Advertisement

“இதை எதுக்கு சொல்றேன்னா சந்தோஷமா வாழாத நானே என் புருஷனை மறக்காதப்ப சந்தோஷமா வாழ்ந்த வாசுவுக்கு எப்படி இருக்கும்? அவனோட முதல் பொண்டாட்டி நினைவு அவன் மனசை விட்டு நீங்குமா?  நீங்க சொல்ற மாதிரி வாசு இவ கூட வாழ ஆரம்பிச்சாலும் அவனுக்கு பிரேமா நினைவு வரும். இவளுக்கு வாசு இன்னொருத்தி கூட வாழ்ந்தவன் தானேன்னு நினைவு வரும்? அது எப்படி இவங்களுக்கு முழு சந்தோசத்தைக் கொடுக்கும்? வாசு எப்படி அமைதியா இருந்தான்னு எனக்கு அது வேற குழப்பம். கண்டிப்பா அவன் வேற கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டான்னு தான் நினைச்சேன்”
“குழந்தைக்காக மா”
“அப்படித் தான் இருக்கும்னு நானும் நினைச்சேன்? ஆயா வேலை பாக்கவாண்ணே இவளை இவ்வளவு தூரம் வளத்தேன்? இதுவே வேற மாப்பிள்ளை பாத்து என் மகளுக்கு கட்டி வச்சா இந்த மன வேதனை அவளுக்கும் இல்லை தானே?”, என்று மகளுக்காக அந்த அளவுக்கு இறங்கி யோசித்த கோதை தெளிவாக தன்னுடைய மனதைச் சொன்னாள்.  
“அம்மா, முதல்ல நீ ஒண்ணு புரிஞ்சிக்கோ. என்ன ஆனாலும் என்னால வாசு மாமாவைத் தவிர வேற யாரையும் கட்டிக்க முடியாது. அப்படி நீ என்னை மிரட்டி யாருக்காவது கட்டி வச்சாலும் மனசார நானும் அவனுக்கு ரெண்டாம் தாரம் தான் மா புரிஞ்சிகோ. நீ சொல்றது எல்லாமே உண்மை தான். நானும் ஒத்துக்குறேன். வாசு மாமாவோட அன்பு எனக்கு கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். ஆனா என்னால அந்த குழந்தையை விட முடியாது மா”, என்றாள் சரண்யா. 
“நான் கதிர் கிட்ட பேசுறேன் டி, அவனும் நீயும் சேந்து அந்த குழந்தையை வளருங்க. கதிர் நல்ல பையன். புரிஞ்சிப்பான்”
“அம்மா, குழந்தை மட்டும் பிரச்சனை இல்லை. எனக்கு வாசு மாமாவைத் தவிர வேற யார் கூடவும் வாழ முடியாது. இது தான் எனக்கு இந்த ஜென்மத்துல கிடைச்சதுன்னு நினைச்சிக்கோ. வாசு மாமா என் கூட வாழவே இல்லைன்னாலும் அந்த குழந்தைக்காக நான் வாழ்ந்துட்டு போறேன். இதை இதோட விட்டுரும்மா”
“இதுக்கா டி உன்னை இவ்வளவு கஷ்டப் பட்டு வளத்தேன்?”
“கோதை, என் மகனுக்காக உன்கிட்ட வாழ்க்கை பிச்சை கேக்குறேன் மா? பால் மணம் மாறாத என் பேரனுக்காகவும், மலர்ந்த அன்னைக்கே மடிஞ்சு போன மலர் மாதிரி இருக்குற என் மகனுக்காகவும் கேக்குறேன் மா. உன் மகளை என் மகனுக்கு கட்டிக் கொடு கோதை. உன் காலுல வேணும்னாலும் விழுறேன்”, என்று கண் கலங்கி போய் கேட்டார் சீனிவாசன். 
“அண்ணே…. இப்படி எல்லாம் கேட்டு என்னைப் பாவி ஆக்காதீங்க. அதான் உங்க மருமகளே சொல்லிட்டாளே. இந்த ஜென்மத்துல அவ கதி இது தான்னு. நான் வேற என்ன சொல்ல?”
“ரொம்ப நன்றி மா”
“நன்றி சொல்லி என்னை அன்னியப் படுத்தாதீங்கண்ணே? எனக்கு மதினியையும், வள்ளி அக்காவையும் நினைச்சா பயமா இருக்கு. அவங்க முகமே சரியில்லை. நீங்க கல்யாணம் விஷயம் பேசினதும் வந்தனா முகம் கூட ஒரு மாதிரி போச்சு. அது வேற திக்கு திக்குன்னு இருக்கு. எப்பாவது பாக்குற என்னையே நாக்குல நரம்பில்லாம பேசுவாங்க. கூடவே இருந்தா இவளை என்ன எல்லாம் சொல்வாங்க?”
“அம்மா, யார் வாழ்க்கைல பிரச்சனை இல்லாம இருக்கு? எல்லாருக்கும் வாழ ஆரம்பிச்ச பிறகு பிரச்சனை வரும்? எனக்கு பிரச்சனைல தான் வாழ்க்கை ஆரம்பிக்குதுன்னு இருக்கு. அதெல்லாம் நான் பாத்துக்குறேன் மா”, என்றாள் சரண்யா. 
“ஏன் டி, இப்படி கல்யாணம் கல்யாணம்னு குதிக்கிற? இதுல பிள்ளையை வேற பாத்துக்க போறாளாம்? உனக்கு என்ன தெரியும்னு இப்படி பேசுற? பச்சை பிள்ளையை உனக்கு பாத்துக்க தெரியுமா? அதுக்கு ஏதாவது காச்சால் வந்தா கூட என்ன செய்வ நீ? உன்னைய பாத்துக்கவே உனக்கு நான் வேணும்”
“அதெல்லாம் நான் பாத்துக்குவேன். வேற மாப்பிள்ளையை கட்டிக்கோன்னு நீயும் பல நாளா சொல்லிட்டு தான் இருக்குற? அப்படி நீ சொல்ற மாதிரி எனக்கு கல்யாணம் ஆகியிருந்தா இந்நேரம் எனக்கும் பிள்ளை பிறந்துருக்கும்ல? அப்ப எப்படி என் பிள்ளையை வளப்பேனோ அதே மாதிரி இவனையும் பாத்துக்குவேன். இனி அவன் என் மகன்.. நான் கண்டிப்பா நல்லா பாத்துக்குவேன். அவன் என்கிட்ட எப்படி ஒட்டிக்கிட்டான் தெரியுமா?”, என்று கண்களும் உதடும் மலர கேட்டாள் சரண்யா. 
“இன்னும் குழந்தையாவே இருக்கியே டி? சூதும் வஞ்சமும் இருக்குற இடத்துல வாழணும்னு ஆசைப் படுறியே? வாசு உன்னை எங்கயாவது கூட்டிட்டு போயிட்டா பரவால்லை. ஆனா இங்கயே இருந்தா எப்படி கரை சேர போறியோ?”, என்று மனதில் நினைத்த கோதைக்கு மகளின் வாழ்வை எண்ணி கண்களில் கண்ணீர் வடிந்தது. ஆனால் மனதில் உள்ளதை அவள் வெளியே சொல்ல வில்லை. சொன்னாலும் இருவரும் புரிந்து கொள்ளப் போவதில்லை என்று எண்ணி அமைதியாகி விட்டாள். 
“அழாத மா”, என்று சரண்யாவும் “அழாத கோதை, எல்லாம் சரியாகிரும்”, என்று சீனிவாசனும் அவளை சமாதானப் படுத்தினார்கள். வேறு வழியில்லாமல் அவர்களுக்காக தன்னுடைய முகத்தையும் மனதையும் மாற்றிக் கொண்டாள் கோதை. 
இரவு பத்து மணி போல் பசியில் அழ ஆரம்பித்தான் வாசுவின் மகன். சத்தம் கேட்டு கண் விழித்த வாசு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்த பால் டப்பாவை எடுத்து பார்த்தான். அதில் இருந்த பால் கெட்டுப் போயிருந்தது. 
“ஐயையோ, கெட்டுப் போயிருச்சு போலயே? இப்ப செய்ய?”, என்று எண்ணிக் கொண்டு அவனைத் தூக்கியவன் “அழாத டா செல்லம்”, என்று அவனை சமாதானப் படுத்தினான். 
ஆனாலும் அவன் அழுகை அதிகமானதால் அவனை படுக்கையில் விட்டு விட்டு தலையணையை அண்டக் கொடுத்தவன் “அப்பா இப்ப வரேன் டா”, என்று சொல்லி விட்டு கீழே வந்தான். 
கீழே நிசப்தமாக இருக்க “அம்மா அம்மா”, என்று வைதேகியை அழைத்தான். 
வைதேகி அவன் கத்துவதைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள். ஆனால் இருந்த கோபத்தில் அப்படியே அசையாமல் படுத்திருந்தாள். சீனிவாசன் தான் அவன் குரல் கேட்டதும் மற்றொரு அறையில் இருந்து எழுந்து வந்தார். 
“என்ன ஆச்சு வாசு?”
“குழந்தை அழுவுறான் பா. பசிக்குது போல? ஏற்கனவே இருந்த பால் கெட்டுப் போயிருக்கு. எப்ப பால் குடிச்சான்னு  நானும் கவனிக்கலை. அதான் அம்மாவை கூப்பிடுறேன், தூங்குராங்க போல? கொஞ்சம் எழுப்புறீங்களா?”
“சரிப்பா நான் எழுப்புறேன். நீ அந்த பால் டப்பாவை என்கிட்ட கொடுத்துட்டு மேல போய் இரு. நான் கொண்டு வரேன்”, என்று சொல்லி அவன் கொடுத்த பால் டப்பாவை வாங்கிக் கொண்டு தன்னுடைய அறைக்குள் சென்றார். வாசு மேலே சென்று குழந்தையை சமாதானப் படுத்த ஆரம்பித்தான். 
சீனிவாசன் வைதேகி இருந்த அறைக்குள் சென்று “வைதேகி வைதேகி”, என்று அழைக்க அவளோ கண்டு கொள்ளாமல் இருந்தாள். 
அவள் அசைவிலே அவள் உறங்க வில்லை என்பதை புரிந்து கொண்டவர் “உன்னைத் தான் டி கூப்பிடுறேன் காதுல விழலை?”, என்று கத்தியதும் “என்ன ஆச்சுன்னு இப்படி கத்துறீங்க?”, என்று கேட்டவாறே எழுந்து அமர்ந்தாள் வைதேகி.
“குழந்தை அழுவுறான் டி. பால் காச்சிக் கொடு”
“நான் எதுக்கு செய்யணும்? என்னைக் கேட்டா இந்த வீட்ல எல்லாம் நடக்குது? உங்க இஷ்டத்துக்கு எல்லாம் செய்யும் போது நான் மட்டும் நீங்க சொன்னா செய்யணுமா? அதான் இப்ப வீட்டுக்கு அந்த சீமை சித்தராங்கியை கூட்டிட்டு வரப் போறீங்களே? பிறகு என்ன? அவ கிட்ட போய் கேளுங்க. செய்வா”
“சே, நீயெல்லாம் மனுஷ பிறவியா டி? ஈவு இறக்கம் இலாத ஜென்மம். பசில துடிக்கிறது நம்ம பேரப் பிள்ளைன்னு தெரிஞ்சும் இப்படி பண்ணுறியே? உன்னை எல்லாம் திருத்தவே முடியாது”, என்று கத்தி விட்டு வெளியே சென்றவர் அடுப்படிக்கு சென்று பால் காச்ச ஆரம்பித்தார். 
அதை சூடு செய்து ஆற்றி மேலே எடுத்து செல்லும் போது குழந்தையை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான் வாசு. 
“சீனிவாசன் கொண்டு வந்த பாலைக் கொடுத்ததும் அதை குடித்த குழந்தை வாசுவிடம் விளையாட ஆரம்பிக்க அதை சிறு புன்னகையுடன் பார்த்து விட்டு சென்றார் சீனிவாசன். அதன் பின் குழந்தையை கவனிப்பதிலே தூக்கம் பரி போனது வாசுவுக்கு. கூடவே பிரேமாவைப் பற்றிய நினைவுகளும், நாளைக்கு என்ன ஆகுமோ என்ற பயத்துடனும், தான் செய்வது சரியா தவறா என்ற யோசனையிலும் இரவைக் கழித்தான். 
அதே நேரம் அந்த கவலை சரண்யாவுக்கும் இருக்க தான் செய்தது. கோதையே அந்த அளவுக்கு யோசித்திருக்கும் போது தன்னைப் பற்றி அவள் யோசிக்காமல் இருப்பாளா?
அனைவருக்கும் இருந்த குழப்பம் போல் வாசு எப்படி இந்த திருமண செய்தியைக் கேட்டு அமைதியாக இருந்தான் என்ற குழப்பம் சரண்யாவுக்கும் இருந்தது. அவள் ஒரு சதவீதம் கூட அவனுடைய அமைதியான சம்மதத்தை எதிர் பார்க்கவே இல்லை. அவன் வேலைக்கு சென்று விட்டால் குழந்தையை யார் பார்ப்பார்கள் என்று எண்ணி தான் சம்மதித்திருப்பான் என்று அவளாகவே புரிந்து கொண்டாள். 
அவள் மனதை அரித்த மற்றொரு விஷயம் வாசுவின் அன்பு. அது இந்த ஜென்மத்தில் அவளுக்கு எப்போதுமே கிடைக்கப் போவது இல்லை என்று அவளுக்கே தெரியும். அவனுடைய குழந்தையை வளர்த்து அவன் காலடியில் காலத்தை ஓட்டலாம் என்று நினைத்தாலும் அவன் அவளுடன் இருக்கப் போவதில்லை. அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் குழந்தை தான். அதை பார்த்து தன்னுடைய தூக்கத்தை அனைத்தும் மறக்க வேண்டும். அதையே அவள் மனதுக்கு சொல்லி தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டாள். 
கூடவே கதிரேசன் பற்றிய நினைவும் எழுந்தது. அவன் அவளிடம் எப்போதும் வம்பிழுத்துக் கொண்டே இருப்பான். அவளும் பதிலுக்கு திருப்பிக் கொடுப்பாள். ஆனால் அவனுடைய ஆசையை தூண்டி விடுவது போல அவனிடம் எந்த பேச்சையும் பேச மாட்டாள். 
தனக்கு வலிப்பது போல தானே அவனுக்கும் வலிக்கும் என்று நினைத்தாலும் அவளால் அவனுக்காக நல்ல பெண் கிடைக்க வேண்டும் என்று வேண்டத் தான் முடிந்தது. நாளை என்ன நடக்க போகுதோ என்ற பயத்தில் அவள் தூக்கம் பறந்தது. 
அனைவருக்கும் அடுத்த நாள் காலை என்ன ஆகுமோ என்ற படபடப்பில் விடிந்தது. 
காதல் தொடரும்…

Advertisement