Advertisement

அடுத்த நாள் காலையில் இருந்து பிரேமாவிடம் இருந்த கூச்சம் விடை பெற்றுச் சென்றிருந்தது. விடை பெற்றுச் செல்ல வைத்த பெருமை வாசுவைச் சேரும். அது அவனுக்கும் திருப்தியாக இருந்தது. இருவரும் நன்கு பேச ஆரம்பித்தார்கள். 
திருமணத்திற்கு வராதவர்கள் இன்று வீடு தேடி வந்து மணமக்களைப் பார்த்து விட்டு மொய் கொடுத்து கொண்டிருந்தார்கள். அப்போது தான் வாசுவுக்கு கோதை அத்தையும் சரண்யாவும் நினைவுக்கு வந்தார்கள். 
“அம்மா அத்தை எதுக்கு வரலை?”, என்று நேரடியாக வைதேகியிடம் கேட்டான் வாசு. என்ன சொல்ல என்று தெரியாமல் முதலில் திணறினாலும் “தெரியலையேப்பா, உங்க அப்பா கிட்ட தான் கேக்கணும்”, என்று நழுவி விட்டாள் வைதேகி. 
சீனிவாசனிடம் சென்று “அப்பா அத்தையும் சரண்யாவும் எதுக்கு கல்யாணத்துக்கு வரலை? நீங்க கூப்பிட்டீங்க தானே?”, என்று கேட்டான். 
அவரும் வேறு வழியில்லாமல் அவளுக்கு காய்ச்சல் என்று சொல்ல அவளைக் காண சென்றே ஆவேன் என்று அடம் பிடித்தான் வாசு. 
அதில் பிரேமாவுக்கு சிறிது எரிச்சல் வந்தது என்றால் வைதேகிக்கோ கடுப்பாக வந்தது. 
“வாசு, இப்ப எங்கயும் போக கூடாது. பேசாம இரு”, என்றாள் வைதேகி. 
“என்ன மா இப்படி சொல்றீங்க? சரண்யா எப்போதுமே சோம்பி உக்கார மாட்டா. எப்பவும் துறு துறுன்னு தான் இருப்பா. கல்யாணத்துக்கு வராத அளவுக்கு அவளுக்கு உடம்பு சரியில்லை போல? இல்லைன்னா என் கல்யாணத்துக்கு வந்து எல்லா வேலையும் செஞ்சிருப்பா. நான் போய் ஒரெட்டு பாத்துட்டு வந்துறேன். வேணும்னா பிரேமாவையும் கூட்டிட்டு போறேன். அத்தைக் கிட்டயும் ஆசீர்வாதம் வாங்கிட்டு வரேன்”, என்றான் வாசு. 
“ஆமா, ஆமா சீமையில் இல்லாத உன் அத்தைக் காரி ரொம்ப பெருசா சீர் செஞ்சிரப் போறா? அவ ஆசீர்வாதம் பண்ணுனா என்ன பண்ணலைன்னா என்ன? அந்த சரண்யாவுக்கு என்ன ஆனா உனக்கு என்ன?”, என்று வைதேகி கத்த “வாயை மூடு. என் தங்கச்சி பத்தி பேச உனக்கு தகுதி இல்லை”, என்று அவள் வாயை அடக்கினார் சீனிவாசன். 
பின் வாசு புறம் திரும்பி “இப்ப நீ எங்கயும் போக வேண்டாம் வாசு. உன் அம்மா சொன்ன மாதிரி சீமையில் இல்லாத உன் அத்தை கிட்ட நீ ஆசீர்வாதம் வாங்கவும் வேண்டாம். இப்ப ரெண்டாம் மறுவீட்டுக்கு அழைக்க சீமையில் இருக்குற உன்னோட அத்தை, அதான் பிரேமா வீட்டில் இருந்து ஆட்கள் வருவாங்க. அதனால பேசாம வீட்ல இரு”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். 
மனம் வருத்தப் பட்டு போகும் தந்தையை பார்த்த வாசு “உனக்கு எப்ப என்ன பேசனும்னே தெரிய மாட்டிக்கு மா. சே”, என்று சொல்லி விட்டு அறைக்கு சென்று விட்டான். 
பிரேமாவை தனியே அழைத்த வைதேகியோ “இங்க பாரு பிரேமா, இந்த அத்தை சொல்றதை நல்லா கேட்டுக்கோ. நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ இனி உன் புருஷனை நீ தான் முந்தில முடிஞ்சு வச்சிக்கணும். கல்யாணம் நடந்துருச்சு. இனி ஒரு பிரச்சனையும் இல்லை தான். இருந்தாலும் இவனை அந்த சரண்யாவை பாக்க விட்டுராத. அவளுக்கு இவனை கட்டிக்கணும்னு கொள்ளை ஆசை. அவ கண்ணுல நீங்க பட்டீங்கன்னா அவ கரிச்சு கொட்டியே உங்களை வாழ விடாம பண்ணிருவா. வாசுவும் லீவ் முடிஞ்சு போனதுக்கு அப்புறம் எப்ப வருவானோ? அதனால எப்பவும் அவனை உன் கண் பார்வைலே இருக்க வை”, என்று அறிவுரை சொன்னாள். 
அதே போல மறு வீட்டுக்கு தங்களின் வீட்டுக்கு சென்ற பொது பிரேமாவின் தாயும் அதையே அவளுக்கு சொன்னாள். வாசுவை சரண்யாவைப் பார்க்க அனுமதிக்க கூடாது என்று பிரேமா மனதில் பதிய வைத்தார்கள் அவளின் தாயும் அத்தையும். 
அதனால் அன்றைய இரவில் ஆவலாக நெருங்கியவனிடம் கூடுதல் நெருக்கத்தை காண்பித்தாள் பிரேமா. அவன் அவனுடைய தேவைகளை சொல்ல, அவள் விருப்பத்துடன் நிறைவேற்ற மொத்தமாக பிரேமாவிடம் தொலைந்தான் வாசு. அவள் காட்டிய நெருக்கத்தில் சரண்யாவை என்ன அவனையே மறந்தான். 
பிரேமா கூச்ச சுபாவம் கொண்டவள் தான். அதற்காக கணவன் என்று வந்த பின்னர் சரண்யாவிடம் அவனை பேச விடுவாளா என்ன? சரண்யா மனதில் இருப்பது தெரிந்ததும் அவனை தன்னை சுற்றியே இருக்க வைத்தாள். கூடவே அவளுக்கும் அவனுடைய நெருக்கம் சிறிது நாட்கள் தானே கிடைக்கும். அதைச் சொல்லி சொல்லியே அவளையே அவனை நினைக்க வைத்தாள். 
அதன் பின்னர் இருவரும் ஹனிமூன் கிளம்பி போனார்கள். அங்கே சென்ற பின் வாசு சரண்யா என்ற ஒருத்தி இருக்கிறாளா என்று கூட தெரியாமல் இருந்தான். பிரேமா வாசு இருவருக்கும் நாட்கள் அழகாக சென்றது. 
புதிய புதிய இடங்களுக்கு செல்வதும், இரவில் கூடிக் கழிப்பதும் என்று அவ்வளவு ஆனந்தமாக சென்றது. இடையில் பரிசு பொருள்களை வாங்கிக் கொண்டு மைக்கேல் வீட்டுக்கும் சென்றார்கள். 
அதன் பின் மீண்டும் வீட்டுக்கு வந்த போது இன்னும் அவன் கிளம்ப பத்து நாட்களே மீதம் இருந்தது. 
தன்னுடைய கூச்சம் தயக்கம் அனைத்தையும் உதறி அத்தான் அத்தான் என்று வாசுவையே சுற்றிக் கொண்டிருந்த பிரேமாவை  அவ்வளவு ரசித்தான் வாசு. 
அவன் குளிப்பதற்கு எல்லாம் எடுத்து வைக்க, அவனுக்கு தலை துவட்டி விட, அவனுக்கு உணவு ஊட்ட என்று அனைத்துக்கும் பிரேமா அவனுக்கு தேவைப்பட்டாள். திகட்ட திகட்ட இருவரும் காதல் உலகில் பறந்தார்கள். 
நாளைக்கு அவன் ஊருக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் பிரண்டை பாக்க போறேன் என்று சொல்லி விட்டு வெளியே சென்றான் வாசு. நண்பர்களிடம் நாளை கிளம்புவதாக சொல்லி விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் சரண்யா நினைவு வர கோதை வீட்டுக்கு சென்றான்.
அவனை அந்நேரம் எதிர் பார்க்காத கோதை “வா ராசா, எப்படி இருக்க?”, என்று விசாரிக்க “எதுக்கு அத்தை கல்யாணத்துக்கு வரலை? சரண்யா எங்க?”, என்று விசாரித்தான் வாசு. 
“அது… அது.. அவளுக்கு பயங்கர காய்ச்சல்ப்பா. அதான் வரலை. இல்லைன்னா வராம இருப்பாளா? அவளை அந்த நிலைல விட்டுட்டு என்னாலயும் வர முடியலை. பிரேமா உன்னை நல்லா வச்சிக்குறாளா கண்ணு?”
“ரொம்ப சந்தோஷமா இருக்கோம் அத்தை. சரி சரண்யாவைக் கூப்பிடுங்க. நாளைக்கு நான் ஊருக்கு கிளம்புறேன். அவளை பாத்துட்டு போறேன்”
“அது.. அவ வீட்ல இல்லையேப்பா. அவ அவளோட அத்தை வீட்டுக்கு போய் ஒரு வாரம் ஆச்சு. உடம்பு சரியில்லாதவ ஆசைப் பட்டான்னு அனுப்பி வச்சேன். என் நாத்தனாவுக்கு என்னை பிடிக்காட்டியும் சரண்யாவை ரொம்ப பிடிக்கும். அதான் அங்க போயிருக்கா”
“அப்படியா? எல்லாரையும் பாத்துட்டேன். அவளைத் தான் பாக்க முடியலை. சரித்தை. நான் கேட்டதா சொல்லுங்க. அடுத்த வாட்டி வரும் போது பாக்குறேன். வரட்டுமா?”
“நல்ல படியா போய்ட்டு வாயா, அங்க போயும் பத்திரமா இருக்கணும் என்ன? அப்புறம் செத்த நில்லு. நான் உனக்கு விபூதி பூசி விடுறேன்”, என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தாள். 
உள்ளறையில் இருந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சரண்யா மௌனமாக கண்ணீர் வடித்தாள். அவளுக்கு அவனை அருகில் பார்க்க அவனிடம் பேச அவ்வளவு ஆசை இருக்கிறது தான். ஆனால் அதை செயல் படுத்த தான் அவளுக்கு சக்தி இல்லை. அவனை கண்டிப்பாக அவளால் எதிர்க்கொள்ள முடியாது. அவன் ஒரு வார்த்தை பேசினாலும் கண்டிப்பாக அழுதே காட்டிக் கொடுத்து விடுவாள். 
அதனால் தாய் சொன்ன பொய்யை ஏற்றுக் கொண்டு அமைதியாக உள்ளேயே இருந்தாள். அவனிடம் சிறிது நேரம் கோதையிடம் பேசி விட்டு “சரித்த நான் வரேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான். 
அப்போது தான் அம்மாவும் மகளும் நிம்மதியாக மூச்சு விட்டார்கள். மகள் மீண்டும் அவனை நினைத்து கண்ணீரில் கரைய அவளை தேற்றும் வேலையை செவ்வன செய்தாள் கோதை. 
வேட்டை நோக்கி நடந்து கொண்டிருந்த வாசு “என்ன மச்சான் கண்டுக்காம போற? எதிர்ல நான் வராது கூட தெரியாம புது பொண்டாட்டி நினைப்பா?”, என்ற குரல் கேட்டு நின்ற வாசு திரும்பி பார்த்தான். 
அங்கே கதிரேசன் நின்றிருந்தான். அவனைப் பார்த்து புன்னகைத்த வாசு “கதிரு, எப்படி டா இருக்க? இப்ப தான் நம்ம பிரண்ட்ஸ் கிட்ட உன்னை எங்கன்னு கேட்டேன் டா. ஏதோ வேலை இருக்குனு போனான்னு சொன்னாங்க. அப்புறம் வேற ஏதோ சிந்தனைல நடந்து வந்தேன். உன்னை நிஜமாவே கவனிக்கலை மாப்பிள்ளை”, என்றான். 
“அது சரி கவனிச்சா தான் அதிசயம். உர மூடை வாங்க வேண்டியது இருந்துச்சு. அதான் போனேன்? அப்புறம் மச்சான், வாழ்க்கை எப்படி போகுது. அன்னைக்கு கல்யாணத்துல பாத்தது, அப்புறம் பாக்க நேரம் இல்லை. புது மாப்பிள்ளையை தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு இருந்துட்டோம்”
“நல்லா போகுது மாப்பிள்ளை. நாளைக்கு ஊருக்கு கிளம்பனும் டா”
“அதான் இந்த சோகமா? புது பொண்டாட்டியை விட்டுட்டு போக யாருக்கு தான் மனசு வரும்? பிரேமா தங்கச்சியையும் அங்க கூட்டிட்டு போக முடியாதா டா?”
“இல்லை டா, கிரேட் செஞ்சஸ் நடந்தா தான் வேற இடம் மாத்துவாங்க. அப்ப தான் அப்படி எல்லாம் சலுகை கிடைக்கும். நான் அங்க சேந்து கொஞ்ச நாள் தானே ஆகுது? அதனால இப்ப முடியாது”
“அப்ப இப்படியே பிரிஞ்சு தான் இருக்கணுமா?”
“கொஞ்ச வருஷம் பாத்துட்டு வெளிய வந்துர வேண்டியது தான். அப்புறம் இங்க வந்து ஏதாவது எக்ஸாம் எழுதி மிலிட்டரி கோட்டால வேலை வாங்கிரணும்னு பிளான்ல இருக்கேன் டா. பாப்போம் என்ன நடக்கும்னு. சரி என்னை விடு. நீ எப்படி இருக்க அத்தை நல்லா இருக்காவளா?”
“அம்மா நல்லா இருக்கு டா. சரண்யாவைப் பாத்தியா?”
“இல்லை டா. பாக்க முடியலை”
“எப்பவும் என் கிட்ட நல்லா வம்பிழுத்து சண்டைக்கு முதல் ஆளா வருவா. ஆனா கொஞ்ச நாளா ஆளே மாறின மாதிரி இருக்கு. என்னவோ போல இருக்கா. அவ கிட்ட அந்த பழைய துறுதுறுப்பு இல்லை. எதையோ பரி கொடுத்த மாதிரி இருக்கா. வீட்ல இருந்து வெளியவும் அதிகம் வரது இல்லை. கோதை அத்தை கூட வயலுக்கு மட்டும் எப்பவாது வாரா. இன்னைக்கு காலைல கூட வயலுக்கு போனா. நான் பேச்சுக் கொடுத்தும் பேசலை”, என்று கதிரேசன் சொன்னதும் குழப்பமாக இருந்தது வாசுவுக்கு.
காதல் தொடரும்…

Advertisement