Advertisement

அந்த தருணத்துக்காகவே காத்திருந்த சரண்யா அவசரமாக உள்ளே ஓடிச் சென்று குழந்தையை தூக்கி கொண்டாள். 
ஏற்கனவே குழந்தையின் உடை எல்லாம் எங்கே இருக்கிறது என்று தெரியுமாதலால் வேறு உடை அவனுக்கு மாட்டி விட ஆரம்பித்தாள். 
சரண்யாவின் அசைவுகள் அவன் காதுக்கு கேட்டாலும் அதைக் கண்டு கொள்ளாமல் கண்களை மூடி அமர்ந்து விட்டான் வாசு. 
குழந்தைக்கு உடை மாற்றும் வரை அங்கே இருந்த சரண்யா குழந்தையையும் அவனுக்கு தேவையான சில பொருள்களையும் தூக்கிக் கொண்டு வெளியே வந்து விட்டாள். 
அதன் பின் அவள் உலகம் குழந்தையாகி போனான். அவள் மனதில் இருந்த உணர்வுகள் எல்லாம் விடை பெற்றுச் சென்றன. 
முற்றிலும் தூக்கம் கலைந்த குழந்தை அவள் முகம் பார்த்து புன்னகையுடன் விளையாட ஆரம்பித்தது. “அப்படியே உன் அப்பா மாதிரியே இருக்க டா செல்லக் குட்டி. எவ்வளவு அழகா சிரிக்கிற. உனக்கு நான் யார்னு தெரியுதா?”, என்று அதனுடன் பேச ஆரம்பித்தாள். 
அப்போது அந்த காட்சியை பார்த்தவாறே அங்கே வந்தார் சீனிவாசன். பேரன் மற்றும் மருமகளின் முகத்தில் இருந்த புன்னகை அவருக்கும் நிம்மதியைக் கொடுத்தது. 
“குட்டி பையன் எந்திச்சிட்டானா சரண்யா?”
“ஆமா மாமா, இப்ப தான் எழுந்தான். குட்டி தாத்தா பாரு டா”,  என்று சொன்ன சரண்யாவின் கண்களில் ஒரு உயிர்ப்பு வந்திருப்பதை கண்ட சீனிவாசனுக்கு தான் செய்த காரியம் சரி என்ற எண்ணத்தை வரவைத்தது. 
“சரண்யா, இந்தா மா உன்னோட துணியெல்லாம் இதுல இருக்கு. வேற ஏதாவது விடு பட்டுருந்துச்சுன்னா அப்புறம் எடுத்துக்கலாம். இல்லைன்னா கோதை எடுத்துட்டு வருவா”
“சரி மாமா”
“உன்னோட துணியை வாசு ரூம்ல வச்சிரவா மா?”
“அங்க வேண்டாம் மாமா”, என்று அவசரமாக சொன்னாள். 
“ஏன்மா, அவன் தான் நாளைக்கு கிளம்பிருவானே? நீ அங்கயே தங்கிக்க வேண்டியது தானே?”
“இல்லை மாமா அது சரி பட்டு வராது. வாசு மாமாவுக்கு அந்த ரூம்ல தேவையான நினைவுகள் வரும்னா எனக்கு அந்த ரூம்ல தேவையில்லாத நினைவுகள் வரும். எனக்கு அது வேண்டாமே. நான் அங்க இருக்கலை. உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்”
“புரியுது மா. நீ இந்த பக்கத்து ரூம்ல தங்கிக்கோ. நான் அங்க உன்னோட பேகை வைக்கிறேன். ஆனா இங்க ஏ சி இல்ல மா”
“பரவால்ல மாமா. பேன் இருக்குல்ல? அது குழந்தைக்கும் போதும்”
“சரி மா, உன் விருப்பம்”, என்று சொல்லி எழுந்து சென்றார். 
அவர் சென்றதும் அமைதியாக அமர்ந்திருந்தாள் சரண்யா. யார் என்ன சொன்னாலும் அவளால் வாசு அறையில் தங்க முடியாது என்பது தான் உண்மை. அங்கே இருந்தால் பிரேமா நினைவுகள் அவளுக்கு வரும். 
அவர்கள் இருவரும் வாழ்ந்த வாழ்க்கை அவளுக்கு நினைவு வந்து கொண்டே இருக்கும். அது மட்டுமில்லாமல் வாசு நாளைக்கு ஊருக்கு சென்று விடுவான் என்றாலும் இன்று இரவு இடையில் இருக்கிறதே.
இன்று இரவு அவனுடன் ஒரே அறையில் இருப்பதை வாசு நிச்சயம் விரும்ப மாட்டான் என்பது அவளது கணிப்பு. அப்படி ஒரு சூழ்நிலை உருவான பின்னர் அவனாகவே அவளை வெளியே போ என்று சொல்வதற்கு அவளாகவே விலகுவது நல்லதல்லவா?
அறையை விட்டு வெளியே வந்த சீனிவாசனிடம் “மாமா, குழந்தையை பாத்துக்குறீங்களா? நான் மதியத்துக்கு சமைக்கிறேன்”, என்றாள் சரண்யா. 
“வேண்டாம் மா, நம்ம பால்காரன் பொண்டாட்டி சரசு வந்து எல்லாம் செஞ்சிட்டா. உங்க அத்தை முகத்தை தூக்கி வச்சிட்டு இருந்தா. அதனால நாளு நாள் முன்னாடியே அவளை வேலைக்கு வரச் சொல்லிட்டேன். சமையல் செஞ்சு பாத்திரம் விளக்கிட்டு போயிருவா. அவங்க அவங்க பசிக்கும் போது சாப்பிட வேண்டியது தான். எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்பிடணும்னு எனக்கும் ஆசை தான். ஆனா கொஞ்ச நாள் போகட்டும். எல்லாம் மாறும். அப்புறம் நீ குழந்தையோடவே இரு. இல்லைன்னா வாசு கூட போய் பேசு. உன்கிட்ட பேசினா அவன் கொஞ்சம் சகஜமா மாறுவான். அவனை ஏதாவது சாப்பிட வை மா. அவன் காலைலயும் சாப்பிடலை”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார். 
அவர் எளிதாக சொல்லிச் சென்று விட்டார். ஆனால் வாசுவுடன் சென்று சாதாரணமாக பேசுவது என்பது அவ்வளவு எளிதானது அல்லவே. தலையில் கை வைத்து அமர்ந்திருப்பவனிடம் போய் கதை பேசினால் எப்படி? அதனால் குழந்தையுடனே நேரம் செலவழிக்க ஆரம்பித்தாள். 
இடை இடையே வாசுவின் அறைக்கு சென்று குழந்தைக்கு தேவையான பொருள்களை எடுத்து வரவும் மறக்க வில்லை. ஆனால் அவள் செல்லும் போது வாசு நல்ல உறக்கத்தில் இருந்தான். 
மதியம் இரண்டு மணி ஆன போதும் அவன் எழுந்து கொள்ள வில்லை என்றதும் குழந்தையுடம் அந்த அறைக்கு சென்றாள் சரண்யா. 
அவன் நல்ல உறக்கத்தில் இருக்க அவனை எழுப்பவா வேண்டாமா என்று யோசித்தாள். 
அவனை தொட்டு எழுப்புவது எல்லாம் அவளுக்கு பெரிய விஷயம் இல்லை. மாற்றி மாற்றி அடித்துக் கொள்வதும், அவன் அவள் சடையை பிடித்து இழுப்பதும், அவள் மண்டையில் கொட்டுவதும் எப்போதும் அவர்களுக்குள் சாதாரணமாக நடக்கும் நிகழ்வு தான்.
ஒரு வேளை அவ்வளவு சாதாரணமாக ஒரு தோழி போல் பழகியதால் தான் அவளைப் பற்றிய எந்த எண்ணமும் அவனுக்குள் இல்லை போல என்று எண்ணிக் கொண்டாள். 
இப்போது அவளுடைய யோசனை எல்லாம் நிம்மதியாக உறங்குபவனை எழுப்பவா வேண்டாமா என்பது தான். 
அவன் காலையில் இருந்து எதுவும் சாப்பிட வில்லை என்பதும் நினைவு வர வேறு வழியில்லாமல் “மாமா, மாமா”, என்று அழைத்தாள். 
அவள் குரல் ஏதோ கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பது போல இருந்தது வாசுவுக்கு. பிரேமாவுக்கு உடல் நிலை சரியில்லாததில் இருந்து அவன் நன்றாக உறங்கவே இல்லை. அவளைக் கவனிப்பது, அவளுடைய பிரிவின் வலி, அதன் பின்னர் இரவெல்லாம் விழித்துக் கொள்ளும் மகனை கவனிப்பது என்று அவன் உறங்கியே வெகு நாள் ஆகியிருந்தது. 
இன்று குழந்தை பொறுப்பை சரண்யா ஏற்கவும் நன்கு உறங்கி விட்டான்.
அவன் கையை அசைத்து “மாமா எழுந்துகோங்க. மணி ரெண்டு ஆகிருச்சு. சாப்பிட்டு தூங்குங்க”, என்று அவள் மீண்டும் எழுப்பியதும் தான் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான். 
கண்ணை கசக்கிய படி எழுந்து அமர்ந்தவன் குழந்தையும் கையுமாக நின்றவளைப் பார்த்து “சாரி நல்ல தூங்கிட்டேன் போல? என்ன ஆச்சு சரண்யா?”, என்று கேட்டான். 
“நேரம் ஆச்சு, சாப்பிட்டு தூங்குங்க. காலைல இருந்து நீங்க சாப்பிடலைல?”
“எனக்கு வேண்டாம், பசிக்கலை, நீ போய் சாப்பிடு”
“இல்லை தனியா போய் சாப்பிட்டா அத்தை ஏதாவது சொல்லுவாங்க. .நீங்க வந்தா கொஞ்சம் நிம்மதியா சாப்பிடலாம் அதான்”, என்று அவள் பாவம் போல சொன்னதும் வேறு வழியில்லாமல் அவளுடன் சென்றான். அப்படிச் சொன்னால் அவன் வருவான் என்பதால் தான் அவளும் அப்படிச் சொன்னாள். 
சாப்பிட்டு கைக் கழுவிக் கொண்டிருந்த சீனிவாசன் கண்களில் தன்னுடைய மகனும் மருமகளும் பேரனுடன் நடந்து வரும் காட்சி விழுந்தது. அவர்கள் கண்கள் பணித்தது. 
அவர்களைப் பார்த்து புன்னகைத்தவர் “என் பேரனை என்கிட்ட கொடு மா. நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க”, என்று சொல்லி குழந்தையை அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டார்.
இருவரும் அருகருகே அமர்ந்து சாபிட்டுக் கொண்டிருக்க அங்கிருந்த சோபாவில் அமர்ந்து குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தார் சீனிவாசன். 
அதிகமான பசியில் வெளியே வந்த வைதேகியின் கண்களில் மூவரும் விழ கோபத்தோடு அறைக்குள்ளே சென்று விட்டாள். 
அன்று இரவு வந்தது. எப்போதும் போல் சரசு உணவை சமைத்து வைத்து விட்டு செல்ல மதியம் போல் நால்வரும் சாப்பிட்டார்கள். அதன் பின்னர் குழந்தையை தூக்கி கொண்டு தனக்கென்று கொடுக்க பட்ட அறைக்குள் சென்றாள் சரண்யா. 
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த சீனிவாசன் “எல்லாம் வசதியா இருக்காமா? ஏதாவது தேவை இருந்தா என்னை எழுப்பு”, என்றார்.
“அதெல்லாம் எனக்கு ஒண்ணும் வேண்டாம் மாமா, எல்லாம் இருக்கு. ஆனா”
“என்ன மா?”
“குழந்தைக்கு தொட்டில் அந்த ரூம்ல இருக்கு. இங்க ஒண்ணு கட்டிக் கொடுத்தா நல்லா இருக்கும்”
“அட ஆமா, இதை யோசிக்கல பாரு. இரு நான் அங்க இருந்து கழட்டிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றார். 
“என்ன குழந்தை இன்னும் இங்க வரலை. பரவால்ல சரண்யா கிட்ட நல்ல ஒட்டிக்கிட்டான்? நாளைல இருந்து அவனையும் என்னால பாக்க முடியாது”, என்று எண்ணிக் கொண்டிருந்தான் வாசு.
“இன்னும் தூங்கலையா வாசு? நாளைக்கு நீ கிளம்பனுமே?”, என்ற படி உள்ளே வந்தார் சீனிவாசன். 
“தூங்கணும் பா. நீங்க இன்னும் தூங்கலையா?”
“தூங்கணும், இந்த தொட்டிலை அந்த ரூம்ல கட்டிட்டு தூங்க போறேன்”
“எதுக்குப்பா? அந்த ரூம்ல? அங்க ஏசி கூட இல்லை”
“இல்லைப்பா சரண்யா அங்கேயே இருந்துக்குறேன்னு சொல்லிட்டா. அவளுக்கு ஏ.சி வேண்டாமாம். குழந்தைக்கும் பேன் இருக்கு அதுவே போதும்னு சொல்லிட்டா”, என்று சொல்லி அதை கழட்ட போனார். 
“ஏன் இங்கயே அவனை தூங்க போட வேண்டியது தானே?”
“அவளை தப்பா நினைக்காகத வாசு. உனக்கு டிஸ்டர்பா இருக்க கூடாதுன்னு தான் அவ அங்கயே இருக்கேன்னு சொல்லிட்டா”, என்றதும் ஒரு பெருமூச்சை வெளியிட்ட வாசு “நீங்க போங்கப்பா, நான் அங்க போய் தொட்டில் கட்டிக் கொடுக்குறேன்”, என்றான். 
“சரிப்பா”, என்று சொல்லி விட்டு சந்தோஷமாக தூங்கச் சென்றார். 
தொட்டிலைக் கழட்டிக் கொண்டு சீனிவாசன் வருவார் என்று நினைத்த சரண்யா வாசு வரவும் விழி விரித்தாள். 
“நீங்க என்ன மாமா இங்க?”
“தொட்டில் கட்ட வந்தேன்”
“சரி, ஆனா மாமா, குழந்தை இன்னைக்கு உங்க கூட இருக்கணும்னு ஆசைப் பட்டா தூக்கிட்டு போங்க. நாளைக்கு நீங்க ஊருக்கு போனா அவனை ரொம்ப மிஸ் பண்ணுவீங்க. நான் இடை இடைல வந்து பாத்துக்குறேன்”
“இல்ல, இவன் உன் கிட்டயே இருக்கட்டும். நான் கட்டித் தரேன்”, என்று சொல்லி தொட்டிலைக் கட்டி விட்டு குழந்தையைக் கொஞ்சி விட்டே அங்கிருந்து சென்றான். 
காதல் தொடரும்…

Advertisement