்டத்தில் இறங்கி விட்டான். 
கதவு தட்டப் பட்டதும் திறந்த பூங்கோதை “வாங்கண்ணா, என்ன இந்த நேரம் வந்துருக்கீங்க?”, என்று கேட்டாள். 
“சரண்யாவைப் பாக்கணும் போல இருந்துச்சு கோதை. அதான் வந்தேன் டா. அவ சரியாகிட்டாளா?”
“எங்கண்ணே, நானும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன். அழுதுட்டே தான் இருக்கா. சாப்பாடு கூட வம்படியா தான் கொடுத்துட்டு இருக்கேன். தப்பு பண்ணிட்டோம்னு தோணுதுண்ணே”
“கோதை…”
“ஆமாண்ணே. தப்பு தான் பண்ணிட்டோம். மதினி மனசுல என்ன எண்ணம் இருக்குனு தெரிஞ்சும் நாம சரண்யா மனசுல ஆசையை வளத்துருக்க கூடாது. எனக்கு அப்புறம் அவளுக்கு உங்க குடும்பம் துணையா இருக்குனு நினைச்சு தான் நீங்க சொன்னதும் எனக்கும் அந்த ஆசை வந்துருச்சு. ஆனா என்னோட மக இப்படி துடிக்கிறாளே. இன்னொரு விஷயமும் பதறுதுண்ணே”
“என்னமா?”
“இவளோட கண்ணீர், வாசு வாழ்க்கைக்கு எந்த தீங்கையும் கொண்டு வந்துரக் கூடாதுண்ணே”
“சே சே நம்ம சரண்யா அப்படி அடுத்தவங்களைப் பாத்து கருவி போறவளா? விதி மேல பழி போடுறதை தவிர வேற வழி இல்லை மா. வாசுவே முடிவெடுத்த அப்புறம் என்னால ஒண்ணும் செய்ய
முடியலை. ஆனா என் மேல தான் தப்பு. நான் முன்னாடியே அவன் கிட்ட பேசிருக்கணும். நம்ம மகன் தானே? எங்க போயிரப் போறான்னு நினைச்சிட்டேன்”
“விடுங்கண்ணே. யாரால தான் என்ன செய்ய முடியும்? இந்த கழுதை கொஞ்ச நாள்ல சரியாகிரும். நீங்க சந்தோஷமா கல்யாண வேலையைப் பாருங்கண்ணே”
“நீ வர மாட்டியாமா?”
“நான் வரலைண்ணே. நான் வந்தா மதினிக்கு சுத்தமா பிடிக்காது. இன்னொரு விஷயம் இவளை தனியா விட்டுட்டு வர முடியாது. இவளை கூட்டிட்டு வரதும் சரி கிடையாது. அங்க வந்தா என் மக இன்னும் துடிச்சு போயிருவாண்ணே”
“சரி தான். ஆனா எல்லாரும் கேட்டா என்ன பதில் சொல்ல?”
“அவளுக்கு காய்ச்சல்னு சொல்லிக்கலாம். அதையும் மீறி ஊர்ல உள்ளவங்க பேசினா பெருசா எடுத்துக்க வேண்டாம்”
“சரி அவளை பாத்துட்டு போறேன்”, என்று சொல்லி அவள் அறைக்கு சென்றார். 
அங்கே துவண்டு போய் கிடந்தாள் சரண்யா. எப்போதும் தாவணி அணிந்து துறுதுறுவென்று சுத்தி கொண்டிருக்கும் சரண்யா முடங்கி போய்க் கிடந்ததை எண்ணி தாய் மாமன் நெஞ்சமும் கசங்கியது. 
“அடியே எங்க டி இப்படி மினுக்கிட்டு போற?”, என்று இவர் அவளிடம் வம்பிழுத்தால் “போ மாமா, நான் எங்க மினுக்கிருக்கேன்? மினுக்குறதுக்கு உன் மவன் என்ன இங்கயா இருக்கான்?”, என்று அவரையே வாருவாள். 
கை கால் சும்மா இருந்தால் கூட அவள் வாய் மட்டும் சும்மாவே இருக்காது. அப்படி இருந்தவளின் இன்றைய நிலை அவரை சோர்வடையைச் செய்தது. 
“அம்மா டி என்ன மா இது?”, என்று கேட்ட படியே அவளை நெருங்கினார். 
“மாமா”, என்று கதறிய படியே அவர் தோள் சாய்ந்தாள் சரண்யா. பக்கத்தில் நின்ற பூங்கோதை புடவை தலைப்பால் தன்னுடைய கண்ணீரை துடைத்துக் கொண்டாள். 
“வேண்டாம் டா. எல்லாம் விட்டுறலாம். நீ இப்படி இருந்தா ரொம்ப கஷ்டமா இருக்கு கண்ணம்மா”, என்றார் சீனிவாசன். 
“முடியலை மாமா, என்னால முடியலை. வாசு மாமா எனக்கு இல்லைன்னு நினைக்கும் போது ஏதோ வாழ்க்கையே இல்லாத மாதிரி இருக்கு. எனக்கு வாழவே பிடிக்கலை. ஆனா நான் ஏதாவது செஞ்சா அம்மா தனியாகிறுவா. அதனால் தான் அமைதியா இருக்கேன்”, என்று சொல்லி ஏங்கி ஏங்கி அழுதாள். 
அம்மாவுக்காக இந்த அளவுக்காவது யோசிக்கிறாளே? கூடிய விரைவில் சரியாகி விடுவாள் என்று இருவருக்கும் தோன்றியது. 
“கூப்பிடக் கூடாது தான். ஆனா சொல்லாமலும் இருக்க முடியலை. கல்யாணத்துக்கு வரியா டா?”, என்று கேட்டார் சீனிவாசன். 
“வேண்டாம் மாமா. என்னோட கண் பார்வைல வாசு மாமா விழக் கூடாது. என்னையே அறியாம அவங்க மேல கண்ணு வச்சிருவேன் மாமா. என்னோட கண்ணு கொள்ளிக்கண்ணுனு அடிக்கடி சொல்வியே மாமா? அதனால அவங்களுக்கு எதுவும் ஆக கூடாது. என்னையே அறியாம அவங்களை நான் சபிச்சிரக் கூடாது”, என்று கதறினாள். 
மேலும் இரு வார்த்தைகள் அவளுக்கு ஆறுதலாக சொல்லி விட்டு வீட்டுக்கு கிளம்பினார் சீனிவாசன். 
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அந்த நாள் கழிய திருமண நாளும் அழகாக விடிந்தது. 
காதல் தொடரும்….

Advertisement