Advertisement

அத்தியாயம் 12
பனித்துளி போன்ற கோபம்
சூரியான உன்னைக் கண்டதும்
விலகி விடுகிறது!!!
“அது தாண்டி எனக்கும் தெரியலை. இந்த மனுசனை இன்னும் காணும்? அவரோட தொங்கச்சி வீட்டுக்கு தான் போயிருப்பார். கழுதை கெட்டா குட்டிச்சுவர். கொஞ்ச நேரம் பாப்போம்”, என்றாள் வைதேகி. 
குழந்தை வேறு சரண்யாவின் பரிசத்தை தேடி அழுது கொண்டிருந்தான். எவ்வளவு சமாதானப் படுத்தினாலும் அவன் அழுகை நிற்கவே இல்லை. வந்தனா குழந்தையுடன் போராடிக் கொண்டிருந்தாள். அவன் அழுததால் வர்ஷினியும் அழுது கொண்டே இருந்தாள். 
வள்ளி தான் வர்ஷினியை சமாதானம் செய்து கொண்டிருந்தாள். ஆக மொத்தத்தில் அந்த இரண்டு வாண்டுகளும் மூன்று பெண்களுக்கு தலை வலியைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். 
அடுத்த ஒரு மணி நேரம் சென்ற பின்னரும் சீனிவாசன் வீட்டுக்கு வரவில்லை என்றதும் “வந்தனா அப்பாக்கு போனை போடு, எங்க தான் போய் தொலைஞ்சாரோ?”, என்றாள் வைதேகி. 
உடனே வந்தனா அவரை அழைத்தாள். அவரோ அவள் போனை எடுக்கவே இல்லை. மீண்டும் மீண்டும் அழைத்தாலும் அவர் எடுக்கவே இல்லை. 
“அப்பா எடுக்கவே மாட்டிக்கார் மா”
“அப்படியா? இந்த மனுஷன் சும்மா வீம்புக்குன்னு பண்ணிக்கிட்டு கிடப்பார். இரு கோதை வீட்ல இருக்காரான்னு கேப்போம்”
“அத்தைக்காமா போன் பண்ண போற?”
“அவ கிட்ட ஏது போன்? இனி அவ என்கிட்ட பேச கூட மாட்டா. அந்த அளவுக்கு அவ மகளை படுத்தி வச்சிருக்கோம்ல? அவ எதுத்த வீட்ல தான் நம்ம தூரத்து சொந்தம் சவுந்தரி இருக்கா. அவ கிட்ட கேக்குறேன்”, என்று சொல்லி அவளை அழைத்து சீனிவாசன் அங்கே இருக்கிறாரா என்று கேட்டாள். 
“அண்ணன் இங்க வரவே இல்லையே மதினி. கோதை அக்காவும் சரண்யாவும் தான் இருக்காங்க. இருந்தாலும் அந்த பொண்ணை நீங்க அப்படி பேசிருக்க கூடாது மதினி”, என்றாள் சவுந்தரி. 
“உன் கிட்ட உங்க அண்ணனை பத்தி கேக்க தான் போன் போட்டேன். வேற எதுவும் பேச இல்லை. வை போனை”, என்று முகத்தில் அடிப்பது போல சொல்லி விட்டு வைத்து விட்டாள் வைதேகி. 
“அப்பா அங்க தான் இருக்காரா மா?”, என்று கேட்டாள் வந்தனா. 
“இல்லையாம் டி. இந்த மனுஷன் எங்க போனாருன்னு தெரியலையே”
“பதறாத வைதேகி, உங்க அண்ணன் கிட்ட சொல்லி அண்ணனைத் தேடச் சொல்லுவோம்”, என்று சொன்ன வள்ளி கிரிதரனிடம் சீனிவாசனைக் காண வில்லை என்ற விஷயத்தை மட்டும் சொன்னாள். 
“மாப்பிள்ளை எங்க போனாரு?”, என்று பதறிய கிரிதரனும் நிரஞ்சனிடமும் சொல்லி விட்டு தானும் தேடினார். 
அவர்கள் சீனிவாசனை தேடுவதைக் கண்ட ஒரு ஆள் அவர் கோயில் மரத்தடியில் இருப்பதாக சொன்னதும் கிரிதரனும் நிரஞ்சனும் அங்கே சென்றார்கள். அங்கே ஏதோ பரிதாபமான தோற்றத்தில் இருந்தார் சீனிவாசன். ஒரு நாளில் இவ்வளவு உருக்குலைந்து போக முடியுமா ஒருவரால்? அப்படி இருந்தது அவரின் தோற்றம். 
“மாப்பிள்ளை, என்ன இங்க வந்து படுத்துருக்கீங்க? முகமெல்லாம் வேற ஒரு மாதிரி இருக்கு?’’, என்று கேட்டார் கிரிதரன். 
“மாமா உங்களுக்கு என்ன ஆச்சு? இந்நேரம் வரை வீட்டுக்கு போகாம இங்க படுத்துருக்கீங்க?”, என்று கேட்டான் நிரஞ்சன். 
“என் மகனுக்கு ஒரு வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கணும்னு ஆசைப் பட்டது தப்பாயா? மொத்தக் குடும்பமும் சேந்து இப்படி பண்ணிட்டீங்களே? நீங்க நல்லா இருப்பீங்களா?”, என்று தளர்ந்து போய் கேட்டார் சீனிவாசன். 
“மாமா என்ன ஆச்சு? எதுக்கு என்னவோ போல பேசுறீங்க?”, என்று கேட்டான் நிரஞ்சன். 
“இனி என்னை அப்படிக் கூப்பிடாத. உன் அத்தையைக் கட்டினதுக்கு நான் வெக்க படுறேன். உன் பொண்டாட்டியை பெத்த பாவத்துக்கு வேதனை படுறேன். பொண்டாட்டி பிள்ளையே இல்லைன்னு ஆன அப்புறம் எப்படி மாமா உறவு வந்துச்சு? இனி என்னை அப்படி கூப்பிடாத”
“என்னல்லாமோ பேசுறீங்களே மாமா”
“மாப்பிள்ளை உங்களுக்கு என்ன தான் ஆச்சு?”, என்று கேட்டார் கிரிதரன். 
“என்ன நடந்ததுன்னு உங்க பொண்டாட்டி கிட்டயும் உங்க மருமக கிட்டயும் கேளுங்க மச்சான். இல்லைன்னா உங்க கூட ஒரு பீடை பிறந்துச்சே, அது கிட்ட கேளுங்க”
“மச்சான், என் கிட்டயே வைதேகியை இப்படி பேசுறது நல்லா இல்ல”
“ஓஹோ கோபம் வருதா? ஒரு வார்த்தை சொன்னதுக்கே இப்படியா? உங்க தங்கச்சியை சொன்னா உங்களுக்கு ரோஷம் வரும். ஆனா உங்க பொண்டாட்டியும் தங்கையும் சேந்து என் தங்கையை எத்தனை தடவை அசிங்க படுத்திருக்காங்க. ஒரு தடவை கேட்டீங்களா நீங்க?”
“இப்ப எதுக்கு மாப்பிள்ளை பழைய கதை எல்லாம் பேசிக்கிட்டு?”
“பழைய கதையா? இன்னைக்கு நடந்த கதை தான். உங்க தங்கை என்ன பேச்சு பேசி என் மருமகளை வீட்டை விட்டு விரட்டிருக்கா தெரியுமா? இதுக்கு உங்க பொண்டாட்டியும் உங்க மருமகளும் உடந்தை. ஊர்ல உள்ளவங்க கிட்ட போய் கேட்டுப்பாருங்க. இன்னைக்கு நம்ம வீட்ல நடந்ததை பாத்து தான் ஊரே கை கொட்டி சிரிக்குது”
“என்ன சரண்யாவை  வீட்டை விட்டு அனுப்பிட்டாங்களா? மாப்பிள்ளை நீங்க என்ன சொல்றீங்க?”
“ஆமா, அதுவும் சும்மா அனுப்பலை. அவளை அவமானப் படுத்தி அசிங்க படுத்தி, அவளோட மானத்தை கப்பலேத்தி அனுப்பிட்டாங்க”
“நீங்க முதல்ல வீட்டுக்கு வாங்க மாமா. நான் எல்லாரையும் கேக்குறேன். சரண்யாவை நாங்க கூட்டிட்டு வரோம்”, என்றான் நிரஞ்சன். 
“வீட்டுக்கா? யார் வீட்டுக்கு? நான் அந்த வீட்டுக்கு வரதா இல்லை. அந்த மூணு ராட்சசிங்களையும் நான் பாக்குறதா இல்லை. நான் ரோட்டுலே இருந்துக்குறேன்”
“மாப்பிள்ளை அது உங்க வீடு”, என்றார் கிரிதரன். 
“வேண்டாம், எனக்கு வேண்டாம்., கண்ட சனியங்க முகத்தில் நான் முழிக்க கூட வேண்டாம். இவ்வளவு பெரிய ஊர்ல ஒரு வேளைச் சாப்பாடை யாராவது பிச்சை போட மாட்டாங்களா என்ன? அப்படி இல்லைன்னா பட்டினி கிடந்து சாவேன். ஆனா அந்த மூணு பிடாரிங்க கிட்ட இருந்து பச்ச தண்ணி கூட வாங்கி குடிக்க மாட்டேன். போங்க இங்க இருந்து”
“மாப்பிள்ளை, ஏன் இப்படி வீம்பு பண்ணுறீங்க? நான் தான் கேக்குறேன்னு சொல்றேன்ல?”
“ஓஹோ, நான் வீம்பு பண்ணுறேனா? இத்தனை நாள் உங்க தங்கச்சியை ஒரு வார்த்தை கேட்டுருக்கீங்களா? இன்னைக்கு மட்டும் கேக்குறேன்னு வந்து நிக்குறீங்க? நீங்களே என்னைக்காவது என்னை மதிச்சிருக்கீங்களா?”
“என்ன மாப்பிள்ளை இப்படி எல்லாம் பேசுறீங்க?”
“உண்மையை தானே சொல்றேன். என்னைக்கு நீங்க என்னை மதிச்சிருக்கீங்க? வாசுவுக்கு பிரேமாவை கட்டி வைக்க எனக்கு துளி கூட விருப்பம் கிடையாது”
“மாப்பிள்ளை…”
“நான் முழுசும் சொல்லிறேன். ஆனாலும் நான் அவங்க கல்யாணத்தை ஏத்துகிட்டேன். என்னோட மகனுக்காக நான் வாயை மூடிட்டு இருந்தேன். ஆனா நீங்களும் உங்க தங்கச்சியும் சேந்து கல்யாணம் பேசி முடிச்சீங்களே? ஒரு வார்த்தையாவது எனக்கு சம்மதமான்னு கேட்டீங்களா? உங்க தங்கச்சி சொன்னா போதும்? உங்க தங்கச்சியை கட்டிருக்குற மாப்பிள்ளையா கேக்க வேண்டாம். அப்படித் தானே? வாசுவோட அப்பா அப்படிங்குற காரணத்துக்காகவது என் கிட்ட நீங்க கேக்கணுமா இல்லையா?”
“மாப்பிள்ளை…..”
“மரியாதையா இங்க இருந்து போயிருங்க. இல்லைன்னா இருக்குற கடுப்புல ஏதாவது அசிங்கமா பேசிருவேன். பொண்டாட்டியோட அண்ணன்னும் பாக்க மாட்டேன். பொண்ணைக் கட்டிக்கிட்ட மருமகன்னும் பாக்க மாட்டேன். எனக்கு இனி யாரும் இல்லை. போங்க இங்க இருந்து”, என்று அவர் கத்தியதும் அவர்கள் கிளம்பிச் சென்றார்கள். 
“நிரஞ்சன், என்னப்பா இதெல்லாம்? உன் மாமா என்னல்லாமோ பேசுறார்”, என்றார் கிரிதரன். 
“எனக்கும் ஒண்ணும் புரியலைப்பா. அம்மாவும் வந்தனாவும் இங்க வந்து இருக்குறதே எனக்கு பிடிக்கலை. பேரனைப் பாக்கணும்னு சொன்னதுனால தான் நான் பெருசா எடுக்கலை. ஆனா வேற என்னமோ நடந்துருக்கே”, என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் எதிரே வந்த ஊர் நாட்டாமை நடந்ததை பிட்டு பிட்டு வைத்தார். 
நடந்ததைக் கேட்டு இரு ஆண்களும் அதிர்ந்து தான் போனார்கள். இருவருமே இந்த அளவுக்கு வந்திருக்கும் என்று எதிர் பார்க்க வில்லை. அதே கோபத்தோடு வீட்டுக்கு சென்றவர்களிடம் “அண்ணே, உன் மாப்பிள்ளையை பாத்தியா?”, என்று கேட்டாள் வைதேகி. 
“அவரை பாக்குறதை இருக்கட்டும். இங்க என்ன நடந்தது வைதேகி?”, என்று கேட்டார் கிரிதரன். 
“அது ஒரு பெரிய கதை, அந்த சரண்யா பால் காரன் கூட..”
“சீ வாயை மூடு. நீயெல்லாம் என் கூட பிறந்தவளா? அந்த பொண்ணு மேல பழியை போட்டுருக்கீங்க? கொஞ்சம் திமிரா தான் நீ எப்பவும் இருப்ப. ஆனா இவ்வளவு கேவலமானவளா இருப்பேன்னு எதிர் பாக்கலை”, என்று கிரிதரன் சொன்னதும் அவருடைய கடுமையான பேச்சில் விக்கித்து போனாள் வைதேகி. 
“எதுக்கு வைதேகியை திட்டுறீங்க? நாங்களும்தான் பாத்தோம். அந்த சரண்யா….”, என்று சொன்ன வள்ளியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை அறைந்தார் கிரிதரன். அதை நிரஞ்சன் கூட தடுக்காமல் இருக்க  மேலும் நான்கு அரை விட்டார். 
திருமணம் ஆகி இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட கிரிதரன் வள்ளியிடம் முகம் சுழித்ததில்லை. இன்று அவர் பேச்சில் இருந்த கடுமையே அவளுக்கு திகைப்பு என்றால் அவர் அடித்த அடியில் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றாள் வள்ளி. 
“அத்தான் நீங்க என்ன அமைதியா பாத்துட்டு இருக்கீங்க? மாமா அத்தையை அடிக்கிறார். நீங்க தடுக்காம பாத்துட்டு இருக்கீங்க?”, என்று வந்தனா சொல்ல நிரஞ்சனோ அவளை யார் நீ என்ற அன்னியப் பார்வையை பார்த்தான். 
அந்த பார்வையில் விக்கித்து போனாள் வந்தனா. எப்போதும் அவளைக் காணும் போதெல்லாம் அவன் கண்களில் காதல் தெறிக்கும். இப்போது அவன் முகத்தில் இருக்கும் வெறுப்பை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. 
“அத்தான்”, என்று அதிர்ச்சியாக அழைத்தாள் வந்தனா. 
“அடச்சி வாயை மூடு. உன்னை எல்லாம் காலுல போட்டு மிதிக்க தான் ஆசை. ஆனா அதுக்கு என் கால் கூட உன்னைத் தொடக் கூடாதுன்னு நினைக்கிறேன்”
“அத்தான்…”
“உன்னை வாயை மூடுன்னு சொன்னேன். நான் விரும்பின வந்தனா தேவதை மாதிரி. இப்படி சகுனி வேலை எல்லாம் அவளுக்கு செய்ய தெரியாது. என் மனைவி செத்துட்டா. நீ ஒரு பேய். .உன் கூட தான் நான் வாழ்ந்தேன்னு நினைக்கும் போது எனக்கு அருவருப்பா இருக்கு”
“அத்தான் இப்படி பேசாதீங்க. எனக்கு கஷ்டமா…..”
“வாயை மூடுன்னு சொன்னேன்?”
“ஆள் ஆளுக்கு வந்து எங்களை மிரட்டுறீங்க? நாங்க என்ன டா செஞ்சோம்? வந்தனாவை எதுக்கு டா மிரட்டுற? என் கிட்ட பேசு”, என்று சொன்னாள் வள்ளி.
“உனக்கு மட்டும் என்ன? நீயும் வாயை மூடு. இனி நீ எனக்கு அம்மாவே கிடையாது”, என்றான் நிரஞ்சன். 
“நிரஞ்சா….”
“பேசாத. உன் வயித்துல பிறந்ததுக்கு நான் வெக்க படுறேன். ஒரு பொண்ணை தப்பா பேச எப்படி உங்களுக்கு மனசு வந்தது. உன் கெட்ட மனசுக்கு தான் வாழ வேண்டிய வயசுல உன் பொண்ணு போய் சேந்துட்டா”
“விடு நிரஞ்சா, இதெல்லாம் விஷ செடி. வெட்ட வெட்ட வளரத் தான் செய்யும். நாம தான் ஒதுங்கி போகணும். இங்க பாரு வள்ளி, இனி நீ இங்க தான் இருக்குற. இல்லைன்னா உன் பிறந்த வீட்டுக்கு போ. உன் அண்ணன் பொண்டாட்டி காலுல போட்டு உன்னை மிதிப்பா. அப்ப தான் உனக்கு உண்மையான உறவுகளோட அர்த்தம் தெரியும். அங்கயும் உனக்கு இடம் இல்லைன்னா செத்துப் போ. இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  புருஷன் மகன்னு சொல்லிகிட்டு வீட்டுப் பக்கம் வந்த செருப்பை கழட்டி அடிச்சு விரட்டுவேன். வந்தனா உனக்கும் தான். என் மகன் உன்னை பொண்டாட்டியா ஏத்துகிட்டாலும் நான் உன்னை என் மருமகளா ஏத்துக்க மாட்டேன். இனி மாப்பிள்ளை கூட இந்த வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டார். இனி மூணு பேரும் எந்த குடும்பத்தை கெடுக்கலாம்னு சுதந்திரமா திட்டம் போடுங்க. அது தான் உங்களுக்கு கை வந்த கலையாச்சே. இனி உங்க முகத்துல கூட நாங்க முழிக்க விரும்பலை. வா டா போகலாம்”, என்று சொல்லி விட்டு கிளம்பினார் கிரிதரன். நிரஞ்சனும் மூவரையும் பார்த்து து என்று துப்பி விட்டே அங்கிருந்து சென்றான். 
“என்னங்க… அத்தான்…. அண்ணே”, என்ற அவர்களின் குரல் கேட்டும் கண்டு கொள்ளாமல் சென்றார்கள். மூன்று பெண்களும் அதிர்ந்து போய் அதே இடத்தில் அமர்ந்தார்கள். 
சரண்யாவுக்கு வைத்த ஆப்பில் அவர்களே ஏறி அமர்ந்து கொண்டது போல இருந்தது அவர்களின் நிலை. 
இங்கிருந்து சென்ற கிரிதரனும், நிரஞ்சனும் மீண்டும் சீனிவாசனை காணச் சென்றார்கள். அவர் அதே இடத்தில் தான் இருந்தார். அவரை தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்தார்கள். அவர் பிடிவாதமாக மறுத்து விட்டார். 
“இப்ப என்ன செய்ய நிரஞ்சா உன் மாமா இப்படி ரோட்ல கிடந்தா எல்லாரும் என்ன சொல்லுங்க. உடம்பு சரியில்லாத மனுஷன் வேற. உடம்புக்கு ஏதாவது வந்துச்சுன்னா என்ன செய்றது?”, என்று கேட்டார் கிரிதரன். 

Advertisement