Advertisement

அத்தியாயம் 2
வலி கொடுத்த நீயே என்
இதயத்துக்கு வலிமையாகவும்
மாறியது விந்தை தான்!!!
பகலவன் தன்னுடைய செங்கதிர்களை இந்த பூவுலகில் பரப்பி அழகாக உதயமானான். வாசு வீட்டில் அனைவரும் பரபரப்பாக இருந்தார்கள். காலை எட்டு மணிக்கு தான் முகூர்த்தம் என்பதால் பெண்ணும் மாப்பிள்ளையும் நிதானமாக கிளம்பினார்கள். 
முதலில் வாசுதேவனை மண்டபத்துக்கு அழைத்து சென்று மண மேடையில் அமர வைத்தார்கள். அவன் அமர்ந்ததும் அவன் கழுத்தில் மாலையைப் போட்ட ஐயர், சடங்குகளை செய்ய ஆரம்பித்தார். ஹோம குண்ட புகை கண்ணை ஒரு வழி செய்தாலும் வாசு முகம் பூரிப்பாக இருந்தது. அவனுடைய நண்பர்கள் வேறு அவ்வப்போது அவன் காதில் ஏதோ முணுமுணுத்து கிண்டல் செய்ய அவன் உதடுகள் எப்போதும் புன்னகையை சிந்திய படியே இருந்தது. 
அதன் பின் பெண்ணழைப்பு கோலாகலமாக நடை பெற்றது. நிறைவான அலங்காரத்துடன் அவ்வளவு அழகாக இருந்தாள் பிரேமா. 
வந்தனாவும் நிரஞ்சனும் அவ்வளவு சந்தோஷமாக எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருந்தார்கள். 
ஹோம குண்டத்தின் முன்பு வாசு அமர்ந்திருக்க அவன் அருகில் அமர வைக்கப் பட்டாள் பிரேமா. அடி கண்ணால் அவளை ரசித்தான் வாசு. அவளுக்கு அவனை நிமிர்ந்து பார்க்க அவ்வளவு தயக்கமாக இருந்தது. 
அனைவரின் முன்னிலையில் அப்படி அமர்ந்திருப்பதால் அவள் கை கால்கள் எல்லாம் நடுங்கியது. அவள் பதட்டத்தைக் கண்டு வாசுதேவனுக்கு “இவள் தான் எவ்வளவு மென்மையானவள்”, என்ற எண்ணம் உருவானது. 
அதன் பின் ஐயர் தாலி எடுத்து கொடுக்க சொந்த பந்தங்கள் அனைவரின் ஆசியோடு பிரேமா கழுத்தில் தாலி காட்டினான் வாசுதேவன். 
அதன் பின் அம்மி மிதிப்பது, அருந்ததி பார்ப்பது, பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது என மணமக்களுக்கு நேரம் றெக்கை கட்டிக் கொண்டு நகர்ந்தது. 
இந்த உலகில் இருக்கும் சந்தோஷத்தை எல்லாம் குத்தகைக்கு எடுத்தது போல இருந்தார்கள் வாசுவும் பிரேமாவும். 
அதுவும் வீடியோ மற்றும் போட்டோ எடுப்பவர்கள் “இப்படி நில்லுங்க, பொண்ணு தோள்ல கை போடுங்க, ரெண்டு பேரும் கை கோர்த்த படி நில்லுங்க”, என்று படுத்தி எடுத்தாலும் பூரிப்பும் வெட்கமும் கலந்து அதை செய்தார்கள் மணமக்கள். 
அதே நேரம் “சரண்யா, உனக்கே நீ பண்ணுறது நியாயமா இருக்கா? நானும் பொறுத்து பொறுத்து பாத்துட்டேன், எத்தனை நாள் தான் இப்படி அழுதுட்டே இருப்ப? நீ பண்ணுறது கொஞ்சம் கூட சரியில்லை”, என்று தன்னுடைய செல்ல மகளை திட்டிக் கொண்டிருந்தாள் கோதை. 
அப்படி திட்டியதும் அன்னையை முறைத்து பார்த்தாள் சரண்யா. அவள் மனநிலையை மாற்ற தானே கோதையும் அவளை இவ்வாறு சீண்டினாள். 
அதனால் சரண்யா முறைக்கவும் நிம்மதியான கோதை “என்ன டி முறைக்கிற? நான் கேக்குறதுல என்ன தப்பு? ஊர் உலகத்துல யாரா இருந்தாலும் இப்படி தான் கேப்பாங்க. உங்க அப்பன் செத்ததுக்கு நானே இத்தனை நாள் அழலை. நீ இத்தனை நாள் ஒப்பாரி வச்சிட்டு இருக்க? இந்நேரம் வாசுவுக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கும். இனியும் அவனை நீ நினைக்கிறதுல எந்த அர்த்தமும் இல்லை. அது தப்பும் கூட மா. சொல்றதை புரிஞ்சிக்கோ கண்ணு”, என்றாள். 
“சும்மா பேசாத மா. எனக்கு செம கடுப்பு வருது. இப்ப வந்து வக்கணையா பேசுற? நானா எனக்கு வாசு மாமா வேணும்னு கேட்டேன். நீ தானே அடிக்கடி வாசு மாமா பத்தியே என்கிட்ட பேசின. இதுக்கு உன் அண்ணனும் கூட்டு. கடைசில எல்லாரும் சேந்து என் சங்கை அறுத்துட்டீங்கல்ல?”
“பெரிய வார்த்தை எல்லாம் பேசாத கண்ணு. நாங்க என்ன வேணும்னா பண்ணுனோம்? விதி படி தானே நடக்கும்? நாம ஆசைப் பட்டது ஒண்ணு. நடந்தது ஒண்ணு. இனி அதை மாத்த முடியாது. வாசுவுக்கு பிரேமான்னு தான் எழுதிருக்கோ என்னவோ? நீ அவனை மறந்துரு மா”
“முடியலையே மா, நான் என்ன செய்ய? என்னால முடியலையே? நான் பிரேமாவை விட எதுல மா குறைஞ்சு போயிட்டேன்? பணம் இல்லாம இருக்கலாம்? அதுக்காக எனக்கு கிடைக்க வேண்டிய வாழ்க்கை அவளுக்கு எப்படி மா கிடைக்கலாம்”
“இது தப்பு கண்ணு. எனக்கு என்னமோ நீ ரொம்ப பொறாமை படுற மாதிரி இருக்கு. நீயும் பிரேமாவும் ஒருத்தொருக்கொருத்தார் குறைஞ்சவங்க இல்லை மா. வாசுவுக்கு நீ எப்படியோ அது மாதிரி தான் பிரேமாவும். உண்மையை சொல்ல போனா நம்மளை விட அவளுக்கு தான் கண்ணு உரிமை இருக்கு. ஏன்னா பிரேமா வாசுவுக்கு தாய்மாமன் பொண்ணு”
“ஏன் அப்ப நான் மட்டும் வாசு மாமாவுக்கு உரிமை இல்லையா? இந்நேரம் கல்யாணம் முடிஞ்சு ரெண்டு பேரும் சந்தோஷமா சிரிச்சிட்டு இருப்பாங்கல்ல? மனசுக்கு கஷ்டமா இருக்கு மா”
“ஏத்தா, இப்படி பேசக் கூடாது டா. அது நல்லது கிடையாது. என் மக அந்த அளவுக்கு கேவலமானவ கிடையாது தானே? யாராவது பசியோட இருந்தாலே உன்னோட சாப்படைக் கூட அள்ளிக் கொடுக்கும் குணவதி டா நீ. நீ அடுத்தவ வாழ்க்கையைக் கண்டு பொறாமை படக் கூடாது கண்ணு. என் மக ஒரு தேவதை. அவ கிட்ட சாத்தான் குணம் வரக் கூடாது மா”
“அம்மா….நீ ஏன் மா வாசு மாமா உனக்கு தான் உனக்கு தான்னு சொன்ன?”
“இங்க பாரு, பொறுமையா பேசிட்டு இருக்கேன். என்னோட பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு. என்னமோ நாங்க சொன்னோம், நாங்க சொன்னோம்னு சொல்ற? நான் சொல்லலைன்னா சொன்னேன்? என்னமோ நாங்க சொன்ன எல்லாத்தையும் நீ செய்றியா என்ன?”
“நீயும் கோப படாத மா. எனக்குன்னு யாருமே இல்லாத மாதிரி இருக்கு. அம்மா நாம இங்க இருக்க வேண்டாம். நாம எங்கயாவது போய்ராலாமா? எனக்கு இங்க இருக்கவே முடியலை. இங்கயே இருந்தா அவங்க நினைவாவே இருக்கு மா”
”நினைச்ச உடனே பொட்டியை கட்டிக்கிட்டு போறதுக்கு நமக்குன்னு எங்க நாதி இருக்கு? உன் அப்பன் குடும்பத்துல நம்மளை எப்பவோ தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க. ஏதோ அண்ணன் கொஞ்சம் நிலமும், இந்த வீடும் தந்ததுனால நாம இங்க இருக்க முடியுது. வயசு பொண்ணை வச்சிக்கிட்டு நான் எங்க போய் வாழ முடியும்? உன்னைக் காப்பாத்துவேனா வயித்து பொழப்புக்கு பாப்பேனா? என் மக ஏழையா இருக்கலாம். ஆனா கோழை கிடையாதே. இதுக்கெல்லாம் நாம வேற எங்கயாவது போகலாம்னு நினைக்கலாமா? வா என் கூட வயலுக்கு வந்து வேலை பாரு. கொஞ்சம் மனசுக்கு தெடமா இருக்கும்”
“ம்ம் ஏன் மா, நம்ம ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு போகலை. அதைக் கூட அந்த வாசு மாமா கவனிச்சிருக்க மாட்டாங்கல்ல? அவங்க எதுக்கு நம்மளை நினைக்க போறாங்க? அந்த அளவுக்கு கூட அவங்க மனசுல நான் இல்லை. ஆனா நான் எல்லாமே வாசு மாமான்னு நினைச்சேனே மா? ஊருக்கு வந்து இத்தனை நாள்ல ஒரு தடவை கூட மாமா நம்மளை வந்து பாக்கவே இல்லை பாரேன். பெரிய மாமா கூட அதுக்கப்புறம் நம்மளை பாக்க வரலை? எதுக்கு மா நம்மளுக்கு யாருமே இல்லை? அப்பா இருந்தா நல்லா இருந்துருக்கும்ல?”, என்று சாய்ந்து அழ தோள் தேடியது அந்த பேதை உள்ளம். 
என்ன சொன்னாலும் மீண்டும் மீண்டும் வாசு பற்றியே பேசும் மகளை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள் அந்த தாய். கூடவே அவளுக்கு தந்தை நினைவும் வருவதை என்ன செய்ய? 
“ஏத்தா, பேசாம வர முகூர்த்தத்துல உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிறவா? நம்ம அடுத்த வீட்டு கதிரேசனுக்கு உன் மேல விருப்பம் போல? அத்தை அத்தைன்னு என்னையே சுத்தி வரான். பேச்சு வாக்குல கேக்கவும் செய்றான். குணமும் தங்கம் தான். விவசாயம் பாத்தாலும் குணத்துல குறை சொல்ல முடியாது. அவனுக்கும் அம்மா மட்டும் தான். பிக்கல் பிடுங்கல் இல்லாத இடம். முடிச்சிருவோமா கண்ணு? உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்த நிம்மதி இருக்கும்? உன்னை கண்டுக்காத வாசு முன்னாடி நீ நல்லா வாழ்ந்து காட்டணும் கண்ணு”, என்று மகளின் மனதை அறிய நூல் விட்டுப் பார்த்தாள் பூங்கோதை. 
கூடவே அவள் சம்மதிக்க வேண்டுமே என்ற ஆசையும் இருந்தது. ஆனால் அன்னை சொன்னதைக் கேட்டு அதிர்ந்த சரண்யாவோ
“அம்மா, நீ என்ன பேசுற? தயவு செஞ்சு இப்படி எல்லாம் பேசாத மா. கதிரேசன் விருப்பம் எனக்கும் தெரியும். ஆனா என்னால வேற யாரையும் கல்யாணம் செய்ய முடியாது. இப்ப என்ன நான் வயலுக்கு வரணும், அவ்வளவு தான? நான் இப்பவே வரேன். அதுக்காக கல்யாணத்தை பத்தி எல்லாம் பேசாதே”, என்று சொல்லி விட்டு முகம் கழுவ போனாள். 
“இப்படி கல்யாணமே வேண்டாம் என்கிறாளே?”, என்று கோதைக்கு கவலையாக இருந்தாலும் இந்த அளவுக்கு அவள் மனது மாறி வயலுக்கு வரேன் என்று சொன்னதே இப்போதைக்கு போதும் என்று நிம்மதியாக இருந்தது. 
முகம் கழுவி வந்த மகளின் முகத்தில் இருந்த சோர்வு மனதை வாட்டியது. கூடவே ஊரில் பார்க்கும் யாரவாது மகளிடம் ஏதாவது விசாரித்தாள் மீண்டும் அழுவாளே என்று பரிதவித்த அந்த தாய் “இன்னைக்கு நீ ரொம்ப சோர்வா இருக்க சரண்யா.  அதனால நீ இன்னைக்கு வர வேண்டாம். ஒரு ரெண்டு நாள் வீட்ல இரு. நேரம் போகலைன்னா உன் கூட படிச்சா பிள்ளைகளை வரச் சொல்லு. இல்லைன்னா டி‌வி பாரு. அம்மா சமையல் எல்லாம் முடிச்சிட்டேன். போயிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றாள். 
சரண்யாவுக்குமே வெளியே சென்றால் அனைவரும் ஏதாவது கல்யாணத்தைப் பத்தி கேட்பார்களே என்ற பயம் இருந்தது. கூடவே தன்னுடைய தோழிகளைப் பார்க்கச் செல்லவும் பிடிக்க வில்லை. 
தோழிகள் அனைவரிடமும் வாசு மாமாவைத் தான் கட்டிக்க போறேன் என்று பெருமை பீத்தி விட்டு இன்று அவர்கள் முன்னால் எந்த முகத்தை வைத்துக் கொண்டு போவதாம்? 
அன்னை சொல்லவும் இது தான் சாக்கென்று வீட்டிலே இருந்து விட்டாள். ஆனாலும் தன்னுடைய தாய் தலை மறைந்ததும் மீண்டும் வாசுவை நினைத்து அவள் கண்கள் உடைபெடுத்தன. 
கூடவே “கடவுளே வாசு மாமா நல்லா இருக்கணும். நான் ஏதாவது தப்பா நினைச்சிருந்தா என்னை மன்னிச்சிரு. வாசு மாமாவையும் பிரேமாவையும் நேர்ல நான் பாக்கவே கூடாது. ஒரு வேளை நேர்ல பாத்தாக் கூட அவங்க மேல எனக்கு பொறாமை எண்ணத்தை கொடுத்துறாத. அப்படி நான் பொறாமை படுற மாதிரி சூழ்நிலை அமைஞ்சதுன்னா என்னோட உயிரையே எடுத்துக்கோ”, என்று வேண்டினாள் சரண்யா. 
இது தான் சரண்யா. மனது அவ்வளவு வலித்தாலும் எப்போதும் அடுத்தவருக்கு தீங்கு எண்ண மாட்டாள். அந்த அளவுக்கு நல்லவள். என்ன தான் நல்லவள் என்றாலும் கடவுள் ஆடும் ஆட்டத்தை யாரால் உணர முடியும். அவரால் மட்டுமே விதியின் சூழ்ச்சியை அறிய முடியும். அவரால் மட்டுமே அனைவரின் விதியையும் மாற்றி அமைக்க முடியும். காலம் தான் நடக்கும் அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டும். 
வாசுவுக்கும் பிரேமாவுக்கும் ஆசீர்வாதம், சாப்பாடு, பால் பழ சடங்கு, மறுவீடு என்று நேரம் நிற்காமல் சென்றது. கூடவே இருவரும் கண்களால் பரிமாறிக் கொள்ளும் அற்புத தருணங்கள் அவ்வளவு ரசிக்கும் படியாக இருந்தது. 
அனைவரின் பார்வையில் ஒரே ஒரு குறை என்றால் மிலிட்டரி மேனாக அவன் திடகாத்திரமாக இருந்தால் அவளோ ஒல்லியாக இருந்தாள். சரியான பொருத்தம் என்று மட்டும் சொல்ல முடியாமல் இருந்தது அவர்கள் ஜோடிப் பொருத்தம். 
அன்று இரவு வாசுவின் அறை முதலிரவுக்கு ஏற்ற படி மிதமாக அலங்கரிக்க பட்டிருந்தது. அந்த அறைக்குள் நுழைந்த வாசுவுக்கு இது எல்லாம் நிரஞ்சனின் வேலை என்று புரிந்தது. 
என்ன தான் ஆண் என்றாலும் ஒரு வித பதட்டமும், தடுமாற்றமும் வாசுவுக்கு வந்திருந்தது. சொந்த தாய் மாமன் மகளாக இருந்தாலும் அவளுடன் அவன் அதிகம் பேசிப் பழகியது இல்லை. 
முதல் நாளே வாழ்க்கையை ஆரம்பிக்காமல் அவளுடன் நன்று பேசி, பழகி இருவரும் நல்ல நண்பர்களாக ஆன பிறகு வாழ்க்கையை ஆரம்பிக்க அவனுக்கும் ஆசை தான். ஆனால் அவனுக்கு அந்த அளவுக்கு லீவ் இல்லையே. இன்னும் அவன் திரும்பிச் செல்ல நாற்பது நாட்கள் தான் இருக்கிறது. 
இந்த அளவுக்கு லீவ் கிடைத்ததே அவனுக்கு பெரியது. இதில் அவன் பேசி பழக நேரம் எடுத்துக் கொண்டால் லீவ் முடிந்து விடும். அதன் பின் இருவரும் போனிலும் லட்டரிலுமா குடும்பம் நடத்த முடியும்? அதனால் அவள் வரவுக்காக ஆவலாக காத்திருந்தான். 
வந்தனாவும் பிரேமாவின் அத்தை முறையில் இருக்கும் உறவுகளும் அவளை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். 
“இப்படி ஊதி விட்டா பறக்குற மாதிரி இருக்க டி பிரேமா. என் மகனை தாங்கிருவியா?”, என்று வாசுவின் சித்தி முறையில் இருக்கும் ஒரு பெண் கேட்க அங்கே கொல்லென்று சிரிப்பு சத்தம் எழும்பியது. 
யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் சிவந்த முகத்தை மறைத்துக் கொண்டு இருந்தாள் பிரேமா. 
“சும்மா எங்க மதினியை கிண்டல் பண்ணாதீங்க சித்தி. அதெல்லாம் இதுக்கப்புறம் எங்க மதினி உடம்பு வச்சிருவா”, என்றாள் வந்தனா. 
“வச்சி தானே ஆகணும்? இப்ப புருஷனை தாங்க தெம்பிருந்தாலும் நாளைக்கு பிள்ளையை தாங்கவும் உடம்புல தெம்பு கட்டாயம் வேணும். சரி சரி ஜோசியர் குறிச்சு கொடுத்த நல்ல நேரம் வரப் போகுது. ஏத்தா, பிரேமா பாத்து பதமா நடந்துக்கோ. இந்த காலத்து பிள்ளைகளுக்கு நாம சொல்ல வேண்டியது இல்லை. வந்தனா, உன் மதினியை வாசு ரூமுக்கு கூட்டிட்டு போ”, என்று சொல்லி விட்டு வேறு கதைகள் பேச ஆரம்பித்து விட்டார்கள். 
மாடி ஏறும் போது, “எனக்கு பயமா இருக்கு டி வந்தனா”, என்றாள் பிரேமா. 
இருவரும் தனியாக இருக்கும் போது மதினி என்ற வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார்கள் என்பதால் “அதெல்லாம் ஒண்ணும் இல்லை. கொஞ்ச நேரத்துல எல்லாம் சரியாகிரும். எங்க கல்யாணத்தப்ப உங்க அண்ணன் ரூமுக்கு போகவே மாட்டேன்னு அழுத நான் இப்ப ஒரு பிள்ளையை பெத்துரலையா? அதெல்லாம் சரியாப் போகும். பயப்படாத. அண்ணன் பாத்துக்கும்”, என்று வந்தனா முடிக்கும் போது வாசு அரை வந்திருந்தது. 
எதையோ யோசித்துக் கொண்டிருந்த வாசு யாரோ வரும் அரவம் கேட்க நிமிர்ந்து பார்த்தான். 
வந்தனா தான் பிரேமாவை அறை வாசல் வரை அழைத்து  வந்திருந்தாள். அவர்கள் இருவரையும் பார்த்து சங்கடமாக புன்னகைத்தான் வாசு. 
ஒரு சிரிப்புடன் பிரேமாவை உள்ளே அனுப்பிய வந்தனா “கதவை பூட்டிக்கோ டி”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள். 
கதவை பூட்டி தாள் போட்ட பிரேமா தடுமாறிய படியே அவனை நெருங்கினாள். 
அவள் அழகையும் அவள் வெட்கத்தையும் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த வாசு அவள் கையில் இருந்த பாலை வாங்கி பக்கத்தில் இருந்த ஸ்டூலில் வைத்தான். 
பின் நடுங்கி கொண்டிருந்தவள் தைரியத்தை வரவழைத்து அவன் காலில் விழுந்து வணங்கினாள். 
குனிந்து அவள் தோள் பற்றி எழுப்பி விட்டவனின் கை அவள் தோள் மீதே இருந்தது. அதில் அவள் மேலும் நடுங்க மெதுவாக ஒரு கையை எடுத்து அவள் நாடியை பிடித்து முகத்தை நிமிர்த்தினான். 
அவளோ கண்களை இறுக மூடிக் கொண்டாள். தான் முன் கண்களை மூடி உதடு துடிக்க நின்றவளின் கோலம் அவனை உசுப்பேத்த அடுத்த நொடி அவளுக்கு நெருக்கமாக மாறினான். 
முதலில் அவன் அதிரடியில் திகைத்தாலும் அவன் செய்கைக்கு உடன் பட்டாள் பிரேமா. சின்ன சின்ன சிணுங்கல்களை தவிர அங்கு வேறு எந்த சத்தமும் இல்லை.

Advertisement