Advertisement

அவனை நம்ப வைத்து அல்லவா கழுத்தை அருத்திருக்கிறார்கள். வேறு யாராவது இதைச் சொல்லியிருந்தால் “என்னுடைய மனைவியை பத்தி இப்படிச் சொல்லுவீங்களா?”, என்று கேட்டு அவர்கள் சங்கை அருத்திருப்பான். ஆனால் சொன்னது கோதையாயிற்றே. 
கோதை பொய் சொல்ல மாட்டாள். ஒரு வேளை மகளின் வாழ்க்கைக்காக வாசு பிரேமாவை மறந்து சரண்யாவுடன் வாழ்வதற்காக பொய் சொல்லி இருக்கலாம் என்ற எண்ணமும் அவனுக்கு வந்தது. 
இதில் உண்மையை சொல்லக் கூடிய ஒரே ஆள் வள்ளி மட்டும் தான் என்று புரிந்தது. நேரடியாக தன்னுடைய வீட்டுக்கு தான் சென்றான். தளர்ந்து போய் செல்லும் வாசுவை பார்த்த படியே நின்றாள் கோதை. 
இவன் வீட்டுக்கு சென்ற போது வைதேகி, வள்ளி, வந்தனா மூவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். 
இவனைக் கண்டதும் “எங்க போன வாசு? இன்னும் சாப்பிடக் கூட இல்லை”, என்றாள் வைதேகி. 
“வா வாசு, நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”, என்று எழுந்தாள் வள்ளி. 
“இல்லை எனக்கு வேண்டாம். நீங்க உக்காருங்க. நான் ஒரு விஷயம் பேசணும்”, என்றதும் வள்ளி அமர்ந்தாள். அவன் குரல் அவ்வளவு இறுக்கமாக ஒலித்தது. 
“என்ன விசயம்ணா?”, என்று கேட்டாள் வந்தனா. 
“ஏன் வந்தனா, இந்த கல்யாணத்துக்கு முன்னாடியே எவன் மூலமாவது கரு உண்டாகி அதை கலைச்சு வேற கல்யாணம் பண்ணி ஒருத்தனை ஏமாத்துராங்களே. அதைப் பத்தி நீ என்ன நினைக்கிற?”, என்று கேட்டான் வாசு. 
அவன் கேள்வி வந்தனாவிடம் தான். ஆனால் பார்வை முழுக்க வள்ளி மேலே இருந்தது. வள்ளி பதறிப் போனாள். அவளுக்கு சுருக்கென்று இருந்தது. 
“யாருக்கும் தெரியாத ரகசியம் இவனுக்கு எப்படி தெரிந்தது. தெரிந்து கேட்கிறானா, இல்லை போட்டு வாங்குகிறானா?”, என்று அவள் குழம்பி போனாள். 
அவளுடைய பதட்டமும், அவள் முகம் எல்லாம் இருந்த வியர்வையுமே வாசுவுக்கு அனைத்தையும் உண்மை என்று விளக்கியது. 
“என்னண்ணா, இப்படி அசிங்கமா பேசுற? இந்த விஷயம் எதுக்கு நீ பேசுற? ஒரு வேளை அந்த சரண்யா நாய் இப்படி பட்ட வேலை எல்லாம் செஞ்சிருக்கா? அது மன்னிக்க முடியாத துரோகம். சே இதுக்கு அந்த கோதை அத்தையும் உடந்தையா? நல்லதா போச்சு, நீ அந்த தரங்கெட்டவளுடன் வாழ ஆரம்பிக்கலை. இதையும் பஞ்சாயத்துல சொல்லிரு. இந்த ஒரு விஷயமே அவங்களை ஊமை ஆக்கிரும்”, என்றாள் வந்தனா. 
“அடப்பாவி, நாம சும்மா தான் பொய் சொல்லி அவளை இங்க இருந்து விரட்ட திட்டம் போட்டு பால்காரன் கூட சேத்து வச்சு பேசினோம். ஆனா உண்மைலே அவ பெரிய தில்லாலங்கடியா?”, என்று கேட்டு உண்மையை உளறினாள் வைதேகி. 
“அம்மா…வாயை மூடு”, என்று வந்தனா கத்தியதும் தான் உளறியதையே உணர்ந்தாள் வைதேகி. 
மூவரையும் அவன் புழுவைப் பார்ப்பது போல பார்க்க அவர்களோ அவனைக் கண்டு எச்சில் விழுங்கினார்கள். 
“வாசு, அது வந்துப்பா…”, என்று வைதேகி இழுக்க “ஆக சரண்யா மேல பொய்யான பழியை போட்டு அவளை வெளிய அனுப்பிருக்கீங்க? உங்க பிளான் சூப்பர் தான். அதைப் பத்தி அப்புறம் பேசலாம். இப்ப நான் சொன்ன விஷயத்தை பத்தி பேசி முடிக்கலாம். அதான் அந்த கருக்கலைப்பு விஷயத்தை பத்தி தான் சொல்றேன். நான் அதைப் பத்தி பஞ்சாயத்துல சொல்லலாமா?”, என்று கேட்டான் வாசு. 
“இவன் என்ன சம்பந்தமே இல்லாம பேசுறான்?”, என்று எண்ணி அவனைக் குழப்பமாக வைதேகியும் வந்தனாவும் பார்த்தார்கள் என்றால் வள்ளி அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள். வள்ளிக்கு அனைத்து விஷயமும் வாசுவுக்கு தெரிந்து விட்டது என்ற உண்மை புரிந்தது. இனி மறைக்க முடியாது என்று எண்ணி அவனை நிமிர்ந்து பார்த்தாள். 
“சொல்லிறலாம் அண்ணா, அது ஒண்ணு போதும் அந்த சரண்யாவை
உன்னோட வாழ்க்கைல இருந்து விரட்ட. நாங்க பொய் சொன்னதை ஒத்துக்குறோம் அண்ணா. ஆனா நீ தான் அதுக்கு மேலயும் அவளைப் பத்தின பெரிய உண்மையை கண்டு பிடிச்சிட்டியே. கண்டிப்பா பஞ்சாயத்துல கருக்கலைப்பு செஞ்ச விஷயத்தை சொல்லணும்”, என்றாள் வந்தனா. 
“நீ சொல்லணும் சொல்லணும்னு சொல்ற? ஆனா உங்க அத்தை ஒண்ணும் சொல்ல மாட்டுக்காங்களே?”, என்று வாசு சொன்னதும் வைதேகியும் வந்தனாவும் கூட வள்ளியைப் பார்த்தார்கள். 
“என்ன சொல்லவா?”, என்று நேரடியாக வள்ளியின் கண்களைப் பார்த்துக் கேட்டான் வாசு. 
“வேண்டாம் வேண்டாம்”,. என்று பதறினாள் வள்ளி. 
“அத்தை என்ன இப்படிச் சொல்றீங்க? இப்படி பட்டவளை நாம பஞ்சாயத்துல சொல்லி தான் ஆகணும். அப்படிச் சொன்னா தான் இனி அந்த சரண்யா இங்க வர மாட்டா”, என்றாள் வந்தானா., 
“இவ வேற நிலைமை புரியாம பேசுறாளே?”, என்று எண்ணிய வள்ளி “வேண்டாம் வேண்டாம். பஞ்சாயத்துல எதுவும் சொல்ல வேண்டாம் வாசு”, என்று பதறினாள். 
“அத்தை என்ன ஆச்சு அத்தை? எதுக்கு இப்படிச் சொல்றீங்க?”, என்று கேட்டாள் வந்தனா. 
“அவங்க கிட்ட எதுக்கு வந்தனா கேக்குற? நான் சொல்றேன் அதுக்கான பதிலை”, என்றான் வாசு. 
“என்ன சொல்லப் போறண்ணா? எனக்கு நீ பேசுறது ஒண்ணுமே புரியலை”
“உனக்கு புரியுற மாதிரி சொல்றேன் வந்தனா. ஒழுக்கம் இல்லாதவள்னு சொல்லி நீங்க சரண்யாவை வீட்டை விட்டே விரட்டுனீங்க. ஆனா ஒழுக்கம் தவறினது சரண்யா இல்லை. பிரேமா தான்”, என்று கண்களை மூடிக் கொண்டு விரக்தி குரலில் சொன்னான் வாசு.
“அண்ணா…..”, என்று அதிர்வாக அழைத்தாள் வந்தனா. 
“வாசு, நீ பேசுறது சரியில்லை சொல்லிட்டேன்”, என்றாள் வைதேகி. 
“நான் சொல்றது உண்மையான்னு உங்க அண்ணன் பொண்டாட்டிக் கிட்டயே கேளுங்க. இவங்க மக எவன் மூலமாவோ கற்பமாகி அந்த கர்ப்பத்தை கலைச்சுருக்கா. அதுக்கு இவங்களும் உடந்தை. அப்படிப் பட்டவளைத் தான் எல்லாருமா சேந்து என் தலைல கட்டி வச்சிருக்கீங்க. இதுக்கெல்லாம் காரணம் நீ தான்”, என்று வைதேகியைப் பார்த்து கத்தினான் வாசு. 
“அண்ணா நீ என்ன சொல்ற?”, என்று வந்தனா கேட்க வைதேகியோ அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தாள். அவளால் வாசு பேசிய விசயத்தையும், அதுவும் அவள் தான் காரணம் என்று வாசு சொன்னதையும் அவளால் நம்பவே முடியவில்லை. 
“ஆமா, பிரேமா ஒரு நடத்தை கெட்டவ. அவளை என் தலைல கட்டி வச்சு நம்ம எல்லாரோட தலைலயும் மிளகாய் அறைச்சிருக்காங்க. ஏமா, எப்படி பட்ட ஒரு பொண்ணை எனக்கு பொண்டாட்டியா கொண்டு வந்துருக்க பாத்தியா? ஆனா சரண்யாவைப் போய் தப்பா பேசுற”, என்று அவன் கத்தும் போது பஞ்சாயத்தைப் பற்றி வாசுவிடம் கேட்க வந்த கிரிதரனும் நிரஞ்சனும் வாசுவின் இந்த வார்த்தையில் அப்படியே உறைந்து போய் நின்றார்கள். 
பிரேமாவைப் பற்றி அப்படிச் சொன்னதும் இருவருக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. கோபத்தில் வாசுவின் சட்டையை பிடிக்கும் ஆத்திரத்தோடு நிரஞ்சன் செல்லப் போக அவனை தடுத்து நிறுத்தினார் கிரிதரன்., 
“பொறுமையா இரு, அவங்க என்ன பேசுறாங்கன்னு கேப்போம்”, என்று கண்ணைக் காட்டியதும் கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு நின்றான் நிரஞ்சன். 
“அண்ணா, நாங்க சரண்யாவை குறை சொன்னதுனால நீ செத்துப் போன பிரேமாவை இப்படி சொல்றது தப்பு. அவ உன் பொண்டாட்டி அண்ணா. உன் ரெண்டாவது பொண்டாட்டடிக்காக பிரேமாவை அசிங்கப் படுத்தாத. அவ ஆத்மா கூட உன்னை மன்னிக்காது”, என்றாள் வந்தனா. 
“ஓ நீ இவ்வளவு நியாயஸ்தியா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சரண்யாவை அப்படி சொன்ன. இப்ப பிரேமாவைச் சொன்ன உடனே குதிக்கிற? இதுலயே தெரியலையா உன்னோட நியாயம்? நான் ஒண்ணும் இல்லாததை சொல்லலை. நான் சொன்னது உண்மையா பொய்யான்னு இங்க இருக்காங்களே உன் அத்தை அவங்க கிட்ட கேளு”
“மதினி கிட்ட என்ன டா கேக்குறது? நான் சொல்றேன், நீ வேணும்னு தான் என் மருமக பிரேமா மேல பழி போடுற? சரண்யாவை சொன்னதுக்கு நீ இப்படி பிரேமாவை பேசக் கூடாது வாசு”, என்றாள் வைதேகி. 
“நான் ஒண்ணும் இல்லாததை சொல்லலை. உண்மையா பொய்யான்னு இங்க நிக்குறாங்களே, உன் அண்ணன் பொண்டாட்டி. அவங்க கிட்ட கேளு”
“அத்தை, என்ன அத்தை இதெல்லாம். அவன் பிரேமா பத்தி தப்பு தப்பா சொல்றான். நீங்க அமைதியா கேட்டுட்டு இருக்கீங்க?”, என்று கேட்டாள் வந்தனா. 
பதில் சொல்ல முடியாமல் வள்ளி அழ ஆரம்பித்தாள். வாசுவுக்கு உண்மை தெரிந்த பிறகு அதை இல்லை என்று எதிர்த்து வாதாட அவளுக்கு தெம்பு இல்லை. 
அவளுடைய அழுகை அனைவருக்கும் திகைப்பைக் கொடுத்தது. “மதினி, என்ன அழுறீங்க? அப்படின்னா வாசு சொன்னது உண்மையா? பிரேமாவா அப்படி….?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் வைதேகி. 
“சொல்லுங்க, எல்லாரும் கேக்குறாங்கல்ல? சொல்லுங்க. இன்னும் அமைதியா இருந்தா நான் ஊர்ப் பஞ்சாயத்துல வந்து எல்லார் முன்னாடியும் இந்த விஷயத்தை விளக்க வேண்டி இருக்கும். என்னை என்ன கேணையன்னு நினைச்சீங்களா?”, என்று கர்ஜித்தான் வாசு. 
வள்ளியின் கண்ணீர், கிரிதரன் மற்றும் நிரஞ்சனுக்கு கூட திகைப்பையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. “இந்த அம்மா என்ன அப்படி எல்லாம் இல்லைன்னு சொல்றதை விட்டுட்டு அழுதுட்டு இருக்காங்க?”, என்ற கேள்வி எழுந்தது நிரஞ்சனுக்குள். கிரிதரனுக்கும் அதுவே தான். 
“இப்ப சொல்லப் போறீங்களா இல்லையா? டவுன் ஆஸ்பத்திரிக்கு நீங்களும் உங்க மகளும் போய் தான் கருவை கலைச்சிருக்கீங்க? அதைப் பாத்த சாட்சி இருக்கு. இப்பவும் சொல்ல மாட்டீங்கல்ல? சரி சாயங்காலம் நான் பஞ்சாயத்துல ஊருக்காரங்க மத்தில வச்சு நான் மோசம் போன கதையை சொல்றேன். அவங்க உண்மை எதுன்னு விசாரிக்கட்டும்”, என்று மீண்டும் கத்தினான் வாசு. 
“ஐயோ வேண்டாம் வாசு, வேண்டாம். செத்துப் போனவளை பத்தி பஞ்சாயத்துல பேசி அவளை அசிங்கப் படுத்திறாத. நீ சொன்னது எல்லாம் உண்மை தான். நான் ஒத்துக்குறேன்”, என்று அழுது கொண்டே சொன்னாள் வள்ளி. 
அனைவருமே இடி தலையில் விழுந்தது போல துடித்து போய் நின்றார்கள். அங்கே குண்டூசி விழுந்தால் கூட கேட்கும், அந்த அளவுக்கு அமைதி நிலவியது. 
“மதினி….”, என்று திகைப்பாக அழைத்தாள் வைதேகி. 

Advertisement