Advertisement

அத்தியாயம் 5 
இமை இரண்டும்
முத்தமிடும் போது
கண்களுக்குள் நான் சிறை
பிடிக்க படுகிறேன் உன்னால்!!!
கை கால்களை ஆட்டிக் கொண்டு மலர்க் குவியலைப் போல படுத்துக் கிடந்த தன்னுடைய மகனைப் பார்த்ததும் அவன் மனதில் இருந்த கவலைகள் அனைத்தும் அகல்வதைப் போல உணர்ந்தான் வாசு. 
மெதுவாக மகன் அருகே அமர்ந்து அவனுடைய பூங்கன்னத்தை வருட ஆரம்பித்தான். தன்னுடைய தகப்பனின் தொடுகையை உணர்ந்தானோ என்னவோ வாசுவின் விரலைப் பிடித்து விளையாட ஆரம்பித்தான். 
பொக்கை வாயைத் திறந்து அவன் சிரிப்பதைக் பார்த்தவனுக்கு மனதில் இருந்த வலி அனைத்தும் மறைந்தது. இங்கா இங்கா என்ற அவனின் ஒலி அவன் மனதில் இருந்த தனிமையை விரட்டியது. மகனுடனே ஒன்றிப் போய் விட்டான். 
அதே நேரம் தன்னுடைய வீட்டில் பயங்கர கோபத்தில் பாத்திரத்தை உருட்டிக் கொண்டிருந்தாள் சரண்யாவின் அம்மா பூங்கோதை. அறைக்குள் அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருந்த சரண்யா சத்தம் கேட்டு அறையை விட்டு வெளியே வந்தாள். 
அவள் வந்து நின்றதை பார்த்த பின்னரும் கையில் இருந்த சொம்பை பூங்கோதை கீழே எறிந்தாள் கோதை. அது சரியாக சரண்யாவின் காலருகே வந்து உருண்டு நின்றது. 
“அம்மா, இப்ப என்ன ஆச்சுன்னு நீ இப்படி பண்ணிட்டு இருக்க?”, என்று கேட்டாள் சரண்யா. 
கோதை எதுவும் சொல்லாமல் கோபமாகவே இருக்க “அம்மா உன்னைத் தானே கேக்குறேன் சொல்லு”, என்றாள். 
அப்போதும் கோதை வாயை திறக்க வில்லை. “அம்மா நான் கேட்டுட்டே இருக்கேன்ல?”
“ஏன் கேக்க மாட்ட? இத்தனை நாள் அமுக்கினி மாதிரி அழுதுக்கிட்டு கிடந்த கழுதை இன்னைக்கு என்னை கேள்வி கேக்க வந்துட்டா? போடி உள்ள. என் வாயைக் கிளருன பாத்துக்கோ”, என்று கோபமாக வந்தது கோதையின் குரல். 
“அம்மா, இப்ப எதுக்கு பாத்திரத்தை உருட்டுரன்னு கேட்டது தப்பா?”
“தப்பு தான் டி. தப்பு தான். எல்லாமே தப்பு தான். நடக்குறது எதுவுமே எனக்கு நல்லதா படலை. ஆமா எனக்கு ஒரு சந்தேகம், இத்தனை நாள் அழுதுகிட்டு கிடந்த. இன்னைக்கு உன் முகமெல்லாம் தெளிஞ்சு போயி இருக்கு. நாளைக்கு கல்யாணாம்னு சொன்ன உடனே உனக்கு பூரிப்போ?”
“என்ன மா நீ இப்படி எல்லாம் பேசுற?”
“வேற எப்படி பேச சொல்ற? எனக்கு என்னமோ வாசு உனக்கு வேணும்னு நீயே அந்த பிரேமா பொண்ணு சாகணும்னு வேண்டிருப்பியோன்னு தோணுது”
“அம்மா…”, என்று அரட்டிய சரண்யாவின் கண்களில் கண்ணீர் வந்தது.
“சும்மா அழுது நடிக்காத. அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்னு காத்துட்டு இருந்துருக்க அப்படி தானே? எங்க அண்ணன் சொன்ன உடனே உனக்கு அப்படியே பூரிப்பு வந்துருச்சு”, என்று கோதை சொன்னதும் தன்னுடைய தாயே தன்னை இவ்வாறு சொல்கிறாரே என்று எண்ணி அழுது கொண்டே இருந்தாள் சரண்யா.  
“இப்ப எதுக்கு கோதை சின்ன பிள்ளையை திட்டிட்டு இருக்க? என் மேல உள்ள கோபத்தை அவ கிட்ட காட்டுறியா?”., என்று கேட்ட படி உள்ளே வந்தார் சீனிவாசன். 
“வாங்கண்ணே. கோபம் தான். கண்டிப்பா உங்க மேல கோபம் இல்லைன்னு சொல்ல மாட்டேன்”, என்றாள் கோதை. 
“எதுக்கு மா இப்ப இவ்வளவு கோபம்?”
“எனக்கு இந்த கல்யாணம் நடக்குறது சுத்தமா பிடிக்கலை. நான் பெத்து வச்சிருக்குற இந்த தருதலைக்காகவும், அத்தனை பேர் முன்னாடி உங்களுக்கு ஏதாவது அவப் பெயர் வந்துரக் கூடாதுன்னு தான் ஊர்ப் பெரியவங்க முன்னாடி சரின்னு சொன்னேன். ஆனா எனக்கு கொஞ்சம் கூட சம்மதம் இல்லை. மனசு எல்லாம் தீயா வேகுது. எப்படியாவது இந்த கல்யாணம் நின்னுறாதான்னு இருக்கு”
“கோதை, என்ன மா இப்படி எல்லாம் சொல்ற? நான் எவ்வளவு கஷ்ட பட்டு எல்லார் கிட்டயும் இதை பேசி சரி பண்ணிருக்கேன். இந்த நேரத்துல இப்படி பேசலாமா நீ?”
“இந்த அளவுக்கு கஷ்டப் பட வேண்டிய அவசியமே உங்களுக்கு இல்லையெண்ணே. வாசு கல்யாணத்துக்கு முன்னாடி வாசு கிட்ட மட்டும் நீங்க என் மகளை பத்தி பேசிருந்தா இன்னைக்கு இத்தனை பேர் கிட்ட பேச வேண்டிய அவசியமே வந்திருக்காதே”
“கோதை”
“ஆமாண்ணே, வார்த்தைக்கு வார்த்தை உன் மாமன் உன்னையை தான் கட்டிப்பான்ன்னு என் மக கிட்ட சொன்ன நீங்க ஒரே ஒரு தடவை உங்க மகன் கிட்ட சொல்லிருந்தா வாசு முன்னாடியே என் மகளை கட்டிருப்பானே? நாங்க பணம் காசு இல்லாதவங்கன்னு தானே எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலை”
“ஏமா, இப்ப எதுக்கு மாமாவை திட்டிட்டு இருக்க?”, என்று கேட்டாள் சரண்யா. 
“வாயை மூடு டி கழுதை. இத்தனை நாள் நீயும் மாமாவும் சேந்து தான் எனக்கு ஆசை வார்த்தை சொல்லி ஏமாத்துனீங்கன்னு என்னையும் அண்ணனையும் திட்டிக்கிட்டு இருந்த. இன்னைக்கு கல்யாணம்னு சொன்னதும் உன் மாமாவுக்கு பரிஞ்சிட்டு வரியோ?”
“ஆ ஊண்ணா இதையே சொல்லாத. நான் சொன்னதும் உண்மை தானே? நீங்க தானே சொல்லி சொல்லி எனக்கு வாசு மாமாவை கட்டிக்கணும்னு எண்ணத்தை உண்டாக்குனீங்க?”
“மூஞ்சு முகரையை பேத்துருவேன் பாத்துக்கோ. என்னமோ எங்க பேச்சை கேட்டு நடக்குற மாதிரி தான். ஏன் இப்ப சொல்றேன். நான் உனக்கு வேற மாப்பிள்ளை பாத்து கட்டி வைக்கிறேன்னு. என் பேச்சை கேக்குறியா? சொல்லு டி கேக்குறியா?”
“ஏமா, கோதை விடு மா. இப்ப உனக்கு என்ன கோபம்? இடைல எல்லாம் நடந்துருச்சு. வாசுவுக்கு சரண்யான்னு இருந்துருக்கு”, என்றார் சீனிவாசன். 
“நீங்க சொல்றது தப்புண்ணே. அப்படி வாசுக்கு என் மக தான்னு இருந்துருந்தா யார் என்ன நினைச்சிருந்தாலும் வாசு என் மகளைத் தானே கட்டிருந்துருப்பான். எனக்கு நீங்க என்னமோ சுயநலமா இருந்துருக்கீங்கன்னு தோணுது. எனக்கும் வாசுவுக்கு இவளைக் கட்டி வைக்கணும்னு ஆசை இருந்தது. நாளைக்கு எனக்கு அப்புறம் உங்க குடும்பம் ஆதரவா இருக்கும்னு நினைச்சேன். ஆனா மதினி மனசு புரிஞ்ச அப்புறம் நான் அதை அப்படியே விட்டுட்டேன். இவளுக்கு வேற மாப்பிள்ளை பாக்கணும்னு தான் நினைச்சிருந்தேன். இப்ப போய் நீங்க அப்படி எல்லாம் யோசிச்சிருக்க வேண்டாம். இப்ப உங்க மகனுக்காக நீங்க சுயநலமா யோசிச்ச மாதிரி தான் எனக்கு தோணுது”
“நீ சொன்ன மாதிரி நான் செஞ்சது தப்பு தான். வாசு கிட்ட நான் முன்னாடியே பேசிருக்கணும். மனப்பூர்வமா அதை ஒத்துக்குறேன். இப்ப அந்த தப்பை சரி பண்ண தான் இவ்வளவு கஷ்டப் படுறேன். புரிஞ்சிகோ மா”
“இதுல புரிஞ்சிக்க என்ன இருக்குண்ணே? எல்லாம் தான் போச்சே”
“இவ்வளவு விரக்தி வேணுமா கோதை? சரி உனக்கு பிடிக்கலைன்னா நான் இந்த கல்யாணத்தை நிறுத்துறேன். ஆனா சரண்யா வேற மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டுவான்னு எனக்கு உறுதியா கேட்டு சொல்லு”
“நான் எங்க கேட்டு சொல்ல? அதான் இவ மனசு அப்பட்டமா தெரியுதே. இவ பின்னாடி எப்படி இருப்பான்னு இவ துரதிஷ்டம் என் கண்ணு முன்னாடி காட்சியா விரியுதே”
“பெத்த மகளுக்கே சாபம் விடுறியா கோதை?”
“சாபம் கீபம்னு பேசாதீங்கண்ணே. அந்த அளவுக்கு நான் அரக்கி கிடையாது. ஒரு பெத்த அம்மாவா இருந்தா தான் உங்களுக்கு என் மனசு புரியும். இப்படிப் பட்ட நேரத்துல தான் என் புருஷன் இருந்துருந்தா என் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்துருப்பாரோன்னு தோணுது. இவ வாழ்க்கை என்ன ஆகுமோன்னு நினைச்சா ஈரக்கொலையே நடுங்குது”
“அப்படி எல்லாம் நடக்காது மா. சரண்யா மனசுக்கு நல்லா இருப்பா”
“எனக்கு நம்பிக்கை இல்லைண்ணே. என் வாழ்க்கை மாதிரி என் மக வாழ்க்கையும் போராட்டமா தான் இருக்கும்னு என் உள் மனசு சொல்லுது. பக்கத்து வீட்டு கதிரேசனுக்கு இவளை கட்டி வச்சு கண் குளிர பாக்கணும்னு ஆசைப் பட்டேன். என் கனவு கனவா போச்சே. அந்த பையனும் இவ பின்னாடியே சுத்தி வந்தான். இன்னைக்கு நீங்க சபைல வச்சு கல்யாணத்தை பத்தி பேசும் போது அந்த பையன் முகமே செத்துருச்சு. அதனால தான் நான் மறுப்பைச் சொல்ல வந்தேன். ஆனா இந்த கழுதை கண்ணால கெஞ்சிக்கிட்டு நிக்குது. உங்களைப் பாத்தா நீங்க அதுக்கு மேல…. எனக்கு மனசு ரொம்ப வலிக்குது. என் புருஷன் செத்தப்ப கூட நான் இவ்வளவு கலங்குனது இல்லையே?”
“என் மகனுக்கு என்ன குறைச்சல் கோதை?”
“உங்க மகனுக்கு குறைச்சல் இல்லை தான். நான் பாத்து வளந்த பிள்ளையை நான் எப்படி குறை சொல்லுவேன். வாசு என்னோட மருமகன்னு எனக்கு அவன் மேல அதிக அன்பு இருக்கு. ஆனா என் மகன்னு வரும் போது நான் யோசிக்க தானே செய்யணும்?”
“இப்ப உன் மனசுல என்ன கவலை தான் அழுத்துது? பட்டுன்னு சொல்லிரு கோதை”
“வாசு ரொம்ப நல்லவன் தான். ஆனா என்னைக்கு இருந்தாலும் என் மக ரெண்டாந்தாரம் தானே?”
“கோதை…”
“நான் சொல்றது பொய் இல்லையேண்ணே? உண்மையை தானே சொல்றேன்? ரெண்டாம் தாரமா வாக்கப் பட்டான்னு தானே அவரை ஊரே சொல்லும்? இன்னைக்கு மட்டும் முடியுற பேச்சா இது? அவ வாழ்க்கை முழுவதும் இந்த பேச்சு தானே அவ பின்னாடி தொடர்ந்து வரும்? இன்னைக்கு வாசு வாழ்க்கை என்ன ஆகும், அந்த குழந்தை வாழ்க்கை என்ன ஆகும்னு நியாயம் பேசுனீங்களே? என் மகளோட நிலைமையை நினைச்சுப் பாத்தீங்களா? உங்களுக்கு ஒரு நிலைமை வந்தா நீங்க உங்க மகளை இப்படி ரெண்டாந்தாரமா கட்டி வைப்பீங்களா?”
“உன் மனக்குமுறல் புரியுது கோதை? நான் ஒரு தலை பச்சமா பேசுறேன்னு கூட என்னை நினைச்சிக்கோ. ஆனா இந்த கல்யாணத்தை நல்ல மனசோட முடிச்சு வை கோதை”
“இவ்வளவு கேக்குறீங்களே? இந்த கல்யாணம் நடந்த அப்புறமும்  உங்களால வாசு கூட என் மகளை வாழ வைக்க முடியுமா?”
“கண்டிப்பா முடியும் மா”
“எந்த நம்பிக்கைல சொல்றீங்கண்ணே? கண்டிப்பா எனக்கு நம்பிக்கை இல்லை. இவ அப்பா என்னை விட்டுட்டு போனப்ப அந்த ஆள் மேல எனக்கு பெரிய விருப்பம் எல்லாம் கிடையாது. கடமைக்குன்னு தான் நான் அவர் கூட வாழ்ந்தேன். அவர் என்னை எப்பவுமே சந்தோசமா வச்சிக்கிட்டது இல்லை. குடிச்சிட்டு வந்து தினமும் அடி உதை தான். ஆனாலும் அவரைத் தவிர வேற யாரையும் நான் மறு கல்யாணம் பண்ணணும்னு நினைச்சது இல்லையே? என் மகளை நானே வளக்கணும்னு தானே நினைச்சேன்? நீங்க உதவி செய்யாம போயிருந்தாலும் ஏதாவது கூலி வேலை செஞ்சாவது என் மகளை வளத்துருப்பேன்”
…..

Advertisement