Advertisement

“சொல்லு மா, என்ன செய்யணும்?”
“எனக்கு ஏதாவது ஆயிட்டா…..”
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது”
“ஒரு வேளை ஏதாவது ஆயிட்டா, என்னோட மகனுக்காக நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கணும் அத்தான்”
“பிரேமா”, என்று அவன் அவளை அதட்ட “என்னை திட்டாதீங்க அத்தான். என்னால எத்தனை நாள் உங்க கூட இருக்க முடியும்னு தெரியலை. அப்படி இருக்கும் போது நீங்க திட்டினா எனக்கு கஷ்டமா இருக்கும்”, என்று பாவமாக சொன்னாள். 
அவளை இறுக அணைத்துக் கொண்டவன் “உன்னை திட்டலை பிரேமா. ஆனா நீ இப்படி பேசாதேயேன். எனக்கு கஷ்டமா இருக்கு டா”, என்றான். அவன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவள் முகத்தில் பட்டு தெறித்தது. 
“இல்லை அத்தான், எனக்கு என்னமோ பயமா இருக்கு. இப்ப பேசலைன்னா வேற எப்பவும் பேச முடியாம போயிரும். என் மகனை நீங்க அனாதையா விட மாட்டீங்க தான். ஆனா அவன் குழந்தை. யார் வளத்தாலும் அம்மா வளக்குற மாதிரி இருக்காது. அவனை நினைச்சு ஒரு தாயா நான் கவலைப் பட்டு தான் ஆகணும். என்னோட கவலை உங்களுக்காகவும் தான். ஏனோ உங்க கூட வாழுற வாழ்க்கை எனக்கானது இல்லை போல? உங்களையும் குழந்தையையும் விட்டுட்டு போறதை நினைச்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எனக்கு ஏதாவது ஆச்சுன்னா நீங்க கண்டிப்பா வேற கல்யாணம் பன்னிக்கணும். இது என் மேல சத்தியம் அத்தான்”
“பிரேமா”
“நான் சொல்லி முடிச்சிறேன் அத்தான். நீங்க ரெண்டாவது கல்யாணம் வேற யாரையும் பண்ணிக்கிட்டாலும் கண்டிப்பா என் மகன் சித்தி கொடுமையை அனுபவிப்பான். அதனால…. அதனால நீங்க சரண்யாவைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்”
“பிரேமா, என்னைக் கோப படுத்தாதே. இப்படி பேசினா நான் வெளியே போறேன்”
“போகாதீங்க அத்தான். இன்னும் எவ்வளவு நேரம் உங்களைப் பாக்க போறேனோ தெரியலை? என் மகனுக்காக நீங்க சரண்யாவைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும். அவளால மட்டும் தான் உங்களையும் குழந்தையும் நல்லா பாத்துக்க முடியும். எனக்கு அவ மேல நிறைய நம்பிக்கை இருக்கு. என் மேல உங்களுக்கு இருந்தது உண்மையான அன்புன்னா நீங்க கண்டிப்பா நான் சொன்னதை செஞ்சு தான் ஆகணும்”, என்று அனைத்தையும் சொல்லி முடித்தது போல் மூச்சுக்கு திணற ஆரம்பித்தாள். 
“பிரேமா, பிரேமா என்ன செய்யுது? டாக்டர், நர்ஸ்”, என்று அவன் டாக்டரை அழைக்க டாக்டர் உடனடியாக வந்து அவளை பரிசோதித்தார். 
அவர்கள் என்ன முயன்றும் முடியாமல் கடைசியில் அவள் உயிர் இந்த உலகை விட்டு சென்றது. 
வாசு அதிர்ச்சியில் அப்படியே உறைந்து விட்டான். அவன் கண்களில் கண்ணீர் வந்த படி இருந்தது. ஆனால் மனமோ ஏதோ அதிர்ச்சியில் இருந்தது போல இருந்தது. 
திருமணம் முடிந்து சிறிது நாட்களில் சொர்க்கம் என்ன என்று காண்பித்து அழகான பொக்கிஷம் ஒன்றையும் அவன் கரத்தில் கொடுத்து விட்டு மேகமாய் கலைந்து போனவளை என்ன செய்ய?
ஹாஸ்பிட்டலில் அனைத்து பார்மாலிட்டிசும் முடிய அவளது உடல் ஊருக்கு அமரர் ஊர்தியில் கொண்டு வரப் பட்டது. உடல் ஊருக்கு
வருவதற்கு முன்பே ஊரில் உள்ளவர்களுக்கு தெரியும் என்பதால் பிரேமாவைக் கொண்டு வரும் போது ஊரில் உள்ள அத்தனை ஜனமும் வாசுதேவன் வீட்டின் முன்பு தான் கூடியிருந்தது.
விஷயம் தெரிந்த சரண்யா இப்போதும் அழுது கொண்டு தான் இருந்தாள். தன்னால் தான் பிரேமா அல்பாயுசில் போய் விட்டாளோ என்று அவளுக்கு குற்ற உணர்ச்சியில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. 
“சரண்யா மாமா வீட்டுக்கு போகணும் டி எழுந்து வா”, என்று அழைத்தாள் பூங்கோதை. 
“நான் வரலை மா. எனக்கு கஷ்டமா இருக்கு. என்னோட கெட்ட எண்ணத்துனால தான் இப்படி எல்லாம் ஆகிருச்சோன்னு இருக்கு மா”
“இப்படி கண்டதை நினைச்சா ஒண்ணும் செய்ய முடியாது. நீ அதுக்கு காரணம் இல்லை மா. அவ விதி அவ்வளவு தான். அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? நீயா பிரேமா செத்து போகணும்னு நினைச்ச? தேவையில்லாத யோசனையை விட்டுட்டு எழுந்து வா. நாம கல்யாணத்துக்கு போகாததுக்கே ஏகப் பட்ட பேச்சு அடி பட்டது. இப்ப துக்கத்துக்கு போகாம இருக்க கூடாது டி. வா, அங்க எல்லாம் போட்டது போட்ட படி இருக்கும். எல்லாரும் கஷ்டத்துல இருக்கும் போது நாம தான் அங்க போய் ஒத்தாசையா இருக்கணும்”
“அம்மா….எனக்கு..”
“சொன்னா கேளு சரண்யா, ரெண்டு நாளுக்கு துணி எடுத்து வைக்கேன்”, என்று அரட்டி சரண்யாவையும் பிரேமா உடல் வருவதற்கு முன்பே அவர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றிருந்தாள் கோதை. 
உடல் இன்னும் வரவில்லை என்றாலும் சொந்த பந்தங்கள் அனைவரும் கதறிக் கொண்டிருக்க சரண்யாவும் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள். சரண்யா அழுவதை அனைவரும் ஒரு மார்கமாக தான் பார்த்தார்கள். 
“ஏத்தா, சரண்யா ஏன் இப்படி அழுவுது?”, என்று ஒரு பெண்மணி கோதையிடம் கேட்க “சின்ன பிள்ளைல, அதான் கலங்கிட்டா போல? நமக்கு மட்டும் அழுகை வராமையா இருக்கு அத்தை? இப்படி வாழ வேண்டிய பிள்ளை, பச்ச குழந்தையை விட்டு போய்ட்டான்னு ஈரக் கொலையே அறுக்க தானே செய்யுது”, என்று சமாதானமாக பேசி சமாளித்தாள் கோதை. 
இருந்தாலும் மகளை யாராவது ஏதாவது சுடு சொல்லை சொல்லி விடுவார்களோ என்று அந்த தாயுள்ளம் பரிதவிக்க தான் செய்தது. இந்த விஷயத்தில் சரண்யா மீது எந்த தவறும் இல்லை என்று தெரிந்தாலும் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்தாள். அதனால் சரண்யாவை வீட்டுக்குள் அனுப்பி விட்டாள். 
முதலில் ஆம்புலன்ஸ் உள்ளே வர அதன் பின்னே வீட்டாள்கள் காரில் வந்தார்கள். 
ஆம்புலன்சின் கதவை திறந்ததும் முதலில் இறங்கியது வாசுதேவன் தான். வெறித்த பார்வையுடன் இருந்தவனை கண்டு ஊரில் உள்ளவர்களுக்கே வேதனையாக இருந்தது. அவன் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய வில்லை. அமைதியாக இருந்தான். அதுவே அவன் நிலையை சொல்லாமல் சொன்னது. 
ஹாஸ்பிட்டலில் வைத்து அழுததோடு சரி அதன் பின் அவன் கண்களில் ஒற்றை கண்ணீர் துளி கூட வரவில்லை. 
சிலர் “என்னயா இவன் மரம் மாதிரி இருக்கான்? பொண்டாட்டி பிள்ளையை பெத்து போட்டு செத்துருக்கா. இவன் கல்லு மாதிரி இருக்கான்”, என்று பேச சிலரோ “அதிர்ச்சியில் பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆகிட்டானோ என்னவோ? வாழ வேண்டிய வயசுல இப்படி விட்டுட்டு போய்ட்டாளே”, என்று பதில் கொடுத்தார்கள். 
வெள்ளைத் துணி போர்த்தப்பட்டு வீட்டு முற்றத்தில் படுக்க வைக்க பட்டிருந்தாள் பிரேமா. அவளை சுற்றி உறவினர்கள் கதறிக் கொண்டிருக்க வாசுவோ அவள் கால் மாட்டில் சிலை என
அமர்ந்திருந்தான்.
“ஏய்யா சீனி, நடந்தது நடந்துருச்சு. நடந்தது பெரிய இழப்பு தான். நான் இல்லைங்களை. உள்ள கதறிட்டு இருக்கும் அந்த பிஞ்சியை நினைச்சு மனசு எங்களுக்கும் தாங்கலை தான். ஆனா விதியை யார் என்ன செய்ய முடியும்? உன் பிள்ளையை பாரு, எப்படி இருக்கான்னு. இப்படி அழாம இருக்குறது அவனுக்கு நல்லது இல்லை சீனி. அவனை எப்படியாவது அழ வை”, என்று ஒரு பெரியவர் சொல்ல சீனிவாசன் மகனின் நிலையைக் கண்டு அவனை நெருங்கினார். 
அவர் எவ்வளவோ அவனிடம் பேச அவனோ அவர் சொல்வது எதுவுமே காதில் விழாத படி வெறித்த பார்வையுடன் இருந்தான். 
அவன் சட்டையை பிடித்து தன் பக்கம் இழுத்தவர் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அந்த சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்த்தார்கள். அவர் அறைந்ததில் நிகழ்காலத்துக்கு வந்தவன் அவரை பாவம் போல் பார்க்க “அவ தான் போய்ட்டாள்ல? நீ இப்படி இருந்து நீயும் அவ பின்னாடி போய் சேரப் போறியா? வீட்ல ஒரு இழப்பு போதும் சாமி. அழுதுருயா. மனசு விட்டு அழுதுரு”, என்று கத்தினார் சீனிவாசன்.  
“அப்பா, என்று கதறிய படியே அவர் தோள் சாய்ந்தான். கண்களில் நீருடன் அவர் அவனைத் தேற்ற “இப்படி போவனு நான் கனவா கண்டேன்? ஏன்பா இப்படி எல்லாம் நடக்கணும்? நான் என்ன பாவம் செஞ்சேன்? எதுக்கு என்னை விட்டு போனா? யாருக்கும் நான் எந்த துரோகமும் செய்யலையே? முன்னாடியே தெரிஞ்சிருந்தா எப்படியாவது காப்பாத்திருப்பேனே? இப்படி அனாதையா விட்டுட்டு பொய்ட்டாளே? இனி என்னையும் என் பிள்ளையையும் யார்
பாத்துப்பா?”, என்று அவன் கதற ஊர் மக்கள் கண்களும் சேர்ந்தே கலங்கியது.
உள்ளே இருந்து அழுது கொண்டிருந்த சரண்யா வெளியே வரவே இல்லை. வாசுவையும் பிரேமா உடலையும் பார்க்கும் தைரியம் அவளுக்கு இல்லவே இல்லை. அவன் அழு குரல் கேட்கும் போதெல்லாம் அவள் நெஞ்சம் நடுங்கியது. 
ஆனால் அவன் என்னையும் என் பிள்ளையையும் யார் பாத்துப்பா என்ற வார்த்தை சொன்ன போது சீனிவாசன் மனதில் அந்த யோசனை உதித்தது. அதை மனதில் ஒரு பக்கம் ஒதுக்கியவர் அப்போது அவனை சமாதானப் படுத்தும் வேலையை செவ்வன செய்தார். 
பிரேமா குடும்பத்தார் ஒரு பக்கம் கதற, வாசு குடும்பம் ஒரு பக்கம் கதறினார்கள். வந்தனா மகள் வர்ஷினி மற்றும் வாசுவின் குழந்தை இருவரையும் சரண்யாவிடம் ஒப்படைத்து விட்டு வெளியே வந்த வந்தனா வைதேகியை கட்டிக் கொண்டு அழுதாள். கூடவே வளர்ந்த ஒரு தோழியை இழந்தது அவளுக்கு அவ்வளவு வலித்தது.  வந்தனா சரண்யா இருவரிடமும் எந்த பற்றுதலும் கிடையாது, பகையும் கிடையாது என்பதால் தான் வந்தனா சரண்யாவிடம் குழந்தைகளை ஒப்படைத்தாள். 
கோதை மற்ற சடங்குகளை செய்து கொண்டிருந்தாள். கோதை இந்த வீட்டுக்கு வந்தால் வைதேகிக்கு சுத்தமாக பிடிக்காது தான். ஆனால் இப்போது அவளை விட்டால் வேறு யார் செய்வார்கள் என்று எண்ணி செய்து கொண்டிருந்தாள். 
சரண்யா குழந்தைகள் அருகே ஐக்கியமாகி விட்டாள். பிரேமாவின் உடலைக் காண அவளுக்கு சத்தியமாக தெம்பிருக்க வில்லை. அவளை நினைத்து வருத்தமும் குற்ற உணர்ச்சியும் வந்தது என்றால் வாசுவை நினைத்து அவள் மனது வலித்தது.  
அவள் ஏதோ யோசனையில் இருக்க வாசுவின் மகன் அழுகையில் சிணுங்கினான். உடனே அவள் கவனம் அவன் மேல் சென்றது. வாசுவையே உரித்து வைத்திருக்கும் குழந்தையை தூக்கி அள்ளி அணைத்துக் கொண்டாள். 
சரண்யா தூக்கியதும் அழுகையை நிறுத்தி விட்டான் வாசுவின் மகன். பிரேமா ஹாஸ்பிட்டல் சென்றதில் இருந்து வந்தனா, வைதேகி, வள்ளி என மாறி மாறி அவனைத் தூக்கியதால் சரண்யாவின் தொடுதலையும் அந்த பிஞ்சி ஏற்றுக் கொண்டது. அவன் அருகில் இருந்த கட்டிலில் வர்ஷினி நல்ல தூக்கத்தில் இருந்தாள். 
வாசுவின் மகனை அள்ளி அணைத்தவள் அவன் முகம் முழுவதும் முத்த மிட்டு நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். அச்சு அசல் குட்டி வாசு போல இருந்த அவனை அவளுக்கு அவ்வளவு பிடித்தது. 
அவள் அவனை நெஞ்சோடு அணைத்திருக்க அவனோ அவள் மார்பில் முட்டி மோதி தன்னுடைய பசியை வெளிப் படுத்தினான். 
அவன் செய்கையில் சிலிர்த்துப் போனவள் டேபிள் மீதிருந்த பால் பாட்டிலை எடுத்து அவனுக்கு புகட்டினாள். இத்தனை நாள் அவன் அந்த பால் தான் குடித்தான் என்பதால் அவனும் அழாமல் குடித்தான். 
அவன் குடித்து முடிக்கும் வரை தன்னுடைய மடியிலே வைத்திருந்தாள். குடித்து முடித்ததும் சிறிது நேரம் அவள் கையைப் பற்றி, மூக்கை பிடித்து என்று விளையாடியவன் தூக்கத்துக்கு சிணுங்க தொட்டிலில் கிடத்தி சிறிது நேரம் ஆட்டினாள். 
சிறிது நேரம் கழித்து அவன் தூங்கியதும் வெளியே வந்தாள். அப்போது பிரேமாவை அடக்கம் செய்ய காரியங்கள் நடந்து கொண்டிருந்தன. அனைவரும் ஹோவென்று அழ சரண்யாவுக்கும் அழுகை வந்தது. 
அடுத்த ஒரு மணி நேரத்தில் பிரேமாவின் உடல் அடக்கம் செய்யப் பட்டது. அனைவரும் தலை முழுகி வீட்டுக்கு வரும் போது சம்பர்தாயப் படி கோதை அந்த வீட்டையை கழுவி விட்டுக் கொண்டிருந்தாள்.
காதல் தொடரும்…

Advertisement