Advertisement

“என்ன சீனி சொல்ற? வாசுவுக்கு என்ன? எல்லாரையும் என்ன சொல்ல சொல்ற? பொடி வச்சு பேசாதப்பா. வெளிப்படையா சொல்லு”, என்றார் ஒரு பெரியவர். 
“சொல்றேன் சித்தப்பா, நான் இப்ப இந்த விஷயம் பேசக் கூடாது தான். ஆனா எனக்கு வேற வழி தெரியலை. ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ கடைசி வரைக்கும் ஒரு துணை வேணும்னு தான் நாம கல்யாணமே செஞ்சி வைக்கிறோம். ஆனா அது பாதிலே முடியும் போது அப்படியே விட்டுற முடியுமா? கடைசி வரைக்கும் என் மகன் தனியா இருக்கணுமா? என்னோட மகனுக்கு நான் ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப் படுறேன்”, என்று சொன்னதும் அங்கே இருந்த அனைவருக்கும் அதிர்ச்சி தான். 
“என்னங்க, உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா?”, என்று கேட்டாள் வைதேகி. 
“அண்ணே, என் பொண்ணு புதைச்ச இடத்துல உள்ள ஈரம் கூட காயலை. அதுக்குள்ள நீங்க இப்படி பேசக் கூடாது”, என்று அழுது கொண்டே சொன்னாள் வள்ளி.
“ஏமா வள்ளி, சீனி சொல்றதுல என்ன தப்பு இருக்கு? உன் மக உயிரோட இருந்து வாசுவுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணினா தான் தப்பு. போனவ போய் சேந்துட்டா, அதுக்குன்னு இருக்குறவங்க வாழ்க்கையை கஷ்டப் படுத்தணுமா? வாசுவுக்கு என்ன வயசாச்சு? பொண்டாட்டி கூட ரெண்டு மாசம் கூட ஒழுங்கா வாழலை. போனவளை நினைச்சு வாசு வாழ்க்கை நாசமாகனுமா? கூடவே ஒரு குழந்தையும் இருக்கு. இன்னொருத்தி வந்தா ரெண்டு பேரையும் பாத்துப்பாள்ள? எனக்கு சீனி சொன்னது சரின்னு தான் படுது. இதெல்லாம் நம்ம சைட் வழக்கம் தானே? நீங்க என்னண்ணே சொல்றீங்க?”, என்று ஒரு ஆள் நியாயமாக கேட்க மற்றொருவரும் அது சரி தான் என்றார். 
“அதானே சீனிவாசன் சொல்றதுல என்ன தப்பு இருக்கு? வாசுவுக்கு வயசு இருக்கு. அவன் வேலைக்கு போனா கூட அந்த குழந்தைக்கு அம்மா வேண்டாமா?”, என்று கேட்டார் ஊர் நாட்டாமை. 
“என் மகன் கண்டிப்பா அவன் பொண்டாட்டியை மறந்துட்டு வேற பொண்ணை தேடி போக மாட்டான். என்னோட பேர பிள்ளையை நான் வளத்துக்குவேன். இல்லைன்னா என்னோட அண்ணன் வீட்ல என் மக இருக்கா, என் மருமவன், அண்ணன், மதினின்னு எல்லாரும் இருக்காங்க. அவங்க வளத்துக்குவாங்க. எங்க பேர பிள்ளையை எங்களால நல்லா வளக்க முடியும்? என் புருஷன் சொன்னதுல எனக்கு உடன்பாடு இல்லைங்க”, என்றாள் வைதேகி. அவளை முறைத்தார் சீனிவாசன்.
“ஆமா, எங்க பேர பையனை நாங்க வளத்துக்குறோம். இன்னொருத்தி வீட்டுக்கு மருமகளா வந்தா என் மகளோட பிள்ளை சித்தி கொடுமையை அனுபவிக்கவா?”, என்று கேட்டாள் வள்ளி. 
“ஏன் மச்சான்? என் மகன் நல்லா இருக்கணும்னு நான் நினைக்க கூடாதா? உங்க மக இருந்துருந்தா இந்த பேச்சு இல்லை. இல்லாம இருக்க போய் தானே இப்படி பேசிட்டு இருக்கேன். என்ன தான் நாம பிள்ளையை வளத்தாலும் அம்மா வளக்குற மாதிரி வருமா? நீங்க நியாயஸ்தர்னு நம்புறேன்”, என்று பிரேமாவின் தந்தை கிரிதரனிடம் கேட்டார் சீனிவாசன். 
“எனக்கும் சீனி மச்சான் சொன்னதுக்கு சம்மதம் தாங்க. என் மருமகனுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைக்க நான் மனப்பூர்வமா சம்மதிக்கிறேன். நிரஞ்சன் நீ என்னப்பா சொல்ற?”, என்று தன் மகனிடம் கேட்டார் கிரிதரன். 
அங்கே பெண்கள் பேச்சு ஒன்றும் இல்லாமல் போனது. “நாம எல்லாம் நமக்கு தோனுனதை பேசலாம். ஆனா இதுல முடிவு எடுக்க வேண்டியது வாசு தான். அவனையே கூப்பிட்டு கேக்கலாமே?”, என்று சொல்லி கழண்டு கொண்டான் நிரஞ்சன். 
அவனுக்கு தங்கை இடத்தில் இன்னொருத்தியா என்று கோபம் வந்தாலும் வாசு வாழ்வை நினைத்தும் யோசித்தான். அவன் நியாய மனது பதில் சொல்ல முடியாமல் தடுமாறியது. அதனால் தான் வாசு பேரை இழுத்து விட்டான். 
“ஏமா, வந்தனா வாசுவை கூட்டிட்டு வா”, என்று ஒருவர் சொல்ல வந்தனா வாசுவை அழைக்க சென்றாள். 
இத்தனை நாள் வாசுவைக் காணாமல் தப்பித்துக் கொண்டிருந்த சரண்யா இப்போது தான் அவனை நேராக பார்த்தாள். 
கண்களைச் சுற்றி கருவளையமும், சிவந்த நிற கண்களும், சேவ் பண்ணாத தாடையுமாக வந்தவனைப் பார்த்ததும் அவள் கண்கள் கலங்கியது. வாசு எப்போதுமே இப்படி இருக்க மாட்டான். என்ன தான் கிராமத்தானாக இருந்தாலும் எப்போதுமே கம்பீரமாக தான் இருப்பான். 
அவனுடைய இந்த நிலையை அவளுக்கு பார்க்க சகிக்க வில்லை. 
“ஏப்பா வாசு, உங்க அப்பா உனக்கு மறு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறார். எங்களுக்கும் அது தான் விருப்பம். உன்கிட்ட இப்ப இது பேசுறது தப்பு தான். ஆனா, நீ ஊருக்கு கிளம்பிட்டேன்னா வேற எப்படி பேசுறது? உன் பொண்டாட்டி வீட்ல உள்ளவங்க கூட சம்மதம் சொல்லிட்டாங்க. இப்ப நீ தான் முடிவு சொல்லணும்? உனக்காகன்னு ஒரு தலை பச்சமாக யோசிக்காத. உன்னோட குழந்தையை மனசுல வச்சு முடிவு எடு. என்ன டா பொண்டாட்டி
செத்து ஒரு வாரத்துல வேற கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டான்னு ஊர்க்காரங்க உன்னை தப்பா நினைப்பாங்கன்னு யோசிக்காத. நாங்க எல்லாரும் முந்துன தலை முறையா இருந்தாலும் நாங்க முழு மனசா தான் இதை சொல்றோம். கல்யாணம் பண்ணிக்கோப்பா”, என்றார் ஊர் நாட்டாமை. 
வாசுவின் நண்பர்கள், உறவினர்கள் அனைவருமே “அவன் கிட்ட என்ன கேக்குறது? மாமா, நீங்க பொண்ணு யாருன்னு சொல்லுங்க. அதெல்லாம் வாசு கல்யாணம் பண்ணிப்பான்”, என்று சொல்ல வாசுவோ அமைதியாக நின்றான். 
கடைசி வரை அவன் வாயில் இருந்து சம்மதம் என்ற வார்த்தை வர வில்லை தான். அவன் வாயில் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. அதனால் அனைவருமே அவனுடைய மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டார்கள்.
வைதேகி, வள்ளி, வந்தனா, நிரஞ்சன் நான்கு பேரும் அவன் இப்படி மௌனமாக இருப்பான் என்று எதிர் பார்க்க வில்லை. மறு கல்யாணத்தை பற்றி பேசியதும் அவன் கோப படுவான் என்று அவர்கள் எதிர்பார்க்க அவன் சம்மதம் என்பது போல அமைதியாக இருந்தது அவர்களை திகைக்கவே வைத்தது. 
“ஏப்பா சீனி, பொண்ணு யாரையாவது பாத்து வச்சிருக்கியா பா?”, என்று ஒருவர் கேட்க “ஆமாங்க மாமா, எல்லாரும் எல்லாம் யோசிக்கும் போது நான் யோசிக்காம இருப்பேனா? வெளில இருந்து பொண்ணெடுத்தா நாளைக்கு வரவ என் பேரனை பாப்பாளான்னு தெரியாதே? அதனால என்னோட தங்கச்சி மக சரண்யாவைத் தான் என் மகனுக்கு கட்டலாம்னு நினைக்கிறேன்”, என்று சொல்ல அங்கே அனைவருக்கும் திகைப்பு தான். 
கோதையும் சரண்யாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அதே போல வைதேகி மற்றும் வள்ளி இருவரும் தங்களின் விகாரமான பார்வையையும் பரிமாறிக் கொண்டார்கள். 
“நல்ல முடிவு தான் மச்சான். சரண்யாவைக் கட்டி வச்சா ஒண்ணுக்குள்ள ஒண்ணா போயிரும். அவளும் குழந்தையை வேத்தாளா பாத்துக்க மாட்டா. ஏமா பூங்கோதை உங்க அண்ணன் அவர் முடிவை சொல்லிட்டார். நீ என்ன மா சொல்ற?”
ஒரு நொடி யோசித்த கோதை மறுப்பாக தான் எதையோ சொல்ல வந்தாள். அதை உணர்ந்த சரண்யா தன்னுடைய அம்மாவின் கையை பிடித்துக் கொண்டு பாவமாக தன்னுடைய அன்னையின் முகம் பார்த்தாள். 
கோதையும் தன்னுடைய மகளைப் பார்க்க சம்மதம் சொல்ல வேண்டும் என்று சரண்யா கண்கள் யாசித்தன. பிடிக்காவிட்டாலும் தன்னுடைய மகளுடைய விருப்பத்துக்காக “எனக்கு சம்மதம் தாங்க”, என்றாள் கோதை. 
அதில் சரண்யா முகம் மலர அதிலே அனைவருக்கும் அவள் மனது புரிந்தது. கோதை, சரண்யா இருவரையும் தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முரைத்தார்கள் வள்ளியும் வைதேகியும். 
“ஏப்பா, நாளைக்கே நல்ல நாளா இருக்குறதுனால கல்யாணத்தை நாளைக்கே வச்சிக்கலாம். உனக்கு சம்மதம் தானே சீனி?”, என்று ஊர் நாட்டாமை கேட்க சந்தோஷமாக சரி என்றார் சீனிவாசன். 
அதன் பின் ஊர் மக்கள் அப்படியே கலைய சொந்த பந்தங்களும் செல்ல ஆரம்பித்தார்கள். கோதையும் சரண்யாவும் கூட வீட்டுக்கு வந்து விட்டார்கள்.
வாசு வீட்டு ஹாலில் வீட்டாள்கள் மட்டும் கூடியிருக்க வள்ளியோ அழுது கொண்டிருந்தாள். 
வாசு மனம் கனக்க அமர்ந்திருந்தான். அவனுக்கு யாரிடம் என்ன பேச என்று கூட தெரியவில்லை. “இப்படி எல்லாம் நடக்கும்னு தெரியாம போய் சேந்துட்டாளே? கடைசில அவளுக்காக கவலைப் படக் கூட இந்த வீட்ல நாதி இல்லாம போச்சே”, என்று புலம்பினாள் வள்ளி. 
“என்ன மதினி இப்படி சொல்றீங்க? நான் என் மருமகளை நினைச்சு வருத்த படலைன்னு நினைக்கிறீங்களா?”, என்று கேட்டாள் வைதேகி. 
“நான் உன்னை சொல்லலை வைதேகி. நடக்குறதை தானே சொன்னேன்? என் அத்தான் அத்தான்னு என் மக பூரிச்சு போவாளே? ஆனா அவ செத்ததுக்கு கூட கவலைப்படாம உன் மகன் அடுத்த கல்யாணத்துக்கு தயார் ஆகிட்டானே?”, என்று சொன்னதும் வேதனையில் கண்களை மூடிக் கொண்டான் வாசு. 
“ஏமா வள்ளி, என்ன பேச்சுன்னு இப்படி பேசுற? என் மகனா ஒண்ணும் ஒத்துக்கலை. நான் தான் ஒத்துக்க வச்சேன்? உன் மக போனது எல்லாருக்கும் வருத்தம் தான். அதுக்காக என் மகன் வாழ்க்கையை நான் இல்லாம ஆக்கணுமா?”, என்று கேட்டவர் வைதேகியை முறைத்து விட்டு “நீயெல்லாம் ஒரு அம்மாவா டி? மகனுக்கு நல்லது நடக்கணும்னு நினைக்காம ஒப்பாரி வச்சிட்டு இருக்க?”, என்று கேட்டார். 
“உங்களுக்கு உங்க தங்கச்சி மகளை இங்க கூட்டிட்டு வரணும். அதுக்கு தானே இத்தனை திட்டம் போட்டீங்க?’, என்று கேட்டாள் வைதேகி. 
“வைதேகி, வார்த்தையை அடக்கி பேசு. என் மகனுக்காக நான் திட்டம் போட்டதாவே இருக்கட்டும். நாளைக்கு கல்யாணம் அவ்வளவு தான். வாசு உன்னோட ரூமுக்கு போ”, என்று சீனிவாசன் கத்தியதும் “அம்மா, இன்னும் புலம்பி என்ன இருக்கு? அதான் எல்லாம் முடிஞ்சிருச்சே. வேற ஒண்ணும் பேச வேண்டாம். அப்பா அப்பவே வீட்டுக்கு கிளம்பிட்டார். வா போகலாம். வந்தனா கிளம்பு”, என்று நிரஞ்சன் ஒரு அதட்டு அதிட்டியதும் வள்ளியும் வந்தனாவும் கிளம்பினார்கள். 
“உன்கிட்ட இருந்து இப்படி ஒரு செய்கையை நான் எதிர் பார்க்கலைண்ணா”, என்று சொல்லிச் சென்றாள் வந்தனா. அவளாவது அதையாவது சொன்னாள். ஆனால் ஒரு நண்பன் போல் பழகிய நிரஞ்சன் வாசுவிடம் போய் வருகிறேன் என்று கூட சொல்லாமல் சென்று விட்டான். வைதேகியும் அவனை முறைத்து விட்டு சென்று விட்டாள். 
“ஊர்க்காரர்கள் தப்பா நினைப்பாங்க”, என்று கவலைப் பட்ட வாசுவுக்கு வீட்டில் உள்ள அனைவரும் அவனை ஒதுக்குவது போல நடந்து கொண்டது மேலும் வலியைத் தான் கொடுத்தது. 
அந்த இடத்தில் இருக்க பிடிக்காமல் தன்னுடைய அறைக்கு சென்றான். அங்கே தொட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் அவனுடைய மகன். 
காதல் தொடரும்…

Advertisement