Advertisement

அத்தியாயம் 15
மேல் மாடி முற்றத்திலே
உன்னுடன் அமர்ந்து நிலவைக்
கண்ட போது வேணுகானம்
கேட்டேன் நான்!!!
“என்னது தெரியுமா? உனக்கு எப்படி தெரியும்? கோதை அத்தையா சொன்னாங்க?”, என்று ஆச்சர்யமாக கேட்டான் கதிர். 
“ஆமா, அன்னைக்கு போன் பேசினப்ப அத்தை கோபத்துல லைட்டா உளறினாங்க. அப்புறம் ஆதி மேல சத்தியம் பண்ண சொல்லி கேட்டு உண்மையை வாங்கினேன். உனக்கு எப்படி தெரியும் டா?”
“அன்னைக்கு கோதை அத்தையை ஆஸ்பத்திரிக்கு நான் தான் டா வண்டில கூட்டிட்டு போனேன். அத்தை உள்ள இருக்கும் போது நான் வெளிய நின்னேன். அப்ப தான் பிரேமாவை, அவங்க அம்மா கூட பாத்தேன். உடனே கோதை அத்தை கிட்ட சொல்ல தான் போனேன். அப்ப தான் அவங்க நர்ஸ் கிட்ட பேசினதைக் கேட்டேன். அப்புறம் எனக்கு தெரியாத மாதிரி இருந்துட்டேன்”
“என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல டா?”, என்று தளர்ந்து போய்க் கேட்டான் வாசு. 
“இது ஒரு பொண்ணோட வாழ்க்கை பிரச்சனை வாசு. இதை எப்படி நான் உன் கிட்ட பிரியா சொல்ல முடியும்? அப்புறம் நீ சொல்லி தான் உனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிருச்சுன்னே தெரியும். அதுவும் உன் முகத்துல இருந்த சந்தோசமே நான் சொன்னதை நீ நம்புவியான்னு எனக்கு கேள்வியை எழுப்புச்சு”
“அது எப்படி டா உன்னை நம்பாம இருப்பேன்? நீ சொல்லிருக்கலாம் டா”
“இப்ப இப்படி சொல்ற நீ தான் அன்னைக்கு நான் சரண்யா பத்தி பேசினதை நம்ப மாட்டேன்னு சொன்ன. அப்ப பிரேமா பத்தி பேசினதை எப்படி நம்பிருப்ப?”, என்று வாசுவுக்கு ஒரு குட்டை வைத்தான் கதிர். கூடவே கதிர் அந்த விஷயத்தை வாசுவிடம் சொல்லாமல் மறைத்ததுக்கு மற்றொரு காரணம் சரண்யா. 
ஆம், சரண்யாவுக்கு வாசு முறைப் பையன் என்பதால் இருவருக்கும் திருமணப் பேச்சு வந்து விடுமோ என்று ஏற்கனவே பயந்து கொண்டு தான் இருந்தான் கதிர். அதனால் பிரேமா வாசு திருமணம் அவனுக்கு மனதில் ஒரு நிம்மதியைக் கொடுத்தது. அதை எப்படி தடுப்பான். ஆனால் இந்த உண்மையை வாசுவிடம் சொல்ல கதிருக்கு தைரியம் இல்லை. 
“ஆமா, அப்ப சொன்னா நம்பிருக்க மாட்டேன்னு தான் தோணுது”, என்று ஒத்துக் கொண்டான் வாசு. 
“உன்னைக் கஷ்டப் படுத்த நான் இதைப் பேசலை வாசு. அதை மறந்துரு. அந்த சாக்கடையை நினைச்சுட்டு சரண்யா கூட வாழ்க்கையை ஆரம்பிக்காம இருக்காதா டா”
“எப்படி டா மறக்க? அசிங்கமா இருக்கு. யாருக்காவது தெரிஞ்சா என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க டா? ஆதியை கூட என் மகனான்னு பேசுவாங்களே டா?”, என்று சொல்லும் போதே கண் கலங்கி விட்டான் வாசு. 
“சே, என்ன பேச்சு பேசுற? இந்த உண்மை இனி யாருக்கும் தெரியாது. எனக்கு தெரிஞ்சிட்டுன்னு வருத்தப் படாத வாசு. சத்தியமா நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். உங்க வாழ்க்கைக்காக தான் நான் இன்னைக்கு இதைச் சொன்னேன். கலங்காத டா. சரண்யா உன் மேல உயிரையே வச்சிருக்கா. வந்துருக்குற வசந்தத்தை எட்டி உதைச்சிராத” 
“ஹிம், சரி டா”, என்று சொன்ன வாசு வேறு கதை பேச ஆரம்பித்து விட்டான். வெகு நாட்கள் கழித்து நண்பர்கள் இருவரும் சந்தோசமாக கதை பேசிக் கொண்டிருந்தார்கள். 
அதன் பின் காலை உணவின் போது தான் வீட்டுக்கு வந்தான் வாசு. 
அவனைக் கண்டதும் “மாமா எங்க போனீங்க? இவ்வளவு நேரம் நான் வெயிட் பண்ணிட்டே இருக்கேன் தெரியுமா?”, என்று முறைத்துக் கொண்டு கேட்டாள் சரண்யா. 
“எதுக்கு என்னை தேடின? என்னைத் தான் நீ வேண்டாம்னு சொல்லிட்டியே? உனக்கு தான் உன் மகன் மட்டும் போதுமே? என்னை எதுக்கு நீ தேடப் போற? நான் யாரு உனக்கு?”, என்று விரக்தியாக ஒரு மாதிரி குரலில் சொல்லி விட்டு உள்ளே சென்றான். அவன் உதட்டில் இருந்த சிரிப்பு அவள் கண்களில் பட வில்லை. 
அதனால் அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போய் நின்றாள் சரண்யா. 
“பஞ்சாயத்துல சொன்னதை இப்ப வந்து சொல்றான்? நான் விளையாட்டுக்கு தானே சொன்னேன்? அதை சீரியஸா எடுத்துகிட்டானா? எதுக்கு நான் பேசினதுக்கு கோப படுறான்? இவனும் தான் குழந்தைக்காக தான் என்னை கல்யாணம் பண்ணிருக்கான்? அதுக்கு நான் என்ன கோபமா படுறேன்”, என்று யோசித்துக் கொண்டே உள்ளே சென்றவள் “அம்மா, மாமா வந்தாச்சு. இப்பவாது சாப்பாடு தா, பசிக்குது”, என்றாள். 
“கத்தாத டி, வாசு சாப்பிட வாப்பா. அண்ணா நீங்களும் வாங்க”, என்று கோதை அழைத்ததும் அனைவரும் வந்து அமர்ந்தார்கள். 
“என்ன அத்தை, உன் பொண்ணு உர்ருன்னு இருக்கா?”, என்று கேட்டான் வாசு. 
“அப்பவே பசிக்குதுன்னு சொன்னா. நான் நீ வந்த அப்புறம் சேந்து சாப்பிடுங்கன்னு சொன்னேன். அதான்”, என்று சொன்ன கோதை அனைவருக்கும் பரிமாறினாள். 
சாப்பிட்டு முடித்து பின் பக்கம் கைக் கழுவிக் கொண்டிருந்த சரண்யா, வாசு அங்கே வரவும் அவனுக்கு கை கழுவ தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். கைக் கழுவி முடித்தவன் அவளை நெருங்கி நின்றான். 
அவன் செய்கையில் திகைத்து தடுமாறி அவனை பார்த்தாள் சரண்யா. 
“என்ன… மாமா?”, என்ற அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவளை இன்னும் நெருங்கினான். சற்று அசைந்தாலும் இருவரும் மோதி விட கூடும் என்ற நிலையில் இருவரும் நின்றார்கள். அவள் முகத்தையே பார்த்த படி நின்றான் வாசு. 
அவன் பார்வையைத் தாங்க முடியாமல் “மாமா…மாமா… என்ன என்ன வேணும்?”, என்று தடுமாறிய படியே கேட்டாள். 
“கைக் கழுவ தண்ணீர் கொடுத்த சரி, கை துடைக்க துண்டு கொடுத்தியா டி?”, என்று அவன் கேட்டதும் இழுத்து பிடித்த மூச்சை வெளியிட்டவள் “எப்பா, இவ்வளவு தானா? நான் பயந்தே போயிட்டேன். கேட்டா எடுத்து தரப் போறேன். இதுக்கு எதுக்கு இப்படி பயமுறுத்துற? நகரு எடுத்து தரேன்”, என்றாள் சரண்யா. 
ஆனால் அவன் நகராமல் இன்னும் அவளை நெருங்கினான். அவனுடைய மூச்சுக் காற்றை அவள் முகம் உணர்ந்தது.
“மாமா…..”, என்று அவள் குரல் கரகரப்பாக வெளியே வர அவன் கை அவள் இடுப்பில் பதிந்தது. அந்த தொடுகையில் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள் சரண்யா. 
அவள் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. அவளை அந்த நிலையில் கண்ட வாசுவின் மனதில் வெகு நாட்கள் கழித்து காதலின் வசந்தம் வீசியது. 
அவள் உதடுகள் அவனை அழைக்க, அவள் இடையின் மென்மை இழுக்க ஒரு நொடி தன்னையே மறந்தான். ஆனால் அடுத்த நொடி இருக்கும் இடம் நினைவில் வர அவளையே குறுகுறுவென்று
பார்த்தான். 
எதுவுமே நடக்க வில்லை என்றதும் கண்களை மெதுவாக திறந்தாள் சரண்யா. அப்போது அவள் இடையில் சொருகியிருந்த சேலையை எடுத்து கையை துடைத்து விட்டு அவள் திகைத்த பார்வையைக் கண்டு கொள்ளாமலே மீண்டும் அவளின் இடையிலே அதை சொருகினான். 
இமைக்க மறந்து அவனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். “இனி இந்த துண்டே போதும்”, என்று சொல்லும் போது அவன் குரலும் கரகரப்பாக தான் வந்தது. 
“ஆசையா இந்த மாமனைத் தேடின உடனே காதலா தேடிருக்கேன்னு சந்தோஷப் பட்டா, நான் வந்த அப்புறம் தான் சாப்பாடுன்னு சொன்னதுக்கு தான் தேடிருக்க? ஊருக்கு போனதுக்கு அப்புறம் உனக்கு இருக்கு டி”, என்று அவளிடம் முணுமுணுத்து விட்டே அங்கிருந்து சென்றான் வாசு. 
அவன் ஏற்படுத்திய உணர்வலைகளை தாங்க முடியாமல் அங்கிருந்த திண்டில் திகைத்து போய் அமர்ந்திருந்தாள் சரண்யா. அவளால் இந்த நிகழ்வுகளை கடந்து வெளியே வர முடியவில்லை. அவனுடைய இந்த நெருக்கத்திருக்கு என்ன அர்த்தம்? அவன்  தன்னை ஏற்றுக் கொண்டானா என்ற கேள்வி அவளை அலைக்கழித்தது. 
அவன் செய்கை, அவன் முகத்தில் வந்து போன உணர்வுகள், அவன் செய்கையால் தனக்குள் உருவான அதிர்வலைகள் என ஒன்றையுமே அவளால் மறக்க முடியவில்லை. 
அவள் நாடி நரம்பு எல்லாம் வாசுவே நிறைந்திருந்தான். 
“ஏட்டி, அங்க குழந்தை அழுதுட்டு இருக்கு. நீ என்ன கனா கண்டுட்டு இருக்க? போய் அவனைத் தூக்கு போ”, என்று கோதை விரட்டவும் தான் அங்கிருந்து சென்றாள் சரண்யா. ஆனாலும் வாசுவை அவள் நிமிர்ந்து பார்க்கவே இல்லை. அவளால் பார்க்கவும் முடியவில்லை. ‘
அவளுடைய அந்த வெட்கத்தை அவனும் ரசித்தான். அதன் பின் வந்த நாட்களிலும் சரண்யா அவனை நிமிர்ந்து பார்க்க வில்லை. ஆனாலும் அவன் பார்வை தன்னை தொடர்வதை அவளால் உணர முடிந்தது. 
அவளுக்கு அவனுடைய அந்த மாற்றம் பிடித்திருக்கிறது தான். ஆனால் அவளால் அதை ஏற்றுக் கொள்ள தான் முடியவில்லை. 
அவனிடம் எதனால் இந்த மாற்றம் வந்தது என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. 
ஒரே அறைக்குள் இருவரும் இருந்தாலும் அவள் அவனை நிமிர்ந்து பார்க்க வில்லை. பார்க்க வேண்டும் என்று நினைத்தாலும் அவளுக்கு படபடப்பாக இருந்தது. 
ஆனால் அவனுக்கு தேவையான அனைத்தையும் கவனித்தாள். அவளுக்குள் இருந்த ஒதுக்கத்தை அவன் கண்டு கொண்டான். 
அது போவதற்கு அவளிடம் மனது விட்டு பேசுவது ஒன்று தான் தீர்வு என்பது அவனுக்கு புரிந்தது.
ஊருக்கு சென்ற பின்னர் தான் பேச வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான். அவனுக்குமே சில குழப்பங்கள் மனதில் இருக்கத் தான் செய்தது. 

Advertisement