Advertisement

அத்தியாயம் 13 
கையில் குடை
இருந்தாலும் மழையில்
நனைய ஆசை கொண்டேன்
உன் விரல் கோர்த்து!!!
கன்னத்தில் கை வைத்த படியே “அம்மா இப்ப எதுக்கு என்னை அடிச்ச?”, என்று கேட்டாள் சரண்யா. 
“கோதை, இப்ப அவளை எதுக்கு இப்படி அடிச்ச?”, என்று சீனிவாசனும் கேட்டார். 
“உங்க முன்னாடி இதை சொல்றேன்னு என்னை தப்பா எடுத்துக்காதீங்க அண்ணே. இவ்வளவு பட்ட அப்புறமும் வாசுவை பாக்க உங்க வீட்டுக்கு போறேன்னு குதிக்கிறா”
“என்னமா சொல்ற? வாசு வந்துருக்கானா?”
“ஆமா, அதான் பாக்கணும்னு குதிக்கிறா.  அந்த அளவுக்கு ரோஷம் இல்லாதவளா இவ? அவன் நேத்து என்ன எல்லாம் பேசினான் தெரியுமா?”
வாசு வந்திருக்கிறான் என்ற செய்து சீனிவாசனுக்கும் திகைப்பைத் தான் கொடுத்தது. 
“பல்லை இளிச்சிக்கிட்டு கிளம்புறேன்னு நிக்க? சோத்துல உப்பு போட்டு தானே டி உனக்கு கொடுக்குறேன். நேத்து அவன் நீயும் கதிரேசனும் திட்டம் போட்டு அவனோட பணத்துக்காக ஆசைப் பட்டு தான் வாசுவை நீ கல்யாணம் பண்ணிருக்கேன்னு சொன்னான். அப்படிப் பட்டவனை நீ பாக்க கிளம்புற?”, என்று கோதை சொல்லியதும் அதிர்ந்தாள் சரண்யா. அவளுக்கு இந்த செய்தி புதிது. 
“என்னமா சொல்ற?”
“என்ன நொன்னம்மா சொல்ற? உனக்கு வெக்கமா இல்லையாடி? வீட்டை விட்டு வெளிய காலடி எடுத்து வச்ச காலுல சூடு போட்டுருவேன் பாத்துக்கோ. அவனைப் பாக்க நீ போகக் கூடாது”, என்று சொல்லி விட்டு கோதை சென்று விட்டாள். 
சீனிவாசனும் அங்கிருந்து நகர்ந்து விட்டார். “என்னை அப்படியா மாமா நீ சொன்ன? என்னைப் பாத்தா நீ அப்படி சொன்ன?”, என்று மானசீகமாக தனக்குள் கேள்வி கேட்ட சரண்யாவுக்கு கோபம் அனலாக கொதித்தது. 
கோபத்தில் அதே இடத்தில் அசையாமல் நின்ற சரண்யா காதில் சமையல் அறையில் இருந்து கோதை புலம்புவது கேட்டது. 
“இப்படி வெக்கம் மானம் இல்லாதவளை பெத்து வச்சிருக்கேனே? இவளை வெட்டி விட்டுருன்னு அவன் கிட்ட சொன்னா அவன் கதிரேசனுக்கு உன் மகளை கட்டி வைக்கப் போறியான்னு வரை முறை இல்லாம பேசுறான். இவ என்னடான்னா அவனுக்காக குதிக்கா”, என்றாள் கோதை. அதைக் கேட்டு சரண்யா கண்கள் மின்னியது. 
மெதுவாக கோதை அருகில் சென்ற சரண்யா “மாமா அப்படியாமா சொன்னாரு?”, என்று கேட்டாள். 
“ஆமா டி ரோஷம் கெட்டவளே, நீ கட்டுன தாலி தேவையில்லைன்னு சொல்றேன். அதுக்கு கதிரேசனுக்கு கட்டி வைக்க நினைக்கிறியான்னு கேக்குறான்”, என்றாள். 
“ஒரு வேளை வாசு மாமா கதிரேசனை நான் கட்டிக்குவேன்னு நினைச்சு பொறாமைல சொல்லிருக்குமோ மா?”, என்று கேட்டாள் சரண்யா. 
அவள் கேள்வியில் அவளை அதிர்வாக பார்த்தாள் கோதை. “நீ என்ன டி சொல்ற?”
“அம்மா, மாமாக்கு என்னைப் பிடிக்கலைன்னா நான் கதிரேசனை கட்டிக்கிட்டா கூட அது பெருசா தெரிஞ்சிருக்காது. ஆனா என்னைப் பிடிக்கப் போய் தான் கதிரேசன் என்னை விரும்புறது தெரிஞ்சதும் கோபத்துல அப்படி எல்லாம் பேசிருக்கு”
“ஒரு வேளை அப்படியும் இருக்குமோ? என்னமோ டி, எனக்கு உன்னை நினைச்சா தான் கவலையா இருக்கு? ரொம்ப எதிர்பார்ப்பு வைக்காத சரண்யா. அப்புறம் ஏமாறப் போற? சீமைல இருந்து வந்துருக்குற உன் மாமன் என்ன தான் முடிவு எடுப்பான்னு பாப்போம். எப்படியும் உன் அத்தைக்காரி அவன் கிட்ட உன்னைப் பத்தி தப்பு தப்பா தான் வத்தி வைப்பா. பாப்போம். நீ சாப்பிட வா. மாமாவையும் சாப்பிட கூப்பிடு”, என்று சொல்லி விட்டு வேலையில் கவனம் செலுத்தினாள். 
ஆனால் சரண்யா மனது முழுவதும் வாசுவே நிறைந்திருந்தான். அவன் வந்தது சந்தோஷமாக இருந்தாலும் “அவன் என்னை எப்படி கதிர் கூட சேத்து வச்சு பேசலாம்?”, என்ற கோபமும் உள்ளுக்குள் இருக்க தான் செய்தது. 
அன்று மாலை பஞ்சாயத்து என்று தெரிந்ததும் அனைவருக்கும் திக் திக்கென்று தான் இருந்தது. 
குளித்து முடித்து கீழே இறங்கி வந்த வாசு வெளியே செல்லப் போனான்.
“சாப்பிட்டு போ வாசு”, என்றாள் வைதேகி. 
“வந்து சாப்பிடுறேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான். 
அப்போது “எதுக்கும் கலங்காம இரு சரண்யா. இந்த தடவையாவது அம்மா சொல்றதைக் கேப்பேன்னு நம்புறேன். நான் வயல் வரைக்கும் போயிட்டு வரேன். நீயும் அண்ணனும் சாப்பிடுங்க”, என்று சொல்லி விட்டு வயலுக்கு சென்றாள் கோதை.
அங்கே வயலில் அவளுக்கு முன்னமே வந்து அவளுக்காக காத்திருந்தான் வாசு. அவனைக் கண்டதும் கோதைக்கு முதலில் வந்தது திகைப்பு தான். பின் கோபம் வெறுப்பு என்ற உணர்வுகள் அவள் முகத்தில் வந்து போனது. 
அவனைப் பார்த்து கோபத்தில் ஏதாவது சொல்லி விடுவோம் என்று எண்ணி அமைதியாக நின்றாள் கோதை. 
“அத்தை”, என்று அழைத்தான் வாசு. 
“என்னைக் கூப்பிடாத அப்படி”
“எப்படி இருந்தாலும் நீ என் அத்தை தான். உன்னோட கோபமும் நியாயமானது தான். அந்த கோபத்தை நீ என்கிட்ட அப்புறமா காட்டு. நான் இப்ப சரண்யா பத்தி பேச வரலை. வேற ஒரு விஷயம் 
பேச தான் வந்தேன்”
“அதானே, உனக்கு என் மக கிள்ளுக்கீரை தானே? அவளைப் பத்தி நீ எப்படி கேப்ப? என்ன விஷயம் பேசணும்னு சீக்கிரம் சொல்லு. எனக்கு வேலை இருக்கு”
“எனக்கு பிரேமா பத்தி தெரியணும். அன்னைக்கு நீ எதுக்கு அப்படி சொன்ன?”
“என்ன… என்ன சொன்னேன்? அதெல்லாம் ஒண்ணும் சொல்லலையே? பிரேமா பத்தி நான் எதுக்கு பேசப் போறேன்?”, என்று தடுமாறிய கோதை இவன் இதை வந்து கேட்பான் என்ற சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. 
இதை எப்படி சமாளிக்க போறேன் என்று உள்ளுக்குள் படபடப்பாக இருந்தது.
“இல்லை, நீ பிரேமாவைப் பத்தி தப்பா பேசின?”
“இப்ப என்ன உன் பொண்டாட்டியை பத்தி தப்பா பேசினதுக்கு என்னை வெட்டிப் போடப் போறியா, போடு”
“பேச்சை மாத்தாத. எதுக்கு அப்படிச் சொன்ன? எனக்கு தெரியணும்”
“கோபத்துல ஏதாவது சொல்லிருப்பேன்”
“எங்க அத்தை கோபத்துல பொய் எல்லாம் சொல்ல மாட்டான்னு எனக்கு தெரியும்”
“நான் என்ன அரிச்சந்திரன் பரம்பரையா? நீ என் மகளைச் சொன்ன, அதனால நான் பிரேமாவைப் பத்தி அப்படிச் சொன்னேன்”
“அப்ப உண்மையைச் சொல்ல மாட்ட. அப்படித் தானே?”
“ஏதாவது இருந்தா தானே சொல்ல முடியும்?”
“சரி, நான் எந்த தப்பான அர்த்தத்துலயும் சொல்லலை, பிரேமா நல்லவ தான். கோபத்துல தான் சொல்லிட்டேன். இது உன் மகன் மேல சத்தியம்னு நீ சொல்லணும் அத்தை. ஆதி மேல சத்தியம் பண்ணு”
“வாசு….”
“என் மகன் மேல சத்தியமா சொல்லு அத்தை”
“பச்சை பிள்ளை மேல சத்தியம் பண்ண சொல்ற? நீ விளங்குவியா டா?”
“எனக்கு உண்மை தெரியணும். நீ உண்மையைச் சொல்லு. இல்லைன்னா சத்தியம் பண்ணு”
“செத்துப் போனவளைப் பத்தி பேச வேண்டாம் கண்ணு”
“ஒரு தடவை உண்மையைச் சொல்லு. அப்புறம் பேச மாட்டேன்”
“அது… அது வந்து… உங்க கல்யாணத்துக்கு முன்னாடியே பிரேமாவுக்கு கருக்கலைப்பு…. நடந்தது….”, என்று திக்கித் திணறிச் சொன்னாள் கோதை. 
“அத்தை…”, என்று அழைத்தவனுக்கு தலையில் இடி விழுந்தது போல இருந்தது. அதிர்ந்து போய் அவளைப் பார்த்தான். 
“ஆமா வாசு. நான் சொல்றது உண்மை தான்”
“அத்தை… என்னால நம்பவே முடியலை. நீ நிஜமாவே உண்மையைத் தான் சொல்றியா?”
“நம்புறது உன் இஷ்டம் வாசு. எனக்கு நெஞ்சு வலிச்சிட்டே இருக்குனு பக்கத்து ஊரு ஆஸ்பத்திரிக்கு போகாம டவுன் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தேன். அப்ப தான் பிரேமாவை அங்க பாத்தேன். கூட வள்ளியும் இருந்தா”
“என்ன? அத்தையுமா?”
“ஆமா, நான் பொய் சொல்லலை வாசு. பிரேமாவுக்கு கெட்ட பேர் வாங்கிக் கொடுக்கணும்னு நான் இதைச் சொல்லலை. வள்ளியும் பிரேமாவும் அங்க இருந்து கிளம்பின உடனே நான் அந்த நர்ஸ் கிட்ட விசாரிக்கவும் செஞ்சேன். அதனால தான் உனக்கும் அவளுக்கும் கல்யாணம்னு கேள்வி பட்டு எனக்கு மனசு சஞ்சலமா இருந்தது. இந்த சரண்யா வேற உன் மேல பைத்தியமா இருந்தா. அவளை சமாளிக்கிறதுல எனக்கு வேற என்ன செய்யன்னு தெரியலை. நான் சொல்றதை யாரும் நம்புவாங்களான்னும் 
தெரியலை. நான் சொன்னா அது நான் சரண்யாவை நீ கட்டிக்கலைன்னு கடுப்புல பேசுற மாதிரி இருக்கும். அப்படியே என் மனசுக்குள்ள புதைச்சிட்டேன். அப்புறம் நீயும் அவளும் சந்தோஷமா தான் இருந்தீங்க. அப்புறம் எப்படி அந்த பொண்ணு வாழ்க்கையை நான் குழைக்க நினைப்பேன். என்னோடவே இந்த ரகசியம் முடிஞ்சிரும்னு நினச்சேன்.  ஆனா என் வாயாலே உன்கிட்ட உளறிட்டேன். இதை அப்படியே மறந்துரு வாசு. என்னை மன்னிச்சிரு”, என்று சொல்லி விட்டு அவன் முகம் பார்த்தாள். 
அவனோ அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான். அவனுடைய நிலைமையைக் கண்ட கோதை சரண்யாவைப் பத்தி அவனிடம் பேச வேண்டியது இருக்கு என்பதைக் கூட மறந்து அவனைப் பாவமாக பார்த்தாள். அப்போது தன்னுடைய மகளின் வாழ்க்கையைப் பற்றி பேசுவதை விட அவனுடைய மனநிலையே அதிக பாதிப்பைக் கொடுத்தது கோதைக்கு.  
அவளால் அவனுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது. இப்போது சரண்யாவை பற்றி பேசினால் அவன் மண்டைக்குள் எதுவும் ஏறாது என்று புரிந்தது. கூடவே அவனுடைய நிம்மதியை அழித்து விட்டோம் என்ற குற்ற உணர்வும் அவளுக்கு வந்தது. 
எவ்வளவு நல்லவள் என்று அவளை நம்பியிருப்பான். ஆனால் மிகப் பெரிய துரோகம் செய்தவளுடன் வாழ்ந்ததை எண்ணி அவன் எவ்வளவு வருத்தப் படுவான் என்று கலங்கினாள் கோதை. 
வாசுவோ, வாழ்க்கையே வெறுத்து போய் தான் நின்றான். அவனால் இந்த உண்மையை ஜீரணிக்கவே முடியவில்லை. எவ்வளவு பெரிய துரோகம். துரோகம் என்பதை விட எவ்வளவு பெரிய அசிங்கம்? 

Advertisement