Advertisement

“உன்னை வாயை மூடுன்னு சொன்னேன். என் மருமக செத்து போகணும்னு ஏதாவது செய்வினை வச்சீங்களா டி ரெண்டு பேரும்?”
“ஐயோ மதினி, நாங்க இப்படி எல்லாம் செய்வோமா? அப்படிப் பட்ட பாவமான காரியம் எங்களுக்கு செய்யத் தெரியாது மதினி”
“ஏன் செய்ய மாட்டீங்க? அண்ணே அண்ணேன்னு என் புருஷன் சொத்தை எல்லாம் அமுக்குனீங்க? மாமா நோமான்னு இவ என் மகன் பின்னாடியே திரியுவா. அவனை அப்படியே மடக்கி போட்டுறுவீங்கன்னு தான் அவசர அவசரமா என் மகனுக்கு என் அண்ணன் மகளை கட்டி வச்சேன். நல்லா இருந்தவ இப்படி அல்பாயுசுல போய்ட்டாளே? அதுக்கு நீங்க தான் காரணமா இருக்கும். ஆமை புகுந்த மாதிரி இனி என் வீட்டை ஆத்தாளும் மகளும் என்ன செய்ய காத்துருக்கீங்க?”
“அத்தை இப்படி எல்லாம் பேசாதீங்க? நாங்க இப்படி எல்லாம் கிடையாது”, என்று சொன்னாள் சரண்யா. 
“வாயை மூடு சனியனே? நேத்து உன் கிட்ட கல்யாணம் பத்தி கேட்டப்ப எனக்கு வேண்டாம்னு சொல்ல வேண்டியது தானே டி? மண்டையை ஆட்டிட்டு நிக்குற. ஒருத்தனுக்கு ரெண்டாம் தாரமா வாக்க பட முடிவு பண்ணுன நீ எவ்வளவு கேடு கேட்டவளா இருக்கணும்?”
“நான் குழந்தைக்காக தான் அத்தை…”
“அட சி வாயை மூடு. ஏன், எங்களுக்கு குழந்தையை வளக்க தெரியாதா? எங்க பேரனைப் பாத்துக்க இங்க ஆளே இல்லை பாரு. உனக்கு என் மவன் மேல முன்னாடியே ஒரு கண்ணு டி. அதான் வாய்ப்பு கிடைச்சதும் வசமா வந்து ஒட்டிக்கிட்ட. இந்த மனுசனும் உங்களைப் பத்தி தெரியாம ஆடுராரு”
“இதுக்கு தான் சொன்னேன். என் பேச்சை கேட்டியா டி?”, என்று அழுது கொண்டே சரண்யா முதுகில் ஒரு அடி வைத்தாள் கோதை. சரண்யாவும் அழுது கொண்டிருந்தாள். 
“எம்மா டி பாத்தாலும் பாத்தேன். இப்படி ஒரு நடிப்பை பாத்தது இல்லைடி ஆத்தா”, என்று நாடியில் கை வைத்து நொடித்தாள் வைதேகி. 
“நாங்க நிஜமாவே நடிக்கலை மதினி”
“அப்படியா? அப்படின்னா இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. என்னோட நகை எல்லாத்தையும் வேணும்னா தரேன். அதை தூக்கிட்டு ஆத்தாளும் மகளும் இந்த ஊரை விட்டே ஓடிருங்க. அப்புறம் நீங்க நல்லவங்கன்னு நான் நம்புறேன்”, என்று சொன்னதும் அதை எப்படி செய்ய முடியும் என்று அமைதியாக நின்றார்கள். 
“சி மானங்கெட்ட ஈத்தறைகள், உங்களைப் பத்தி எல்லாம் தெரியும் டி. ஆனா உங்க திட்டம் எத்தனை நாளைக்குன்னு பாக்குறேன். இவ எப்படி இந்த வீட்ல வாழுறான்னு பாக்குறேன். என் அண்ணன் மக வாழாத வாழ்க்கையை இவளை வாழ விட்டுருவேனா?”, என்று கேட்டு விட்டு உள்ளே சென்று விட்டாள். 
“சரண்யா இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை டா. அவங்க பேசினதைக் கேட்ட தானே? நமக்கு இதெல்லாம் வேண்டாம் கண்ணு”, என்றாள் கோதை. 
“அம்மா, குழந்தையும் வாசு மாமாவும் பாவம் மா”, என்று பரிதாபமாக சொன்னாள் சரண்யா. 
“உன் தலையெழுத்தை யாரும் மாத்த முடியாது”, என்று சொல்லி அங்கேயே தரையில் தளர்ந்து போய் அமர்ந்து விட்டாள் கோதை. 
சிறிது நேரத்தில் சீனிவாசன் ஆண்கள் பெண்கள் என நெருக்கமான பத்து பேரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அவர்களைக் கண்டதும் எழுந்து நின்றாள் கோதை.
சரண்யாவும் அவர்களை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள். 
“ஏப்பா சீனி, இப்ப என்ன செய்யுறதா இருக்க? கல்யாணம் எங்க வச்சி வச்சிக்கலாம்?”, என்று கேட்டார் ஊர் நாட்டாமை. 
“நம்ம வீட்லே வச்சிக்கலாம்னு நினைக்கிறேன். தாலி எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன்”
“சீனி சொல்றது சரி தான். சாவு விழுந்து வருஷம் கழியாம கோயிலுக்கு போக கூடாது. அதனால் வீட்லயே வச்சிக்காலம். சீனி, வாசுவை கூட்டிட்டு வா”, என்றதும் வாசுவை அழைக்கச் சென்றார். 
அங்கிருந்த பெண்மணி “ஆமா, இந்த வைதேகி எங்க?”, என்று கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் தேடிச் செல்ல கோபத்தில் அமர்ந்திருந்தாள் வைதேகி. 
“வாசு கல்யாணத்துக்கு நாங்க எல்லாம் வந்துருக்கோம். நீ எங்களை கவனிக்காம இங்க என்ன பண்ணுற வைதேகி? வெளிய வா”
“போங்க அத்தை, அதை பாக்குற சக்தி எனக்கு இல்லை”, என்றாள் வைதேகி. 
“அப்படி பேசக் கூடாது வைதேகி, எல்லாரும் ஏதாவது நினைப்பாங்க. நீ வெளிய வா”, என்று சொன்னதும் அரை மனதாக வெளியே வந்தாள். 
மேலே சென்ற சீனிவாசன் “பேரன் தூங்குறானா வாசு?”, என்று கேட்டார். 
“ஆமாப்பா, இப்ப தான் தூங்குனான்”
“சரி ஊர்ல முக்கியமான தலைக்கெட்டு எல்லாம் வந்துருக்காங்க. சரண்யாவும் கோதையும் வந்துட்டாங்க. நீ கீழ வா பா”
கடைசியில் அந்த தருணம் வந்தே விட்டதா என்று திடுக்கிட்டவன் பாவமாக தந்தையைப் பார்த்தான். 
அவன் பார்வையைக் கண்டவர் “என்ன வாசு?”, என்று கேட்டார். 
“கண்டிப்பா இது அவசியம் தானாப்பா? எனக்கு மனசு ஒப்பவே இல்லை”
“விளையாடாத வாசு. உனக்கு அவசியம் இல்லாம இருக்கலாம். ஆனா என் பேரனுக்கு சரண்யா அவசியம். சரி உனக்கு சரண்யா பிடிக்கலைன்னா சொல்லு. உங்க அம்மா கிட்ட சொல்லி உங்க தகுதிக்கு தகுந்த மாதிரி ஒரு பொண்ணை பாக்க சொல்றேன். நீ உங்க அம்மா சொன்னா தானே கேப்பா? வரவ நகையும் நட்டுமா கொண்டு வரட்டும்”, என்று ஒரு குட்டையும் அவனுக்கு வைத்தார். 
“என்னப்பா இப்படி எல்லாம் பேசுறீங்க? நீங்க சொல்லி நான் எதைக் கேக்காம இருந்தேன்? நான் என்னைக்கு தகுதி எல்லாம் பாத்துருக்கேன்?”
“அப்ப எழுந்து வா. எதுக்கு யோசிக்கிற? ஒரு வேளை சரண்யா உன் மகனை நல்லா பாத்துக்காம சித்தி கொடுமை பண்ணுவான்னு நினைக்கிறியா?”
“சரண்யாவால யாரையும் கஷ்டப் படுத்த முடியாது. அவளைப் பத்தி யார் என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். அவளுக்கு ஒரு குறையும் இல்லை. என்னை நினைச்சு தான் யோசனையா இருக்கு. அவ வாழ வேண்டியவ பா. எனக்காகவும் குழந்தைக்காகவும் அவ எதிர்காலம் பாலா போயிரக் கூடாது”
“நாமளே எல்லாம் ஜோசிச்சா எப்படி வாசு? கடவுள் ஒண்ணு வச்சிருப்பார்ல? இது தான் நடக்கணும்னு இருக்கு. வேற சட்டை வேஷ்டியை மாட்டிட்டு கிளம்பி வா”
“அப்பா சும்மா டிரெஸ் எல்லாம் மாத்த சொல்லிட்டு இருக்காதீங்க? இந்த பேண்ட் சர்ட்டே போதும்”, என்று சொன்னவன் நீ”ங்க முன்னாடி போங்க, நான் பின்னாடி வரேன்”, என்றான். 
“இந்த அளவுக்கு அவன் ஒத்துக் கொண்டதே போதும்”, என்று எண்ணிக் கீழே வந்தார் சீனிவாசன். 
அவர் சென்றதும் எழுந்து நின்ற வாசுவின் கண்களில் பிரேமா வாசுவின் திருமண புகைப் படம் பட்டது. நிதானமாக அதை நெருங்கினான். 
இருவர் முகத்திலும் சந்தோஷமும் பூரிப்பும் கொட்டிக் கிடந்தது. “யார் கண்ணு பட்டதோ தெரியலையே? என்னோட வாழ்க்கை இப்படி ஆகிருச்சே? ஏண்டி என்னை விட்டுட்டு போன? இப்ப எங்க வந்து நிக்குது பாரு? மாமா மாமான்னு என் பின்னாடியே சுத்திட்டு இருக்கும் ஒரு சின்ன பொண்ணோட வாழ்க்கையை நான் தெரிஞ்சே வீணாக்க போறேனே? நீ என்னை விட்டு போகாம இருந்துருந்தா அவளுக்கு நல்ல வாழ்க்கையா அமைச்சு கொடுத்துருப்பேனே? நான் இப்ப என்ன செய்வேன்?”, என்று எண்ணியவனின் கண்களில் கண்ணீர் அருவி பெருக்கெடுத்தது. 
மெதுவாக குழந்தையின் தொட்டில் அருகே சென்றான். எந்த கவலையுமில்லாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான் அவனின் மைந்தன். கூடவே அவன் இதழ்களில் அழகான புன்னகை
உதயமானது. 
தூங்கும் போது குழந்தைகள் சிரித்தால் கடவுள் அதனிடம் பேசுகிறார் என்பார்கள். அதனால் குழந்தைகளின் அந்த செய்கை அவ்வளவு அழகாக இருக்கும். வாசுவும் அதை ரசித்த படியே நின்றான்., 
பின் மனதை தேற்றிக் கொண்டு கீழே செல்லத் திரும்பினான். அவனுடன் கூடிக் கழித்த பிரேமாவின் நினைவுகள் அவன் மனமெங்கும் வட்ட மிட்டது. அவளை திருமணம் செய்ய கிளம்பும் போது பட்டு வேஷ்டி சட்டை அணிந்து நிரஞ்சனின் கிண்டலோடு அவ்வளவு ஆனந்தமாக கிளம்பிச் சென்ற தருணம் கண் முன் விரிந்தது. 
அதன் பின் மணமேடையில் பிரேமாவைப் பார்த்தது, அவளுடைய அழகு, வெட்கம் அனைத்தும் இப்போது நடந்தது போல இருந்தது. 
அவளுடைய வாசனை, அவளுடைய நினைவுகள் அந்த அறை முழுவதும் சுற்றி இருப்பது போலவே பிரம்மை ஏற்பட்டது. 
“எதுக்கு டி அந்த சத்தியம் எல்லாம் கேட்ட?”, என்று எண்ணிய படியே கீழே சென்றான். 
“என்னப்பா சீனி, வாசு எங்க?”, என்று கேட்டார் ஊர் நாட்டாமை. “பின்னாடி வாரான், நான் தாலி எடுத்துட்டு வரேன், வாங்க எல்லாரும் பூஜை அறைக்கு போவோம்”, என்று சொன்னதும் அனைவரும் அங்கே சென்றார்கள். 
விளக்கேற்றி பளிச்சென்று பூஜை அறையை வைத்திருக்க வேண்டிய வைதேகி எனக்கென்ன என்று ஒதுங்கி நின்றாள். 
கூட்டத்தில் இருத்த ஒரு பெண்மணி தான் “இங்க கொடுங்கண்ணா, சாமி பாதத்துல வச்சு எடுக்குறேன்”, என்று சொல்லி சீனிவாசன் கையில் இருந்த தாலி மற்றும் மெட்டியை வாங்கி கடவுள் பாதத்தில் வைத்தாள். 
“சரண்யா தலைல பூ கூட இல்லாம நிக்குறாளே, இருங்க நான் ஒரு நிமிசத்துல என் வீட்ல இருந்து பூ எடுத்துட்டு வரேன்”, என்று சென்றாள் மற்றொரு பெண். 
பின் மங்கை விளக்கேற்றி முடிக்கும் போது சரண்யா தலையில் சிறிது பூவையும் சூடி விட்டார்கள். அப்போது தான் வாசு அங்கே வந்தான். அனைவரும் அவனையே பார்த்தார்கள். சரண்யா கூட அவனை நிமிர்ந்து பார்த்தாள். 
மூன்று நாள் தாடியுடன், சிவந்த கண்களுடன் அங்கே வந்தான் வாசு. அவனை கண்டதும் அவன் அழுதிருக்கிறான் என்று புரிந்து கொண்டாள் சரண்யா. 
அவளுக்கு என்ன செய்வதேன்றே தெரிய வில்லை. மனதுக்கு மிகவும் நெருக்கமானவன் ஆறுதல் தேடி அவளின் கண் முன்னேயே அல்லாடிக் கொண்டிருக்கிறான். ஆனால் அதை கொடுக்க மனம் இருந்தும் உரிமை இல்லாமல் இருக்கும் பேதை அவள். 
இப்படி ஒரு நிலையை தங்களுக்குள் வைத்த கடவுளை அவள் மனது நிந்தித்தது. 
“இதோ வாசு வந்தாச்சு. ஏமா மங்கை, அந்த தாலி எடுத்துட்டு வா மா”, என்று சொன்னதும் அவள் தாலியை எடுத்து வந்தாள்.
மற்றொரு பெண்மணி அனைவரின் கையிலும் ஆசீர்வாதம் செய்ய அரிசியைக் கொடுத்தாள். 
“இங்க வந்து நில்லுப்பா வாசு”, என்று ஒருவர் சொன்னதும் சரண்யா எதிரே போய் நின்றான். ஆனால் பார்வையை எங்கோ வைத்திருந்தான். சரண்யா புறம் மட்டும் திரும்பவே இல்லை. 
அவளைக் காணும் போது அவள் வாழ்க்கையை கெடுக்கிறோமோ என்று அவனுக்கு குற்ற உணர்வாக இருந்தது. திடீரென்று என்ன நினைத்தானோ “நான் சரண்யா கிட்ட ஒரு நிமிஷம் பேசணும்”, என்றான். 
சரண்யா திகைத்து விழிக்க, மற்றவர்களும் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். 
சரண்யா மனதை மாற்ற தான் தனியாக பேச நினைக்கிறான் என்று எண்ணிய சீனிவாசன் மனதுக்குள் எப்படியும் சரண்யா மனசு மாற மாட்டாள் என்று நம்பினார். அதனால் “அதுக்கு என்ன வாசு, தாராளமா பேசு. சரண்யா அவன் கூட போ மா”, என்றார். 
“எப்படியாவது இந்த கல்யாணம் நின்னுறாதா?”, என்று கண்கள் மின்ன மகனைப் பார்த்தாள் வைதேகி. 
வாசு அங்கிருந்த அறைக்குள் செல்ல அவன் பின்னே சென்றாள் சரண்யா. ஒரு அறைக்குள் சென்றதும் இருவரும் அமைதியாக இருந்தார்கள். சரண்யாவோ என்ன சொல்லப் போகிறானோ என்ற பதட்டத்தில் இருந்தாள்.  
“சரண்யா”, என்று அழைத்த வாசு அங்கிருந்த அமைதியை உடைத்தான். 
“சொல்லு மாமா”
“இதெல்லாம் தேவையா?”
“தேவைனு தான் எனக்கு தோணுது”
“குழந்தைக்காக உன்னோட வாழ்க்கையை பணையம் வைக்கிறது எனக்கு சரியா தோணலை”
“இதுல எனக்கு தப்பு இருக்குறதா தோணலை மாமா”
“இது ஒரு நாள் முடிய போறது இல்லை சரண்யா. வாழ்க்கை முழுக்க தொடர போறது. நீ இல்லைனாலும் யாராவது என்
குழந்தையை வளக்க தான் போறாங்க”
“ஆமா நானும் இல்லைன்னு சொல்லலை. ஆனா உன் குழந்தை அம்மா இல்லாத குழந்தைன்னு பேர் வாங்குறதுல எனக்கு விருப்பம் இல்லை மாமா”
“நான் சொல்றது உனக்கு புரியலைன்னு நினைக்கிறேன். எனக்கு அதை எப்படி புரிய வைக்கணும் தெரியலை. என்னால உன்னை மனைவியா ஏத்துக்க முடியாது சரண்யா”
“நான் உன்னை கேட்டேனா மாமா?”
“சரண்யா”
“யார் என்ன சொன்னாலும் குழந்தைக்காக இந்த முடிவை எடுத்துருக்கேன். என் மனசை மாத்த முயற்சி செய்யாத”
“நாளைக்கு வருத்த பட போற?”
“உன்னைக் கட்டிக்கிட்ட அப்புறம் எப்பவாது ஏண்டா உன்னைக் கட்டிக்கிட்டோம்னு நான் நினைச்சேன்னா அன்னைக்கு நான் செத்த நாளா இருக்கும் மாமா”
“சரண்யா”
“என்னைப் பத்தி யோசிக்காத மாமா, எனக்காக யோசிச்சு நீ மனசு கஷ்டப் படாத. எல்லாம் நல்ல படியா நடக்கும். என்னை நீ நம்புற தானே மாமா? ஒரு வேளை குழந்தையை நான் நல்லா பாத்துக்க மாட்டேன்னு நினைக்கிறியா?”
“என்னோட சரண்யாவைப் பத்தி எனக்கு தெரியும். நான் உன்னை சின்ன வயசுல இருந்து பாக்குறேன். நான் அதை எல்லாம் யோசிக்கலை”, என்றதும் அவள் மனதில் அழகான மழைச் சாரல் உருவானது.
 
என் சரண்யா என்ற வார்த்தையைக் கேட்டதும் “இந்த ஜென்மத்துக்கு இந்த ஒரு வார்த்தையே போதுமே”, என்று எண்ணியவள் “அப்புறம் என்ன மாமா, வா போகலாம். எல்லாரும் காத்துட்டு இருக்காங்க. அப்புறம் அப்படியே வெளிய வந்துராத. அழுது அழுது உனக்கு மூக்கு ஒழுகுது பார். ஒழுங்கா துடைச்சிட்டு வா”, என்று சொல்லி விட்டு முன்னே நடந்தாள். 
அவள் அப்படிச் சொன்னதும் சட்டென்று மூக்கின் அருகே கையை கொண்டு சென்றான் வாசு. 
அவனை திரும்பி பார்த்தவள் அவனுடைய செய்கையைக் கண்டு “நம்பிட்டியா, சும்மா சொன்னேன்”, என்று சிரித்து விட்டு சென்றாள். 
அவன் உதடுகளிலும் சின்னதாய் ஒரு கீற்று புன்னகை உதயமானது. 
காதல் தொடரும்…

Advertisement