Advertisement

“பேசாம கோதை பெரியம்மா வீட்ல சொல்லிறுவோம் பா. அவங்க கூப்பிட்டா வருவாங்க”
“நாட்டாமை சொன்னதைக் கேட்ட தானே? அவங்களும் கூப்பிட மாட்டாங்க. இவரும் போவாரான்னு தெரியலை”
“சொல்லிப் பாப்போம் பா. இல்லைன்னா நைட் நான் மாமா கூட இருக்கேன்”
“சரி நான் கோதை கிட்ட போய் சொல்லிட்டு வரேன். நீ வாசுக்கு ஒரு வார்த்தை நடந்ததைச் சொல்லிரு நிரஞ்சா”, என்று சொல்லி விட்டு கோதை வீட்டுக்கு சென்றார் கிரிதரன். 
அவர் சென்றதும் வாசுவை போனில் அழைத்தான் நிரஞ்சன். வாசுவிடம் பேசி வெகு நாட்கள் ஆகி விட்டதால் அவனிடம் பேச என்னவோ போல இருந்தது நிரஞ்சனுக்கு. பிரேமா இறந்த பிறகு சரண்யாவைத் திருமணம் செய்தது நிரஞ்சனுக்கு பிடிக்காததால் வாசுவிடம் பேசுவதை தவிர்த்து விட்டான் நிரஞ்சன்., 
ஒரு இரண்டு முறை வாசுவே அழைக்கும் போது நிரஞ்சன் போனை எடுக்கவே இல்லை. இப்போது அந்த தவறு நிரஞ்சனை உறுத்தியது. 
போனை எடுத்த வாசு காதில் வைத்து விட்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். 
“மாப்பிள்ளை”, என்று அழைத்தான் நிரஞ்சன். 
“ஓ இன்னைக்கு தான் நான் உனக்கு மாப்பிள்ளையா தெரியுறேனா? நாம ரெண்டு பேரும் உன் தங்கச்சியை கல்யாணம் முடிக்கிறதுக்கு முன்னாடில இருந்தே மாமன் மச்சான் தான். அப்படி பழகின என்னை ஒதுக்கி வச்சவன் தானே நீ? இப்ப மட்டும் என்ன போனு?”
“என்னை மன்னிச்சிரு மாப்பிள்ளை. அது பிரேமா இடத்துல….”
“உன் கோபத்தை நான் தப்பு சொல்லலை. ஆனா அதுக்கு என்கிட்ட விளக்கம் கேக்க கூட உனக்கு மனசில்லைல? அந்த அளவுக்கு நான் பொண்டாட்டிக்காக அலையுறேனா?”
“ஐயோ அப்படி இல்லை”
“அதை விடு. இப்ப எதுக்கு போன் பண்ணின? அதை மட்டும் சொல்லு”
‘இன்னைக்கு இங்க பிரச்சனை….”
“தெரியும்”
“சரண்யா சொன்னாளா?”
“இல்லை, நான் அவ கிட்ட இங்க வந்ததுக்கு அப்புறம் பேசினதே இல்லை”
“என்ன????”
“ஆமா, அவ என்ன நான் ஆசைப் பட்டு கட்டிக்கிட்ட பொண்டாட்டியா? அவ கிட்ட பேச? குழந்தைக்காக கட்டிக்கிட்டவ தானேன்னு நினைச்சு தான் அவ கிட்ட இது வரை நான் பேசலை. ஆனா பேசிருக்கணும்னு இப்ப தான் தோணுது”
“அப்ப யாரு உனக்கு சொன்னா?”
“உன் பொண்டாட்டி தான். அப்படியே நடந்த கதையை மாத்தி சொல்லி என்னை நம்ப வச்சா?”
“ஓ, மாமா ரோட்ல படுத்துட்டு வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்றார்”
“அவர் எனக்கு சொன்ன அறிவுரையை நான் கேக்கலை. இப்ப அவருக்கு அறிவுரை சொல்லுற தகுதி எனக்கு இல்லை. அவர் இஷ்டத்துக்கே விட்டுருங்க. நான் கூடிய சீக்கிரம் வரப் பாக்குறேன். அப்ப பேசிக்கலாம். இதுக்கு மேலயும் சரண்யாவுக்கு உன் அம்மா, உன் அத்தை, உன் பொண்டாட்டியால எந்த ஆபத்தும் வரக் கூடாது. இனியாவது கவனமா இருப்பேன்னு நம்புறேன். வைக்கிறேன்”, என்று சொல்லி வைத்து விட்டான். 
“கடைசி வரை சரண்யாவை எதுக்கு கட்டிக்கிட்டான்னு சொல்லாம வச்சிட்டானே?”, என்று எண்ணிக் கொண்டு அங்கேயே அமர்ந்து விட்டான் நிரஞ்சன். 
அதே நேரம் வீட்டு வாசல் படியில் வந்து நின்ற கிரிதரனைப் பார்த்து திகைத்துப் போனாள் கோதை. 
“ஐயோ, இவர் பொண்டாட்டியும் தங்கையும் பேசினது பத்தாதுன்னு இவர் வேற வந்துருக்காரே? யாரும் என்னையும் என் மகளையும் நிம்மதியா இருக்க விட மாட்டாங்களா?”, என்று எண்ணிக் கொண்டே “வாங்க”, என்று மட்டும் சொன்னாள் கோதை. 
“கோதை, வைதேகியும் வள்ளியும் பேசினதுக்கு நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் மா. அது மன்னிக்கிற விஷயமும் இல்லை. நான் இப்ப அதைப் பத்தி பேச வரலை. மாப்பிள்ளை பத்தி தான் பேச வந்தேன்”
“இவர் மாப்பிள்ளைன்னு யாரைச் சொல்றார்? அண்ணனைச் சொல்றாரா வாசுவைச் சொல்றாரான்னு தெரியலையே”, என்று குழம்பினாள் கோதை. 
“மாப்பிள்ளை கோயில் மரத்தடில அநாதை மாதிரி படுத்திருக்கார் மா”
“ஐயையோ என்ன சொல்றீங்க? அண்ணன் எதுக்கு அங்க படுக்கணும்?”
“கோபம் தான். அவர் வீட்டுக்கும் போக மாட்டிக்கார். எங்க வீட்டுக்கும் வர மாட்டிக்கார். நைட் முழுக்க பனில கிடந்தா ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிறப் போகுதும்மா. நீ கூப்பிட்டா வருவார். வந்து அவரை வீட்டுக்கு கூப்பிடு மா”, என்று சொன்னதும் அவருடன் கிளம்பினாள் கோதை. 
அவர் சொன்னது போல அநாதை மாதிரி தான் படுத்து கிடந்தார் சீனிவாசன். என்ன இருந்தாலும் தன்னை வாழ வைத்த அண்ணன் அல்லவா? அதனால் அவருடைய அந்த நிலை கோதையை நிலை குலைய வைத்தது. 
“அண்ணே என்ன இது? எதுக்கு இப்படி இருக்கீங்க? எந்திரிங்க முதல்ல”, என்று சொன்னாள் கோதை. 
“நான் செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் மா. எனக்கு இது தேவை தான்”, என்று தளர்ந்து போய் சொன்னார் சீனிவாசன். 
“நீங்க வேணும்னு செய்யலை. விதி அப்படி ஆகிருச்சு”
“விதி எல்லாம் ஒண்ணும் கிடையாது. நான் தான் என் சரண்யா வாழ்க்கையை கெடுத்துட்டேன். நல்லா வாழ வைக்கணும்னு ஆசைப் பட்டு அவளை புதை குழில தள்ளிட்டேன்”
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைண்ணே. முதல்ல எந்திரிச்சு வீட்டுக்கு போங்க. எதுன்னாலும் அப்புறம் பேசிக்கலாம்”
“வீட்டுக்கா, அதுவும் அந்த பிடாரிங்க இருக்குற வீட்டுக்கா? நான் போக மாட்டேன். செத்தாலும் நான் அந்த வீட்டு படி ஏற மாட்டேன்”
“இப்படி இருந்தா எதுவும் மாறாதுண்ணே”
“மாறாது தான். ஆனா மனசுக்கு நிம்மதி கிடைக்கும்”
“சரி நம்ம வீட்டுக்கு வந்துருக்கலாம்ல? இப்படி அநாதை மாதிரி கிடக்கணுமா?”
“நீ தான் உன் வீட்டுக்கு வரக் கூடாதுன்னு சொல்லிட்டியே?”, என்று பரிதாபமாக சொன்னார் சீனிவாசன். 
“கோபத்துல சொல்லிட்டேண்ணே. மன்னிச்சிருங்க. இப்ப எந்திச்சு வீட்டுக்கு வாங்க”, என்று கோதை சொன்னதும் தான் எழுந்தார். 
ஆனாலும் “நான் வரலை, என்னால சரண்யா முகத்தை பாக்க முடியாது. எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு”, என்று அவளுடன் போக மறுத்தார். 
பின் கிரிதரன், நிரஞ்சன் அனைவரும் சொன்னதும் தான் கோதையுடன் எழுந்து சென்றார். கிரிதரனும் நிரஞ்சனும் தங்களின் வீட்டுக்கு சென்றார்கள். 
வீட்டுக்கு சென்ற சீனிவாசன் சரண்யா நிலையைக் கண்டு அழுது கொண்டே இருக்க அவருக்காக தன்னை தைரியமாக காட்டிக் கொண்டாள் சரண்யா. 
அடுத்த நாள் அனைவருக்கும் சோகத்திலே கடக்க அதற்கு அடுத்த நாள் ஊரில் காலை வைத்தான் வாசு. 
பஸ்ஸில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடக்கும் தூரத்தில் ஆள் ஆளுக்கு அவனை துக்கம் விசாரிப்பது போல அவனுடைய வீட்டில் நடந்த விஷயங்களை அலசினார்கள். 
அதில் அவமானமாக உணர்ந்தான் வாசு. அவன் வீட்டுக்கு கூட முதலில் செல்லாமல் அவன் போய் நின்றது ஊர் நாட்டாமை வீட்டில் தான். 
அவனை வரவேற்றவர் மீண்டும் நடந்த விஷயங்களை அவனிடம் புட்டு புட்டு வைத்தார். 
அனைத்தையும் கேட்ட வாசு “ஊர் பஞ்சாயத்தைக் கூட்டுங்க. அங்க வச்சு எல்லாமே பேசி முடிச்சிக்கலாம்”, என்றான். 
“வாசு, இது குடும்ப விஷயம். இதுக்கு பஞ்சாயத்து தேவையா?”
“இது குடும்ப விஷயம் தான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா இன்னைக்கு மொத்த ஊருமே என்னோட குடும்ப விஷயத்தை தான் அலசி ஆராஞ்சிட்டு இருக்கு. அப்படி இருக்கும் போது நாலு சுவத்துக்குள்ள முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லாருக்குமே எல்லாம் தெரியட்டும்”
“சரிப்பா, நான் ஊர்க் கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுறேன்”
“சரி, நான் கிளம்புறேன்”
“சரண்யாவை பாக்க போகலையாப்பா?”
“இல்லை, முதல்ல பிரச்சனையை முடிச்ச அப்புறம் அவ கிட்ட பேசிக்கிறேன். ஒரு டம்ளர் தண்ணி மட்டும் தாங்க”, என்று அவன் கேட்டதும் அவருடைய மனைவி தண்ணீர் கொடுத்தார். 
அதன் பின் நேரடியாக அவர்கள் வீட்டுக்கு தான் சென்றான். கதவைத் தட்டும் சத்தத்தில் கதவைத் திறக்க வந்த வந்தனா அங்கு நின்ற வாசுவை சத்தியமாக எதிர் பார்க்கவே இல்லை. 
“அண்ணே, நீ வறேன்னு சொல்லவே இல்லை. வா வா உள்ள வா. அம்மா, அத்தை யார் வந்துருக்கான்னு பாருங்க”, என்று அதிகமாக ஆர்ப்பரித்தாள். 
வள்ளியும், வைதேகியும் அங்கே வந்து அவனை பாசமாக வரவேற்றார்கள். முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் அமைதியாக இருந்தான் வாசு. அவனுடைய அமைதியை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு மீண்டும் சரண்யா பற்றி அவதூறாக பேச ஆரம்பித்தார்கள். 
“என்ன வாசு நாங்க பேசிட்டே இருக்கோம்? நீ அமைதியாவே இருக்க? அடுத்து என்ன செய்யப் போற?”, என்று கேட்டாள் வைதேகி. 
“என்ன செய்யலாம்னு நீங்களே சொல்லுங்க”, என்று புயலை உள்ளடக்கிய குரலில் சொன்னான் வாசு. 
“அந்த சரண்யா நம்ம வீட்டுக்கு வேண்டாம் பா. அவளை வெட்டி வீட்டுடலாம். குழந்தையை நாங்க வளக்குறோம். இல்லைன்னா உனக்கு வேற நல்ல பொண்ணைப் பாத்து கட்டி வைக்கிறோம்”
“நல்ல முடிவு தான். சரி இப்ப கொஞ்ச நேரத்துல பஞ்சாயத்தை கூட்ட சொல்லிருக்கேன். அங்க போய் நீங்க சொன்னதை செஞ்சிருவோம்”, என்று வாசு சொன்னதும் மூவருக்கும் நிம்மதியாக இருந்தாலும் “இதுக்கு எதுக்கு பா பஞ்சாயத்து எல்லாம்? நாமளே பேசி முடிக்கலாம்ல?”, என்றாள் வைதேகி. 
“பேசி முடிக்கும் போது ஊரு சனம் எல்லாருமே இருக்கட்டும். அப்ப தான் நாளைக்கு எந்த பிரச்சனையும் வராது”
“நீ சொல்றது நல்லது தான் பா. சரி சரி மேல போய் உன் மகனைப் பாரு. அந்த பச்ச குழந்தையை கூட கண்டுக்காம போய்ட்டாளே”, என்று வைதேகி திட்ட ஆரம்பிக்கும் போதே வாசு மாடியேறினான்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் அவன் மகன் ஆதி தேவ். அவனைக் கண்டதும் அள்ளி அணைக்க ஆசை இருந்தாலும் அவனுடைய தூக்கத்தை கலைக்க வேண்டாமே என்று எண்ணி குளிக்க சென்றான். 
அதே நேரம் “கோதையக்கா கோதையக்கா”, என்று வெளியே நின்று அழைத்தாள் விஜி என்ற பெண்மணி. 
“அம்மா சாதம் வடிச்சிட்டு இருக்காங்க அக்கா. என்ன விஷயம்?”, என்று கேட்டாள் சரண்யா. 
“சரண்யா, உன் வாசு மாமா வந்துருக்கான் டி”
“என்னக்கா சொல்றீங்க?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் சரண்யா. 
“ஆமா ஏழு மணி பஸ்ல தான் வந்துருக்கான். எங்க மாமா பாத்துருக்கார்”, என்று சொல்லி விட்டு அவள் சென்றதும் புன்னகை முகமாக வீட்டுக்குள் சென்றாள் சரண்யா. 
அவள் முகத்தில் இருந்த புன்னகை கோதைக்கு திகைப்பைக் கொடுத்தது. 
“என்ன ஆச்சு சரண்யா? வெளிய யாரு?”
“நம்ம விஜி அக்கா மா”
“அவளுக்கு என்னவாம்?”
“வாசு மாமா ஊர்ல இருந்து வந்துருக்காராம் மா. நான் போய் பாத்துட்டு வரட்டா?”, என்று சரண்யா கேட்டது தான் தாமதம் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை வைத்தாள் கோதை. 
அந்த காட்சியைக் கண்ட படி வெளியே வந்த சீனிவாசனும் திகைத்து தான் போனார். 
காதல் தொடரும்…

Advertisement