Advertisement

“பிரேமா பத்தி ஏதோ சொன்னீங்க? அது உண்மையா? அந்த பொண்ணு தப்பான பொண்ணா?”, என்று வசந்தா கேட்டதும் மானசீகமாக தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டாள் கோதை. 
கோபத்தில் பிரேமா பற்றி உளறியது வசந்தா சொன்னதும் தான் கோதைக்கு உரைத்தது. “ஐயையோ, கண்ணு மண்ணு தெரியாம உளறிட்டேனே?”, என்று தன்னையே கடிந்து கொண்டாள். 
“என்ன மதினி நான் கேட்டுட்டே இருக்கேன், நீங்க அமைதியா இருக்கீங்க?”
“இல்லை, சரண்யாவைச் சொல்லவும் நானும் அப்படி பேசிட்டேன். கோபத்துல என்னையே அறியாம வந்துருச்சு”, என்று தர்மசங்கடமாக பொய் சொன்னாள் பூங்கோதை. 
“இது தான் விஷயம் அண்ணி. நீங்க எப்படி கோபத்துல தப்பா பேசினீங்களோ, அது மாதிரி வாசு தம்பியும் பேசிட்டான். இதை பெரிய விஷயமா ஆக்காதீங்க. நமக்கு நம்ம பிள்ளை வாழணும். சரண்யா வாழ்க்கை முள்ளு மேல விழுந்த சேலை மாதிரி. கோப பட்டு கந்தல் கோலமா ஆக்கிறாதீங்க மதினி. போய் அந்த பிள்ளைக்கு ஆறுதலா இருங்க. வாசு யோசிப்பான். ஏதாவது முடிவு வரும். இப்போதைக்கு ஆறப் போடுங்க”, என்று வசந்தா சொன்னதும் சரி என்று சொல்லி விட்டு தன்னுடைய வீட்டுக்கு சென்ற கோதை சரண்யாவுக்கு “எல்லாம் சரியாகிரும் கண்ணு”, என்று ஆறுதல் கூற ஆரம்பித்தாள். 
ஆனால் அவளுடைய மனசாட்சியோ வாசுவிடம் பிரேமா பற்றி உளறியதை நினைத்து குற்ற உணர்ச்சியாக இருந்தது. “கதிர் போனை கட் பண்ணிருப்பானா? நான் பேசினது வாசுவுக்கு கேட்டுருக்குமோ? தப்பு பண்ணிட்டேனே? கடவுளே அவனுக்கு நான் பேசினது கேட்டுருக்க கூடாது. அந்த ரகசியம் என்னோட போகட்டும்னு நினைச்ச நானே இப்படிச் செஞ்சிட்டேனே?”, என்று மனம் குமுறினாள் கோதை. 
அதே நேரம் கோதை பேசிய பேச்சில் அதிர்ந்து போய் அமர்ந்து விட்டான் வாசு. அவனுக்கு தலையே சுத்தியது போல இருந்தது. மூளையே குழம்பி போனது போல தான் இருந்தது. 
கோதை இரண்டு செய்திகளில் அவன் மனம் சிக்கி சின்னா பின்னமாக ஆனது. ஒன்று பிரேமா பற்றிச் சொன்னது. மற்றொன்று சரண்யா மனதில் அவன் இருப்பதாகச் சொன்னது. 
எது உண்மை எது பொய் என்று அவனால் பிரித்து அறிய முடியவில்லை.  அனைவரும் ஏதேதோ பேசி அவனை நன்கு குழப்பி விட்டிருந்தனர். 
அப்போது அங்கே மைக்கேல் வந்தான். நண்பனின் நிலையைக் கண்டு என்னவென்று விசாரித்ததும் பிரேமா பற்றி அல்லாமல் மற்ற அனைத்தையும் சொன்னான். 
“என்ன டா இப்படி பண்ணி வச்சிருக்க? நாம பிரண்டா ஆனதுக்கு அப்புறம் நீ பிரேமா பத்தி பேசினதை விட சரண்யா பண்ணின சேட்டைகளைச் சொல்லி சந்தோஷப் பட்டது தான் அதிகம். நீ சரண்யாவைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு கூட நான் நினைச்சிருக்கேன். பிரேமா கூட கல்யாணம்னு சொன்னது ஷாக் தான். அப்புறம் அவ விதி முடிஞ்சு சரண்யா கூட கல்யாணம்னு சொன்ன. அவளும் குழந்தைக்காக என்னை கட்டிருக்கான்னு சொன்ன. அப்படி பட்ட நீயே அந்த பொண்ணை தப்பா பேசலாமா? கதிரும் உனக்கு நண்பன் தானே டா? உண்மையா விரும்பிருந்தா அவங்க உன்கிட்ட சொல்லிருக்க மாட்டாங்களா? உன் தங்கச்சி சொன்னது உண்மையா பொய்யான்னு விசாரி. அப்பா போன் பண்ணினாரா? இவ்வளவு நடந்தும் அவர் ஏன் பண்ணலை? முதல்ல அவர் கிட்ட கேளு”, என்று மைக்கேல் அறிவுரை சொன்னதும் உடனே தன்னுடைய தந்தைக்கு தான் அழைத்தான் வாசு. 
கோயில் மரத்தடியில் பரிதாபமாக படுத்துக் கிடந்தார் சீனிவாசன். அவ்வளவு சொத்து இருந்தும், சொந்த பந்தம் இருந்தும் இப்போது அவர் நிலை ஒரு அநாதை போல தான். 
சின்ன சின்ன சண்டைகள் வைதேகியால் வரும் என்று அவர் எதிர் பார்த்தது தான். வரவும் செய்தது. சரண்யா அனைத்தையும் பொறுத்துக் கொண்டாள். அவரையும் பொறுமையாக இருக்க சொன்னாள். ஆனால் இன்றோ இவ்வளவு பெரிய விஷயம் நடக்கும் என்று அவர் எதிர் பார்க்கவே இல்லை. வைதேகி மேல் கொலை வெறியும் வெறுப்பும் வந்தது. 
இப்படி ஒரு தரங்கெட்டவளுடனா வாழ்ந்து இரண்டு பிள்ளைகளைப் பெத்தோம் என்று நினைக்கும் போது உடல் முழுவதும் அருவருப்பு தான் வந்தது. 
சரண்யாவை ஒரு சக மனுஷியாக கூட பார்க்காமல் அவளுடைய ஒழுக்கத்தைப் பற்றி பேசி இப்படி அசிங்க படுத்துவாள் என்று அவர் எதிர் பார்க்க வில்லை. 
இதை எல்லாம் கேட்க வேண்டிய வாசுவோ அவர் பேச்சைக் கேட்பதே இல்லை. அதனால் அனைத்தும் வெறுத்துப் போய் இங்கே வந்து படுத்து விட்டார். 
ஏதோ சரண்யா வாழ்க்கையை சீரழித்தது போல இருந்தது அவருக்கு. ஒரு பெண்ணின் வாழ்க்கையை குழி தொண்டி புதைத்து விட்டேனே என்று எண்ணி அழுது கொண்டே இருந்தார். 
அப்போது அவர் சட்டை பையில் இருந்த போன் அடித்தது. யாரென்று எடுத்துப் பார்த்தார். அவருடைய அருமை மகனே தான். 
“இவன் என்ன அதிசயமா போன் பண்ணுறான்? என்னைக் காணும்னு பண்ணுறானா? இல்லை சரண்யா பத்தி விசாரிக்க பண்ணுறானா?”, என்று எண்ணிய படியே போனை எடுத்து “ஹலோ”, என்றார் சீனிவாசன்.
“அப்பா”
“அப்பாவா, நானாப்பா உனக்கு அப்பா? நான் தான் உன்னோட அப்பாவான்னு எனக்கு சந்தேகமா இருக்கு? உங்க அம்மா கிட்ட தான் இதை விசாரிக்கணும்”
“அப்பா…”
“என்ன அப்பா? இல்லை என்ன அப்பானு கேக்குறேன்? என்னை ஒரு தடவையாவது அப்பான்னு மதிச்சிருக்கியா? கல்யாணம் முடிஞ்சு இத்தனை வருஷம் என் கூட வாழ்ந்த உன் அம்மாவே என்னை மதிக்கிறது இல்லை. அவ வயித்துல பிறந்த நீ எப்படி இருப்ப? உண்மைலே உனக்கும் வந்தனாவுக்கும் நான் தான் அப்பாவான்னு எனக்கு சந்தேகமா இருக்கு. என்னோட நல்ல குணம் எதுவுமே என் பிள்ளைகள் கிட்ட இல்லையே”
“அப்பா அம்மா மேல உள்ள கோபத்துல அவங்க ஒழுக்கத்தை தப்பா பேசாதீங்க?”
“ஓஹோ, அவ மத்த பொண்ணுங்க மேல களங்கம் சுமத்தும் போது நான் உங்க அம்மாவை சந்தேகப் படக் கூடாது இல்லையா? நல்லா இருக்கு டா உன் நியாயம்”
“அப்பா, இப்படி எல்லாம் பேசாதீங்க. நானே நொந்து போயிருக்கேன்”
“நீயா? நீ எதுக்கு நொந்து போகணும்? உன்னால அந்த பொண்ணு தான் நொந்து போயிருக்கா. அவளை உனக்கு கட்டி வச்சு பெரிய பாவம் பண்ணிட்டேன்னு நான் நொந்து போயிருக்கேன். தன்னோட மக வாழ்க்கை சீரழிஞ்சு போச்சேன்னு கோதை நொந்து போயிருக்கா. நீ எதுக்கு நொந்து போகணும்? அந்த அளவுக்கு உனக்கு ஒண்ணும் ஆகலையே?”
“எல்லாரும் என்னையே குத்தம் சொல்றீங்க? ஆள் ஆளுக்கு ஒண்ணு ஒண்ணு பேசுறீங்க? என்னால எதையுமே நம்ப முடியலை. என்ன தான் நடந்துச்சு. யாராவது உண்மையைச் சொல்லுங்க. எனக்கு ஒண்ணுமே புரியலையே”, என்று கலங்கி போய் கேட்டதும் “இப்ப தான் உனக்கு எல்லாம் கேக்க தோணுச்சா வாசு? அன்னைக்கு நான் சொல்ல வரும் போது போனைக் கட் பண்ணின? மனுசனா இருந்தா நியாயமா நடந்துக்கணும். அது தான் மனுசங்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். ஆனா இப்ப எல்லாம் மிருங்க எல்லாமே மனித தன்மையோட தான் நடந்துக்குது. மனுஷ மிருங்கங்கள் தான் சுயநலப் பிசாசுகளா இருக்குது?”, என்றார் சீனிவாசன். 
“என்னை மன்னிச்சிருங்கப்பா. பிளீஸ் என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க”, என்று தளர்ந்து போய்க் கேட்டதும் இது வரை நடந்த விஷயங்களை எல்லாம் சொல்ல ஆரம்பித்தார் சீனிவாசன். வைதேகி சரண்யாவைப் பற்றி பேசிய பேச்சுக்கள், வந்தனா மற்றும் வள்ளி இருவரும் சரண்யாவை அடிமை போல் நடத்தியது என அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தார். 
அனைத்தையும் கேட்ட வாசுவுக்கு வைதேகி வந்தனா மேல் கொலை வெறியே வந்தது. தான் செய்த முட்டாள் தனத்தின் வீரியமும் புரிந்தது. மனதுக்குள் தன்னையே செருப்பால் அடித்துக் கொண்டான். 
“இதுக்கு மேல சொல்லுறதுக்கு ஒண்ணும் இல்லை வாசு. நீ ஒண்ணும் சின்ன பையன் இல்லை. இன்னும் சரி தப்பு புரியாம இருந்தேன்னா உன்னோட மகனோட எதிர் காலமும் அந்த ராட்சசிங்க கைல இருந்து வம்பா போயிரும். நல்ல படியா பொழைச்சிக்கோ”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டார். 
தலையை பிடித்த படி அமர்ந்திருந்தவனிடம் இருந்து அனைத்தையும் கறந்த மைக்கேல் “நீ இப்ப முடிவெடுக்க வேண்டிய நேரம் வாசு. இப்ப தலைல கை வச்சு உக்காந்தா எல்லாம் தலைக்கு மேல போயிரும். சரண்யா இப்ப உன் பொண்டாட்டி. அவளைக் காப்பாத்தி அவ கூட வாழ வேண்டியது உன்னோட கடமையும் கூட. உன்னை பிரேமாவை மறக்கச் சொல்லல. அதுக்காக சரண்யாவை உன் மகனுக்கு ஆயாவா ஆக்கிறாத. போ லீவ் சொல்லிட்டு ஊருக்கு போய் நல்ல முடிவா எடு”, என்று அறிவுரை சொன்னான். 
அவசர அவசரமாக லீவ் கேட்க ஓடினான் வாசு. அங்கே அவனுக்கு லீவ் மறுக்கப் பட்டது. “நீங்க அதிக லீவ் எடுத்துட்டீங்க வாசு? இப்ப உங்களுக்கு லீவ் இல்லை”, என்றார் ஆபிசர். 
“இல்லை சார், நான் இப்ப போயே ஆகணும். நான் அஞ்சு வருஷ சர்வீஸ்ல தான் வேலைக்கு வந்தேன். என்னோட சர்வீஸ் முடிஞ்சு ஒரு வருஷம் ஆகுது. நீங்க இப்ப லீவ் தரலைன்னா நான் வேலை வேண்டாம்னு சொல்லி எழுதிக் கொடுக்குறேன்”, என்றான் வாசு. 
“வாசு, நீங்க யோசிச்சு தான் பேசுறீங்களா? இது என்ன சாதாரண வேலையா? உங்களுக்கு இன்னும் வயசு இருக்கு. இங்கயே கண்டினியூ பண்ணா கொஞ்ச வருசத்துல பெரிய கிரேட்க்கு போயிருவீங்க”
“தெரியும் சார். இப்போதைக்கு கிரேடை விட என்னோட வாழ்க்கை தான் முக்கியம். நான் கிளம்புறேன் சார்”
“ஒரு அஞ்சு நிமிஷம் வெளிய உக்காருங்க வாசு. நான் மேலிடத்துல டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன்”, என்றதும் சரி என்று சொல்லி வெளியே அமர்ந்தான். 
அவனுடைய திறமையும் மூளையும் அவர்களுக்கு தேவைப் பட்டது. அதனால் அவனை விட மனதில்லாமல் அவனுக்கு வேறு பதவி கொடுத்தார்கள். 
“உள்ள வாங்க வாசு”, என்றதும் உள்ளே சென்றான். 
“உங்களுக்கு பத்து நாள் லீவ் கொடுத்துருக்காங்க. அது மட்டுமில்லாம ஃபேமிலி பிராப்ளம் இருக்குன்னு சொன்னீங்களே? அதனால உங்களுக்கு குவாட்ரஸ் கொடுத்துருக்கோம். எல்லாம் சால்வ் பண்ணிட்டு வந்து புது வேலைல ஜாயின் பண்ணுங்க”, என்று வாழ்த்தினார். 
அதைக் கேட்டு சந்தோஷப் பட்டான் வாசு. அவருக்கு நன்றி சொல்லி விட்டு சந்தோஷமாக ஊருக்கு கிளம்பி வந்தான். ஆனாலும் உள்ளுக்குள் என்ன ஆகுமோ என்று பய பந்து அவனுக்கு உருளத் தான் செய்தது. 
இடை இடையே பிரேமாவைப் பற்றி கோதை சொன்ன வார்த்தைகள் வேறு அவன் அடி மனதை பிசைந்தது. கோதை தேவையில்லாமல் யார் மேலும் பழி போட மாட்டாள். யாரையும் தவறாக ஒரு சொல் கூட சொல்ல மாட்டாள். ஆனால் இன்று பிரேமா பற்றி சொன்னதில் உண்மை இருக்குமோ என்று அவன் மனது சஞ்சலப் பட்டது. 
இன்னொரு மனமோ “சரண்யாவைப் பத்தி நான் பேசினதுனால அவங்களும் கோபத்தில் பிரேமாவைப் பத்தி பேசிட்டாங்களோ?”,  என்றும் தோன்றியது. சஞ்சலத்துடனே தான் பயணம் மேற்க்கொண்டான். அவன் வருவதை யாருக்கும் அறிவிக்கவும் இல்லை. 
அதே நேரம் “ஏமா நல்லா இருட்டிருச்சு, அப்பாவை இன்னும் காணும். எங்க போனாருன்னு தெரியலையே”, என்று வைதேகியிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் வந்தனா. 
காதல் தொடரும்…

Advertisement