Advertisement

அத்தியாயம் 3
உன்னில் என்னைத்
தொலைத்த தருணங்கள்
அனைத்தும் கலைந்து
போன மேகங்களாகின!!!
“என்ன இவன் இப்படி சொல்றான்? அப்புறம் அத்தை எதுக்கு அவ ஊருக்கு போயிருக்கான்னு சொன்னாங்க?”, என்று எண்ணிய வாசு “அவளுக்கு காச்சல் வந்ததுன்னு சொன்னாங்க டா. அதான் அப்படி இருக்கா போல? நிஜமாவே இன்னைக்கு காலைல அவளை நீ  பாத்தியா டா?”, என்று அவனிடம் போட்டு வாங்கினான். 
“நான் என்ன பொய்யா சொல்றேன்? அவ வேற எங்க போயிறப் போறா? அவளுக்கு சொந்தமே உங்க வீடும். அவ அத்தை வீடும் தான். அவ அப்பாவோட அக்கா வீட்டுக்கும் சரி, உங்க வீட்டுக்கும் சரி அவ என்னைக்கு போயிருக்கா? கோதை அத்தை அவளை தனியா விடவும் செய்யாது. இந்த ஒரு வாரமா தான் வயலுக்கே வாரா. அதுக்கு முன்னாடி வீட்டை விட்டு வெளியே கூட வரலை. இன்னைக்கு காலைல என்ன புள்ள ஒரு மாதிரி இருக்கன்னு கேட்டேன். பதிலே சொல்லாம போயிட்டா. சரண்யா இப்படி இருக்கா மாட்டாளேன்னு எனக்கே தோணுச்சு டா. அத்தை கிட்ட கேட்டதுக்கும் காச்சல்னு தான் சொல்றாங்க”
“ஓ?”
“ஆமா டா, ஒரு வேளை நீ சொன்ன மாதிரி காச்சல் வந்ததுனால இருக்கும். சரி மச்சான் நேரம் ஆய்ட்டு. நீ வீட்டுக்கு போ. உன் வீட்ல தேடப் போறாங்க. நாளைக்கு ஊருக்கு பாத்து பத்திரமா போயிட்டு வா. அங்க போயிட்டு நேரம் கிடைக்கும் போது போன் போடு. நான் பண்ணினாலும் போனை எடு சரியா?”, என்று சொல்லி அவனை கட்டித் தழுவி விட்டு சென்றான் கதிரேசன். 
கதிரேசன் சொன்னதைக் கேட்டு குழப்பமாக இருந்தது வாசுவுக்கு. “இந்த அத்தை எதுக்கு அப்படி சொன்னாங்க? வீட்டுக்குள்ள அவளை வச்சிக்கிட்டு எதுக்கு ஊருக்கு போய்ட்டானு சொல்லணும்? அவளும் வெளிய வரவே இல்லையே? என்னோட சத்தம் கேட்டு அப்படி எல்லாம் அவ உள்ள இருக்க மாட்டாளே? என்ன ஆச்சு சரண்யாவுக்கு? என் மேல கோபமா இருப்பாளோ? ஆமா அப்படித் தான் இருக்கும். இந்த சரண்யாவுக்கு நான் போய் அவளை கல்யாணத்துக்கு கூப்பிடாதது கோபமா இருக்கும். அதனால தான் கோப பட்டு உள்ள உக்காந்திருப்பா. பெருசா ஒண்ணும் இருக்காது. நான் செஞ்சதும் தப்பு தான். என்ன தான் அப்பா போய்க் கூப்பிட்டாலும் நானும் அத்தையையும் அவளையும் ஒரு தடவை போய் கூப்பிட்டிருக்கணும். தப்பு என் மேல தான். இப்ப போய் மன்னிப்பு கேட்டு அவளை சமாதான படுத்திரலாம்”, என்று எண்ணி அவன் சரண்யா வீட்டை நோக்கி திரும்பி நடக்க ஆரம்பிக்கும் போது அவன் போன் அழகாக இசைத்தது. 
யாரென்று எடுத்துப் பார்த்தான். அவனுடைய ஆருயிர் மனைவி பிரேமா தான் அவனை அழைத்தாள். 
அதை எடுத்தவன் “சொல்லு பிரேமா”, என்றான். 
“அத்தான் எங்க இருக்கீங்க? எதுக்கு இன்னும் வீட்டுக்கு வரலை? நாளைக்கு ஊருக்கு வேற கிளம்பிருவீங்க? இன்னைக்கு ஒரு நாள் தான் எனக்கு இருக்கு. நாளைக்கு நீங்க ஊருக்கு கிளம்பிட்டா இனி உங்களை எப்ப பாப்பேனோ? எனக்கு உங்க கூட இருக்கணும் போல இருக்கு? நீங்க என்னன்னா இன்னும் வீட்டுக்கே வரலை. போங்க உங்களுக்கு என் மேல பாசமே இல்லை”, என்று சிணுங்க “இதோ வந்துட்டேன், அஞ்சு நிமிசத்துல உன் முன்னாடி இருப்பேன். எனக்கு மட்டும் பாசம் இல்லையா பிரேமா? சரி சரி போனை வை, நான் வந்துறேன்”, என்று சொல்லி போனை வைத்தவனுக்கு பிரேமாவே முக்கியமாகிப் போனாள். சரண்யா என்ன வேறு யாருமே அவன் நினைவிலே இல்லை. 
மனைவி சும்மா அழைத்தாலே ஓடி விடுவான். இதில் அவ்வளவு கொஞ்சலாக அழைத்தும் செல்லாமல் இருப்பானா? அவனுக்கும் நாளை அவளை விட்டுச் செல்ல வேண்டும் என்பது வருத்தம் தானே? அதனால் வீட்டை நோக்கி நடையைப் போட்டான். 
அவனை அறையில் கண்டதும் அவ்வளவு ஆவலாக அனைத்துக் கொண்டாள் பிரேமா. அவனுக்கான அவளின் தேடலில் கர்வம் கொண்டவனுக்கும் காதல் ஊற்று பெருக ஆரம்பிக்க அவளுடன் ஆவலாக கூடினான். அவர்கள் உலகில் இருவர் மட்டுமே இருந்தார்கள். 
அடுத்த நாளும் எப்போதும் போல் அழகாக விடிய வாசு மற்றும் பிரேமாவுக்கும் மட்டும் பிரிவின் வலியை நினைத்துக் கொண்டே விடிந்தது. அன்று மாலை வரை அவனை ஒட்டிக் கொண்டே திரிந்தாள் பிரேமா. 
அவன் கிளம்பும் நேரம் வர அனைவரிடமும் விடை பெற்றுக் கிளம்பியவன் மனைவியை தேற்ற முடியாமல் தடுமாறி தான் போனான். 
அவனுக்கே அப்படி என்றால் அவள் நிலையைச் சொல்ல வேண்டுமா? என்ன தான் புகுந்த வீடு, சொந்த அத்தை வீடாக இருந்தாலும் கணவனின் துணை இருப்பது போல் ஆகுமா? 
அவன் கிளம்பி வெளியே வந்த பின்னரும் தேம்பி தேம்பி அழுதவளை எப்படி தேற்ற என்று தெரியாமல் விழித்தவன் அவளை மீண்டும் ரூமுக்கு அழைத்து சென்றான். பிரேமா வீட்டில் இருந்தும் அனைவரும் அவனை வழி அனுப்ப வந்திருந்தார்கள். அவர்கள் இருவரின் நிலை உணர்ந்த மற்றவர்கள் அவர்களுக்கு தனிமை கொடுத்தார்கள். 
அறைக்குள் சென்றவனை “அத்தான்”, என்ற கதறலோடு அவள் இறுக்கமாக அணைத்துக் கொள்ள அவனுக்கு அவளை விட்டு பிரிய முடியாத நிலை. அவள் முகம் எங்கும் அவன் எச்சில் முத்தம் சிதற அவளுக்கு அது எவ்வளவு கொடுத்தாலும் பத்த தான் இல்லை. 
நேரம் ஆவதை உணர்ந்து வெளியே இருந்து பெரியவர்கள் குரல் கொடுத்த பிறகு தான் அவனை விட்டாள் பிரேமா. அதுவும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் போன் பேசவேண்டும் என்ற கட்டளையோடு. 
இது எல்லாமே கொடுமை தான். நினைத்த நேரத்தில் நினைத்த சொந்தத்தை பார்க்க முடியாத சபிக்கப் பட்ட பிறவிகள் தான் பட்டாளத்தில் வேலை பார்ப்பவர்கள். 
நாட்டுக்காக அவர்கள் உயிரையே கொடுத்தாலும் அவர்கள் மனதில் இருக்கும் ரணத்தை யார் தான் உணர முடியும்? நாட்டுக்காக அவர்களின் உணர்வுகளை உள்ளுக்குள் புதைக்கும் அத்தனை பேருமே கடவுள் அனுப்பி வைத்த தேவதைகள். 
ஒரு வழியாக அனைவரிடமும் சொல்லி விட்டு கனத்த மனதுடன் கிளம்பி விட்டான் வாசுதேவன். அடுத்த மூன்று நாளில் அவனுடைய படைப் பிரிவுக்கு வந்தும் விட்டான். 
மைக்கேல் மற்றும் மற்ற நண்பர்கள் திருமணம் பற்றி ஆவலுடன் அவனிடம் விசாரித்தார்கள். அதன் பின் நேரம் கிடைக்கும் போது வீட்டுக்கு பேசி பிரேமாவிடமும் பேசினான். அவர்களின் வாழ்க்கை கை பேசியில் மட்டுமே தொடர்ந்தது. 
அடுத்த சில நாட்களில் அவனுடைய வேலைகள் ஆரம்பமானதால் பிரேமாவுடனான கைபேசி பேச்சு கொஞ்சம் குறையவும் செய்தது. இப்படியே நாட்கள் எப்போதும் போல் நிற்காமல் நகர ஒரு மாதம் கடந்த நிலையில் பிரேமா கருவுற்றிருக்கும் செய்தியை போன் வழியாக கேள்விப் பட்டான் வாசுதேவன். 
மகிழ்ச்சியில் அவன் கண்கள் கண்ணீரை சொரிய மனைவியிடம் மொத்த சந்தோசத்தையும் வார்த்தை மூலம் வெளிப் படுத்தினான். தான் தந்தை ஆகப் போகும் செய்தி அத்தனை ஆண்களுக்கும் நிகரில்லாத சந்தோஷம் அல்லவா? 
பிரேமாவுக்கு இருந்த சந்தோஷத்தை விட அவனைத் தான் அதிகம் தேடியது. அவன் தோளில் சாயும் ஏக்கத்தை வெளிப்படுத்த அதை நிறை வேற்ற முடியாமல் தவித்து தான் போனான். 
பிரேமாவை வைதேகி, பிரேமாவின் அம்மா வள்ளி அனைவரும் நன்கு கவனித்துக் கொண்டார்கள். கணவன் அருகில் இல்லையே என்ற குறையை தவிர பிரேமாவுக்கு குறை வேறு எதுவும் இல்லை.
வைதேகி அவளை தரையில் விடாமல் தாங்கினாள். வள்ளி வேறு அவளுக்கு பிடித்ததை செய்து வந்து கொடுக்க பிரேமா முன்பை விட பொலிவாக மாறினாள். 
அனைவரின் கவனிப்பாலும் உடல் தேறியிருந்தாள் பிரேமா. அவளுடைய ஒல்லியான தேகம் கூட கணவனின் எதிர்பார்ப்பு படி குண்டாக மாறியிருந்தது. 
எப்போதாவது வீடியோ காலில் பேசும் போது மனைவியை அங்கிருந்தே ரசிப்பான் வாசு. வீடியோ காலை கண்டு பிடித்தவர்கள் அவர்களுக்கு அந்த நொடி தெய்வமாக தெரிந்தார்கள். 
அவளைப் பார்த்து, அவளுடைய ஏக்கம் கேட்டு கணவனும் ஏங்கித் தான் போனான். பிரேமாவுக்கு ஏழு மாதம் இருக்கையிலே “பிரசவம் சுகப் பிரசவமாக நடக்காது, ஆபரேசன் தான் செய்ய வேண்டும்”, என்று டாக்டர் சொல்லி விட்டார். 
இந்த காலகட்டத்தில் ஆபரேசன் சாதாரணமானது தான் என்றாலும் பிரேமா பயத்துடன் வாசுவிடம் புலம்பினாள். அவனுக்கும் அந்த நேரத்தில் அவளுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது. உடனே பிரசவத்துக்கு ஊருக்கு செல்ல அப்போதே  லீவுக்கு விண்ணப்பித்து விட்டான்.
ஏழாம் மாதம் முடியும் போது அவளுக்கு வளைக்காப்பு செய்து அழைத்து சென்று விட்டார்கள் பிரேமா வீட்டினர். 
நாள் நெருங்க நெருங்க பிரேமாவுக்கு மட்டும் பயம் அதிகமாக தொற்றிக் கொண்டது. வாசுவுக்கும் லீவ் கிடைத்து அவன் ஊருக்கும் கிளம்பி விட்டான். அவன் ஊருக்கு வரும் முந்தைய நாள் இரவு அவளுக்கு பிரசவம் நடந்து விட்டது. அழகான ஆண் குழந்தையை பிரசவித்தாள் பிரேமா. 
விஷயம் அறிந்து பிள்ளையைக் காண ஓடோடி வந்தான் வாசு. 
தன்னையே உரித்து வைத்து பிறந்த மகனை ஆசையோடு கொஞ்சியவன் பொண்டாட்டியையும் ஆசையாக கண்ணில் நிறைத்துக் கொண்டான். 
ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு வந்து விட்டார்கள். இரண்டு வாரம் தான் அவனுக்கு லீவ் கிடைத்திருந்தது என்பதால் அதிக நேரம் மகன் மனைவியுடனே செலவிட்டான் வாசு. 
வாசு வந்ததால் பிரேமா பிறந்த வீட்டுக்கு செல்ல வில்லை. அதனால் அனைவரும் வாசு வீட்டிலே தான் இருந்தார்கள். வள்ளியும் வைதேகியும் அவளுக்கு தேவையானதை எல்லாம் பார்த்து பார்த்து செய்தார்கள். 
இரண்டு நாட்கள் இப்படியே கடக்க மூன்றாம் நாள் இரவு திடீரென்று நெஞ்சில் ஒரு வலி பரவ “அத்தான் நெஞ்சு வலிக்குது… ஐயோ அம்மா வலிக்குது”, என்று அழுதாள் பிரேமா. சிறிது நேரத்தில் தாங்க முடியாத வலியில் துடிக்க ஆரம்பித்தாள். 
அதைக் கண்டு பதறிய வாசு “அம்மா, அப்பா, அத்தை எல்லாரும் இங்க வாங்க”, என்று அனைவரையும் அவசரமாக அழைத்தான். 
அனைவரும் அங்கே ஓடி வர பிரேமா நிலையைக் கண்டு திகைத்து போனார்கள். “என்ன மா செய்யுது?”, என்று அனைவரும் பதற அவளோ “தண்ணி தண்ணி”, என்று அழுதாள். 
பின் தண்ணீர் கொடுத்ததும் சிறிது இயல்பாகி விட்டாள். “ஏதாவது வாயுக் கோளாறா இருக்கும். கொஞ்ச நேரத்துல சரியாகிருச்சு”, என்று அனைவரும் நிம்மதியானார்கள். 
ஆனால் அடுத்த ஐந்து நிமிடத்தில் அவள் மீண்டும் வலியில் துடிக்க தாமதிக்காமல் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்கள். வந்தனா தான் வீட்டில் இருந்து குழந்தையை பார்த்துக் கொண்டாள்.
யாருமே இப்படி ஒரு சூழ்நிலையை எதிர் பார்க்க வில்லை. அவளுக்கு எப்படி இது நேர்ந்தது என்று கூட யாருக்கும் தெரிய வில்லை. 
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டாள் பிரேமா. அவளை பரிசோதித்த மருத்துவர்கள் சிறு வயதில் இருந்தே அவளுடைய இதயம் பலவீனமாக இருந்திருக்கிறது. சிறு வயதில் இருந்து இருந்த இந்த பிரச்சனை குழந்தை பிறந்ததும் தீவிரமடைந்திருக்கிறது 
என்று தெரிவித்தார்கள். 
அது மட்டுமில்லாமல் எப்போது வேண்டும் என்றாலும் அவளுடைய உயிர் பிரியலாம். எங்கே சென்றாலும் அவளை காப்பாற்ற முடியாது. அவர்கள் கடைசி தருணத்தில் இருக்கிறார்கள் என்றும் சொன்னார்கள். இன்னும் சில நாட்களில் அவள் உயிர் போய் விடும் என்ற உண்மையை அங்கிருந்த யாராலும் தாங்க முடியவில்லை. 
அவளுக்கோ வலி உயிர் போனது. அந்த வலியை தாங்க முடியாமல் செத்தால் கூட நன்றாக இருக்கும் என்று இருந்தது. 
கடைசியில் இந்த உண்மை நர்ஸ் வாயிலாக பிரேமாவுக்கே தெரிய வர அவளோ விக்கித்து போனாள். பால் மனம் மாறாத பிள்ளை, எந்த சந்தோசத்தையும் அனுபவிக்காத கணவன் இருவரையும் தனியே விட்டுச் செல்வதை நினைத்து அவள் இதயம் இன்னும் பலவீனமாக மாற ஆரம்பித்தது. 
அவளுக்கே தான் இன்னும் அதிக நாள் உயிருடன் இருக்க மாட்டோம் என்று உண்மை தெரிந்ததும் கொஞ்சம் தெளிவும் வந்தது. அணையப் போகும் விளக்கின் பிரகாசமோ என்னவோ? நிதானமாக அடுத்து என்ன செய்ய என்று தீவிர யோசனையில் ஆழ்ந்தாள். அப்போது திடீரென்று அவளுக்கு சரண்யா தான் நினைவில் வந்தாள்.
ஏனோ வழி கிடைத்தது போல அவள் கண்களில் ஒளி வந்தது. வைதேகி, நிரஞ்சன் மற்றும் பிரேமாவின் பெற்றோர் அழுது கரைய சீனிவாசன் தான் அனைத்தையும் பொறுப்பாய் பார்த்துக் கொண்டார். 
அவருக்கு பிரேமாவை பிடிக்காது என்பது இல்லை. அதனால் அவருக்குமே இந்த சூழ்நிலை பதட்டத்தை தான் கொடுத்தது. அதுவும் வந்தனா வீட்டில் இருந்து அழைத்து “அப்பா பிரேமாவுக்கு என்ன ஆச்சு? இங்க குழந்தை அவனோட அம்மாவை தேடுறான்”, என்று சொல்ல அந்த குழந்தைக்காகவாது அவள் மீண்டு வரக் கூடாதா என்று இருந்தது. 
வாசுவுக்கோ பிரேமாவை எப்படி எதிர் கொள்ள என்று தெரியாமல் வெளியேவே தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான். அவளைக் காண உள்ளே செல்லவும் இல்லை. நெஞ்சம் முழுவதும் பதட்டம் மட்டுமே சூழ்திருந்தது. ஏதோ விடியலில் ஆரம்பித்த வாழ்க்கை இருளில் முடிந்ததைப் போல இருந்தது அவனுக்கு.  
“தம்பி, கடைசி நேரத்துல அவ உன் கூட இருக்க ஆசைப் படலாம் பா. அவ கூட கொஞ்ச நேரம் பேசிட்டு இரு. அவளை பாத்து இடிஞ்சு போகாம கொஞ்சம் தைரியமா அவ கிட்ட பேசு. நான் டாக்டர் கிட்ட வீட்டுக்கு கூட்டிட்டு போய்றலாமான்னு கேட்டுட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றார் சீனிவாசன். 
கண்களை துடைத்துக் கொண்டு முகத்தில் புன்னகையை ஒட்ட வைத்து அவள் இருந்த அறைக்குள் சென்றான் வாசு. உள்ளே வந்த வாசுவை வலி நிறைந்த கண்களுடன் ஏறிட்டாள் பிரேமா. 
“அத்தான்”, என்று அவள் கேவலாக அழைக்க “என்ன ஆச்சு பிரேமா? ஏதாவது வேணுமா? எங்கயாவது வலிக்குதா மா?”, என்று பதறிப் போய்க் கேட்டான். 
“இல்லை, கஷ்டமா இருக்கு”
“ஒண்ணும் இல்லை டா. எல்லாம் சரியா போகும். அப்பா டாக்டர் கிட்ட கேக்க போயிருக்காங்க. கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு போயிறலாம்”
“என் கிட்ட நீங்க நடிக்க வேண்டாம் அத்தான். எனக்கு எல்லா விஷயமும் தெரியும்”
“பிரேமா….”
“ஆமா அத்தான், நர்ஸ் எல்லாம் சொல்லிட்டாங்க. எனக்காக நீங்க ஒரு விஷயம் செய்யனும்”

Advertisement