Advertisement

“என்னை மன்னிச்சிரு வைதேகி. எனக்கு முதல்ல எதுவும் தெரியாது. பிரேமா காலேஜ்ல படிக்கும் போது ஒருத்தனை விரும்பி மோசம் போயிட்டா. அவ கற்பமான அப்புறம் தான் எனக்கு விஷயம் தெரியும். அவன் கிட்ட போய் நியாயம் கேட்டோம். ஆனா அவன் கேடு கெட்டவன்னு அப்புறம் தான் தெரிஞ்சது. நிறைய பொண்ணுங்க வாழ்க்கைல இப்படி தான் விளையாடிருக்கான்னு
தெரிஞ்சது. என்னை தொந்தரவு பண்ணாம போனீங்கன்னா நானும் உங்களை எதுவும் செய்ய மாட்டேன். இல்லைன்னா, போட்டோ விடியோன்னு எல்லாருக்கும் போட்டுக் காட்டுவேன்னு மிரட்டினான். விட்டாப் போதும்னு அங்கேயே அவன் எடுத்த வீடியோ போட்டோ எல்லாம் அவனை கொழுத்த சொல்லிட்டு ஆஸ்பத்திரிக்கு போய் கருவைக் கலைச்சோம். எனக்கு மக வாழ்க்கையை நினைச்சு கவலை வந்தது. வாசுவுக்கு கட்டிக் கொடுத்தா பக்கத்துலே இருப்பான்னு நான் தான் உங்க அண்ணன் கிட்ட சொல்லி உன்கிட்ட பேசச் சொன்னேன். உனக்கும் சின்ன வயசுல இருந்து பிரேமாவை வாசுவுக்கு கட்டி வைக்கணும்னு ஆசை. அதனால தான்….”, என்று சொல்லி குமுறி குமுறி அழுதாள் வள்ளி. 
“சீ, மோசக்காரி, என்னையும் என் மகனையும் என்னன்னு நினைச்ச? எவனோ சாப்பிட்ட எச்சி இலையை என் மகன் தலைல கட்டிருக்க? ஐயோ மோசம் போய்ட்டேனே? என் புருஷன் வேண்டாம் வேண்டாம்னு தலைப்பாடா அடிச்சி கிட்டாரே. அவரை சல்லிக் காசுக்கு நான் மதிக்கலையே? வாசு என்னை மன்னிச்சிரு டா”, என்று கதறி அழுதாள் வைதேகி. 
இறுகி போய் அமர்ந்திருந்தான் வாசு. வந்தனாவுக்கு கேட்ட விஷயம் சகிக்க முடியாததாக இருந்தது. 
“இவ்வளவு கேவலமான வேலை பாத்துருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை அத்தை. என் மக தவறான வழில போய் வாழ்க்கையை அழிச்சிக்கிட்டா. அவளுக்கு வாழ்க்கை பிச்சை போடுங்கன்னு கேட்டுருந்தீங்கன்னா கூட அண்ணன் உங்க மகளை கட்டிருந்துருப்பான். ஆனா இப்படி உண்மையை மறைச்சு அவனை அசிங்க படுத்திட்டீங்களே? இவ்வளவு துரோகியா நீங்க?”, என்று கேட்டாள் வந்தனா. 
“என்ன… என்ன சொன்ன? வாழ்க்கை பிச்சை கேட்டுருந்தா கொடுத்துருப்பேனா? என்னை என்ன இழிச்ச வாயன்னு நினைச்சியா வந்தனா? ஒரு பொண்ணை முகம் தெரியாத யாராவது கற்பழிச்சு தவிக்க விட்டுட்டு போயிருந்தா அவளுக்கு வாழ்க்கை கொடுக்கலாம். ஆனா இவங்க மக நம்ம கலாச்சாரத்தை மதிக்காம இவளா சீரழிஞ்சிட்டு வந்தா நான் வாழ்க்கை கொடுப்பேனா? உன்னால எப்படி இப்படி பேச முடியுது வந்தனா? ஆனா இப்ப பேசி என்ன பண்ண? கடைசில அவளுக்கு வாழ்க்கை கொடுத்து என் வாழ்க்கையை நான் இழந்துட்டேனே? அந்த நாயை எவ்வளவு நம்புனேன்? சரண்யாவை கட்டிக்கணும்னு சாகுறதுக்கு முன்னாடி பிரேமா சத்தியம் கேட்டதுனால தான் நான் சரண்யாவை கட்டிக்கிட்டேன். அதுக்கப்புறமும் சரண்யா கிட்ட நான் பேசிப் பழகினா பிரேமா ஆத்மா கூட என்னை மன்னிக்காதுன்னு நினைச்சு தானே நான் சரண்யாவை விட்டு விலகி நின்னேன். என்னை இப்படி ஏமாத்திட்டாளே?”, என்று கதறி அழுதான். 
அவனுக்கு என்ன ஆறுதல் சொல்ல என்று அங்கிருந்த யாருக்குமே புரியவில்லை. 
அழுது முடித்து விட்டு நிமிர்ந்து அமர்ந்த வாசு “அவ செத்தப்ப இருந்த வலியை விட எனக்கு இப்ப தான் ரொம்ப வலிக்குது. இது உங்க புருசனுக்கும் மகனுக்கும் தெரியுமா?”, என்று கேட்டான். 
“இல்லை வாசு, சத்தியமா தெரியாது. தெரிஞ்சிருந்தா எங்களை கொன்னு போட்டுருப்பாங்க. எனக்கு மட்டும் தான் தெரியும்”, என்றாள் வள்ளி. 
“ஆத்தாலும் மகளுமா சேந்து என் குடும்பத்தையே சந்தி சிரிக்க வச்சிட்டீங்களே? அந்த சரண்யா மேல பழி போட்டேனே? ஆனா அத்தை அத்தைன்னு நடிச்சு ஏமாத்திருக்காளே அந்த பிரேமா நாயி”, என்று புலம்பினாள் வைதேகி. 
“வேண்டாம் வைதேகி, பிரேமா போய் சேந்துட்டா. இனி அவளைப் பத்தி பேச வேண்டாம். அவ ஆத்மாவாது சாந்தி அடையட்டும்”, என்று சொல்லிக் கொண்டே நிமிர்ந்த வள்ளி அங்கே நின்ற கணவரையும் மகனையும் அதிர்ந்து போய் பார்த்தாள். 
அவள் அதிர்ச்சியைக் கண்டு மற்றவர்களும் திரும்பி பார்த்தார்கள். அங்கே உக்கிர மூர்த்தியாக நின்று கொண்டிருந்தார்கள் கிரிதரனும் நிரஞ்சனும். 
“என்னங்க….”, என்று வள்ளி அழைக்க “சீ வாயை மூடு. எவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சு எங்களுக்கு தெரியாம என்ன வேலை எல்லாம் பாத்துருக்க? உன் மகனுக்கு அப்படிப் பட்ட பொண்ணை கட்டி வச்சிருப்பியா டி? பாவி. நீயெல்லாம் ஒரு தாயா? உன் மகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கணும்னு நினைச்ச சரி. சின்ன வயசுல இருந்து வாசுவும் நம்ம மகன் மாதிரி தானே வளந்தான்? அவனை ஏமாத்த உனக்கு எப்படி மனசு வந்துச்சு? வாசு, இந்த பாவத்துல எனக்கும் என் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைப்பா. அந்த சனியனை பெத்த பாவத்துக்கு நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சரி தான் பா. இனி இவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ செத்தா கூட இவ முகத்துல நான் முழிக்க மாட்டேன்”, என்றார் கிரிதரன். 
நிரஞ்சன் வள்ளியை பார்க்க கூட விரும்ப வில்லை. வள்ளி நிரஞ்சன் அருகில் சென்று அவன் கையை பற்றினாள். அதை சீ என்ற சொல்லொடு உதறி தள்ளி விட்டு தூரம் போய் நின்ற நிரஞ்சன் “என்னை மன்னிச்சிரு வாசு”, என்று மன்னிப்பை வேண்டினான். 
“ஆள் ஆளுக்கு இப்ப வந்து மன்னிப்பு கேக்குறீங்களே? ஐயோ என் ஒத்த பிள்ளை மனசை இப்படி உடைச்சிட்டேனே”, என்று ஆரம்பித்து வைதேகி வள்ளியை திட்ட ஆரம்பிக்க “வாயை மூடுங்க”, என்று கத்தினான் வாசு. 
அனைவரும் அதில் அமைதியாக “பஞ்சாயத்துக்கு போக வேண்டிய நேரம் வந்துருச்சு. எல்லாரும் கிளம்புங்க”, என்றான். 
“வாசு”, என்று வள்ளி அழைக்க “செத்துப் போனவளை இனி அசிங்கப் படுத்த நான் விரும்பலை. இன்னொன்னு அதை நான் வெளிய சொன்னா எல்லாரும் என்னைத் தான் அசிங்கமா பாப்பாங்க. நான் ஏமாந்தது என்னோட போகட்டும்;. அங்க வந்து யாரும் இந்த விஷயத்தை மூச்சு விடக் கூடாது. அப்புறம் சரண்யா காலுல விழுந்து நீங்க மூணு பேரும் மன்னிப்பு கேக்கணும். அது தான் நீங்க பண்ணின பாவத்துக்கு பரிகாரம். எனக்காக இதைச் செய்வீங்கன்னு நம்புறேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான். 
பிரேமாவின் துரோகம் தெரிந்ததில் சரண்யா, வைதேகி மற்றும் வந்தனா மனதில் உயர்ந்து விட்டாள். அதனால் அவளிடம் மன்னிப்பு கேட்பதில் அவர்களுக்கு எந்த சங்கடமும் இல்லை. அதனால் மன்னிப்பு கேட்கவென பஞ்சாயத்துக்கு கிளம்பினார்கள். 
கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு வள்ளியும் அவர்களுடன் சென்றாள். 
ஊர் மக்கள் அனைவரும் அங்கே கூடியிருந்தார்கள். கோதை, சரண்யா, சீனிவாசன், கதிரேசன், வசந்தா ஒரு பக்கம் நின்றார்கள். மற்றொரு பக்கம் வாசுவின் குடும்பத்தினர் நின்றார்கள். 
சரண்யாவோ வாசுவையே இமைக்காமல் பார்த்தாள். அவனுடைய ஒற்றைப் பார்வைக்காக தவம் இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அவனோ அவள் புறம் திரும்பவே இல்லை. 
எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளைப் பார்ப்பானாம்? தன் மேல் உயிரையே வைத்த அவளுக்கு தான் நியாயம் செய்ய வில்லை என்று அவன் மனது குத்தியது. 
சரண்யா கவனம் வந்தனா கையில் இருந்த குழந்தையிடத்திலும் தாவியது. ஆதியை தூக்க அவள் கையும் மனமும் பரபரத்தது. ஆனால் அவர்கள் திட்டுவார்கள் என்று எண்ணி அமைதியாக நின்றாள். ஆனாலும் அவளின் பார்வை கணவன் மற்றும் மகன் புறமே இருந்தது. 
அதைக் கண்டு கோதை தலையில் அடித்துக் கொண்டாள். அம்மாவின் செய்கைக்கு காரணம் புரியாமல் அவளைப் பார்த்த சரண்யா “என்னம்மா?”, என்று கேட்டாள். 
“உன் பாசத்துல இடி விழ. இங்க உன் மானத்தை சந்தேகப் பட்டு தான் ஊர்க் கூட்டமே கூடிருக்கு. ஆனா உன் கண்ணு எங்க இருக்கு? இப்படியா டி ரோஷம் கெட்டுப் போய் இருக்க? நீ என் மக தானா? மவளே, இன்னொரு தடவை எனக்கு மாமன் தான் வேணும்னு எல்லார் முன்னாடியும் சொன்ன சோத்துல விஷத்தை வச்சி கொன்னுறுவேன் பாத்துக்கோ”, என்று திட்டியதும் திகைத்து போய் தன்னுடைய தாயைப் பார்த்தாள் சரண்யா. 
கண்டிப்பாக சொன்னதைச் செய்வேன் என்ற பார்வையை மகளை நோக்கி வீசினாள் கோதை. 
“ஏப்பா வாசு, உங்க குடும்பத்துல நடந்தது எங்க எல்லாருக்கும் தெரியும். அதனால திருப்பி திருப்பி அதை எடுத்து பேச வேண்டாம். நீ தான் பஞ்சாயத்தைக் கூட்டச் சொன்ன? அதனால நீ தான் பேசணும். முடிவு உன்னோடது தான்”, என்றார் ஊர் பெரியவர். 
“ஐயா முதல்ல இதுல என்னோட முடிவு மட்டும் கிடையாது. இதுல பாதிக்கப் பட்டது சரண்யா தான். அதனால அவ முடிவை முதல்ல சொல்லட்டும்”, என்றான் வாசு. 
அவனை நிமிர்ந்து பார்த்தவள் “கதிர் கூட என்னை சேத்து வச்சு பேசினதை நம்பினல்ல? உனக்கு இருக்கு மாமோவ்”, என்று மனதில் எண்ணிக் கொண்டு “எனக்கு வாசு மாமா வேண்டாம்”, என்றாள் சரண்யா. 
அவள் பதிலில் அனைவரும் திகைத்து விட்டார்கள். வாசுவோ தன்னுடைய சோகம் அனைத்தையும் மறந்து அவளை திகைப்பாக பார்த்தான். 
அவள் அப்படிச் சொன்னவுடன் அவனுக்கு ஆர்வமும் அதிகமானது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் கோதையும் சரி, கதிரும் சரி சரண்யா அவனை விரும்புகிறாள் என்று தான் சொன்னார்கள். அதனால் அவளுடைய இந்த பதிலை அவன் எதிர் பார்க்கவே இல்லை. 
கோதையோ “இவ என்ன திருந்திட்டாளா?”, என்று எண்ணி தன்னுடைய மகளை வேற்றுகிரக வாசியைப் போல பார்த்தாள். 
“சரண்யா நீ என்னமா இப்படி பொசுக்குன்னு உன் புருஷனை வேண்டாம்னு சொல்லிட்ட? நல்லா யோசிச்சு சொல்லு மா”, என்றார் நாட்டாமை. 
“நல்லா யோசிச்சு தான் சொல்றேன். எனக்கு வாசு மாமா  வேண்டாம். ஆனா எனக்கு குழந்தை மட்டும் வேணும். ஆதி என் மகன். யார் என்ன சொன்னாலும் அவனை நான் என் மகனா தான் பாக்குறேன். எனக்கு என் மகன் வேணும். ஆனா அப்பா வேண்டாம்”, என்றாள். 
அவள் சொன்னதில் வாசு உதடுகள் அழகாக மலர்ந்தது. 
“என்னையா வேண்டாம்னு சொல்ற? இரு டி உன்னை வச்சிக்கிறேன்”, என்று எண்ணிக் கொண்டு “அதெல்லாம் குழந்தையை மட்டும் கொடுக்க முடியாது”, என்றான் வாசு. இப்போது திகைப்பது அவள் முறை.
 
காதல் தொடரும்…

Advertisement