Advertisement

அத்தியாயம் 1
நான் உன்னிடம்
சொல்லாத வார்த்தைகள்
அனைத்தும் கலைந்து
போன மேகங்களாகும்!!!
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகில் அமைந்திருந்த பூஞ்சோலை என்ற கிராமம். பெயருக்கு ஏற்றார் போல பூத்துக் குலுங்கும் சோலை தான் அந்த கிராமம். பல வகையான பழ மரங்களும், மூலிகை மரங்களும் செழித்து வளர்ந்திருந்தன. 
விவசாயம் அங்கே செழித்திருந்தது. வயலில் வேலை செய்யும் போது அடிக்கடி வரும் குற்றாலச் சாரலும், தோகை விரித்து ஆடும் மயில்களையும் பார்ப்பார்கள். அந்த ஊரில் உள்ளவர்களுக்கு அந்த ஊர் அவ்வளவு பிடிக்கும். 
கிராமத்தைச் சுற்றி இருந்த பெரிய மலைகள் அந்த ஊருக்கு தனி அழகைக் கொடுத்தது. இந்த ஊரில் விவசாயம் செழிப்பாக நடை பெற்றாலும் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தங்களை மாதிரி விவசாயம் செய்து கஷ்டப் படக் கூடாது என்று எண்ணி தங்கள் பிள்ளைகளை கவர்ன்மெண்ட் வேலைக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். 
சீனிவாசன் வைதேகியின் மூத்த மகன் தான் வாசுதேவன். அவனுக்கு அடுத்து பிறந்தவள் வந்தனா. வந்தனாவை வைதேகியின் அண்ணன் மகன் நிரஞ்சனுக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். அவர்களுக்கு ஒரு வயதில் வர்ஷினி என்ற ஒரு மகள் இருக்கிறாள். 
வாசுதேவன் வயது இருபத்தி ஒன்பது. ஆறடி உயரமும் அகன்ற தோள்களும் என கம்பீரமாய் இருப்பான்.  மாநிறத்தில் இருந்தாலும் அவனுடைய கம்பீரம் கன்னியர்களின் மனதை நிச்சயம் அசைக்கும். அவனுடைய அழகே அவனுடைய கூர்மையான கண்களும் அடர்ந்த புருவமும் தான். சத்தான ஆகாரமாக உண்டு கிராமத்து கதாநாயகனாக இருப்பவன். டிகிரி முடித்து சில பல கவர்ன்மெண்ட் பரிட்சை எழுதியவன் அதன் பின் மிலிட்ரியில் சேர்ந்து விட்டான். 
அவன் மிலிட்ரியில் சேர்ந்து ஆறு வருடம் ஆகிறது. முதலில் ஒரு வேலை கிடைத்து விட்டது என்று சேர்ந்தவன் அதன் பின் அந்த வேலையில் ஈடு பாடு கொண்டு விட்டான். அங்கு செய்யும் உடற்பயிற்சி அவன் உடலை இன்னும் இறுக்கமாக வைத்திருந்தது.
வைதேகியின் அண்ணன் கிரிதரன். அவருடைய மனைவி வள்ளி. 
கிரிதரன் வள்ளியின் மூத்த மகன் தான் நிரஞ்சன். அவனுக்கு அடுத்து பிறந்தவள் தான் பிரேமா. 
குடும்பம் ஒன்றுக்குள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக சொந்த அண்ணன் மக்களையே தங்கள் வீட்டுக்கு மருமக்களாக்கி கொள்ள வேண்டும் என்பது வைதேகியின் ஆசை. அதனால் தான் உடனே வந்தனாவை அண்ணன் மகன் நிரஞ்சனுக்கு கட்டி கொடுத்து விட்டாள். அடுத்தது வாசுதேவனுக்கு பிரேமாவை கட்டி வைக்க வேண்டும் என்பது அவள் முடிவு. 
வைதேகியின் முடிவில் அவருடைய கணவர் சீனிவாசனுக்கு சிறிதும் உடன் பாடு கிடையாது. வந்தனா திருமணத்தில் அவர் எந்த எதிர்ப்பும் சொல்ல வில்லை. ஏனென்றால் வந்தனாவுக்கு சிறு வயதில் இருந்தே நிரஞ்சன் மேல் ஒரு ஈடு பாடு உண்டு. நிரஞ்சனும் ரொம்ப நல்லவன். அதனால் அவர்கள் திருமணத்தை முன்னே நின்று நடத்தி வைத்தார். 
ஆனால் இன்று மகனுக்கும் அதே குடும்பத்தில் இருந்து பெண் எடுக்க அவருக்கு மனதில்லை. பிரேமா நல்ல குணம் என்றாலும் அவருக்கு அவருடைய தங்கை மகளான சரண்யாவை வாசுதேவனுக்கு கட்டி வைக்க வேண்டும் என்ற ஆசை. 
சீனிவாசனின் தங்கை பெயர் பூங்கோதை. சரண்யா பிறந்து ஆறு வருடத்தில் பூங்கோதையின் கணவர் விஸ்வம் இறந்து விட்டார். குடித்து குடித்தே அவர் வாழ்க்கையை முடித்துக் கொண்டதால் பூங்கோதை சரண்யாவை கையில் வைத்துக் கொண்டு அனாதையாக நின்றாள். 
தங்கைக்கு நல்ல மாப்பிள்ளையாக பார்த்திருக்க வேண்டுமோ என்று காலம் கடந்து கவலைப் பட்டார் சீனிவாசன். தங்கையின் வாழ்வை எண்ணி சீனிவாசனின் உள்ளம் எப்போதும் கண்ணீர் வடிக்கும். வைதேகிக்கு நாத்தனாரைக் கண்டால் சுத்தமாக ஆகாது. எங்காவது பார்க்க நேர்ந்தாலே தரித்திரம் என்று தான் சொல்வாள். அதனால் பூங்கோதை எந்த விஸேசத்திற்கும் செல்ல மாட்டாள். சரண்யாவையும் வைதேகிக்கு பிடிக்காது. சிறு வயதில் இருந்தே பிரேமா மேல் பாசம் காட்டும் வைதேகி சரண்யாவைக் கரித்துக் கொட்டுவாள். 
தன்னுடைய அண்ணனை கஷ்டப் படுத்தக் கூடாது என்பதற்காக பூங்கோதை ஒதுங்கியே இருப்பாள். மகளையும் எங்கேயும் அனுப்ப மாட்டாள். அண்ணன் வாங்கிக் கொடுத்த நிலத்தில் விவசாயத்தை செய்து மகளை வளர்த்தாள். பூங்கோதைக்கு சீனிவாசன் ஏதாவது உதவி செய்து விட்டால் வைதேகி அவரை பேசியே கொல்வாள். அதானால். அவளுக்கு தெரியாமல் பூங்கோதைக்கு நிறைய உதவி செய்வார். 
தந்தையை இழந்து தவிக்கும் சரண்யாவை நன்றாக பார்த்துக் கொள்வார். அவளையே தன்னுடைய மகனுக்கு கட்டி வைக்க
வேண்டும் என்று எண்ணினார் சீனிவாசன்.
இதை அறிந்த வைதேகி சரியாக பிளான் செய்து காய் நகர்த்த ஆரம்பித்தாள். மகள் திருமணம் முடிந்ததில் இருந்து நேரடியாக மகனிடமே போன் போட்டு பிரேமா பற்றியே பேச ஆரம்பித்தாள். 
“பிரேமா இந்த வீட்டுக்கு மருமகளாக வந்துட்டா உன் தங்கச்சி வாழ்க்கையும் சிறப்பாய் அமையும் தம்பி. வெளிய இடத்துல பொண்ணு கெட்டுன்னா எனக்கு அப்புறம் உன் தங்கச்சிக்கு யார் சீர் செய்வா? நீயோ நாடே கதின்னு கிடக்குற? கடைசி காலத்துல என்னையும் உங்க அப்பாவையும் பிரேமான்னா நல்ல பாத்துக்குவா. வேற பொண்ணு வந்தா நாங்க கஞ்சிக்கே வழி இல்லாம போய்ருவோம். உன்னை உடனே கல்யாணம் பண்ண சொல்லலை. ஆனா பொண்ணு பிரேமாவா இருந்தா ரொம்ப சந்தோஷம் வாசு”, என்று பேசி பிரேமா தான் மணமகள் என்று அவன் மனதில் பதிவேற்றினாள். 
அவனுக்கு திருமண வயது ஆனதும் இவளைத் தான் கல்யாணம் 
செய்யனும் என்று மனதில் எந்த ஆசையும் இல்லாத வாசுதேவன் அம்மா சொல்லவும் சரி என்று சொல்லி விட்டான். அவன் சம்மதம் என்று சொல்லும் வரை அவனுக்கு மாமன் மகளான பிரேமாவும் அத்தை மகளான சரண்யாவும் ஒன்று தான். 
ஆனால் வைதேகி பிரேமா தான் இந்த வீட்டுக்கு மருமகள் என்று எப்போதிருந்து சொல்ல ஆராம்பித்தாளோ அன்றில் இருந்து அவன் மனதில் சரண்யா பின் சென்று பிரேமா முன்னே நின்றாள். அந்த அளவுக்கு அவனை கரைத்தாள் வைதேகி.  
கரைப்பார்க் கரைத்தாள் கல்லும் கரையும் என்பது போல வாசுதேவன் அம்மா சொல்லுக்கு கரைந்து விட்டான். திருமண தேதி குறிக்க வைதேகி கேட்டதும் “சரி மா, ஆஃபிஸ்ல லீவ்க்கு கேக்குறேன். நீங்க கல்யாண நாள் குறிங்க”, என்று சம்மதமும் சொல்லி விட்டான்.  
இந்த விஷயம் அறியாத சீனிவாசன் மகனை போனில் அழைத்து “வயசு ஆகிட்டே போகுது வாசு. சீக்கிரம் ஒரு கல்யாணம் கட்டிக்கோ”, கல்யாண விஷயம் பேச ஆரம்பித்தார். 
அதைக் கேட்டவனோ “என்னப்பா புதுசா பேசுறீங்க? அம்மா ஏற்கனவே பிரேமாவைக் கட்டிக்க சம்மதம் கேட்டாங்களே? நான் சரின்னு சொல்லிட்டேனே? தேதியும் குறிக்க சொன்னேனே? அம்மா சொல்லலையா?”, என்று அவர் தலையில் இடியை இறக்கினான். 
“வாசு, உங்க அம்மா உன்கிட்ட பேசினாளா? என்கிட்ட
எதுவுமே சொல்லலையே? நீங்களா எல்லாம் முடிவு பண்ணிட்டீங்கன்னா இந்த வீட்ல நான் யாரு? அவ தான் என்னை மதிக்கலைன்னா நீ கூட என்னை மதிக்கலை? அப்படி தானே வாசு?”, என்று தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் அவனிடம் கோபத்தை காண்பித்தார். 
தந்தையின் கோபத்தில் திகைத்த வாசு “இந்த அம்மா எதுக்கு அப்பா கிட்ட பேசலை?”, என்று எண்ணிக் கொண்டே “நேத்து நைட் தான் பா அம்மா என்கிட்ட பேசினாங்க. இன்னைக்கு உங்க கிட்ட சொல்லணும்னு நினைச்சிருப்பாங்களா இருக்கும். அப்புறம் நான் இங்க லீவ் கேட்டுட்டேன். நான் இன்னும் இருபது நாள் கழிச்சு வரேன் பா. வந்த உடனே கல்யாணம் வைக்கிற மாதிரி நாள் குறிங்க”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டான். 
மனதுக்குள் துவண்டு போன சீனிவாசன் மனைவியிடம் சீறினார். 
“அவ்வளவு தூரத்துல இருக்குற உன் மகனுக்கு போனைப் போட்டு கல்யாண விஷயம் பேசிருக்க? ஆனா கிட்ட இருக்குற என்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணலை? அப்படித் தானே? நான் இந்த வீட்ல யாரு? என்னைக்கு தான் என்னை மதிப்ப?”
“இங்க பாருங்க, சும்மா என்கிட்ட கோப பட்டு ஒண்ணும் ஆகப் போறது இல்லை. உங்க தங்கச்சி மகளை என் மகனுக்கு கட்டணும்னு உங்க மனசுல எண்ணம் இருக்குனு எனக்கு தெரியும். அந்த தரித்திரம் பிடிச்ச வீட்ல இருந்து பொண்ணைக் கட்டுனா என்னோட மகன் எப்படி நல்லா வாழுவான்?”
“வைதேகி…..”
“சும்மா கத்தாதீங்க? எனக்கு உங்க ஆசை பிடிக்கலை. அதனால தான் நான் சீக்கிரம் வாசுகிட்ட பேசினேன். அது போக எங்க அண்ணன் கிட்டயும் பேசி முடிச்சேன். வாசு வந்த அப்புறம் நிச்சயம் வச்சிக்கலாம். இன்னும் தங்கச்சி, தங்கச்சி மகன்னு உருகாம மகனுக்கு நல்ல மூகூர்த்த நாளா பாருங்க”, என்று கத்தி விட்டு சென்று விட்டாள். 
வேறு வழியில்லாமல் தன்னுடைய நிலையை நொந்த படியே அவர் பூங்கோதை வீட்டுக்கு சென்று விஷயம் சொல்லப் போனார். 
“வாங்கண்ணா, சாப்பிடுறீங்களா?”
“சாப்பிடுற மன நிலைல நான் இல்ல கோதை. சரண்யா எங்க?”
“உள்ள தான் இருக்கா? என்னண்ணா, ஒரு மாதிரி இருக்கீங்க? மதினி ஏதாவது சொல்லுச்சா?”
“சொல்றது என்ன? பெரிய காரியமா செஞ்சு நம்ம தலையில இடியை தூக்கி போட்டுட்டா”
“என்னண்ணா என்னவோ போல பேசுறீங்க? மதினி என்ன செஞ்சாங்க?”
“நம்ம வாசுவுக்கும், கிரி மகளுக்கும் சம்மந்தம் பேசிட்டா மா”
“அண்ணா….”
“ஆமா கோதை, என்கிட்ட ஒத்த வார்த்தை சொல்லலை. நேரடியா வாசு கிட்ட பேசிட்டா. வாசு மனசு எழுதப்படாத சிலேட் மாதிரி. அதுல இந்த வைதேகி பிரேமா பேரை எழுதி வச்சிட்டான் மா. இன்னும் இருபது நாள்ல வரானாம். வந்த உடனே கல்யாணமாம்”
“அண்ணா, நான்… இதை எதிர்பாக்கவே இல்லையே… எனக்கு தான் நல்ல வாழ்க்கை அமையலை. சரண்யாவாது நல்லா இருப்பான்னு நினைச்சேனே? இதை அவ எப்படி தாங்குவா? ஐயோ!!”, என்று பூங்கோதை கதற உள் அறையில் இருந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சரண்யா உடலில் ஒரு விரைப்பும், கண்களில் கண்ணீரும் உருவானது. 
சரண்யா பிரேமா இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது தான். பிரேமா நெட்டையாக ஒல்லியாக இருப்பாள் என்றால் சரண்யா ஐந்தரை அடி உயரத்தில் அழகிய உடல்வாகுடன் இருப்பாள். 
பிரேமா அமைதியானவள் என்றால் சரண்யா அதிரடியானவள். ஆனால் அந்த அதிரடி அனைத்தும் வாசுவுக்கு திருமணம் என்றதும் தொலைந்து போனது. 
சீனிவாசன் சத்தம் கேட்டு அவரிடம் வம்பிழுக்க எழுந்தவள் சீனிவாசன் பேசியதைக் கேட்டு அப்படியே உள்ளேயே நின்று கொண்டாள். 
தன்னுடைய தாய், மற்றும் தாய் மாமன் இருவரும் எப்படி பாசத்தை ஊட்டி வளர்ந்தார்களோ அது போல வாசு உனக்கு தான் என்ற சொல்லையும் சேர்த்தே அவள் மனதில் வளர்த்தார்கள்.
சிறு வயதில் இருந்து மாமா மாமா என்று பைத்தியமாகியிருந்த அந்த பிஞ்சு உள்ளம் வாசு பிரேமா திருமணத்தை எண்ணி துடித்தது. யாரையும் காணப் பிடிக்காமல் தன்னுடைய அறைக்குள்ளே அவள் முடங்க, அவளை எப்படி எதிர்க் கொள்ள என்று தெரியாமல் சீனிவாசனும் கிளம்பி விட்டார். 
கோதையும் தன்னுடைய மகளைப் பற்றிய கவலையிலே சிறிது நேரம் அழுது கொண்டிருக்க சிறிது நேரம் கழித்து தான் மகளின் சத்தமே இல்லையே என்று எண்ணி உள்ளே சென்றாள். 
அழுகையில் குலுங்கி கொண்டிருந்த சரண்யாவைக் கண்டதும் அவள் பெற்ற வயிறு துடித்தது. ஆனால் இதற்கு எப்படி ஆறுதல் சொல்ல என்று தெரியாமல் சிறிது நேரம் அழட்டும் என்று எண்ணி அவளுக்கு தனிமை கொடுத்தாள். 
ஆனால் எவ்வளவு நேரம் கொடுத்தாலும் சரண்யா சரியாகவில்லை. கோதை தேற்றும் போது அவள் மடியில் கிடந்து கதறினாள். அவளைத் தேற்ற முடியாமல் தோற்றுப் போனாள் கோதை. ஒருத்தி அவன் நினைவிலே கதறிக் கொண்டிருக்கிறாள் என்று தெரியாமல் கல்யாணக் கனவிலும் எப்போது ஊருக்கு போவோம் என்ற சிந்தனையிலும் இருந்தான் வாசுதேவன். 
உடன் வேலை செய்யும் நண்பர்கள் திருமண செய்தி தெரிந்ததும் அவனைக் கிண்டல் செய்வதும் பிரேமா பற்றி விசாரிப்பதுமாக இருந்தார்கள். 
பிரேமாவைப் பற்றி பேசி பேசியே அவன் மனதில் அவள் மேல் இல்லாத காதலை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அவளைப் பற்றியே அதிகம் பேசியதில் அவனுக்குமே அவளைக் காண ஆர்வம் வந்து விட்டது. 
எப்போதுமே சரண்யா அவனிடம் அதிகம் வம்பிழுப்பாள். ஆனால் பிரேமா அவனைக் கண்டதும் தலை குனிந்து கொள்வாள். அதனால் பிரேமாவின் செய்கையைக் கண்டதும் அவனுக்கு சிரிப்பு தான் வரும். அவனாக அவளிடம் ஏதாவது பேசினாலும் தலை குனிந்த படியே தான் பதில் சொல்வாள். கடைசியாக வந்தனா திருமணத்தில் தான் அவளைப் பார்த்தான். ஆனாலும் அதிகம் பேச வில்லை. அந்த தருணங்களை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தான். 
சீனிவாசன் சொன்னது போல அவன் மனம் இது வரை எந்த பெண்ணையும் நினைத்தது இல்லை. பிரேமா தான் உன்னுடைய வாழ்க்கைத் துணைவி என்ற எண்ணத்தை வைதேகி விதைத்ததும் அவன் ஹார்மோன்கள் பிரேமாவை நினைத்து சுரக்க ஆரம்பித்தது. 
நாட்கள் மெதுவாக நகர்வது போல இருக்க ஒரு வழியாக அவன் ஊருக்கு வரும் நாளும் வந்து விட்டது. வைதேகியிடம் சொன்ன நாளில் ஊரில் வந்து இறங்கி விட்டான். இயல்பிலே அனைவருக்கும் வாழ்க்கைத் துணையைப் பற்றிய கனவுகள் இருக்கும். அதனால் அவனுக்கும் பிரேமாவைப் பார்க்க ஆவல் உருவானது. 
ஊருக்கு வந்த அடுத்த நாளே தங்கையையும் மருமகனையும் பார்க்க செல்வது போல பிரேமாவைப் பார்க்கச் சென்றான். கிரிதரன், வள்ளி, நிரஞ்சன், வந்தனா அனைவரும் அவன் நலனை விசாரித்தார்கள். 
அவனைக் கண்டு ஆனந்தமாக அதிர்ந்த பிரேமாவும் “வாங்க அத்தான்”, என்ற சொல்லொடு பேச்சை முடித்துக் கொண்டாலும் அடிக் கண்ணால் அவன் அழகை ரசிக்கத் தான் செய்தாள். அவனும் அதே தான். யாருக்கும் தெரியாமல் அவளை பார்த்துக் கொண்டு தான் இருந்தான். 
“எதுக்கு இவ இப்படி ஒல்லியா இருக்கா? கொஞ்சம் குண்டா இருந்தா நல்லா இருக்குமே?”, என்று உருவான எண்ணத்தை மறைத்து வைத்து விட்டு மருமகள் வர்ஷினியை கொஞ்ச ஆரம்பித்து விட்டான். 
அவளுக்கென்று வாங்கியிருந்த செயினைப் போட்டதும் வந்தனா கண்கள் ஒளிர்ந்தது. தனிமை கிடைத்த போது “தேங்க்ஸ் அண்ணா, என் மகளுக்கு இன்னும் தாய் மாமன் சீர் வந்து சேரலையேன்னு கவலைப் பட்டேன்”, என்றாள் வந்தனா. 
அதில் புன்னகைத்த வாசுதேவன் வேறு விஷயங்களை நிரஞ்சனிடம் பேசிக் கொண்டிருந்தான். அதன் பின் அடுத்தடுத்து வேலைகள் நடக்க அடுத்த நாள் திருமணம் என்னும் நிலைக்கு வந்து விட்டது. 
மணமக்கள் இருவரும் தங்களின் இணையை எண்ணி கனவில் இருந்தார்கள். இருவருக்கும் திருமண நாளை நினைத்து பூரிப்பாக இருந்தது. 
ஆனால் இந்த திருமணத்தை எதிர்க் கொள்ள முடியாமல் தன்னுடைய அறையில் கிடந்து அழுது கொண்டிருந்தாள் சரண்யா. பூங்கோதை எவ்வளவு முயன்றும் அவளை சமாதானம் செய்ய முடிய வில்லை. கூடவே மகள் ஏதாவது தவறான முடிவு எடுத்து விடுவாளோ என்று பயமாகவும் இருந்தது. அதனால் குருவிக் குஞ்சைப் பேணிக் காப்பது போல் அவள் அருகிலே இருந்தாள். 

Advertisement