Advertisement

“சரண்யா, கோதை என்ன மா ஆச்சு?”, என்று கேட்டார் சீனிவாசன்.
“என்ன நடக்கணும்? இன்னும் என்ன ஆகணும் அண்ணா?”
“கோதை என்ன மா என்னவோ போல பேசுற? சரண்யா தலைல வேற ரத்தமா இருக்கு”
“எங்க நெஞ்சுல இருந்தே ரத்தம் வடியுது. இந்த ரத்தம் பெருசா?”
“எனக்கு ஒண்ணுமே புரியலையே மா. யாராவது சொல்லுங்களேன்”
“நான் சொல்றேன்”, என்று ஆரம்பித்து வைதேகி மறுபடியும் சரண்யாவை தப்பா பேச ஆரம்பிக்க அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் சீனிவாசன். 
வந்தனா எதுவோ சொல்ல வர அவள் கன்னத்திலும் ஒரு அடி விழுந்தது. 
“இப்ப எதுக்குண்ணே, வைதேகியையும் வந்தனாவையும் அடிக்கிறீங்க? அவங்க உண்மையை தான் சொல்றாங்க”, என்று வள்ளி சொல்ல “நீ அடுத்த வீட்டு பொம்பளைன்னு தான் உன் மேல கை வைக்கலை. என் மருமகளைப் பத்தி தப்பா பேசின காலுல போட்டுருக்க செருப்பைக் கழட்டி அடிப்பேன்”, என்று சொன்னதும் மூவரும் வாயை மூடிக் கொண்டார்கள்.
அப்போது அங்கு பால்காரனும் வந்து விட்டான். அவன் விஷயத்தைக் கேள்வி பட்டு திகைத்து தான் போனான்.
“சீ, நான் பால் காசு கொடுக்க தான் வந்தேன். அந்த பொண்ணு அண்ணன்னு சொல்லுக்கு மறு பேச்சு பேசாது? அதையும் என்னையும் சேத்து வச்சு பேசிருக்கீங்களே? நீங்க எல்லாம் பொம்பளையா?”, என்று கேட்டான் அவன். 
“எப்பா சீனிவாசன், என்னப்பா இதெல்லாம்? அக்கம் பக்கத்துல இருந்து நாங்களும் தினமும் நடக்குறதை பாத்துட்டு தான் இருக்கோம். தினம் தினம் இந்த பிள்ளையை போய் உன் மனைவியும் மகளும் இந்தா பேச்சு பேசுறாங்க? என்னமோ சபைல என் மகனுக்காக பேரனுக்காகன்னு பேசி தானே இந்த பிள்ளையை உன் மகனுக்கு கட்டி வச்ச. இப்ப இப்படி எல்லாம் நடக்குது. தப்பு பண்ணிட்டியே பா. வாழ வேண்டிய பொண்ணு வாழ்க்கையை சீரழிச்சிட்டியே? உன் வீட்ல பண்ணுற கொடுமையை எல்லாம் போலீஷ்ல தான் எழுதி வைக்கணும். விஷயம் கேள்வி பட்டு ஓடி வந்துருக்கேன். சரண்யா, கோதை நீங்க சொல்லுங்க மா.  நான் பஞ்சாயத்தை கூட்டுறேன்”, என்று வந்து நின்றார் ஊர் நாட்டாமை. 
“வேண்டாம்ணே, எங்களுக்கு எதுவும் வேண்டாம். யாரும் எக்கேடோ கெட்டு போகட்டும். நாங்க கொஞ்சம் நிம்மதியா மரியாதையா வாழணும்னு நினைக்கிறோம். அதனால இதை இப்படியே விடுங்க. நான் என் மகளை கூட்டிட்டு போறேன்”, என்றாள் கோதை. 
“என்ன கோதை இப்படி எல்லாம் பேசுற? இதுக்கா நான் இவ்வளவு கஷ்ட பட்டேன்? நான் இதுக்கு முடிவு கட்டுறேன் மா”, என்றார் சீனிவாசன். 
“உங்களால என்ன செய்ய முடிஞ்சதுன்னு தான் நாங்க பாத்தோமே? எவ்வளவோ படிச்சு படிச்சு சொன்னேன்? என் பேச்சை யாருமே கேக்கலையே? இப்ப உங்களுக்கு நிம்மதியாண்ணே? என் மக வாங்க கூடாத பேரை எல்லாம் வாங்கி வச்சிருக்காளே? இவளுக்கு இந்த வாழ்க்கையை வாங்கிக் கொடுக்க தானே அப்படி போராடினீங்க? எங்களுக்கு எதுவும் வேண்டாம், யாரும் எதுவும் செய்ய வேண்டாம். இங்க இருந்து என் மக உயிரோட செத்தது போதும். இவ இங்க இருந்து வாழ்ந்ததும் போதும் பட்டதும் போதும். எப்படியும் இவ செத்தா கூட இவ கழுத்துல தாலி கட்டினவன் கவலைப் பட மாட்டான். நீங்க ஒரு சுயநலக்காரர்னா உங்க மகன் அதுக்கும் மேல? என்னக்காவது அவன் வந்தான்னா அப்ப முடிச்சு விட்டுறலாம். சரண்யா கிளம்பு”
“அம்மா”, என்று தயங்கினாள் சரண்யா. 
“கிளம்புன்னு சொன்னேன் சரண்யா”
“வரேன் மா, குழந்தையை மட்டும் வாங்கி கொடு மா. அவன் என் மகன் மா”
“அடிச்சு பல்லை உடைச்சுருவேன் பாத்துக்கோ. மகனாம் மகன். அவனை நீயாடி பெத்த மகன்னு உரிமை கொண்டாடுறதுக்கு? என்னைக் கேட்டா உன் கழுத்துல கிடக்குற தாலிக்கே அர்த்தம் கிடையாது. அப்புறம் எப்படி மகன்னு உரிமை கொண்டாடுவ? அவனைப் பாத்துக்க எல்லாரும் இருக்காங்க. நீ ஒண்ணும் எதையும் தூக்கி நிறுத்த வேண்டாம். எனக்கு புருஷன் இல்லாததும் ஒண்ணு தான், உனக்கு இருக்குறதும் ஒண்ணு தான். வா போகலாம்”, என்று சொல்லி சரண்யா கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள். 
“கோதை நில்லு மா, நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளு மா”, என்றார் சீனிவாசன். 
“என்ன கேக்கணும்? இனி கேக்குறதுக்கு ஒண்ணும் இல்லை. இதோட எல்லாம் முடிச்சிக்கலாம். இனி தங்கச்சி, மருமகன்னு சொல்லிட்டு வீட்டு பக்கம் வந்துறாதீங்கண்ணே”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள். 
சரண்யாவும் அழுது கொண்டே அவன் பின்னே சென்றாள். “சீ நீங்க எல்லாம் மனுஷ ஜென்மங்களா?”, என்று ஒரு வார்த்தை கேட்டு விட்டு தளர்ந்து போய் வெளியே சென்றார் சீனிவாசன். 
அனைவரும் மூவரையும் முறைத்து விட்டு கலைந்தார்கள். 
“ஏமா, என்ன அப்பா வீட்டுக்குள்ள வராம வெளிய போறார்”, என்று கேட்டாள் வந்தனா. 
“எங்க போயிருவார், திருப்பி வந்து தானே ஆகணும். அதை விடு. இது என்ன டி பெரிய பிரச்சனையா ஆகிட்டு. அது மட்டுமில்லாம நம்ம சொன்ன பொய்யை யாரும் நம்பின மாதிரி தெரியலையே?”, என்று கேட்டாள் வைதேகி. 
“இது பெரிய விஷயமா? அடுத்தவங்க நம்பினா என்ன? நம்பலைன்னா என்ன? நம்ப வேண்டிய ஆள் நம்பினா போதும். நீ உள்ள வா. என் கிட்ட ஒரு பெரிய ஐடியா இருக்கு.  உள்ள வா சொல்றேன். அத்தை நீங்களும் வாங்க”, என்று சொல்லி உள்ளே அழைத்து சென்றவள் தன்னுடைய போனை எடுத்து வாசுவை அழைத்தாள். 
வெகு நாட்கள் கழித்து தங்கை அழைக்கவும் சந்தோஷமாக அதை எடுத்தான் வாசு. 
“வந்தனா எப்படி இருக்க மா?”
“எப்படியா? கேவலமா இருக்கோம். குடும்ப மானமே சந்தி சிரிக்குது”
“என்ன மா இப்படி சொல்ற? என்ன ஆச்சு?”
“என்ன ஆகும்? எல்லாம் நீ கட்டி வீட்ல வச்சிருக்கியே இந்த சரண்யாவால தான். ஏண்ணா அவங்க தான் சொத்துக்காக உன்னை கட்டிக் கிட்டாங்கன்னா உனக்கு எதுக்கு இந்த தலையெழுத்து?”
“தெளிவா சொல்லு வந்தனா. சரண்யா சொத்துக்காக எல்லாம் ஆசை பட மாட்டா”

“அப்படியா? அதை நீ தான் மெச்சிக்கணும். உன் அருமை பொண்டாட்டி அவ வீட்டு பக்கத்து வீட்ல இருக்கானே கதிரேசன் அவனை காதலிக்கிறா. உனக்கு அது தெரியுமா? அவனும் அவளை ரொம்ப லவ் பண்ணுறானாம்? இதைச் சொன்னது வேற யாரும் இல்லை கோதை அத்தை தான். இப்ப சொல்லு நான் சொல்றது பொய்ன்னு. நீ தான் நல்லா ஏமாந்துருக்க. பணத்துக்காக உன்னைக் கட்டிக்கிட்டு அவன் கூட இப்பவும் தொடர்புல இருக்கா இந்த சரண்யா”
“வந்தனா… நீ என்ன சொல்ற? கதிரும் சரண்யாவும் லவ் பண்ணினாங்களா?”
“ஆமா, இல்லாத விஷயத்தை நான் ஏன் சொல்லணும்? கோதை அத்தை சொல்லி தான் எனக்கே தெரியும். அந்த கதிர் உன் நண்பன் தானே? வேணும்னா அவன் கிட்டயே கேளு. அவன் அவளை லவ் பண்ணினானா இல்லையான்னு”
“வந்தனா, கதிர் ஒரு பொண்ணை லவ் பண்ணுறான்னு பசங்க பேசிக்கிட்டாங்க. அது சரண்யான்னு எனக்கு தெரியாது”
“நானும் இதை யோசிக்கலை. ஆனா இவ மச்சான் மச்சான்னு அவன் கிட்ட உருகினதை நானே பல தடவை பாத்துருக்கேன். ஆனா அது காதல்னு நான் அப்ப யோசிக்கலை. இன்னைக்கு இங்க ஒரு பிரச்சனை. வீட்டுக்கு பால் காரன் வந்துருந்தான். நாங்க யாருமே இல்லை. கோயிலுக்கு போயிட்டு வீட்டுக்கு வரோம். இவ நடு வீட்ல அவன் கூட பல்லை இளிச்சு இளிச்சு பேசிட்டு இருக்கா. அதைப் பாத்து அம்மா சத்தம் போட்டாங்க. இப்படி பேசிட்டு இருந்தா ஊர்க்காரங்க என்ன சொல்லுவாங்கன்னு தான் அம்மா கேட்டாங்க. அதையே கொஞ்சம் கோபமா கேட்டாங்கன்னு வச்சிக்கோயேன். அம்மா பேசுறது தான் உனக்கு தெரியுமே? உடனே சரண்யா சண்டை போட ஆரம்பிச்சிட்டா. அம்மாவை மரியாதை இல்லாம பேசிட்டா. உடனே அம்மாவும் என் வீட்ல இருக்காதேன்னு பேசி வெளிய போகச் சொல்ல வெளிய போய் தெருவுல இறங்கி சத்தம் போட ஆரம்பிச்சிட்டா. அசிங்கமா போச்சு. நம்ம அம்மா எதுக்கு இப்படி பண்ணுறன்னு கேட்டதுக்கு கோதை அத்தை வந்து என் மகளை அந்த கதிருக்காவது கட்டி வச்சிருப்பேன். உன் மவன் இருக்குறது ஒண்ணு தான் இல்லாம இருக்குறதும் ஒண்ணு தான். அவன் ஒரு வேஸ்ட். நான் சரண்யாவைக் கூட்டிட்டு போறேன்னு சொல்லி அப்பா கிட்ட சொல்லிட்டு அவளை கூட்டிட்டு போயிட்டாங்க”
“ஐயையோ, என்ன வந்தனா சொல்ற? இவ்வளவு பிரச்சனையா?”
“ஆமா, அம்மா குழந்தையை கொண்டு போன்னு சொன்னதுக்கு
கூட கோதை அத்தை அவனை என் மகளா பெத்தான்னு சொல்லிட்டு போயிட்டாங்க. சரண்யாவும் போயிட்டா. ஆதி அழுதுட்டே இருக்கான்”, என்று வத்தி வைத்தாள். 
“நீ சொல்றது எல்லாம் உண்மையா வந்தனா? என்னால நம்பவும் முடியலை, நம்பாம இருக்கவும் முடியலை. ஏன்னா அன்னைக்கு ஒரு நாள் கதிர் எனக்கு போன் பண்ணி சரண்யாவை இங்க அழைச்சிட்டு வரச் சொல்லி சொன்னான்”
“அண்ணா நம்பாத, எல்லாம் நடிப்பு. அந்த கதிர் உன்கிட்ட நல்ல பேர் வாங்க தான் அப்படி பேசிருக்கான். உசாரா இருந்துக்கோண்ணா. முதல் பொண்டாட்டி செத்து போயிட்டா, ரெண்டாவது பொண்டாட்டி இன்னொருத்தனை இழுத்துட்டு ஓடிப் போட்டானு பேரு வாங்கிறாத”, என்று சொல்லி போனை வைத்தாள். 
“ஏய் வந்தனா சூப்பர்டி. நல்லா பேசின, உன் அண்ணன் நம்பிட்டானா?”, என்று கேட்டாள் வைதேகி. 

“நம்பாம இருப்பானா? நம்புன மாதிரி தான் இருக்கு. இன்னொரு விஷயம் தெரியுமா? அந்த கதிரேசன் பய அண்ணனுக்கு போன் பண்ணி இந்த ராங்கியை அங்க கூட்டிட்டு போக சொல்லிருக்கான். நான் அதையும் அப்படியே கோத்து விட்டுட்டேன்”
“அப்படியா?”
“ஆமா”
“சரி இப்ப ஊர்க்காரங்க எல்லாம் அவ பக்கம் பேசினா நம்ம குட்டு வெளிபட்டுருமே டி”
“அப்படி விசாரணை வந்தா கதிர் எங்க வீட்டுக்குள்ள சுவர் ஏறி குதிச்சான், சரண்யா அவனை தனியா பாக்க போறான்னு சொல்லி கதை விடு. இனி சரண்யா இங்க வரமாட்டானு தான் தோணுது. அண்ணனும் அவ மேல பாசமா எல்லாம் இல்லை. இதோட அந்த சனியன் வீட்டை விட்டு போனது போனது தான்னு நினைச்சிக்கோ”, என்று சொல்லி சிரித்தாள். 
அதே நேரம் வாசுவை போனில் அழைத்தான் கதிரேசன். 
வந்தனா போனை வைத்ததும் அதையே யோசித்துக் கொண்டிருந்த வாசு மீண்டும் போன் வரவும், யாரென்று எடுத்து பார்த்தான். 
கதிர் என்றதும் வந்தனா சொன்ன விஷயங்கள் நினைவில் வந்தது. அதுவும் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற உண்மையைத் தான் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 
உடனே அதை எடுத்து காதில் வைத்தவன் “என்ன சொல்லு”, என்று கடுமையாக சொன்னான். தன்னாலே கதிரேசன் மேல் அவனுக்கு கோபம் உருவாகியிருந்தது. அதை உருவாக்கியிருந்தாள் வந்தனா. 
“என்ன வாசு ஒரு மாதிரி பேசுற?”
“என்ன ஒரு மாதிரி பேசுறேன். எல்லாரும் ஒரு மாதிரி நடக்கும் போது நான் மட்டும் ஒரு மாதிரி பேசினா தான் என்ன?”
“ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு தான் வாசு கூப்பிட்டேன்”
“என்ன விசயம்னு தான் எனக்கு தெரியுமே? சரண்யா பத்தி பேச தானே? ஏண்டா லவ் பண்ணா கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆக வேண்டியது தானே? உன்னை விரும்பின சரண்யா எதுக்கு என்னை கல்யாணம் பண்ணனும்?”
“வாசு நீ என்ன சொல்ற?”, என்று அதிர்ச்சியாக கேட்டான் கதிரேசன். 
காதல் தொடரும்…

Advertisement