Advertisement

அத்தியாயம் 4
நாம் இருவரின் கண்கள்
உறங்கும் போது கூட
காதலென்னும் கருமேகம்
விழித்து தான் இருக்கிறது!!!
அனைவரும் ஆளுக்கு ஒரு மூலையில் ஒதுங்கி அழுது கொண்டிருக்க ஊர் பெரியவர்கள் சாமி கும்பிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்கள். அன்று முழுவதும் யாரும் ஒரு வாய் உணவை கூட உண்ண வில்லை. 
சரண்யா குழந்தைகளை பார்த்துக் கொண்டாள். கோதை அனைவருக்கும் டீ போடும் வேலை என பார்த்துக் கொண்டாள். மற்றவர்கள் அனைவரும் துக்கத்தில் கரைந்தார்கள். 
அன்று இரவு முழுவதுமே அந்த வீட்டில் அழுகை சத்தம் கேட்டுக் கொண்டே தான் இருந்தது. சீனிவாசன் இரவும் முழுவதும் வாசுவுக்கு காவல் இருந்தார். மன விரக்தியில் அவன் ஏதாவது தவறான முடிவு எடுத்து விடக் கூடாதே என்று அவனுடன் இருந்தார். அவனோ குழந்தையை கூட மறந்து அழுது கரைந்தான். 
இப்படியே இரண்டு நாட்கள் நகர மூன்றாம் நாள் விஸேஷம் என்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. 
அன்றைக்கு உண்டான சடங்கு சம்பர்தாயம் அனைத்தும் நடைபெற்று முடிந்ததும் சரண்யாவும் கோதையும் தங்கள் வீட்டுக்கு செல்ல கிளம்பினார்கள். “மதினி, நடந்தது நடந்துருச்சு. போனவ திரும்பி வரவா போறா? நீங்களே இடிஞ்சு உக்காந்துட்டா வாசுவை யார் பாத்துக்குவா. உங்களை நீங்க திடப் படுத்திக்கோங்க. சாதமும் குழம்பும் வச்சிருக்கேன். குழந்தைங்க ரெண்டு பேரும் தூங்குராங்க. எல்லாரையும் சாப்பிட வைங்க மதினி”, என்ற கோதை வைதேகி தலையாட்டவும் சரண்யாவைக் கிளம்பச் சொன்னாள். 
சரண்யாவுக்கு அந்த பிஞ்சி குழந்தையை விட்டு விட்டு செல்ல மனதே இல்லை. ஆனால் அவளால் எப்படி இங்கே இருக்க முடியும்? அதனால் கோதை கூப்பிட்டதும் எழுந்து வந்தாள். 
துக்க வீட்டுக்கு வந்து சொல்லி விட்டு செல்லக் கூடாது என்பதால் இருவரும் யாரிடமும் சொல்லாமல் கிளம்ப “கோதை நில்லு மா”, என்றார் சீனிவாசன். 
“என்னண்ணா, ஏதாவது செய்யணுமா?”
“இல்லை, ஒரு முக்கியமான விஷயம் பேசணும். கொஞ்ச நேரம் இரு. இப்ப வந்துறேன். ஊர் பெரியவங்க எல்லாரும் இங்கயே இருங்க. மத்த சொந்தக் காரங்களையும் கூப்பிடுங்க”, என்று சொல்லி வீட்டுக்குள் சென்றார். 
அறைக்குள் கட்டிலில் மகன் படுத்திருக்க அவன் அருகே வாசுவின் மகன் படுத்திருந்தான். இருவரையும் கண்டதும் சீனிவாசன் கண்களில் கண்ணீர் சுரக்க மகனை நெருங்கினார். 
“வாசு”, என்று அவன் தோள் தொட்டு அழைத்தார் சீனிவாசன். 
“ஆன், என்னப்பா?”, என்று திடுக்கிட்டு கேட்டான் வாசு. 
“உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். நீ என்னை தப்பா எடுத்துக்கிட்டாலும் நான் இதை சொல்லித் தான் பா ஆகணும்”
“என்னப்பா, சொல்லுங்க. என்ன விஷயம்?”
“அடுத்து என்ன செய்ய போறதா இருக்க?”
“புரியலைப்பா”
“இல்லை, நீ வேலைக்கு போகணும்ல?”
“ஆமா, நாளான்னைக்கு நான் கிளம்பணும். அவ்வளவு தான் லீவ் இருக்கு. ஆனா எதுக்கு இருக்கோம்னு இருக்கு. எனக்கு எதுக்கு பா இப்படி எல்லாம் நடக்கணும்? கடவுள் ஏன் பா என்னோட வாழ்க்கைல இப்படி விளையாடணும்”
“விதியை நாம ஒண்ணும் செய்ய முடியாது வாசு. நீ இப்படியே எத்தனை நாள் இருக்க முடியும்? எல்லாத்துல இருந்தும் நீ மீண்டு வரணும். யாருமே யார் கூடவும் ரொம்ப நாள் இருக்க மாட்டாங்கப்பா. நாளைக்கு எனக்கு ஒண்ணு ஆனா கூட நானும் உன் பக்கத்துல இருக்க மாட்டேன்”
“அப்பா, அப்படிச் சொல்லாதீங்க? இன்னொரு இழப்பை என்னால தாங்கிக்க முடியாது”
“பேச்சுக்கு தான் சொன்னேன். நீ எல்லாத்துல இருந்தும் கடந்து வரணும் வாசு”
“அதுக்கு கொஞ்ச நாள் ஆகும் பா”
“ஆனா அது வரை உனக்கு லீவ் இல்லையே? நீ கிளம்பணுமே வாசு. அவங்களுக்கு இந்த சென்டிமெண்ட் எல்லாம் புரியாதே. அப்படி உனக்கு போக பிடிக்கலைன்னா நீ வேலையை வேணும்னா விட்டுரு. ஆனா எனக்கு என்ன தோணுதுன்னா நீ அங்க போனா உன்னோட மனசு கொஞ்சம் மாறும். உனக்கு கொஞ்சம் மாற்றம் வேணும்பா. அதனால நீ போன்னு தான் சொல்வேன்”
“சரிப்பா, நான் போறேன். நானும் அப்படி தான் நினைச்சேன்”
“ரொம்ப சந்தோஷம், அப்புறம் இன்னொரு விஷயமும் உன்கிட்ட பேசணும்”
“சொல்லுங்கப்பா”
“குழந்தையை….”
“ஏன் நீங்க என் மகனை பாத்துக்க மாட்டீங்களாப்பா?”
“என் பேரனை நான் பாத்துக்க மாட்டேன்னு சொல்லுவேனா? ஆனா பாட்டி தாத்தா வளக்குறதுக்கும் அம்மா வளக்குறதுக்கும் வித்தியாசம் இருக்கே?”
“அப்பா”
“உனக்கு அதிர்ச்சியான விஷயம் தான். அதுவும் இன்னைக்கே இந்த விஷயம் பேசுறது தப்பு தான். ஆனா இதை இப்படியே விட முடியாது. நான் உனக்கு ஒரு பொண்டாட்டி வேணும்னு பேசலை வாசு. பொண்டாட்டி இல்லாம நீ நாட்டுக்காக கூட வாழ முடியும். ஆனா என்னோட ஒரே பேரன், என் குடும்ப வாரிசு அம்மா இல்லாத அநாதையா வாழணுமா?”
“அதுக்குன்னு பிரேமா இடத்துல இன்னொருத்தியை வச்சு பாக்க சொல்றீங்களாப்பா? இந்த பேச்சு வேண்டாம்ப்பா”
“அதுல தப்பு என்ன இருக்கு வாசு?”
“இந்த பேச்சு வேண்டவே வேண்டாம் பா. சாக போறதுக்கு முன்னாடி பிரேமாவும் இதையே தான் பேசி கடுப்பேத்துனா. இப்ப நீங்களும்…..”, என்று அவன்  உளறியதும் அவர் கண்கள் மின்னின. 
“என்னது பிரேமாவா? பிரேமா என்ன சொன்னா வாசு?”
“நான் குழந்தைக்காக கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னா. அதுவும் நம்ம சரண்யாவைப் போய்.,. என்னால கண்டிப்பா அது முடியாதுப்பா”, என்று வாசு சொன்னதும் பழம் நழுவி பாலில் விழாமல் நேரடியாக வாயில் விழுந்தது போல உணர்ந்தார் சீனிவாசன். 
“பிரேமா வேற என்ன சொன்னா வாசு?”
“அவ மேல சத்தியமா சரண்யாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னா. அவ மேல இருந்தது உண்மையான அன்பா இருந்தா நான் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனுமாம். வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா எங்க மகன் சித்தி கொடுமை அனுபவிக்க வேண்டியது வரும்னு சொன்னா. அதுக்காக தான் அவ சரண்யாவைச் சொன்னா. ஆனா அதை எல்லாம் பெருசா எடுக்க வேண்டாம் பா. அது சாகுற நேரத்துல அவ பேசினது. எனக்கு சத்தியம் மேல எல்லாம் நம்பிக்கை இல்லை. என்னோட அன்பு உண்மையானதுன்னு அவளுக்கு தெரியாதா? அதை விடுங்க பா. எனக்காக என்னோட மகனை ஒரு வருஷம் மட்டும் பாத்துக்கோங்க. அதுக்கப்புறம் நான் வேலையை விட்டு வந்து அவனை வளத்துக்குறேன். உங்களால முடியலைன்னா அத்தை வீட்லயும் வந்தனா கிட்டயும் கேக்கணும்”
“ஆக, உன்னோட பொண்டாட்டியோட கடைசி ஆசையை நிறைவேத்த மாட்ட அப்படித் தானே? அவ ஆத்மா சாந்தி அடையக் கூடாதுன்னு நினைக்கிறியா வாசு?”
“அப்பா….”
“என்ன அப்பா? சாக போற நேரத்துல என் மருமக அருள் வாக்கு மாதிரி சொல்லிருக்கா. அது மட்டுமில்லாம உன்கிட்ட சத்தியம் வேற கேட்டுருக்கா. அப்படி இருக்க அதை நிறைவேத்துனா தானே நல்ல புருஷன் நீ? நல்ல புருஷன் மட்டும் இல்லை, நல்ல மனுசனும் கூட. என் மருமகளே சரண்யாவை சொல்லிருக்கா. பின்ன என்ன? கடவுள் காட்டின வழி இது தான் போல? நான் திருப்பியும் சொல்றேன். கல்யாணம் உனக்காக இல்லை, குழந்தைக்காக தான் டா”
“அப்பா”
“அப்பா சொல்றதையும் கேளு டா. சரண்யாவுக்கு ஒரு தாலி மட்டும் கட்டிட்டு நீ வேலைக்கு போ. அவ பையனை பாத்துக்குவா. என் தங்கச்சி மகன்னு நான் சொல்லலை டா. சரண்யா ரொம்ப அன்பானவ”
“தெரியும் பா, ஆனா அவ வாழ வேண்டிய பொண்ணு. இப்படி ரெண்டாதாரமா பிள்ளையோட இருக்குற என்னைப் போய்……. அது மட்டும் இல்லாம பிள்ளைக்காக நான் கல்யாணம் பண்ணினாலும் உடனே புது மாப்பிள்ளையா ஆகிட்டேன்னு ஊர்ல எல்லாரும் காரித் துப்புவாங்கப்பா. என்னோட ஒழுக்கம் மேலயே நிறைய விமர்சனம் கிளம்பும். அது மட்டுமில்லாம பிரேமா வீட்ல உள்ளவங்க என்ன சொல்லுவாங்க? இந்த பேச்சை இதோட விடுங்கப்பா”
ஆனால் சீனிவாசன் விட வில்லை. மகன் இந்த அளவுக்கு யோசித்ததே அவருக்கு போதுமானதாக இருந்தது. இதை விட்டால் அவரால் வேறு எப்போதும் சரண்யா மற்றும் வாசுவுக்கு திருமணத்தை நடத்த முடியாது என்று புரிந்து போனது. இந்த சந்தர்ப்பத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.  
அவன் மிலிட்ரிக்கு கிளம்பி சென்று விட்டால் அவனை பிடிப்பதும் கடினம். அவருக்கு கண்டிப்பாக சரண்யா மனது தெளிவாக தெரியும். எந்த நேரத்திலும் வாசுவை தவிர அவள் வேறு யாரையும் விரும்ப மாட்டாள் என்று தெரியும். அதனால் மனதுக்குள் ஒரு முடிவு எடுத்தவர் அவனிடம் எதுவும் பேசாமல் வந்து விட்டார். 
தான் மட்டும் சொன்னால் இந்த பேச்சு எடு படாது என்று அவருக்கு புரிந்தது. அவர் வெளியே வருவதற்காக தான் அனைவரும் காத்திருந்தார்கள். 
“என்ன மச்சான், ஏதோ பேசணும்னு சொன்னீங்க?”, என்று கேட்டார் ஊர்க்காரர் ஒருவர். 
“இரு மாப்பிள்ளை சொல்றேன். எங்க வீட்ல நடந்த துக்கம் எல்லாருக்கும் தெரியும். ஆனா நான் என் மகனுக்காகவும் பேரனுக்காகவும் ஒரு முடிவு எடுக்க போறேன்”, என்று ஆரம்பித்ததும் வைதேகி வயிற்றில் புளியைக் கரைத்தது. 
“ஐயோ இந்த மனுஷன் சபையைக் கூட்டி வச்சு ஏடா கூடமா ஏதாவது பேசிறக் கூடாதே”, என்று எண்ணியவள் “என்னங்க, இது? அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். எல்லாரையும் கிளம்பச் சொல்லுங்க”, என்றாள்.
“என்னோட கோபத்தை கிளப்பாம கொஞ்ச நேரம் அமைதியா இரு வைதேகி. நான் இப்ப பேசியாகனும். அதுவும் நம்ம சொந்த பந்தம், ஊர்க்காரங்க எல்லாரும் இருக்குற நேரத்துல தான் பேசணும். நான் என் கருத்தை தான் சொல்லப் போறேன். ஆனா எல்லாரும் கலந்து பேசி தான் முடிவு எடுக்கணும். எங்க சொந்த பந்தம், பிரேமா சொந்த பந்தம் எல்லாரும் இருக்குற நிறைஞ்ச சபைல கேக்குறேன். எல்லாரும் என் மகனுக்கு ஒரு வழி சொல்லுங்க”, என்றார் சீனிவாசன். 

Advertisement