Advertisement

“அப்பா குளிச்சிட்டு வரேன் டா”, என்று சொல்லி விட்டு குளிக்க சென்றான். 
அவனுடைய வாழ்க்கைக்கு தேவையான இளப்பாறுதலைக் கொடுக்க கூடிய ஜீவநதி அவள். 
குளித்து முடித்து வந்தவன் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். அவள் முதலில் அவனை கவனிக்க வில்லை. அதன் பின்னர் தான் அவனைப் பார்த்தாள். இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் பார்வையை தாங்க முடியாமல் குழந்தையை படுக்க வைத்து விட்டு அங்கிருந்து செல்லப் பார்த்தாள் சரண்யா. அப்போது படக்கென்று அவள் கையைப் பற்றிக் கொண்டான் வாசு.
திடீரென்று இப்படி செய்வான் என்று எதிர் பார்க்காதவள் தடுமாறினாள். 
“மாமா, என்ன இது? கையை விடுங்க. நான் டீ போடுறேன்”
“நீ பேசாம இருக்குறது கஷ்டமா இருக்கு சரண்யா”
“என்னை பேச விடாம செஞ்சது நீங்க தான். என்னைப் பாத்து அப்படிச் சொல்லலாமா?”, என்று கேட்டாள் சரண்யா. கோபத்தில் அவள் இதழ் துடித்தது. கண்களும் கலங்கி விட்டது. 
அவளின் அந்த தோற்றத்தை கண்டவன் கலங்கிப் போனான். அவளை எப்படி சமாதானம் செய்வது என்று அவனுக்கு தெரிய வில்லை. 
“என்னைப் புரிஞ்சிக்கோ சரண்யா”, என்று கெஞ்சலாக வெளி வந்தது அவன் குரல். 
அவளும் அவனை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தாள். அதில் காதல், கோபம், விரக்தி என்ற உணர்வுகள் வந்து போயின. 
“என்ன இப்படி பாக்குற?”
“நான் சொல்ல வேண்டியதை நீங்க சொல்றீங்க? நீங்க கதிர் கூட சேத்து வச்சு கோபமா பேசினீங்கன்னு அம்மா சொன்னாங்க. அப்ப கூட என் மேல உள்ள உரிமைனால தான் அப்படி பேசினீங்கன்னு நினைச்சேன். ஆனா இப்ப தான் உங்க மனசுல என் மேல அன்பு இல்லை, கருணை தான் இருக்குனு புரிஞ்சிக்கிட்டேன் மா. அதனால தான் என்னை அடுத்தவனுக்கு விட்டுக் கொடுக்க முடிவு பண்ணிட்டீங்க. அப்படித் தானே?”
“அப்படி இல்லை மா, உண்மைலே அன்னைக்கு உன்னை எப்படி அவன் விரும்பலாம்னு கோபத்துல தான் திட்டினேன்னு எனக்கே இப்ப தான் புரியுது”
“நீங்க சொல்றது உண்மையா?”
“ஆமா”
“அப்ப என்னை உங்களுக்கு பிடிக்குமா?”
“பிடிக்காதுன்னு நான் எப்ப சொன்னேன்? உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா சேந்து வாழ நான் உனக்கு தகுதி ஆனவன் இல்லையே சரண்யா”
“மாமா”
“நீ இல்லைன்னா நானும் என் மகனும் அநாதை தான் சரண்யா. உன்னை நினைச்சு தான் நான் இவ்வளவு சந்தோஷமா இருக்கேன். உன்கூட சேந்து வாழணும்னு எனக்கு ஆசையும் இருக்கு. ஆனா எனக்குள்ள இருக்குற குற்ற உணர்ச்சி என்னை உன்கிட்ட நெருங்க விடலை. இப்ப என் மனசுல காதல் இருக்குறது உன் மேல மட்டும் தான்”
அவன் அப்படிச் சொன்னதும் அடுத்த நொடி “மாமா”, என்ற கதறலுடன் அவன் தோள் மீது சாய்ந்தாள் சரண்யா. 
அவள் அப்படிச் சாய்வாள் என்று எதிர்பார்க்காதவன் முதலில் திகைத்தான். பின் அந்த நொடி சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவன் கைகள் அவளை சுற்றி வளைத்தது. அந்த நிமிடத்தில் இருவரின் மனமும் ஒன்று பட்டு இருந்தது. 
குழந்தை சிணுங்கும் சத்ததில் அவனிடம் இருந்து விலகியவள் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் குழந்தையை அவனிடம் ஒப்படைத்து விட்டு அடுப்படிக்கு சென்றாள். அதன் பின் இருவருக்கும் நேரம் சாதாரணமாக சென்றது. ஆனால் இருவருக்குமே மனம் பந்தயக் குதிரை போல படபடக்க தான் செய்தது. 
அன்று இரவு உணவு முடிந்ததும் அறைக்குள் சென்று குழந்தையை ஆட்டிக் கொண்டிருந்தாள் சரண்யா.  
அவள் பின்னேயே வந்த அவனும் அவளையே பார்த்த படி நின்றான். அவன் பார்வையைக் கண்டு முகம் சிவந்தாள். 
அவளை அள்ளிப் பருகும் பார்வையை பார்த்துக் கொண்டிருந்தான் வாசு. அவன் பார்வையைக் கண்டு அவள் மயங்கும் இந்த நொடியை ரசித்தான் வாசு. இருவருக்கும் நடந்த இந்த விளையாட்டு அவனுக்கு பிடித்திருந்தது. 
அவன் இமைக்காமல் அவளைப் பார்க்க அவள் அவனைப் பார்ப்பதும் தரையைப் பார்ப்பதுமாக இருந்தாள். அவள் முகம் வெட்கத்தில் சிவந்து போய் இருந்தது. 
அவள் மனதில் வாசுவே நிறைந்து இருந்தான். அவன் ஏற்கனவே பிரேமாவுடன் வாழ்ந்தான் என்ற நினைவு அவள் மனதில் எழவே இல்லை. அவளைப் பொறுத்த வரை வாசு அவளின் காதல் கணவன், ஆதி அவர்களின் மகன் அவ்வளவே. 
“சரண்யா’, என்று கிசுகிசுப்பாக அழைத்தான் வாசு. 
“ம்‌ம்”, என்று முணுமுணுத்தாள். 
“என்னைப் பார்”
“மாட்டேன்”
“என்னைப் பிடிக்கலையா?”, என்று கேட்டதும் அவனை முறைத்தாள். அவன் அவளைப் பார்த்து கண்ணடித்தான். அவள் மீண்டும் பார்வையைத் தளைத்துக் கொண்டு “கள்ளன்”, என்று முணுமுணுத்தாள். 
அதற்கு மேல் அவளை விட்டு தள்ளி நிற்க முடியாமல் அவளை நெருங்கினான். அவள் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல நடுங்கினாள். 
அவள் முதுகின் அருகில் வந்து நின்றவன் “குழந்தை தூங்கிட்டானா?’, என்று கேட்டுக் கொண்டே எட்டிப் பார்த்தான்.. அவள் முதுகில் அவன் உதடு படிந்து விலகியது. 
“ஸ்‌ஸ்”, என்று முணுமுணுத்தாள் சரண்யா.
அந்த சட்டத்தில் அவன் உணர்வுகள் விழித்துக் கொள்ள தொட்டிலை பார்த்தான். ஆதி நன்கு உறங்கிக் கொண்டிருந்தான்.  
அவள் தோளில் கரம் வைத்து தன் பக்கம் திருப்பியவன் அவள் நெற்றியில் முதல் முறையாக இதழ் பதித்தான். 
அதை தாங்க முடியாதவளாய் கண்களை இறுக மூடிக் கொள்ள அவளை அணைத்த படி கட்டிலுக்கு அழைத்து சென்றான். 
“சரண்யா,”
“ம்ம்”
“இப்பவும் என்னை பிடிச்சிருக்கா?  ஏன் கேக்குறேன்னா உன் காதல் உண்மையானது தான். நான் இல்லைன்னு சொல்லலை.  ஆனா நான் ஏற்கனவே கல்யாணம் ஆகி எல்லாம் பாத்தவன். ஆனா நீ அப்படி இல்லை”’
“இதையே திருப்பி திருப்பி பேச வேண்டாம் மாமா பிளீஸ். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அது மட்டும் தான் எனக்கு சொல்ல தெரியும். சின்ன வயசுல இருந்து உங்களை நான் என்னோட கணவனா நினைச்சதுனாலயான்னு தெரியாது. ஆனா உங்களைப் பிடிக்கும். அதான் எனக்கே கிடைச்சீட்டீங்கள்ள? இனி எதுக்கு பழைய கதையை பேசணும். உங்களோட பழைய வாழ்க்கையை நீங்க நினைக்க கூடாதுன்னு சொல்ல எனக்கு உரிமை இல்லை. அது உங்களால முடியவும் முடியாதுன்னு எனக்கு தெரியும். ஆனா எனக்கு அதை பத்தி பேசி நினைவு படுத்தாதீங்க. இனி நீங்க பழைய விஷயம் பேசுனீங்கன்னா நான் உங்க பக்கத்துல நிக்க மாட்டேன். ஏன்னா எனக்கு நீங்க தான் முக்கியம். உங்க கடந்த காலம் இல்லை”, என்று அவள் சொன்னது தான் தாமதம் அடுத்த நொடி அவள் இதழ்களை சிறை செய்தான் வாசு. 
ஒரு நொடி அதிர்ந்தவள் அடுத்த நொடி விருப்பத்துடன் அவன் கரங்களில் சாய்ந்தாள். அவன் கரங்களும் அவளை ஆவேசமாக அனைத்துக் கொண்டது. 
அவள் புத்தம் புதிதாக பூத்த மலர், ஆனால் அவனோ பட்டுப் போன மரம். ஆனாலும் அதே அன்பை அவனிடம் காண்பித்தாள் சரண்யா. 
அதனால் அவன் அணைத்ததும் விருப்பத்துடன் அவன் கைகளுக்குள் சரண் புகுந்தாள். அவனும் மனதில் இருந்த பழைய கசப்புகள் அனைத்தையும் தூர எறிந்தான். சரண்யா மட்டுமே அவன் நினைவில் இருந்தாள். 
காதோரம் அவன் நெருக்கமான வார்த்தைகளை உபயோகிக்க அவள் வெட்கி சிவந்து அவனுடன் ஒன்றிப் போனாள். அவளுடைய சிலிர்ப்பு அவனை இன்னும் பித்தனாக்கியது. அங்கே அவர்கள் வாழ்க்கை அழகாக ஆரம்பமானது. 
அதன் பின்னர் இருவரின் வாழ்க்கை அவ்வளவு அழகாக சென்றது. தினமும் சந்தோஷமாக வேலைக்கு சென்றான். சரண்யாவுக்கு ஆதியைக் கவனிப்பதிலும் கணவனின் நினைவிலும் அந்த நாள் ஓடி விடும்.  
மாலை வீட்டுக்கு வந்ததும் அவளையும் குழந்தையும் அருகில் எங்கேயாவது அழைத்து செல்வான். விடுமுறை தினத்தில் அவளுடன் அதிக நேரம் செலவிடுவான். 
இருவரும் அவ்வளவு சந்தோசமாக இருந்தார்கள். தினமும் கோதை மற்றும் சீனிவாசனிடம் போனில் பேசி விடுவார்கள். அவர்களின் சந்தோஷம் பெரியவர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. 
குழந்தை பெற்றுக் கொள்வது மட்டும் ஆதிக்கு நான்கு வயது ஆன பிறகு தான் என்று முடிவு எடுத்தார்கள். 
ஆதிக்கு உண்மையான அன்னையானாள் சரண்யா. வாசுவுக்கு சந்தோஷம் மற்றும் நிம்மதியை வாரிக் கொடுக்கும் தேவதை அவள் தான். 
குழந்தையுடன் நேரம் செலவிட்டால் “உனக்கு மகன் தான் முக்கியமா நான் இல்லையா?”, என்று கேட்டு வம்பிழுக்கும் அளவுக்கு சரண்யாவை நேசித்தான் வாசு. அவர்களின் சிறு வயதுக் கதைகளை நினைவு படுத்தி சந்தோஷப் படுவார்கள். 
அவன் வேறு ஒருத்தியுடன் வாழ்ந்து ஒரு குழந்தைக்கு தகப்பன் என்ற குறை அவள் மனதை எட்டவே இல்லை. உண்மையான காதல் அனைத்து நிறை குறைகளையும் ஏற்றுக் கொள்ளும் வல்லமை படைத்தது. அது தான் சரண்யா விசயத்திலும் நடந்தது. 
வாசுவின் வறண்டு போக இருந்த வாழ்வை நனைத்து பசுமையாக்கியது சரண்யாவின் காதல் மழை. 
லீவ் கிடைக்கும் போது ஊருக்கு சென்று வந்தார்கள். அவர்களை பார்க்க வைதேகி கோதை வீட்டுக்கு வருவாள். பேரனைத் தூக்கி வைத்து கொண்டாடுவாள். ஆனால் சீனிவாசன் மற்றும் வாசு மட்டும் இத்தனை நாட்கள் ஆன பிறகும் அவளிடம் பேசவே இல்லை. 
மீண்டும் நிரஞ்சனிடம் பேசி வந்தனாவை ஏற்றுக் கொள்ள சொல்லி பேசினான் வாசு. அதுவும் சரண்யா சொன்னதினால். வந்தனாவின் மாற்றம் உணர்ந்த நிரஞ்சனும் அவளை வீட்டுக்கு அழைத்து சென்று விட்டான். 
மீண்டும் சரண்யா, வாசு, ஆதி மூவரும் ஊர் திரும்பினார்கள். ஆதிக்கு நான்கு வயதான போது சரண்யா கற்பமானாள். கோதை மற்றும் சீனிவாசன் இருவரும் டெல்லிக்கு வந்தார்கள். மகளின் பிரசவத்துக்கு துணையாக இருந்தாள் கோதை. சரண்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு ஆராதனா என்று பெயர் வைத்தான் வாசு. ஆதி பாப்பா பாப்பா என்று சொல்லி ஆராதனாவையே சுற்றி வந்தான். 
ஒரு ஆண், ஒரு பெண் என்று இருப்பதால் இனி குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்று முடிவு எடுத்தார்கள் அந்த தம்பதி.
யாருடன் யார் சேர வேண்டும் என்பதை கடவுள் தான் முடிவு செய்வார் என்பது எப்பேற்பட்ட உண்மை. வாசுவின் மீதான சரண்யாவின் காதல் மேகம் என்றுமே கலைந்து விடவில்லை. 
……முற்றும்…….

Advertisement