Advertisement

அத்தியாயம் 7
உன்னைப் பார்த்த நொடியில்
இருந்து எந்தன் இதயம் கூட
சிறந்த ஓவியன் தான்
உன்னை வரைந்ததால்!!!
நிர்மலமான முகத்துடன் வெளியே வந்த சரண்யாவை அவ்வளவு ஆர்வமாக பார்த்தாள் வைதேகி. “எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்”, என்று அவள் சொல்வாள் என்று அவ்வளவு எதிர்பார்ப்பு வைதேகிக்கு இருந்தது. 
“சரண்யா, வாசு எங்க?”, என்று கேட்டார் சீனிவாசன். 
“பின்னாடி வராங்க மாமா”
“என்ன சொன்னான்?”
“எனக்கு சம்மதமான்னு கேட்டாங்க. நான் சம்மதம்னு சொன்னேன்”, என்றதும் சீனி முகம் மலர்ந்தது. அதே நேரம் வைதேகி முகம் இருண்டு போனது. 
இதற்கு மேல் இந்த திருமணம் நிற்கும் என்று அவளுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் வெறுப்பாய் சரண்யாவைப் பார்த்தாள். 
“இரு டி, உனக்கு இருக்கு. இந்த கல்யாணம் முடியட்டும். அப்புறம் உன்னை என்ன பண்ணுறேன் பாரு. நாளைக்கு வாசு ஊருக்கு போயிருவான். அதுக்கப்புறம் தான் இந்த வைதேகியோட சுயரூபத்தை நீ பாப்ப. ஏண்டா எனக்கு மருமகளா ஆனோம்னு உன்னை கதற விடுறேன்”, என்று மனதுக்குள் கருவிக் கொண்டாள். 
வாசுவும் அங்கு வந்து சேர “நல்ல நேரம் முடிய போகுது, வாசு இந்தாப்பா. சரண்யா கழுத்துல சாமியை வேண்டிக்கிட்டு தாலியைக் கட்டு”, என்று சொல்லி அவன் கையில் தாலியைக் கொடுத்தார் ஊர் நாட்டாமை. 
கை நடுங்க அதை வாங்கிய வாசு கலங்கிய கண்களுடன் அதை சரண்யா கழுத்தின் அருகே கொண்டு சென்றான். அவனுடைய ஒரு சொட்டு கண்ணீர் கூட அவள் முகத்தில் பட்டு தெறித்தது. 
அந்த நேரம் சரண்யா கண்களும் கலங்கித் தான் போனது. ஆனால் அவள் கண்ணீருக்கு அர்த்தம் என்ன என்பது தான் தெரியவில்லை. தன்னுடைய வாழ்க்கை இனி என்னவாகும் என்று எண்ணி அழுதாளா? இல்லை அவள் எதிர் பாராத தருணம், அவள் ஆசை பட்ட வாழ்க்கை அவளுக்கு கிடைத்து விட்டதில் வந்த ஆனந்த கண்ணீரா என்று அவள் மட்டும் அறிந்த ரகசியம். 
சரண்யா கழுத்தில் ஒரு முடிச்சைப் போட்டு விட்டு வாசு நிறுத்தினான். “மூணு முடிச்சையும் நீயே போடுப்பா”, என்றாள் ஒரு பெண். 
“என்ன அண்ணி அப்படிச் சொல்றீங்க? நாத்தனா தானே மத்த ரெண்டு முடிச்சையும் போடணும்?”, என்று கேட்டாள் மற்றொரு பெண். 
“ஆமா நாத்தனா தான் போடணும். ஆனா இங்க தான் வந்தனா இல்லையே. சீனியண்ணே? வந்தனா வரலையா? அவளை கூப்பிட்டீங்களா இல்லையா?”, என்று ஒரு பெண் கேட்கும் போதே வாசு அவள் கழுத்தில் மற்ற முடிச்சுகளையும் போட்டான். 
“அதை ஏன் மா கேக்குற? நான் காலைலே அவளுக்கு போனை போட்டேன். எடுத்தவ கிட்ட வாசு கல்யாணத்துக்கு எல்லாரையும் கூப்பிட வீட்டுக்கு வரட்டான்னு கேட்டதுக்கு நாங்க யாரும் வரலை. எங்களை விட்டுருங்கன்னு கத்திட்டு போனை வச்சிட்டா. அவ வரலைன்னா என்ன? அதான் என் மகனே மூணு முடிச்சையும் போட்டுட்டானே? சரி சரி அடுத்த வேலையை ஆரம்பிங்க”, என்றார் சீனிவாசன். 
“இந்தா வாசு,. இதை சரண்யா காலில் போடு”, என்று சொல்லி மெட்டியைக் அவன் கையில் கொடுத்தாள் ஒரு பெண். 
கீழே அமர்ந்த வாசு அவள் கால்களில் மெட்டியை அணிவித்தான். பின் அவள் நெற்றியில் குங்குமம் வைக்க சொல்ல பதுமை போல் அவர்கள் சொன்னதை செய்தான். அவன் முகம் அவ்வளவு இறுக்கமாக இருந்தது. பழைய நினைவுகள் அவன் மனதை சுழற்றி அடித்தன. அவன் பொறுமை எவ்வளவு நேரம் இருக்கும் என்பது அவனுக்கே தெரியாது. அப்படி ஒரு மனநிலையில் இருந்தான். 
அதன் பின் அவளுடைய தாலி மற்றும் நெற்றியில் குங்குமம் வைக்க சொல்ல அதையும் இறுக்கமாகவே செய்தான். 
ஒரு ஓரத்தில் நின்ற கோதை கண் கலங்க இந்த காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மனதில் சுணக்கம் இருந்தாலும் மகளின் திருமணம் அவளுக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்க தான் செய்தது. 
ஆனால் அந்த காட்சியை எல்லாம் மற்றொரு ஓரத்தில் நின்ற வைதேகி வயிற்றெரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனது முழுவதும் வஞ்சமே நிறைந்திருந்தது.  
“பொண்ணு மாப்பிள்ளைக்கு பால் பழம் கொடுக்கணும். ரெண்டு பேரையும் உக்காரச் சொல்லுங்க”, என்றாள் ஒரு பெண். 
“வாசு சரண்யாவைக் கூட்டிட்டு இங்க வந்து உக்காருப்பா”, என்றார் சீனிவாசன். 
“அப்பா, குழந்தைக்காக கல்யாணம் பண்ண சொன்னீங்க, பண்ணிக்கிட்டேன். மத்த விஷயம் எல்லாம் செய்ய சொல்லி என் மனசை கஷ்டப் படுத்தாதீங்க? நீங்க சொன்னது எல்லாம் செய்வேன்னு என்கிட்ட எதிர் பார்க்கவும் செய்யாதீங்க”, என்று கத்தி விட்டு மாடிக்கு சென்று விட்டான். போகும் போது கலங்கி சிவந்த சரண்யா முகத்தை கூட அவன் பார்க்க வில்லை. 
அவன் கத்தியதும் அனைவரின் கவனமும் அங்கே இருக்க அவன் சென்றதும் அனைவரும் சரண்யாவைத் தான் பார்த்தார்கள். அனைவரின் பார்வையும் தன் மேல் பரிதாபமாக விழுவதைப் பார்த்து பூமிக்குள்ளே புதைந்து போக மாட்டோமா என்று இருந்தது அவளுக்கு. 
கலங்கிய கண்களை சீர் படுத்த முயற்சி செய்தாள். ஆனால் அவள் என்ன முயன்றும் அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது. 
இப்படி ஆயிற்றே என்று அனைவரின் முகமும் வாடிப் போக வைதேகி முகம் மட்டும் மலர்ந்தது. “இது தான் டி உனக்கு முதல் அடி. இனிமேலும் நீ அனுபவிப்ப”, என்று சரண்யாவைப் பார்த்து எண்ணிக் கொண்டாள். 
மகனுடைய செய்கையால் சீனிவாசன் முகம் செத்து தான் போனது. 
“கவலைப் படாதே சீனி, வாசு பக்கத்துல இருந்தும் நாம யோசிக்கணும்ல? அவன் இந்த அளவுக்கு இறங்கி வந்ததே பெருசு. போக போக எல்லாம் சரியாப் போகும் பா. அப்புறம் சரண்யா, இனி இது தான் உன் வீடு. உன்னை நம்பி இருக்குற எல்லாத்தையும் நீ தான் நல்லா பாத்துக்கணும். புகுந்த வீட்டு பெருமையையும், பிறந்த வீட்டு பெருமையையும் நிலைநாட்டுற மாதிரி நடந்துக்கணும். வாசு போக போக சரியாகிறுவான். அவன் மனசை புரிஞ்சு நடந்துக்கோ மா”, என்றார் ஊர் நாட்டாமை. 
“சரிங்க மாமா, எல்லாரும் போறதுக்கு முன்னாடி என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க”, என்றவள் முதலில் சீனிவாசன் முன்பு போய் நின்றாள். 
“இரு மா சரண்யா, மாமா காலுல மட்டும் விழக் கூடாது. வைதேகி இங்க வந்து சீனி பக்கத்துல நில்லு மா”, என்று சொன்னதும் வேண்டா வெறுப்பாக வந்து நின்றாள் வைதேகி. 
முதலில் இருவர் காலிலும் விழுந்த சரண்யாவை வைதேகி கண்டு கொள்ளவே இல்லை. சீனிவாசன் தான் “நல்லா இரு மா”, என்று வாழ்த்தினார். 
அதன் பின்னர் கோதை காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள். தன்னுடைய மகளை வாரி அனைத்துக் கொண்டாள் கோதை. பின் மற்ற அனைவரின் காலிலும் விழுந்து ஆசீர் வாதம் வாங்கியதும் அவர்கள் கிளம்பினார்கள். 
எந்த வித சந்தோஷமும் பூரிப்பும் இல்லாமலே அவர்களின் திருமணம் நடந்து முடிந்து விட்டது. 
மற்ற ஆட்கள் கிளம்பியதும் வைதேகி அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக் கொண்டாள். 
சீனி, கோதை, சரண்யா மூவர் மட்டும் தான் இருந்தனர். ஒரு நொடி மூவருக்குள்ளும் அமைதி தான் இருந்தது. யார் என்ன பேச என்று கூட அவர்களுக்கு தெரிய வில்லை. 
கோதை தான் அந்த மௌனத்தைக் கலைத்தாள். “அண்ணே, இனி சரண்யா உங்க பொறுப்பு. உங்களை முழுசா நம்பி தான் அவளை இங்க விட்டுட்டு போறேன். நீங்க நல்லா பாத்துக்கோங்க”, என்றாள் பூங்கோதை. சரண்யா கண்கள் கலங்கி சிவந்தது. 
“ஏமா, நீ என்ன அசலா? அதுக்குள்ள எதுக்கு போற? நீ கிளம்புரதைப் பார்த்து சரண்யா முகம் கலங்கிப் போச்சு”
“நியாயமா பாத்தா நான் இப்போதைக்கு இங்க இருந்து போக கூடாது தான். எனக்கும் இங்க இருந்து என் மகளுக்கு துணையா எல்லாருக்கும் சமைச்சு போட ஆசை தான். ஆனா ஏதோ மனசு பாரமா இருக்குண்ணே. கொஞ்சம் தனியா இருக்கணும்னு தோணுது. சரண்யா பாத்துக்குவா. பாத்துக்கோ சரண்யா. அம்மா வரேன்”, என்று அழுது கொண்டே சொன்னாள். 
அடுத்த நொடி அம்மா என்ற கதறலோடு கோதையின் தோள் சாய்ந்தாள் சரண்யா. அவள் அழுகையைக் கண்டு கோதையும் அழ சீனிவாசனுக்கு தான் இருவரையும் எப்படி சமாதான படுத்த என்று தெரியவில்லை. 
“கோதை, என்ன மா இது? நீயே இப்படி கலங்கினா அவ சின்ன பொண்ணு. அவளுக்கு ஆறுதல் சொல்லுறதை விட்டுட்டு…. என்ன மா இது?”, என்று சீனிவாசன் சொன்னதும் தன்னுடைய அழுகையை நிறுத்தினாள் கோதை. 
பின் மகளின் கண்ணீரைத் துடைத்து விட்டவள் “அழக் கூடாது கண்ணு. இனி நீ தான் இந்த குடும்பத்தையே பாத்துக்கணும். எதுக்கும் கலங்காம தைரியமா இரு டா. அம்மா நாளைக்கு வந்து உன்னை பாக்குறேன். வேளா வேளைக்கு எல்லாருக்கும் நீ தான் சாப்பாடு கொடுக்கணும். மதினி அப்படி இப்படி பேசினாலும் பொறுத்து போ கண்ணு. அம்மா வரேன்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள் பூங்கோதை. 
“நீ வாசு ரூமுக்கு போ மா. நான் உன் அம்மா கூட போய் உன் துணி எல்லாம் எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றார் சீனிவாசன். 
அவ்வளவு பெரிய வீட்டில் தனி மரமாக யாருமே இல்லாத அநாதை போல நின்றாள் சரண்யா. 
மனமெல்லாம் கனத்து போனது போல இருந்தது. ஆனால் தன்னுடைய நெஞ்சில் தலைய தலைய தொங்கும் தாலியைப் பார்க்கும் போது அவளுக்கு ஆறுதலை தந்தது. 
“எதுக்கு இப்படி தயங்கிட்டே இருக்க சரண்யா? மேல இருக்குறது
உன்னோட புருஷன், உன்னோட குழந்தை. இனி நீ தான் அவங்க ரெண்டு பேரையும் கவனிக்கணும். மேல போ”, என்று மனசாட்சி குரல் கொடுத்ததும் மெதுவாக அடி எடுத்து மாடியை நோக்கிச் சென்றாள். 
என்ன தான் தைரியமாக நடந்தாலும் மனதுக்குள் ஒரு பயச் சூறாவளி சுழல தான் செய்தது. “மாமாவுக்கு இது முதல் கல்யாணமா இருந்திருந்தா இப்ப எப்படி இருக்கும்?”, என்ற எதிர்பார்ப்பு அவளை அறியாமலே உருவானது. 
நடுக்கத்துடன் அவனுடைய அறைக்கு முன்னே நின்றாள் சரண்யா. அவனுடைய அறையின் கதவு திறந்து தான் கிடந்தது. உள்ளே எட்டிப் பார்த்தாள். கட்டிலில் சாய்ந்து காலை நீட்டி, தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான் வாசு. அவன் அருகே குழந்தை தொட்டிலில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தது. 
சரண்யாவுக்கு அறைக்குள் செல்ல தடுமாற்றமாக இருந்ததால் வெளியவே நின்று அந்த அறை முழுவதும் கண்களை சுழல விட்டாள். 
பிரேமா, வாசு திருமண போட்டோவும் அங்கே இருந்தது. அவள் மனதில் ஒரு விரக்தி சிரிப்பு உதயமானது. தங்களின் திருமணத்தை எந்த கேமராவும் பதிவு செய்ய வில்லையே என்று ஏக்கமாக எண்ணிக் கொண்டாள். 
பல ஏக்கங்கள் வந்து ஏங்கி ஏங்கி செத்துப் போகப் போகிறேனோ என்று கூட அவள் மனது எண்ணியது. அவனிடத்தில் எந்த சலனமும் இல்லை. அதே நிலையில் அமர்ந்திருந்தான். அவளும் வெளியவே நின்றாள். 
அப்போது திடீரென்று குழந்தை ஆழ ஆரம்பித்தான். அந்த அழுகை சத்தம் உனக்கு நான் இருக்கிறேன் என்று சொல்வது போல இருந்தது சரண்யாவுக்கு. 
குழந்தை அழுகைச் சத்தம் கேட்கவும் தான் தலையில் இருந்து கையை எடுத்தான் வாசு. அப்போது அறைக்கு வெளியே நின்ற சரண்யா பட “உள்ள வா சரண்யா. குழந்தை உச்சா போய்ட்டான் போல? கொஞ்சம் அவனைப் பாத்துக்குரியா? எனக்கு தலை ரொம்ப வலிக்குது”, என்றான். 

Advertisement