Advertisement

அத்தியாயம் 11 
கண்களில் கண்ணீர்
குளமானாலும் உதட்டில்
புன்னகை உறைந்தே
இருக்கும் காதலில்!!!
“என்ன என்ன சொல்ற? அதான் உங்க கதை தெரிஞ்சு போச்சே?. நீயும் அவளும் சேந்து தானே என்னோட தலைல மிளகாய் அறைச்சிருக்கீங்க?”, என்றான் வாசு. 
“வாசு நான் சொல்ல வந்த விஷயமே வேற? காலைலே ஒரு நல்ல விசயத்துக்காக போன் பண்ணணும்னு நினைச்சேன். நீ பிசியா இருப்பேன்னு தான் பண்ணலை. இப்ப ஒரு பிரச்சனை ஆகிருச்சு. அதையும் சொல்ல தான் போன் பண்ணுனேன்?”, என்றான் கதிரேசன். 
“என்ன நல்ல விஷயம்? நீ சரண்யாவை இழுத்துட்டு ஓடிப் போக போறியா?”
“சீ நிறுத்து. நீயெல்லாம் ஒரு மனுசனா? உன்னை போய் நன்பண்னு நினைச்சேன் பாரு. நீயெல்லாம் மனுஷ ஜென்மமே இல்லை டா. உன்னோட பொண்டாட்டியை போய் தப்பா பேசுற?”
“ஓஹோ அப்படியா? சரி ஒரே ஒரு விஷயம் சொல்லு. நீ சரண்யாவை விரும்பவே இல்லைனு சத்தியம் பண்ணு பாப்போம்”
“அது அது…”
“என்ன இழுக்குற? பொய் சத்தியம் பண்ண முடியலையா? பணத்துக்காக தான் நீயும் அவளும் சேந்து திட்டம் போட்டு என்னை இதுல இழுத்து விட்டுருக்கீங்க?”
“அப்படி எல்லாம் இல்லை வாசு. உனக்கு எப்படி புரிய வைக்க?  நம்ம சைட் கட்டிக்கிற முறை இருந்தா யார் வேணும்னாலும் யார வேணும்னாலும் கட்டிக்க ஆசை படுவாங்க. படிச்சவன் தானே டா நீ? அத்தை மகனால அவளை கட்டிக்க நினைச்சேன். அது தப்பா? இதுல காதல் எங்க இருந்து வந்தது”
“நீ சொல்றதை எதையும் நம்ப முடியலை கதிர். கோதை அத்தையே பேசாம நீ கதிரையே கல்யாணம் பண்ணிருக்கலாம்னு பேசிருக்காங்க. அது உண்மையா பொய்யா?”
“ஓ, அப்ப இன்னைக்கு நடந்த விஷயம் எல்லாம் உன் காதுக்கு வந்துட்டா? சரியா வந்துச்சா? இல்லை திரிச்சு சொல்லப் பட்டதா?”
“நான் கேக்குறதுக்கு நீ முதல்ல பதிலை சொல்லு. கோதை அத்தைக்கே உங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எண்ணம் இருந்துருக்கு. அப்ப உங்க காதல் உண்மைன்னு தானே அர்த்தம்? உங்க ரெண்டு பேருக்கும் நான் என்ன டா பாவம் பண்ணினேன்? அதுவும் அந்த சரண்யாவுக்கு நான் என்ன கொடுமை செஞ்சேன்? சின்ன வயசுல இருந்து அவளை நல்லவன்னு நம்புனேன். கழுத்தை அறுத்துட்டா”
“உன் வாழ்க்கைல மண்ணை அள்ளிப் போட உன் அம்மா தங்கச்சி தேவை இல்லை டா வாசு. நீயே போதும். நான் சொல்ல வர விஷயத்தை உனக்கு கேக்க கூட மனசு இல்லைன்னு புரியுது. உன்கிட்ட பேசியே வேஸ்ட். நான் வைக்கிறேன்”, என்று சொல்லி வைத்து விட்டான். 
சரண்யாவை வீட்டுக்கு அழைத்து வந்த கோதை அவளை ஓய்வெடுக்க சொல்லி விட்டு வெளியே வந்தாள். அவள் மனது கொதித்தது. 
இது மகளாகவே தேடிக் கொண்ட வாழ்க்கை என்றாலும் இவ்வளவு நடந்த பிறகு கோதையால் தலையிடாமல் இருக்க முடியுமா? ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று எண்ணியவள் நேராக கதிரேசன் வீட்டுக்கு தான் சென்றாள். 
“வாங்க மதினி, என்ன எல்லாமோ கேள்வி பட்டேனே? சரண்யா இப்ப எப்படி இருக்கு?”, என்று கேட்டாள் கதிரேசனின் அன்னை வசந்தா. 
“வாழ வாக்கத்து போய் வந்துருக்கா வசந்தா என் மக. படிச்சு படிச்சு சொன்னேன். என் பேச்சை கேக்காம போய்ட்டாளே? கதிர் இருக்கானா?”
“இப்ப தான் வீட்டுக்கு வந்து எல்லாம் சொன்னான். சாப்பாடு போட்டேன். சாப்பிட முடியாம கொரிச்சிக்கிட்டு இருக்கான். ஏப்பா கதிரேசா இங்க வா”
“சாப்பிடட்டும் வசந்தா”, என்று கோதை சொல்லும் போது அங்கே கதிரே வந்து விட்டான். அங்கு நின்ற கோதையைக் கண்டதும் “வாங்க அத்தை, சரண்யா எப்படி இருக்கா?”, என்று கேட்டான். 
“சாப்பிட்டு வாப்பா. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”

“சாப்பிட்டுட்டேன் அத்தை, கையை கழுவிட்டு தான் வந்தேன். என்ன விசயம்னு சொல்லுங்க”
“என் அண்ணன் மவன் வாசு நம்பர் இருந்தா போனை போடு பா. இன்னைக்கு கண்ட படி பேசிட்டா அந்த வைதேகி”, என்று ஆதங்கத்துடன் சொன்னாள் கோதை. 
“நானும் வந்து நடந்ததைப் பாத்தேன் அத்தை. ஆனா அவன் கிட்ட பேசி ஒண்ணும் ஆக போறது இல்லை”
“என்னப்பா சொல்ற?”
“இல்லை அத்தை, இந்த விஷயத்தை இன்னும் அம்மா கிட்ட கூட சொல்லலை. நேத்து எனக்கு பொண்ணு பாத்துட்டு வந்தோம்ல? அந்த விஷயத்தை வாசு கிட்ட சொல்லிட்டு இன்னைக்கு நடந்த விசயத்தையும் சொல்லலாம்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வாசுக்கு போன் பண்ணுனேன்”, என்று ஆரம்பித்து சிறிது நேரத்துக்கு முன்பு நடந்த கதையை சொல்ல ஆரம்பித்தான் கதிர். 
அந்த கதையை இப்போது கோதையிடம் சொன்னதும் திகைத்து போனாள் கோதை. 
“கதிரு நீ சொல்றது நிஜமா?”
“ஆமா அத்தை, எனக்கு நேத்து பொண்ணு பாக்க போயிருந்தோம்ல? இன்னைக்கு அவங்க வீட்ல இருந்து ஜாதகம் பொருந்திட்டு, நாள் குறிப்போம்னு சொன்னாங்க. அதை சொல்லிட்டு, இன்னைக்கு நடந்த பிரச்சனையை சொல்லி சரண்யாவை அவன் கூட கூட்டிட்டு போக சொல்ல தான் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவனை கூப்பிட்டேன். ஆனா அவன் இப்படித் தான் பேசினான். அவனுக்கு அவங்க வீட்ல உள்ள யாரோ விஷயத்தை மாத்தி சொல்லிறுக்காங்க அத்தை. நீ அப்ப பேசாம கதிரையே கட்டிக்கலாம்னு சொன்னது வரைக்கு அவன் காதுக்கு விஷயம் போயிருக்கு. அதான் அப்படி எல்லாம் பேசிட்டான்”
“அவனுக்கு என்ன நெஞ்சழுத்தம் இருந்தா அவன் அம்மா சொன்னது மாதிரி இவனும் என் மகளைச் சொல்லுவான். அவனுக்கு இப்ப போனை போடு. நான் பேசுறேன்”, என்று கோதை சொன்னதும் அவனுக்கு போனை போட்ட கதிர் போனை ஸ்பீக்கரில் போட்டான். 
“என்ன டா பெரிய நல்லவன் மாதிரி பேசிட்டு போன? இப்ப எதுக்கு போனைப் போடுற?”, என்று நக்கலாக கேட்டான் வாசு. 
“ஆமா டா ஆமா. சொன்னாலும் சொல்லாட்டியும் கதிர் நல்லவன் தான். உன்னை மாதிரி வேஷம் போடுறவன் கிடையாது”, என்று ஆங்காரமாக கத்தினாள் கோதை. 
கோதையின் கோபக் குரல் கேட்டதும் திகைத்தான் வாசு. 
“அத்தை நீயா? நீ எப்படி கதிர் போன்ல? உன் மக பண்ணிருக்க காரியத்தை பாத்தியா?”
“ஆமா ஆமா, பாக்க தான்லே செஞ்சிருக்கேன். உனக்கு என் மகளை கட்டிக் கொடுத்து அவ சீறும் சிறப்புமா வாழுற வாழ்க்கையை பாத்து பூரிச்சுள்ள போயிருக்கேன்”
“என்ன அத்தை ஒரு மாதிரி பேசுற? என்னமோ என் மேல தப்பு இருக்குற மாதிரியே பேசுற?”
“ஐயையோ அப்படி எல்லாம் நான் பேசுவேனாப்பா? தப்பு நாங்க பண்ணது தானே?”
“அத்தை ஆள் ஆளுக்கு பேசி என்னை எரிச்சல் படுத்துராங்க. நீயும் அப்படியே பேசாத. இப்ப என்ன விசயத்துக்கு போன் பண்ண? அதைச் சொல்லு”
“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்பி வந்து என் மகளை வெட்டி விட்டுரு. கழுத்தை சுத்தின பாம்பு மாதிரி இருக்குற நீ கட்டின தாலி இனி அவ கழுத்துல இருக்க கூடாது”, என்று கோதை சொன்னதும் அதிர்ந்து போனான் வாசு. கேட்டுக் கொண்டிருந்த கதிர் கூட அதிர்ந்து தான் போய் விட்டான். 
“அத்தை”, என்று அதிர்ச்சியாக வந்தது வாசுவின் குரல். 
“என்ன டா அத்தை? தாலி கட்டின பொண்டாட்டி இருக்காளா செத்தாளான்னு கவலைப் படாத நீ இருந்து எதுக்கு? வந்து அவளை வெட்டி விட்டுரு”
“ஏன் என்னை வெட்டி விட்டுட்டு அந்த கதிருக்கு அவளை கட்டி வைக்கணும்னு பாக்குறியா?”, என்ற வாசுவின் குரலில் வெளிப்பட்ட பொறாமையை கோதை உணரவே இல்லை. நம்மிடம் இருக்கும் ஒரு பொருளை நாம் மதிக்கவே மாட்டோம். ஆனால் அந்த பொருள் மீது வேறு ஒருவரின் கவனம் சென்றால் நம்முடைய கவனமும் அந்த பொருள் மீது விழும். அதே கதை தான் இங்கேயும். 
அவன் சொன்னதைக் கேட்டு வெகுண்டு எழுந்த கோதை “அதானே உன் அம்மாக்காரி குணம் எங்க போகும்? அந்த சாக்கடை புத்தி தானே உனக்கும் இருக்கும். கதிருக்கு வேற இடத்துல கல்யாணம் நிச்சயம் ஆகிருச்சு. இல்லைன்னா அவனுக்கு தான் டா கட்டி வச்சிருப்போம். அவன் கல்யாண விஷயம் சொல்ல தான் உனக்கு போன் பண்ணிருக்கான். அவன் கிட்ட என் மகளை அசிங்க படுத்தி பேசிருக்க. அப்படி திருட்டு தனம் பண்ணுறவாளா டா என் மக?”
…..
“உத்தமி உத்தமின்னு நினைச்சு கட்டி குடும்பம் நடத்தி தெய்வமா பூஜை செய்றியே, அந்த பிரேமா எப்படி பட்டவன்னு உனக்கு தெரியுமா டா? அவளை நினைச்சு தானே என்னோட மகளை ஒதுக்கி வச்சிருக்க? அவ்வளவு உயர்வா நினைக்கிற உன் பொண்டாட்டி அவ்வளவு உத்தமியா? அவளைப் பத்தி எனக்கு ஒருத்திக்கு தான் டா தெரியும். செத்தவங்களை பத்தி பேசக் கூடாதுன்னு பாக்குறேன். என்னை பேச வைக்காத. என் மகளைப் பத்தி இனி ஏதாவது சொன்ன நான் மனுசியா இருக்க மாட்டேன்”
…..
“ஒழுங்கா கிளம்பி வந்து என் மகளுக்கு விடுதலை கொடுத்துரு. உன்னை நினைச்சு அவ செத்தது போதும். கதிரு போனை கட் பண்ணுப்பா. இவன் கிட்ட பேசுறதே வீண் தான். இவனுக்கும் இவனோட அம்மாவுக்கும் என்ன வித்தியாசம்? சின்ன வயசுல இருந்து இவன் நியாயஸ்த்தன் நல்லவன்னு நினைச்சு நாம தான் ஏமாந்துட்டோம். இவன் மேல போய் என் மக மொத்த அன்பையும் வச்சாளே. இவன் தான் புருசன்னு சின்ன வயசுல இருந்து வாழ்ந்தாளே. உன்னைக் கட்டிக்க சொன்னப்ப கூட மாமாவைத் தவிர வேற யாரையும் கட்டிக்க மாட்டேன்னு சொன்னாளே? அவளைப் போய் அசிங்க படுத்திட்டானே? பாவி. இவன் நல்லா இருப்பானா?”, என்று கோதை சொல்லிக் கொண்டிருக்கும் போது போன் கட் செய்யப் பட்டது. 
“என்ன மதினி இப்படி எல்லாம் பேசிட்டீங்க?”, என்று கேட்டாள் வசந்தா. 
“என்னை என்ன செய்ய சொல்ற? அவன் பேசினதை நீயும் கேட்ட தானே வசந்தா?”
“மதினி நாம வாசு தம்பி பக்கமும் யோசிக்கணும். வீடு வாசல் துறந்து, சொந்த பந்தத்தை விட்டுட்டு தனியா போய் நாட்டுக்காக கிடக்குறான். அப்படிப் பட்டவனுக்கு இந்த வைதேகி என்ன ஓதுனான்னு நமக்கு தெரியாதே. இதுல கதிர் வேற சரண்யாக்காக பேசிருக்கான். எந்த புருசனுக்கு தான் தன்னோட பொண்டாட்டி மேல அடுத்தவன் அக்கறை வச்சா பிடிக்கும்? பத்தாதுக்கு நீங்க வேற கதிரைக் கட்டிக்கலைன்னு வார்த்தையை விட்டுருக்கீங்க? அதை அவன் மனசுல பதிய வச்சிருக்காங்க. அதனால அவனும் கோபத்துல வார்த்தையை விட்டுட்டான். மத்த படி பெருசா ஒண்ணும் இல்லை மதினி”
“கோபத்துல என்ன வேணும்னாலும் சொல்லுவானா?”
“அப்ப நீங்க பேசினதும் தப்பு தான் மதினி”
“வசந்தா…”

Advertisement