Advertisement

அத்தியாயம் 8 
காதலைக் கூட சொல்ல
முடியாமல் சிக்கித் தவிக்கிறது
பெண் மனம், நாணத்தால்!!!
அடுத்த நாள் காலை தன்னுடைய ஆதிக்கத்தை இப்புவியில் செலுத்தி அழகாக உதயமானான் ஆதவன். யாருக்கு என்ன ஆனாலும் இயற்கை மட்டும் தன்னுடைய வேலையை சரியாக செய்து கொண்டிருக்கிறது. 
விடிவதற்கு முன்பே சரண்யா எழுந்து கொண்டாள். அருகில் படுத்திருந்த குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு தன்னுடைய வேலைகளை செய்ய ஆம்பித்தாள். 
சமையல் வேலையை சரசு வந்து செய்வதால் மற்ற வேலைகளான வாசல் தெளிப்பது, கோலம் போட்டு வீடு பெருக்குவது என்று மற்ற வேளைகளில் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். 
இடை இடையே குழந்தையும் எழுந்து கொண்டானா என்று பார்த்துக் கொண்டாள். காலை வேலை முடிந்ததும் குழந்தையைக் காணச் சென்றாள். 
தூங்குறான் போல என்று எண்ணி தொட்டிலை திறந்து பார்த்தாள். அவனோ கொட்ட கொட்ட விழித்திருந்தான். அவள் பார்த்ததும் அவளைப் பார்த்து சிரிக்க வேறு செய்தான். 
“ஏய் கள்ளா முழிச்சு தான் இருக்கியா? அம்மா வேலையா இருக்கேன்னு தெரிஞ்சிட்டு அமைதியா இருந்தீங்களா தங்கம்?”, என்று கேட்டுக் கொண்டே அவனைத் தூக்கியவள் அவனை கவனிக்க ஆரம்பித்தாள். 
சரசு வந்து காலை உணவை செய்ய ஆரம்பித்தாள். அதனால் சரண்யா குழந்தையுடனே நேரத்தை செலவிட்டாள். காலை உணவு நேரம் வந்ததும் வாசுவை சாப்பிட அழைக்க சென்றாள். 
தன்னுடைய அறையில் விட்டத்தை வெறித்துக் கொண்டு படுத்திருந்தான் வாசு. 
“மாமா, நேரம் ஆச்சு. சாப்பிட வாங்க”, என்று அவனை அழைத்தாள். 
“இப்ப பசியில்லை சரண்யா, கொஞ்ச நேரம் ஆகட்டும். நீ அப்பா அம்மாவை சாப்பிட சொல்லு”, என்றதும் “சரி மாமா”, என்று சொல்லி விட்டு திரும்பினாள். 
“சரண்யா ஒரு நிமிஷம்”
“என்ன மாமா? ஏதாவது வேணுமா?”
“அவனை என் கிட்ட குடுத்துட்டு போ. நான் பாத்துக்குறேன்”, என்றதும் அவன் அருகில் சென்றவள் அவன் பக்கத்தில் குழந்தையை படுக்க வைத்தாள். 
குழந்தைக்கு இந்த பக்கம் தலையணையை அண்டக் கொடுக்க வேண்டும் என்பதால் தலையணையைத் தேடினாள். அது வாசு கால் அருகே கிடந்ததால் இங்கே இருந்தே அதை எட்டி எடுக்க போகும் போது அதையே நினைத்த வாசுவும் தலையணையை எடுக்க குணிந்தான். இருவரும் ஒரே நேரத்தில் குனிந்ததால் இருவரின் தலையும் மோதிக் கொண்டது. 
“அம்மாஆஆ”, என்று அவள் அலற அவன் “ஸ்‌ஸ்”, என்ற சத்தத்தோடு தலையை தடவிக் கொண்டான். 
“சாரி தலையணை எடுக்க தான் வந்தேன்”, என்றான் வாசு. 
“பரவால்ல மாமா, நானும் அதுக்கு தான் குனிஞ்சேன். இந்தாங்க இந்த பக்கம் வச்சிக்கோங்க. நான் அப்புறம் வரேன்”, என்று சொல்லி விட்டு ஓடி விட்டாள். 
வெளியே வந்ததும் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. இருவர் தலையும் இடித்தது பெரிய  விஷயம் இல்லை தான். ஆனால் பெரிய விஷயம் போலவும் அவளுக்கு இருந்தது. 
உள்ளுக்குள் எழுந்த அதிர்வை மறைத்துக் கொண்டு கீழே சென்றாள். அவனோ குழந்தையுடன் ஒன்றி விட்டான். அன்று மாலை வாசு ஊருக்கு கிளம்ப வேண்டும் என்பதால் அன்று முழுவதும் குழந்தையுடனே நேரத்தை செலவழித்தான். 
அவனுக்கு அறைக்கு வந்து தான் உணவைக் கொடுத்தாள் சரண்யா. உணவைக் கொடுக்கவும் குழந்தைக்கு ஏதாவது தேவையா என்று கேட்கவும் தான் அந்த அறைக்குள் வந்தாள். மற்ற படி தகப்பனுக்கும் மகனுக்கும் தனிமை கொடுத்து ஒதுங்கி கொண்டாள். ஆனால் சில நேரம் மகன் அவளை தேடுவதை வாசு உணர்ந்து கொண்டான். 
“பரவால்ல, சரண்யா கூட இவன் நல்ல ஒட்டிக்குவான்”, என்று நிம்மதியாக இருந்தது வாசுவுக்கு. 
சிறிது நேரத்தில் மகளைக் காண கோதையும் வந்து விட்டாள். சரசு மதிய சமையல் வேலையை முடித்தாள். 
அன்று மாலையும் வந்தது. தன்னுடைய அறையில் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் வாசு. 
“வரும் போது எப்படி ஒரு சந்தோசத்தில் வந்தேன்? போகும் போது எப்படி போறேன்?”, என்று எண்ணிக் கொண்டிருந்தது அவன் மனது.
அப்போது அவனுடைய அறைக்குள் சீனிவாசன் நுழைந்தார். அவரைக் கண்டதும் “வாங்கப்பா”, என்றான் வாசு. 
“எல்லாம் எடுத்து வச்சிட்டியா வாசு?”
“வச்சிட்டே இருக்கேன் பா”
“வாசு உன் கிட்ட ஒரு விஷயம் பேசணும். நீ எப்படி எடுத்துபேன்னு தெரியலை”
“சொல்லுங்கப்பா. என்கிட்ட என்ன தயக்கம்?”
‘இல்லை சரண்யாவை….”
“என்ன சரண்யாவை….?”, என்று புருவம் நெரிய கேட்டான் வாசு. 
“அவளை அங்கயே கூட்டிட்டு போறியாப்பா? நீயில்லாம அவ இங்க இருந்து என்ன பண்ண?”
“அப்பா, அது நீங்க என்ன பேசுறீங்க?”
“இல்லை.. ரெண்டு பேரையும் அங்க கூட்டிட்டு போயிட்டா குழந்தையும் உன் கூடவே இருப்பான்ல?”
“அதெல்லாம் முடியாது பா. கொஞ்ச நாள் ஆகட்டும்”
“இல்லை வாசு. உனக்கும் சரண்யாவுக்கும் நேத்து தான் கல்யாணம் முடிஞ்சது. நீ இன்னைக்கே ஊருக்கு கிளம்புனா ஊர்ல உள்ளவங்க ஏதாவது பேசுவாங்க”
“ஊர்ல உள்ளவங்க பேச தான் செய்வாங்க. பேசுற நிலைமைல தானே என்னோட நிலைமை இருக்குது. அதுக்கு என்ன செய்ய?”
“இல்லைப்பா… அது வந்து….”
“அப்பா, என்ன தான் சொல்ல வரீங்க?”
“இல்லை சரண்யாவை உன் கூடவே…..”, என்று அவள் இழுக்கவும் தான் அவனுக்கு அவர் மனதில் இருப்பதே தெளிவாக புரிந்தது. புரிந்த உடன் சுறுசுறுவென்று கோபமும் வந்தது. 
“அப்பா, உங்க மனசுல என்ன ஓடுதுன்னு புரியுது. ஆனா அதைப் பத்தி நாம பேச வேண்டாம். பேச ஒண்ணும் இல்லைன்னு தான் சொல்லணும். குழந்தைக்காக சரண்யாவைக் கட்டிக்க சொன்னீங்க? கட்டிக்கிட்டேன். அவ்வளவு தான். வேற எந்த சலுகையும் என்கிட்ட எதிர் பாக்காதீங்க. நீங்க, அம்மா, அத்தை எல்லாரும் இங்க தானே இருக்கீங்க? அப்புறம் சரண்யாவுக்கு இங்க இருக்குறதுக்கு என்ன? சரண்யா குழந்தையை பாத்துகிட்டான்னா நீங்க எல்லாரும் சேந்து சரண்யாவைப் பாத்துக்கோங்க. நான் இதுல ஒண்ணும் பண்ண முடியாது”, என்று தெளிவாகச் சொன்னான். 
“இல்லை,, அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கே”
“மண்ணாங்கட்டி, இதை தானே நான் முன்னாடியே சொன்னேன்? நீங்களும் கேக்கலை. அவளும் கேக்கலை. இப்ப வந்து இப்படி சொன்னா எப்படிப்பா?”
“அது இல்லை வாசு, உங்க அம்மாவுக்கு சரண்யாவைப் பிடிக்காது. இப்ப உன் அம்மா அமைதியா இருக்குறதே ஏதாவது வில்லங்கம் பண்ணத்தான்னு எனக்கு தோணுது. அவ சரண்யாவை ஏதாவது சொன்னா?”
“அப்பா, இது ஒரு பிரச்சனையா? எந்த வீட்ல தான் மாமியார் மருமக பிரச்சனை இல்லாம இருக்கு. நான் பிரேமாவை கட்டிக்கிட்டதுனால தான் அம்மா இத்தனை நாள் பிரச்சனை பண்ணலை. நான் பிரேமாவைத் தவிர வேற யாரைக் கல்யாணம் பண்ணிருந்தாலும் அவங்க மாமியார் முறுக்கை காட்ட தான் செஞ்சிருப்பாங்க. சரண்யா அதெல்லாம் பெருசா நினைக்க மாட்டா. ஏன், இத்தனை நாள் அம்மா அவளை திட்டாம தான் இருந்தாங்களா? இல்லை அவ தான் வாயை மூடிட்டு இருந்தாளா? சின்ன வயசுல இருந்து ரெண்டு பேருக்கும் போர் நடந்துட்டு தானே இருக்கு? இருந்தாலும் நான் அம்மா கிட்ட சொல்லிட்டு போறேன். அதுக்காக அவளை அங்க கூட்டிட்டு போன்னு எல்லாம் சொல்லிட்டு இருக்காதீங்க. அது முடியவும் முடியாது. இப்ப எனக்கு குடும்பத்தையே கூட்டிட்டு போய் வச்சிருக்குற அளவுக்கு நல்ல நிலைமை இல்லை”
“அப்படின்னா வேலையை விட்டுரு வாசு”, என்று அவசரமாக சொன்னவர் அவன் முறைத்துப் பார்க்கவும் கப்பென்று வாயை மூடிக் கொண்டார். 
“அப்பா நீங்க மாத்தி மாத்தி பேசுற மாதிரி இருக்கு. குழந்தைக்காக கல்யாணம்னு சொன்னீங்க? இப்ப சரண்யாவைப் பத்தி பேசுறீங்க? மன மாறுதலுக்காக வேலைக்கு போன்னு சொன்னீங்க? ஆனா இப்ப வேலையை விடுன்னு சொல்றீங்க? என்னை வச்சு கேம் விளையாடுறீங்களா? கல்யாண விசயத்துல நீங்க சொன்னதுனால மட்டும் நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கலை. பிரேமா சத்தியம்னு சொன்னதுனால தான் பண்ணிக்கிட்டேன். அதுவும் குழந்தைக்காக தான் பண்ணிக்கிட்டேன். அதனால வேற எதுவும் சொல்லி என்னை கண்வின்ஸ் செய்ய பாக்காதீங்க. அப்புறம் சரண்யா நிலமையை புரிஞ்சு நடந்துக்குவா. நீங்க வொரி பண்ணிக்காதீங்க”, என்று சொல்லி பேச்சை முடித்து விட்டான். 
தொங்கிய தலையுடன் வெளியே வந்த சீனிவாசனை ஆவலாக பார்த்தாள் கோதை. அவள் தானே தன்னுடைய அண்ணனிடம் அப்படி பேசச் சொன்னது. 
சரண்யா இங்கேயே இருந்தால் அவள் நிலை என்னவாகும் என்று அந்த தாய் அறிந்தது தான். அதனால் தான் அவனுடன் சென்றாளாவது அவள் வாழ்வு செழிக்காதா என்று எண்ணி தான் சீனிவாசனிடம் சென்று வாசுவிடம் போய் பேசச் சொன்னாள். 
அதனால் வாசு என்ன சொல்லியிருப்பான் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.  
“தம்பி என்ன சொன்னாண்ணே?”, என்று ஆர்வமாக கேட்டாள் கோதை. 
“எங்க மா, அவன் மசியவே இல்லை, கூட்டிட்டு போக முடியாதுன்னு சொல்லிட்டான். பாப்போம், எங்க போயிரப் போறான்”
“போகத்தாண்ணே போறான். அவன் என்ன நம்ம பக்கத்துலயா இருக்க போறான்? ரெண்டு பேரும் ஒரே இடத்துல இருக்கணும்னு என் மனசு வேண்டிக்கிட்டு இருக்குண்ணே. என் மகளோட வாழ்க்கையை நினைச்சா உள்ளுக்குள்ள பதறிட்டே இருக்கு”, என்று புலம்பிய படியே சென்றாள் கோதை. 
சீனிவாசனுக்கும் என்ன சொல்ல என்று தெரியவில்லை. விஷயத்தை ஆறப் போட வேண்டும் என்பது மட்டும் தான் இப்போதைக்கு செய்ய முடியும் என்பதால் அதை அப்படியே விட்டு விட்டார். 
சீனிவாசன் சென்றதும் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் வாசு. அனைத்து நினைவுகளும் சேர்ந்து அவன் மனதை வதம் செய்ய ஆரம்பித்தது. 
அப்போது உள்ளே வந்த சரண்யா கண்களில் தளர்ந்து போய் அமர்ந்திருந்த வாசு தான் தென்பட்டான். 
அவன் தலை கோதி அவன் கவலையை அகற்ற வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு உருவானது. ஆனால் அதற்கு அவள் அவனுடைய பிடித்தமான பொண்டாட்டி இல்லையே. 
பழைய சரண்யா போல, “என்ன மாமா கப்பல் கவுந்துருச்சா?”, என்று அவனை கலாய்த்து அவன் கவலையை போக்க ஆசை தான். ஆனால் அவள் பழைய சரண்யா இல்லையே. ஆக மொத்தத்தில் அவன் அவள் கழுத்தில் காட்டிய தாலி அவனை நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் படுத்தி எடுத்தது. 
வாசலில் எதுவோ நிழலாட நிமிர்ந்து பார்த்தான் வாசு. அங்கே நின்ற சரண்யா அவனையே பார்த்துக் கொண்டிருக்கவும் சீனிவாசன் சொன்னது போல போக வேண்டாம் என்று சொல்ல வந்திருக்காளோ என்று எண்ணினான். 
அதனால் கோபத்துடன் “என்ன?”, என்று கடுப்பாக கேட்டான். 
“வண்டி வந்துருச்சு மாமா. நீங்க கிளம்பனுமே? மாமா உங்களை கூட்டிட்டு வரச் சொன்னாங்க”, என்று தயங்கிய படியே சொன்னாள் சரண்யா. 

Advertisement