Advertisement

அதை சரி செய்ய அவனுக்கும் நேரம் தேவைப் பட்டது. அதனால் அடுத்து வந்த நாட்களில் அவளை சீண்டாமல் இருந்தான் வாசு. 
ஒரு வழியாக அவர்கள் கிளம்பும் நாளும் வந்தது. “சரண்யா, ரொம்ப தேவையா இருக்குறதை மட்டும் எடுத்து வை. மத்தது எல்லாம் நாம அங்க போய் வாங்கிக்கலாம்”, என்றான் வாசு. 
“சரி மாமா”, என்றவள் தேவையானதை மட்டும் எடுத்து வைத்தாள். அங்கே அவர்கள் கொடுக்கும் குவாட்ரஸ் வீடு எப்படி இருக்கும் என்று தெரியாததால் தங்களுடன் சீனிவாசன் மற்றும் கோதைக்கும் சேர்த்து தான் டிக்கட் போட்டான் வாசு. 
கூடவே அவனுடைய சுப்பீரியர் ஆபீசருக்கு போன் செய்து வீடு “அளாட் பண்ணியாச்சா சார்?”, என்று கேட்டும் விட்டான். 
அவரும் ஆம் என்று சொல்லி விடவே அன்று கிளம்புவதற்கு தயாரானார்கள். 
அவர்கள் கிளம்பும் விஷயம் அறிந்து அங்கே வந்தார்கள் வைதேகியும் வந்தனாவும். 
அவர்களைக் கண்டு வாசுவும் சீனிவாசனும் முகத்தை திருப்பிக் கொள்ள “வாங்க மதினி, வா வந்தனா”, என்று அழைத்தாள் கோதை. 
“வாங்க அத்தை”, என்று சரண்யாவும் சொன்னாள். சீனிவாசனும் கோதையும் அவர்களுடன் செல்கிறார்கள் என்ற செய்தி அறிந்து தான் மட்டும் தனிமைப் பட்டுப் போன உணர்வை அடைந்தாள் வைதேகி. 
காலம் தான் மற்றவர்களுக்கு அவள் மேல் இருக்கும் வெறுப்பை மாற்ற வேண்டும். போகும் போதும் சரண்யா மற்றும் கோதை மட்டுமே அவர்களிடம் “போயிட்டு வரோம்”, என்று சொன்னார்கள். 
ஒரு வழியாக டெல்லி வந்து சேர்ந்து விட்டதும் அவர்களின் வீட்டுக்கான சாவியை வாங்கி வந்தான் வாசு. 
அவர்கள் நினைத்தது போல வீடு குப்பையாக தான் இருந்தது. குழந்தையை சீனிவாசனிடம் கொடுத்து விட்டு மூவரும் வீட்டை சுத்தம் செய்தார்கள். 
மற்ற பொருள்களை எல்லாம் வாசு வாங்கினான். அவன் வேலைக்கும் செல்ல வேண்டும் என்பதால் ஒரு வழியாக புது வீடு செட்டாக ஒரு வாரம் போல் ஆனது. 
மேலும் ஒரு வாரம் கழித்து தான் சீனிவாசனும், கோதையும் ரயில் ஏறினார்கள். 
அவர்கள் கிளம்பியதும் வாசு வேலைக்கு கிளம்ப ஆதி மற்றும் சரண்யா மட்டுமே வீட்டில் இருந்தார்கள். 
புது இடம், புது மொழி என அவளை கொஞ்சம் திகைக்கவே வைத்தது. 
வாசு வரும் நேரம் வந்ததும் அவனுக்காக குழந்தையுடன் வாசலிலே காத்திருந்தாள் சரண்யா. 
“அப்பாவுக்கு போன் பண்ணுனியா சரண்யா? எங்க போயிட்டு இருக்காங்கன்னு கேட்டியா? சாப்பிட்டாங்களா?”, என்று கேட்ட படியே உள்ளே நுழைந்தான் வாசு. 
“கேட்டேன் மாமா, சாப்பிட்டாங்களாம்? உங்களுக்கு டீ போடவா?’, என்று அவர்களுக்குள் பேச்சு சாதாரணமாக சென்றது. 
அதன் பின் அவள் சமையல் அறைக்குள் நுழைய அவன் குளித்து முடித்து குழந்தையுடன் அமர்ந்தான். இது தான் அழகான வாழ்க்கை போல இருந்தது வாசுவுக்கு. அன்று இரவு உணவு முடியும் வரைக்கும் இருவரும் சாதாரண மனநிலையில் தான் இருந்தார்கள். 
அதன் பின்னர் தான் இருவருக்குள்ளுமே ஒரு குறுகுறுப்பு உருவானது. இத்தனை நாள் சீனிவாசனும், கோதையும் இருந்ததால் இருவருமே விலகி தான் இருந்தனர். 
ஆனால் இன்று அப்படி இல்லையே. இருவரும் சாப்பிட்டு முடித்ததும் அனைத்தையும் ஒதுங்க வைத்தாள் சரண்யா. சிறிது நேரம் கழித்து வந்தவள் குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டினாள். 
வாசுவோ தன்னுடைய கடந்த கால நினைவுகளை எண்ணிப் பார்த்தான். கசப்பான புன்னகை அவனுக்குள் உருவானது. அவன் வாழ்ந்த நினைவுகளை நினைத்து அவனுக்கு அருவருப்பு தான் உருவானது. பிரேமா பேசிய காதல் வார்த்தைகளை இப்போது நினைக்கும் போது கசந்தது. 
வைதேகி எப்போதும் பிரேமாவை தங்கம் என்று தான் அழைப்பாள். “அவள் தங்கமா, துருப்பிடித்த தகரம் அவள். எப்படி ஏமாற்றியிருக்கிறாள்?”, என்று எண்ணினான். 
அப்போது “மாமா”, என்று அழைத்தாள் சரண்யா. 
“ஆன், என்ன?”
“என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க? இன்னும் தூங்கலையா?”
“தூக்கம் வரலை”, என்றவனின் பார்வை அவளை அளவெடுத்தது. 
மெருன் கலரில் நைட்டி அணிந்திருந்தாள். அவளுடைய பின்னல் இடையைத் தாண்டி தொங்கியது. 
குழந்தையின் துணியை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள். அடுத்தவளின் குழந்தையை தன் குழந்தையாக பார்ப்பவளின் அன்பு அவனை பிரமிக்க வைத்தது. “பிரேமாவா இருந்தா இப்படி எல்லாம் செய்வாளா?”, என்று எண்ணினான். 
பின் “ஏன் இவளையும் அவளையும் ஒப்பிடுறேன்?”, என்று எண்ணி தன்னையே கடிந்து கொண்டான். 
அவளைப் பார்த்துக் கொண்டே இருந்ததால் புயல் போல அவன் மனதை ஆக்ரமித்தாள் சரண்யா. “இந்த தேவதையை விட்டு ஏன் எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்தது?”, என்று எண்ணிக் கொண்டான். 
“என்ன தான் ஆச்சு மாமா? யோசனையாவே இருக்கீங்க?”, என்று மீண்டும் கேட்டாள் சரண்யா. 
“உன்கூட கொஞ்சம் பேசணும்”
“சொல்லுங்க”
“உனக்கு ஏன் கதிரை பிடிக்கலை?”
“திருப்பியும் இந்த பேச்சா? நானே அதை நினைச்சு கடுப்புல இருக்கேன்? என்னை எப்படி நீங்க அவன் கூட சேத்து வச்சு பேசலாம்?”, என்று கோபமாக கேட்டாள் சரண்யா. 
“தப்பு தான், எனக்கு அப்ப உன் மனசு தெரியாதே”
“இப்ப தெரியுமா?”
“தெரியும்”
“என்ன தெரியும்?”
“உன் மனசுல நான் தான் இருக்கேன்னு?”, என்று அவன் சொன்னதும் அவள் கண்கள் விரிந்தது . 
“எப்படித் தெரியும்?”
“எப்படியோ தெரிஞ்சிக்கிட்டேன். சரி சொல்லு. உனக்கு ஏன் அவனைப் பிடிக்கலை?”
“முதல்ல நான் கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க”
“என்ன?”
“உங்களுக்கு எதுக்கு என்னைப் பிடிக்காம பிரேமாவை பிடிச்சது?”
“தெரியாது”
“அதே மாதிரி தான் எனக்கும் தெரியாது. எதுக்கு மாமா என்னை உங்களுக்கு கட்டிக்கணும்னு தோணலை? ஒரு நொடி கூட உங்களுக்கு என்னைக் கட்டிக்கணும்னு ஆசை வரவே இல்லையா?”, என்று ஆதங்கத்துடன் கேட்டாள் சரண்யா. 
“சரண்யா முதல்ல நான் சொல்றதை புரிஞ்சிக்கோ. நான் ஒண்ணும் பிரேமாவை ஆசைப் பட்டுக் கட்டிக்கலை. நான் உன்கிட்ட பிரியா பேசின அளவுக்கு, விளையாடின அளவுக்கு கூட அவ கூட பேசினது இல்லை. இன்னும் சொல்லப் போனா கல்யாணத்துக்கு அப்புறம் தான் அவ கிட்ட நல்ல பேசவே செஞ்சிருக்கேன். அவளைத் தான் கட்டிக்குவேன்னு நான் ஒண்ணும் ஒத்த காலுல நிக்கலை. அம்மா தான் அவளை கட்டிக்கிரதை பத்தி பேசினாங்க. நான் ஓகே சொன்னேன். அவ்வளவு தான். பிரேமா பத்தி சொல்றதுக்கு முன்னாடி உன்னைப் பத்தி சொல்லிருந்தா கண்டிப்பா நான் உன்னைக் கல்யாணம் பண்ண தான் யோசிச்சிருப்பேன். இது தான் என்னோட அப்போதைய மனநிலை”, என்று அவன் சொன்னதும் அவன் பதிலை எப்படி எடுத்துக் கொள்ள என்று அவளுக்கு தெரியவில்லை. 
“இதை தான் விதியின் சதி என்பதா?”, என்று எண்ணியவள் “சரி அதை பேசி இப்ப என்ன பண்ண? பேசாம படுங்க மாமா”, என்றாள். 
“இல்லை இப்ப பேசித் தான் ஆகணும். ஏன்னா இனிமே தான் நமக்கு வாழ்க்கை இருக்கு. அதைப் பத்தி பேசணும்”
“சொல்லுங்க”, என்றவளுக்கு தர்மசங்கடமாக இருந்தது. 
“இங்க பாரு சரண்யா, நான் ஒண்ணும் புது மாப்பிள்ளை கிடையாது. உன்னைப் பொருத்த வரை நான் செகனண்ட் தான். ஒரு குழந்தைக்கு தகப்பனும் கூட. ஆனா நீ அப்படி இல்லை. உன் வாழ்க்கை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. நாம தான் இங்க வந்துட்டோம்ல? உனக்கு நான் வேற மாப்பிள்ளை பாத்து கட்டி வைக்கட்டுமா? ஊர்ல உள்ள யாருக்குமே தெரியாது”, என்று அவன் சொன்னதும் அவனை எரித்து விடுவது போல முறைத்தவள் அங்கிருந்து செல்லப் பார்த்தாள். 
அப்போது அவளின் கை பிடித்து நிறுத்தினான் வாசு. “என்னை விடுங்க”, என்று சொல்லி கையை இழுத்துக் கொள்ள முயன்றாள். அவனோ அவள் கையை இறுக்கி பிடித்திருந்தான். கோபமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் முகத்தில் இருந்த பதட்டமும் தடுமாற்றமும் அவளுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. 
அவனுக்கோ அவசரப் பட்டு வாய் விட்டு விட்டோமே என்ற பயம். அவள் மனது புரிந்தும் தான் அப்படி பேசியது தவறு என்று புரிந்தது அவனுக்கு. இன்னும் அவனுடைய கைக்குள் தான் அவள் கை இருந்தது. அவள் கை நடுங்கியதை அவனால் உணர முடிந்தது. அவளின் கோபமும் புரிந்தது. 
அவளின் பஞ்சு போன்ற கையை பிடித்திருப்பது அவ்வளவு இதமாக இருந்தது அவனுக்கு. அவளுடைய மென்மையான தளிர் விரல்கள் அவனுக்கு சுகத்தை தந்தது. 
அவளது கையை விட மனமில்லாமல் நின்றான் வாசு. அவளும் உருவி கொள்ள விரும்ப வில்லை. அதை உணர்ந்தவனுக்கு இதமாக இருந்தது. அவன் மனமும் லேசாக இருந்தது. ஆனால் அவள் மனதோ கொதித்தது. 
“சாரி சரண்யா”
“என்னோட மனசு தெரிஞ்சும் நீங்க அப்படிக் கேட்டது தப்பு மாமா. இது கொஞ்சம் கூட நல்லா இல்லை. யார் இப்படிச் சொன்னாலும் நீங்க இப்படிச் சொல்லக் கூடாது. எனக்கு கஷ்டமா இருக்கு”, என்று சொல்லி விட்டு முகம் திருப்பிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள். 
அதன் பின் அவனிடம் அவள் எதுவுமே பேச வில்லை. அவள் அமைதி அவனை அதிகம் பாதித்தது. அடுத்த நாள் காலை அவன் வேலைக்கு கிளம்பினான். அன்று மாலை எப்போதும் போல் அவன் வரவுக்காக காத்திருந்தாள். 
குழந்தையை மடியில் போட்டுக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். ஆதியோ “இங்கா இங்கா”, என்று சிரித்துக் கொண்டிருந்தான். அந்த காட்சியைப் பார்த்தவாறே உள்ளே வந்தவனிடம் சந்தோஷமாக தாவினான் ஆதி. அவளோ அவன் முகத்தை பார்க்கவே இல்லை.  

Advertisement