Advertisement

அத்தியாயம் 10
நான் காணத் துடிக்கும்
அழகான சோலை
தான் என்னவள்!!!
சரண்யா மேல் உள்ள அக்கறையில் போனை போட்டு விட்டான் தான். ஆனால் என்ன பேச என்று குழப்பம் வந்தது கதிரேசனுக்கு. 
நேரடியாக எப்படி வாசுவின் தாய் மற்றும் தங்கையைப் பற்றி குறை சொல்வது என்று தெரியாமல் சரண்யாவை அங்கே அழைத்து செல் என்னும் விதமாய் பேசினான். 
தந்தை ஏற்கனவே இந்த விஷயத்தை சொல்லியிருக்க கதிரும் அதையே சொல்லவும் எரிச்சல் வந்தது வாசுவுக்கு. அந்த எரிச்சலை அவனிடம் காட்ட மனதில்லாமல் “பாக்குறேன் டா”, என்று சொல்லி போனை வைத்தான் வாசு.
பின் அந்த விஷயத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டு தன்னுடைய வேலையைப் பார்த்தான். அவன் நண்பன் மைக்கேல் கூட சரண்யாவிடம் போன் பேசச் சொன்னான். ஆனால் வாசுவோ “டேய் மைக்கேல், சரண்யா குழந்தையை பாத்துக்க தான் டா என்னை கல்யாணம் பண்ணினா. ஆள் ஆளுக்கு அவளை இங்க கூட்டிட்டு வரச் சொல்றாங்க? இங்க நம்ம நிலைமை நமக்கு தானே தெரியும்? இது வரை சரண்யா அப்படி என்கிட்ட சொன்னதே இல்லை டா. அவ என்கிட்ட பேசவே இல்லை. அப்படின்னா அவளுக்கு அங்க எந்த கஷ்டமும் இல்லைன்னு தானே அர்த்தம்? எங்க அம்மா ஏதாவது சொன்னா அவ பொறுத்துப்பா. எங்க அப்பா தான் ஓவரா யோசிக்கார். கதிர் சொன்னா கேப்பேன்னு அவர் தான் அவனை பேச வச்சிருப்பார். அப்புறம் சரண்யா கிட்ட என்னை என்ன பேச சொல்ற? சும்மா எப்படி இருக்க, குழந்தை எப்படி இருக்கான்னு தான் கேக்க முடியும்? எனக்கு யார் கிட்டயுமே பேச பிடிக்கலை டா”, என்று முடித்துக் கொண்டான். 
மைக்கேலும் மனைவி இறந்ததால் வந்த வெறுப்பு போல என்று எண்ணி அமைதியாகி விட்டான். 
ஆனால் இங்கேயோ நாள் ஆக ஆக சரண்யா நிலை இன்னும் மோசமானதாக தான் ஆனது. வேலை செய்து தான் ஓடாக தேய்ந்து போனாள் என்றால் மெது மெதுவாக மூவரும் அவளை தகாத வார்த்தைகளால் பேச ஆரம்பித்தார்கள். 
முதலில் சீனிவாசன் இருக்கும் போது பேசாதவர்கள் மெது மெதுவாக அவர் இருக்கும் போதும் பேச ஆரம்பித்தார்கள். 
சீனிவாசன் எவ்வளவோ கண்டித்து விட்டார். ஆனால் வைதேகி கேட்ட பாடில்லை. வைதேகியை அடித்துக் கூட பார்த்து விட்டார். அவருக்கு என்ன செய்ய என்று கூட தெரியவில்லை. மனதுக்குள் கவலை படுவதை தவிர வேற வழியில்லை. மெது மெதுவாக அவர்கள் வீட்டு சத்தம் வெளியே கேட்க ஆரம்பிக்க அடுத்தவர்கள் மூலம் அந்த ஊருக்கே பரவியது.
பார்க்கும் அனைவரிடமும் சரண்யாவின் மானத்தை பற்றி குறை சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்டாலும் ஊரில் உள்ளவர்கள் சரண்யா மேல் பரிதாபம் தான் பட்டார்கள். 
எல்லாம் தெரிந்தாலும் சரண்யா எப்போதும் போல் உள்ளுக்குள் வைத்தே மருகிக் கொண்டிருந்தாள். அவர்கள் செய்வது எல்லாம் அவளுக்கு வெறுப்பைக் கொடுத்தாலும் “இது நானா ஏத்துகிட்ட வாழ்க்கை. இதை நான் வாழ்ந்து தான் ஆகணும்”, என்று மனதில் எண்ணிக் கொண்டாள். 
ஆனால் அவள் எவ்வளவு தான் பொறுமையாக இருந்தாலும் அந்த பொறுமை போகும் நாளும் வந்தது. 
ஒரு நாள் சரண்யா மற்றும் குழந்தையைத் தவிர வீட்டில் யாருமே இல்லை. வைதேகி, வள்ளி, வந்தனா கூட கோயிலுக்கு சென்றிருந்தார்கள்.
குழந்தையை தூங்க வைத்து விட்டு இரவு உணவுக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள் சரண்யா. 
அப்போது அந்த ஊர் பால் காரன் அந்த மாத கணக்கு முடிக்க வீட்டுக்கு வந்தான். அந்த மாதத்துக்கான பணத்தை கொடுத்ததும் அவன் முன்னிலையிலே அதை எண்ணிப் பார்த்தாள்.
 
பின் அவன் நானூறு ரூபாய்க்கு ஐநூறு கொடுக்கவும் “இருன்கண்ணே, சில்லறை எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றாள்.
அந்த நேரம் பாத்து அங்கே வந்த வள்ளி, வந்தனா, வைதேகி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். 
“வைதேகி, இப்ப ஏதாவது பண்ணினா தான் இவளை வெளிய அனுப்ப முடியும். பால்காரன் கூட சேத்து வச்சு கதை கட்டிருவோமா”, என்று வள்ளி சொன்னதும் வைதேகியும் சரண்யாவை இன்றே வீட்டை விட்டு அனுப்ப முடிவு செய்தாள்,.
பால் காரன் அங்கிருந்து சென்றதும் “எத்தனை நாளா டி இது நடக்குது?”, என்று சரண்யாவிடம் கேட்டாள் வைதேகி. 
“என்ன அத்தை சொல்றீங்க?”, என்று புரியாமல் கேட்டாள் சரண்யா. 
“வீட்ல யாரும் இல்லாத நேரம் பால்காரன் கூட என்ன டி கூத்து”
“அத்தை, வார்த்தையை அளந்து பேசுங்க. யாரைப் பாத்து என்ன வார்த்தை சொல்றீங்க?”
“என்ன சத்தம் கூடுது? உண்மையை சொன்னா எரியுதா? என் வீட்டு மானமே போச்சே. நீயெல்லாம் ஒரு பொண்ணா? நீ ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க கூடாது. வெளிய போடி”, என்று கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாள். 
சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் கூடி விட்டார்கள்.
“ஏமா என்ன பிரச்சனை? எதுக்கு சரண்யாவை வெளிய தள்ளுற?”, என்று கேட்டார்.  “வீட்ல ஆள் இல்லாத நேரம், இவ கண்டவன் கூட கும்மி அடிச்சிட்டு இருக்கா. தினம் தினம் ஒருத்தன். இன்னைக்கு பால்காரன். எங்க கண்ணால பாத்தோம். இனி இவ இந்த வீட்ல இருக்க கூடாது”, என்று பால்காரனுடன் சேர்த்து வைத்து பேச ஆரம்பித்தாள் வைதேகி. 
அவள் பேச்சைக் கேட்டு அனைவரும் வைதேகியை புழுவைப் பார்ப்பது போல தான் பார்த்தார்கள். 
அனைவருமே சரண்யா படும் கஷ்டத்தை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அந்த பால்காரனைத் தான் அனைவருக்கும் தெரியுமே? அவன் ஒரு வாயில்லா பூச்சி. அவனை குறை சொன்னதும் அனைவருக்கும் வைதேகி மேல் தான் சந்தேகம் வந்தது.  
அனைவரும் என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக இருக்க வைதேகியோ பேசக் கூடாத பேச்சை எல்லாம் பேசிக் கொண்டே போனாள்.
ஆனால் அதற்கு மேல் அவள் பேச்சை கேட்க முடியாத சரண்யா “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனீங்க, மரியாதை கெட்டு போயிரும் பாத்துக்கோங்க”, என்று கத்தி விட்டாள். 
“என்ன டி செய்யுறதையும் செஞ்சிட்டு திமிரா பேசுவியா?”
“ஆமா ஆமா நீங்க போட்ட சோத்தை தின்னு வந்த திமிரு தான்”
“பின்ன யாரு சோறாம்? எல்லாம் என் புருஷன் போட்ட பிச்சை. உன் அப்பன் போய் சேந்ததுல இருந்து நீயும் உன் ஆத்தாளும் என் புருஷன் கிட்ட தானே டி பிச்சை வாங்கி தீங்குறீங்க?”
“எங்க அம்மாவை பத்தி பேசினா நான் சும்மா இருக்க மாட்டேன்”
“என்ன டி செய்வ? இந்நேரம் பால் காரன் கூட உனக்கு வீட்டுக்குள்ள என்ன வேலை டி?”
“அவன் கணக்கு முடிக்க தான் வந்தான். நீங்க நினைக்கிற மாதிரி கேவலமா எல்லாம் ஒண்ணும் இல்லை. இப்ப நீங்க ஏதாவது பேசினா உங்க மரியாதை உங்க கிட்ட இருக்காது” 
“அப்படி தான் பேசுவேன். அவ்வளவு ரோஷம் இருக்குறவ, எதுக்கு டி என் வீட்டுல இருக்குற? வீட்டை விட்டு வெளிய போ டி”
“போக தான் போறேன். என் மானத்தை பத்தி பேசி அசிங்க படுத்தின அப்புறம் நான் இங்க இருப்பேன்னு நினைச்சீங்களா? போக தான் போறேன். இதுக்கு மேலயும் இங்க இருக்க எங்க அம்மா என்னை ரோஷம் கேட்டவளா வளக்களை. நானும் பெரியவங்கன்னு நினைச்சு பொறுத்து போனா வாய்க்கு வந்த படி பேசுவீங்களா? நான் போறேன். ஆனா போறதுக்கு முன்னாடி என் மகனை தூக்கிட்டு போறேன்”, என்று சொல்லி வீட்டுக்குள் செல்லப் போனாள் சரண்யா. 
“என்னது உன் மகனா? நீயாடி பெத்த?”, என்று கேட்டுக் கொண்டே அவளை தூரத் தள்ளி விட்டாள் வைதேகி. தரையில் விழுந்த சரண்யா தலையில் ஒரு கல் குத்தி ரத்தம் வந்தது. 
காடு விதைப்பை பத்தி கதிரேசனிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் பூங்கோதை. 
அப்போது “கோதை சித்தி கோதை சித்தி”, என்று அழைத்த படி வந்தாள் கிரிஜா என்ற பெண். 
“என்ன டி பதறிட்டு ஓடி வர?”
“அங்க சரண்யா வீட்ல ஒரே சண்டை. உங்க நாத்தனா அவளை புடிச்சு அடிக்குது. தப்பு தப்பா பேச வேற செய்யுது. உங்க அண்ணன் வேற வீட்ல இல்லை போல? வந்து என்னன்னு பாருங்க”, என்று சொல்லிச் சென்றாள். 
மகளின் நிலையைக் கேட்ட கோதை  அந்த வயதிலும் ஓடோடிச் சென்றாள். கதிரேசனும் அங்கு சென்றான்.  
இருவரும் அங்கே போகும் போது அங்கே கலவரமே நடந்து கொண்டிருந்தது. வைதேயின் வரை முறை இல்லாத பேச்சு சத்தம் மட்டும் அங்கே ஒலித்துக் கொண்டிருந்தது.  
கீழே விழுந்து எழுந்த சரண்யா முகத்தில் ரத்தம் வடிய நின்றிருக்க அதைக் கண்டு துடித்து போனாள் கோதை. 
“சரண்யா கண்ணு, என்ன மா ரத்தம்? என்ன ஆச்சு?”, என்று அவளை தாங்கினாள் அந்த தாய். 
“அம்மா”, என்று அவள் தோள் சாய்ந்து கதறினாள் சரண்யா. 
“இந்தா வந்துட்டாள்ள, உன் ஆத்தாக்காரி, வாடி வா. இப்படி ஒரு கேடு கெட்டவளை என் வீட்ல தள்ளி விடணும்னு தானே தள்ளி விட்டுருக்க?”, என்று கேட்டாள் வைதேகி. 
“மதினி இப்படி எல்லாம் அசிங்கமா பேசாதீங்க”, என்று காளியின் உக்கிரத்துடன் சொன்னாள் கோதை. 
கதிரேசனும் எதையோ சொல்லப் போக அவன் கையைப் பற்றி தடுத்தான் வேம்பு. கூடவே “வேண்டாம் மாப்பிள்ளை, அந்த பொம்பளை வரை முறை தெரியாம பேசுது. யாரு சப்போர்ட்டுக்கு போனாலும் அவங்க கூடவே சேத்து வச்சு பேசுது. எல்லாரும் அந்த பால்காரனை வரச் சொல்லிருக்காங்க. நீ அமைதியா இரு”, என்று எச்சரித்து விட்டான். அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வேடிக்கை பார்த்தான் கதிரேசன். 
“நான் அசிங்கமா பேசுறேனா? ஏன் சொல்ல மாட்ட. உண்மையை சொன்னா எரிய தானே செய்யும்? கல்யாணம் முடிஞ்சு என் மகன் இவளை தொட கூட செய்யாம போய்ட்டான்ல? அதான் இவ அடுத்தவனை தேடுறா?”, என்று சொன்னதும் “வாயை மூடுங்க”, என்று கத்தினாள் பூங்கோதை. 
“இதுக்கு மேல ஏதாவது பேசுனீங்கன்னா உங்களை கொன்னுட்டு கூட நான் ஜெயிலுக்கு போயிருவேன். பணம் இல்லைன்னா உங்களுக்கு நாங்க கிள்ளுக் கீரையா போய்ட்டோமா?”, என்று கத்தியவன் மகள் புறம் திரும்பி “தேவையாடி இது உனக்கு. தேவையா இது? எவ்வளவு படிச்சு படிச்சு சொன்னேன்? உன் பின்னாடியே திரிஞ்ச அந்த கதிரேசனை கட்டிக்கோ கட்டிக்கோன்னு
சொன்னப்பவே என் பேச்சைக் கேட்டியா?”, என்று சரண்யாவை அடித்துக் கொண்டே மனது கேளாமல் கேட்டு விட்டாள் கோதை. அந்த வார்த்தையை வந்தனா நன்கு உள் வாங்கிக் கொண்டாள்.  
அப்போது தான் உள்ளே வந்து கொண்டிருந்த சீனிவாசன் வீட்டு வாசலில் இருந்த கூட்டத்தைக் கண்டு பதறி விட்டார், 

Advertisement