Advertisement

அவன் போவது அவளுக்கு வருத்தம் தான். ஆனால் அவளால் அவளுடைய வருத்தத்தையும் வெளியே காட்ட முடியாது, இப்போதைக்கு அவளால் எந்த உணர்வுகளையும் வெளியே காட்ட முடியாது. அது தான் அவளது தற்போதைய நிலை. அதனால் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாள். 
“வறேன்னு போய் சொல்லு”, என்றான் வாசு.
“சரி மாமா”, என்று சொல்லி விட்டு திரும்பினாள். 
“சரண்யா”
“ஆன், என்ன மாமா?”
“குழந்தையை நல்லா பாத்துகோ”
“இதை நீங்க சொல்லனுமா மாமா? நான் நல்லா பாத்துக்குறேன். நீங்க பாத்து பத்திரமா போயிட்டு வாங்க”
“அம்மா ஏதாவது சொன்னா சரி சரினு போய்ரு சரண்யா. அவங்களுக்கு ஜால்ரா தட்டினா தான் அவங்க சண்டை எதுவும் போட மாட்டாங்க”
“சரி மாமா”
“உன் வீட்ல இருக்குற மாதிரி இங்க சுதந்திரமா இரு. அத்தையையும் நான் இங்க வந்து இருக்க சொல்றேன். அவங்க அங்க தனியா இருக்க வேண்டாம்”
“அம்மா இங்க வர மாட்டாங்க மாமா. அவங்களுக்கு அங்க தான் சுதந்திரம் இருக்கும்”
“சரி, அம்மா அப்பாவை பாத்துக்கோ. நீயும் சந்தோஷமா இரு. போர் அடிச்சா என்னோட ரூம்ல புக் இருக்கு, எடுத்து படி. அப்புறம் குழந்தைக்கு என்ன செய்யணும்னு அம்மா அத்தை கிட்ட கேட்டுக்கோ. அப்புறம் பிரேமா வீட்ல இருந்து குழந்தையை பாக்க வருவாங்க. அவங்க ஏதாவது சொன்னா கண்டுக்காத. உனக்கு சொல்லணும்னு அவசியம் இல்லை. நீ தான் சின்ன வயசுல இருந்து எல்லாரையும் பாத்துருக்கியே?”
“சரி மாமா, நீங்க கவலைப் படாதீங்க. நல்லா சாப்பிடுங்க. அப்புறம் குழந்தைக்கு பேர் வைக்கணும்ல?”
“அப்பா ஒரு மாசம் போகட்டும்னு சொன்னார் சரண்யா. நான் ஊருக்கு போய் யோசிச்சு சொல்றேன்”
“சரி மாமா”, என்று சொல்லி புன்னகைத்து விட்டு கீழே சென்றாள். அவனும் பேகை எடுத்துக் கொண்டு அவள் பின்னே சென்றான். 
அங்கே கோதை, வைதேகி, சீனிவாசன் அனைவரும் இருந்தார்கள். சரண்யா குழந்தையை கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அவன் கிளம்புகிறான் என்று தெரிந்தும் பிரேமா வீட்டில் இருந்து யாரும் வரவில்லை.  அவர்கள் வராமல் போனது கூட அவனுக்கு பெரிதாக வலிக்க வில்லை. ஆனால் அவனது ஆருயிர் தங்கை கூட தன்னுடைய முகம் பார்க்க மறுக்கவும் அவனுக்கு அதிகம் வலித்தது.  
தன்னை நிலைப் படுத்திக் கொண்டவன் கோதை அருகில் சென்றான். 
“அத்தை”
“சொல்லு கண்ணு”
“பேசாம நீங்களும் இங்கயே வந்து இருங்களேன். அங்க தனியா என்ன செய்ய போறீங்க? இங்க இருந்தா சரண்யாவுக்கு துணையா இருக்கும்ல?”
“அதெல்லாம் சரியா வராது வாசு. நான் அங்கயே இருந்துக்குறேன். தினமும் வந்து குழந்தையையும் சரண்யாவையும் பாத்துட்டு போறேன். நீ விசனப் படாம போ ராசா”
“சரி அத்தை பாத்துக்கோங்க. அப்பா, போயிட்டு வரேன் பா”
“சரிப்பா, போயிட்டு போன் பண்ணு”
“சரிப்பா, சரண்யா வரேன். குழந்தையை நல்லா பாத்துக்கோ”
“சரி மாமா”
“அம்மா”
“ம்ம்”, என்றாள் வைதேகி. 
“உனக்கு என் மேல கோபம் இருக்கும். ஆனா கொஞ்ச நாள் கழிச்சு என் பக்க நியாயம் உனக்கு புரியும். குழந்தையை பாத்துக்கோ. சரண்யா சின்ன பொண்ணு, அவ ஏதாவது செஞ்சா கூட நீ பொறுத்துக்கோ”

“ஏன் இவ நான் அவளை கொடுமை படுத்துவேன்னு உன்கிட்ட சொன்னாளா?”, என்று வெடுக்கென்று கேட்டாள் வைதேகி. 
“அப்படிச் சொல்லலை மா. பிரச்சனை வேண்டாம்னு தான் சொல்றேன். நம்ம குடும்ப பிரச்சனை அடுத்தவங்க வாயில விழ வேண்டாம்னு தான்”
“ஆமா ஆமா நாம அடுத்தவங்க வாயில விழாம தான் இருக்கோம்? என் மருமக போனதுல இருந்து தான் நம்ம குடும்பத்தை பத்தி தான் ஊரே பேசுது. பொண்டாட்டி செத்த உடனே மறு கல்யாணம் பண்ணின உனக்கு ஊர் வாயைப் பத்தி எல்லாம் என்ன கவலைப்பா?”
“அம்மா…. நான் என்ன சொல்றேன். நீ என்ன சொல்ற? உன்கிட்ட மனுஷன் பேசுவானா? சே… நான் கிளம்புறேன்”, என்று சொல்லி பேகைத் தூக்கிக் கொண்டான். 
“இந்தாங்க மாமா, நைட்டுக்கு டிபன் வச்சிருக்கேன். சாப்பிட்ட அப்புறம் பார்சலை தூரப் போட்டுருங்க”, என்று சொல்லி அவன் கையில் கொடுத்தாள் சரண்யா. 
புன்னகையுடன் வாங்கிக் கொண்டவன் குழந்தையை அள்ளி எடுத்து முத்தினான். 
பின் கலங்கிய கண்களை மறைத்தவாறு காரில் ஏறி அமர்ந்தான். டிரைவர் வண்டியை எடுத்ததும் கார் கிளம்பிச் சென்றது. கண்களில் இருந்து கார் மறையும் வரை அங்கேயே நின்றாள் சரண்யா. 
கையில் குழந்தையுடனும் கண்களில் கண்ணீருடனும் ஏக்கமான பார்வையை தாங்கி நின்ற சரண்யாவை அந்த வழியாக சென்ற கதிரேசன் பார்த்துக் கொண்டே சென்றான். 
“இவளுக்கு இது தேவையா? இப்படி அநாதை மாதிரி நிக்காளே?”?, என்று தான் அவனுக்கு தோன்றியது. 
“உள்ள வா மா சரண்யா?”, என்று அழைத்தார் சீனிவாசன். 
“சரி மாமா”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள். சீனிவாசன், சரண்யா, கோதை மூவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
குழந்தையைப் பார்த்து ஏதோ சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள் மூவரும். தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்த வைதேகிக்கு அவர்களின் சிரிப்பு மிளகாயை அரைத்து பூசியது போல இருந்தது. 
தன்னுடைய கோபத்தை எப்படி காண்பிக்க என்று தெரியாமல் “ஏய் சரசு, சரசு, இங்க வாடி”, என்று சத்தமாக அழைத்தாள்.
“வைதேகி, இப்ப எதுக்கு கத்துற? உன் சத்தத்துல குழந்தையே மிரல்றான் பாரு. அமைதியா பேசு”, என்றார் சீனிவாசன். 
“ஓஹோ, நான் எப்படி பேசணும்னு வேற எனக்கு பாடம் எடுப்பீங்களோ? ஆத்தாளும் மகளும் வந்தாலும் வந்தாங்க. இந்த வீட்ல எனக்கு பேச கூட உரிமை இல்லாம போச்சா? இதைக் கேட்ட ஒத்த நாதியில்லாம போயிட்டேனே?”
“உன்னை பேச வேண்டாம்னு சொல்லலை. அமைதியா பேசுன்னு தான் சொல்றேன்”
“அதை நீங்க சொல்லக் கூடாது. இது என் வீடு, என்னோட இஷ்டம்”
“சே, உன் கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானா?”
“ஆமா ஆமா, நான் மனுஷர் அண்டாத மிருகம் தான். ஏய் சரசு சனியனே, எங்க டி போன? என் உயிரை வாங்குறதுக்குன்னே நீயும் வந்து தொலைஞ்சிருக்கியா?”
“இதோ வந்துட்டேன் மா. தாலிச்சிட்டு இருந்தேன். அதான் உடனே வரலை”
“சரி சரி நைட் டிபன் செஞ்சியா இல்லையா?”
“செஞ்சிட்டேன் மா”
“என்ன செஞ்ச?”
“சப்பாத்தி தான் மா”
“உன்னை நான் சப்பாத்தி செய்ய சொன்னேனா?”
“இல்லைங்கம்மா, சரண்யா தான் செய்ய சொல்லுச்சு”
“ஓஹோ வந்த அடுத்த நாளே, அதிகாரத்கை நிலைநாட்டணும்னு பாக்குறியா டி?”, என்று சரண்யா புறம் திரும்பி கேட்டாள் வைதேகி. 
“ஐயோ அப்படி எல்லாம் இல்லை அத்தை. வாசு மாமாவுக்கு கொடுக்க தான் அதை செஞ்சேன்? அப்ப எல்லாருக்கும் அதையே செய்யலாம்னு தான் அப்படிச் சொன்னேன்”, என்றாள் சரண்யா. 
“இங்க பாரு சரசு, நீ என்ன செய்வியோ தெரியாது. எனக்கு நைட்டுக்கு தோசை தான் வேணும்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள். 
சரசு என்ன செய்ய என்று தெரியாமல் விழிக்க “அக்கா நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. நான் தோசை ஊத்திக் கொடுத்துக்குறேன்”, என்று சொன்னாள் சரண்யா. 
சரசுவும் கிளம்பி விட்டாள். கோதை குழந்தையைப் பார்த்துக் கொள்ள சரண்யா வைதேகிக்கு தோசை ஊற்றினாள். 
தோசை ஊற்றி முடித்ததும் வைதேகியின் அறைக் கதவை தட்டிய சரண்யா “அத்தை அத்தை சாப்பிட வாங்க”, என்று அழைத்தாள். 
கதவை திறந்த வைதேகி “எல்லாம் எடுத்து வச்சிட்டு போ. எனக்கு சாப்பிட தெரியும்”, என்றாள். 
வேறு வழியில்லாமல் அமைதியாக கோதை அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். அவர்களை முறைத்தவாறே வந்த வைதேகி சாப்பிட அமர்ந்தாள். 
சாப்பிடும் போதே அவர்களை முறைத்து பார்த்துக் கொண்டிருந்ததால் “கோதை, சரண்யா ரெண்டு பேரும் மேல ரூமுக்கு போங்க”, என்றார் சீனிவாசன்.
“சரண்யா நீ மேல போ மா, நான் வீட்டுக்கு கிளம்புறேன்”, என்றாள் கோதை. 
“அம்மா சாப்பிட்டுட்டு போ”, என்றாள் சரண்யா. 
“ஆமா கோதை, இன்னும் வீட்டுக்கு போய் என்ன செஞ்சு சாப்பிடுவ? ஒழுங்கா சாப்பிட்டு போ”
“ஆமா ஆமா, கொட்டிக்கிட்டு போ. இங்க தான் கண்டவங்களும் வந்து சாப்பிடலாம், இது சத்திரம்னு போர்டு மாட்டிருக்கோமே? நீ சாப்பிட்டு போ ஆத்தா”, என்று நக்கலாக சொன்னாள் வைதேகி. 
சீனிவாசன் அவளை முறைக்க அவள் அவரை முறைத்தாள். 
“அண்ணா நான் கிளம்புறேன். மதியம் வச்க சாதம் இருக்கு. நீங்களும் சரண்யாவும் சாப்பிட்டு படுங்க. அவசரத்துல வீட்டை பூட்டினேனான்னு கூட தெரியலை. நான் கிளம்புறேன். சரண்யா குழந்தையை பாத்துக்கோ”, என்று சொல்லி விட்டு கிளம்பிய கோதை “வரேன் மதினி”, என்று வைதேகியிடமும் சொன்னாள். 
“காசுக்கு வாக்கு இல்லைன்னாலும் இந்த திமிருக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை”, என்று சொன்ன வைதேகி சாப்பாட்டில் கவனம் செலுத்தினாள்.  
“வைதேகி..”, என்று சீனிவாசன் அதட்ட “மாமா, நீங்க ரூமுக்கு போங்க”, என்று சொல்லி அவரை அனுப்பி வைத்த சரண்யா வைதேகியை நிமிர்ந்து கூட பார்க்காமல் மாடியேறினாள். 
“இனிமே தான் டி உனக்கு இருக்கு?”, என்று கருவிய படியே, போகும் சரண்யாவையே வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் வைதேகி. 
அன்று இரவு வைதேகி அறைக்குள் சென்று படுத்ததும் அவளை அழைத்தாள் வந்தனா. 
“சொல்லு வந்தனா”
“அண்ணா கிளம்பிட்டானா மா?”
“கிளம்பிட்டான் கிளம்பிட்டான்”, என்று ஆரம்பித்து அதன் பின் நடந்த கதையைச் சொன்னாள். 
“சரி விடு மா”
“எப்படி விடச் சொல்ற? எனக்கு உன் அண்ணன் ரெண்டாம் கல்யாணம் பண்ணுணதுல எனக்கு மனசே ஆறலை டி”
“எனக்கு இது வரைக்கும் சரண்யாவை பிடிக்கும்னும் இல்லை. பிடிக்கலைன்னும் இல்லை. ஆனா இப்ப வெறுப்பா இருக்கு மா? அவ எதுக்கு அண்ணனை ரெண்டாம் கல்யாணம் பண்ணனும்? வேற ஆம்பளையே அவளுக்கு இல்லையா?”
“இதுக்கு உனக்கு அர்த்தம் தெரியலையா டி வந்தனா? அவ தகுதிக்கு வரவன் எவனும் இவ்வளவு வசதியா இருப்பானா?”
“பணம், சொத்துக்காக இப்படியா மா? அவ மூஞ்சில முழிக்க வேண்டியது வரும்னு தான் இன்னைக்கு அண்ணனை பாக்க கூட நான் வரலை”
“இதை இப்படியே விடக் கூடாது வந்தனா. இவளை இங்க இருந்து விரட்டியே ஆகணும். ஏதாவது செய்யணும்? நான் நாளைக்கு அங்க வரேன். வள்ளி மதினி கூட பேசி ஏதாவது முடிவு எடுக்கணும்”
“சரி மா, வா. நான் வைக்கிறேன்”, என்று சொல்லி வைத்து விட்டாள் வந்தனா. 
அடுத்த நாள் காலை எப்போதும் போல் தான் அனைவருக்கும் விடிந்தது. 
காலையில் சீக்கிரமே எழுந்த வைதேகி வந்தனா வீட்டுக்கு சென்று விட்டாள். வள்ளி, வந்தனா, வைதேகி மூவரும் வில்லங்கமாக திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்கள் சரண்யாவுக்கு எதிராக. 
வைதேகி திரும்பி வீட்டுக்கு வரும் வரை சாதாரணமாக தான் சரண்யாவுக்கு சென்றது. ஆனால் அன்று மாலை வீட்டுக்கு வந்த வைதேகி “ஏய் சரசு, சரசு”, என்று வீட்டு வேலைக்காரியை அழைத்தாள்.
“என்னங்கமா?”
“இனிமே உனக்கு இங்க வேலை இல்லை. வேற இடம் பாத்துக்கோ. இந்தா உன்னோட சம்பள பாக்கி”, என்று சொல்லி அவள் கையில் பணத்தைக் கொடுத்தாள்., 
இது வரை வந்த வருமானம் இனி வராதே என்ற எண்ணத்துடன் அங்கிருந்து சென்றாள் சரசு. 
குழந்தைக்கு பால் காய்ச்சிக் கொண்டிருந்த சரண்யா, இந்த காட்சியைப் பார்த்து குழம்பி போய் வைதேகியை பார்த்தாள். 
“என்ன டி பாக்குற?”
“இல்லை அத்தை எதுக்கு அந்த அக்காவை வேலையை விட்டு அனுப்புனீங்கன்னு யோசிச்சேன்?”
“ஓ அதைக் கேக்குறியா? ஒரு வீட்டுக்கு எதுக்கு டி ரெண்டு வேலைக்காரி. அவளுக்கு பதிலா தான் நீ இருக்கியே? அப்புறம் அவ எதுக்கு? தெண்டச் செலவு தானே? இனிமே எல்லாம் நீ தான் பாத்துக்கணும்”, என்று சொல்லி விட்டு சென்றாள். 
அவள் சொன்ன முறை சரண்யாவைக் காயப் படுத்தினாலும் “சரி இதுவும் என் வீடு தானே? இங்க இருக்குற மூணு பேர்க்கு என்னால சமைக்க முடியாதா? நாமளே பாத்துக்கலாம்”, என்று எண்ணி மனதை தேற்றிக் கொண்டாள். 
ஆனால் அடுத்த நாளே அது அவ்வளவு எளிதல்ல என்று புரிய வைத்தாள் வைதேகி. 
காதல் தொடரும்…

Advertisement