Advertisement

அத்தியாயம் 6
சின்ன சின்ன  ஊடல்களும்
அழகாக்குகின்றன நம்
இருவரின் காதலை!!!
அடுத்த நாள் காலையிலே சரண்யா வீட்டுக்கு வந்தார் சீனிவாசன் 
“வாங்கண்ணா”, என்றாள் பூங்கோதை. 
“கிளம்பிட்டியா கோதை? சரண்யாவை கூட்டிட்டு வா மா. நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்”, என்றார் சீனிவாசன். 
“சரிண்ணா”, என்று சொல்லி சரண்யாவை அழைக்கச் சென்ற கோதைக்கு ஒரே மகளின் திருமணம் இந்த நிலையிலா நடக்க வேண்டும் என்று இருந்தது. 
அனைத்து உறவினர்களும் வீட்டில் ஒன்றாக கூடியிருக்கும் போது மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண்மணிகள் வந்து தன்னுடைய மகளை பெண்ணழைத்துச் செல்லும் நிகழ்வு நடக்கும் என்று ஆசைப் பட்ட கோதைக்கு இப்போது இருக்கும் மகளின் வாழ்க்கையை நினைத்து வலி வந்தது. 
“மாமா வந்துட்டார். கிளம்பு சரண்யா”, என்று வெறுமையாகச் சொல்லி விட்டு வெளியே வந்தாள் கோதை. தன்னுடைய அண்ணனுக்கு ஒரு டீ போட்டுக் கொடுக்க வேண்டும் என்பது கூட அப்போதைக்கு அவள் மனதில் இல்லை. 
சரண்யாவுக்கும் மனதுக்குள் வருத்தம் இருந்தாலும் நினைத்த வாழ்க்கை கிடைப்பதில் ஒரு நிம்மதி தன்னாலே எழுந்தது. அதனால் அவள் நிம்மதியாகவே தயாரானாள். 
வாங்கி வைத்திருந்த பட்டுப் புடவை எல்லாம் அணியாமல் அதே நேரம் வீட்டில் அணிவது போல சாதாரண சேலையையும் அணியாமல் ஓரளவு பார்ப்பது மாதிரி இருக்கும் ஒரு சேலையை அணிந்த விட்டு அறையை விட்டு வெளியே வந்தாள் சரண்யா. 
பட்டுடுத்தி, நிறைய நகை போட்டு செல்வதற்கு அவளுடைய திருமணம் ஒன்றும் அனைவருக்கும் நடப்பது போல கோலாகலமானது இல்லையே. ஒரு உயிரின் அஸ்தமனத்தில் உதயமாக போகிறது அவள் வாழ்க்கை. அப்படி இருக்க அவளால் சீவி சிங்காரித்து செல்ல முடியாதே. அதனால் எளிமையாகவே தயாரானாள். 
அவளைக் கண்டதும் புன்னகைத்தார் சீனிவாசன். கோதையோ வந்த கண்ணீரை அவர்களுக்கு காட்டாமல் மறைத்துக் கொண்டாள். 
“நான் கிளம்பிட்டேன் மாமா. வாங்க போகலாம். அம்மா என்னோட துணி எல்லாம். எப்படி மாமா வீட்டுக்கு கொண்டு போவது?”, என்று கேட்டாள் சரண்யா. 
“அதெல்லாம் நான் அப்புறம் வந்து எடுத்துட்டு வரேன் சரண்யா. நீ இப்ப கிளம்பு மா. கோதை அவளை அழைச்சிட்டு வா. நான் வெளிய நிக்குறேன்”, என்று சொல்லி விட்டு வெளியே சென்றார். 
பிறந்த வீட்டில் இருந்து செல்லும் மகள் கிளம்பும் போது தன்னைக் கட்டிக் கொண்டு கண்ணீர் வடிப்பாள் என்று எதிர் பார்த்தாள் கோதை. ஆனால் அப்படி ஒரு சம்பவம் அங்கே அரங்கேறவே இல்லை. 
சரண்யா எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் வெளியே சென்றாள். 
அவள் பின்னே சென்ற கோதைக்கு “இவளுக்கு என் மேல் பாசமே இல்லையா? கல்லு மாதிரி போறாளே? அந்த அளவுக்கு வாசு பைத்தியம் இவளை பிடிச்சு ஆட்டுதா? சொந்த வீட்டை விட்டு, இது வரை வாழ்ந்த வீட்டை விட்டு போறோமேன்னு கொஞ்சம் கூட கவலை இல்லாம போறாளே? இப்படியா நான் இவளை வளத்தேன்?”, என்ற எண்ணம் வந்தது. அதனால் ஒரு துளி கண்ணீர் கூட அவள் கண்களில் இருந்து வந்தது. 
ஆனால் கோதை அறியாத விஷயம் ஒன்று உண்டு. சரண்யா தன்னுடைய மனதை மூடி போட்டு மறைத்து விட்டு தான் வெளியே சென்றாள். இப்போது சரண்யா கலங்கினால் கோதை முற்றிலும் உடைந்து போவாள் என்பது சரண்யாவுக்கு நன்கு தெரியும். 
அதனால் தான் சரண்யா சாதாரணமாக வெளியே சென்றாள். அது மட்டுமில்லாமல் சரண்யா இப்போது அழுது வைத்தால் உனக்கு இது தேவையா என்ற கேள்வியை கோதை எழுப்புவாள் என்பதும் தெரியும். யார் என்ன சொன்னாலும் சரண்யா இந்த திருமணத்தில் இருந்து பின் வாங்கப் போவதில்லை. முன் வைத்த காலை பின் வைக்கப் போவதில்லை. பின் எதற்கு கோதையிடம் பேச்சு வாங்க வேண்டும் என்று தான் மனதை மறைத்துக் கொண்டாள். 
வீட்டை பூட்டி விட்டு மூவரும் வாசு வீட்டை நோக்கிச் சென்றார்கள். தெரிந்தவர்கள் அனைவரும் அவர்களை வேடிக்கை பார்த்தார்கள். 
எல்லாரும் மனதுக்குள் என்ன நினைப்பார்களோ என்று உள்ளுக்குள் தவிப்பாக இருந்தது சரண்யாவுக்கு. சீனிவாசன் வந்தது முதல் இருவரையும் அழைத்து செல்வது வரை தன்னுடைய வீட்டின் திண்ணையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கதிரேசனுக்கு கண்கள் எல்லாம் கலங்கும் போல் இருந்தது. 
அப்போது “என்ன டா ஒரு மாதிரி இருக்க?”, என்று கேட்ட படி வெளியே வந்தாள் அவனின் தாய். கதிரேசன் பதில் சொல்லாமல் வெறித்த பார்வையுடன் இருக்கவும் “இவனுக்கு என்ன ஆச்சு?”, என்று எண்ணி அவனை குழப்பமாக பார்த்தவாறே அவன் எங்கே பார்க்கிறான் என்று பார்த்தாள். 
அப்போது அவள் பார்வையில் சென்று கொண்டிருக்கும் சரண்யா விழுந்தாள். “நல்ல பிள்ளை சரண்யா, ஆனா அந்த குழந்தைக்காக இப்படி ஒரு முடிவெடுத்துட்டா. நம்ம வீட்டுக்கு மருமகளா ஆக்கிக்கணும்னு கூட ஆசை பட்டேன். என்ன செய்ய விதிப் படி தான் நடக்கும் போல”, என்று புலம்பி விட்டு உள்ளே சென்று விட்டாள். 
கதிரேசனுக்கும் அதே நினைவு தான். வாசுவைத் திருமணம் செய்தால் சரண்யா நன்றாக இருப்பாளா என்ற கேள்வி அவனுக்குள் வந்தது. 
வாசு பிரேமா திருமணத்தில் வாசு எவ்வளவு சந்தோசமாக இருந்தான் என்று கண் குளிரப் பார்த்தவனாயிற்றே. அப்படி இருக்க அவன் எப்படி சரண்யாவை மனைவியாக ஏற்றுக் கொள்வான் என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது. 
“குழந்தைக்காக இவ்வளவு பெரிய முடிவை எடுத்துட்டியே சரண்யா”, என்று விரக்தியாக எண்ணிக் கொண்டான். அது மட்டுமல்லாமல் நேற்று இரவு சரண்யா தன்னிடம் சொன்ன விசயத்தையும் நினைத்துக் கொண்டான். யாரிடமும் சொல்லக் கூடாது என்று அவள் வாங்கிக் கொண்ட சத்தியத்தையும் எண்ணிக் கொண்டான். 
ஆம், முந்தைய நாள் இரவு நேரடியாகவே சரண்யாவிடம் பேச அவள் வீட்டுக்கு சென்றான் கதிரேசன். 
“வாப்பா கதிர், என்ன இந்த நேரம் வந்துருக்க?”, என்று கேட்டாள் கோதை. 
“சும்மா தான் அத்தை. சரண்யா என்ன செய்றா?”
“உள்ள தான் இருக்கா. ஏன் தங்கம் முகமெல்லாம் வாடி போய் இருக்கு?”
“அத்தை நீ தெரிஞ்சு கேக்குறியா, இல்லைன்னா தெரியாம கேக்குறியா?”
“கதிரு, விதியை என்னப்பா செய்ய?”
“ஒரு தடவை உன் மக கிட்ட பேசவா?”
“தாராளமா பேசுப்பா. சரண்யா இங்க வா. கதிர் வந்துருக்கான் பாரு”, என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்று விட்டாள். 
வெளியே வந்த சரண்யா அவனைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தாள். 
“வா கதிர், உக்காரு”, என்று சொல்லி ஒரு திண்ணையில் அமர்ந்தாள். அவன் அடுத்த பக்கம் இருந்த திண்ணையில் அமர்ந்தான். 
“என்ன சரண்யா இதெல்லாம்?”
“நீ எதை சொல்ற?”
“உனக்கு தெரியாதா?”
“முடிவு எடுத்த அப்புறம் அதைப் பத்தி பேச வேண்டாமே கதிர். அப்புறம் உன் மனசுல இருக்குறது எனக்கு தெரியும். அதுக்கு எந்த அர்த்தமும் கிடையாது. என்னை விட நல்ல பொண்ணு உனக்காக உன்னைத் தேடி வருவா”
“தெரிஞ்சும் ஏன் இப்படி பண்ணுற? குழந்தையை நம்ம ரெண்டு பேரும் வளத்துக்கலாம்”
“நான் குழந்தைக்காக மட்டும் இப்படி முடிவு எடுத்துருக்கேன்னு நீ நினைக்கிறியா? என்னோட ஆசைக்கு குழந்தை உதவி செஞ்சிருக்கு அவ்வளவு தான்”
“என்ன சொல்ற நீ?”
“எங்க அம்மாவுக்கும் மாமாவுக்கும் மட்டும் தெரிஞ்ச விஷயத்தை உன்கிட்ட சொல்றேன். ஆனா இதை எந்த காரணத்தைக் கொண்டும் யார் கிட்டயும் சொல்லக் கூடாது. எனக்கு சத்தியம் பண்ணு”
“சரி சத்தியமா யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். சொல்லு”
“எனக்கு சின்ன வயசுல இருந்து வாசு மாமா மேல உயிர்”
“சரண்யா”
“ஆமா கதிர், சின்ன வயசுல இருந்து மாமா தான் என்னோட புருசன்னு நினைச்சே வாழ்ந்தேன். ஆனா இடைல பிரேமா வருவான்னு நான் நினைச்சே பாக்கலை. பிரேமா இந்நேரம் உயிரோட இருந்திருந்தா கூட நான் மாமா நினைவில வாழ்ந்திருப்பேன். கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிருந்துருக்க மாட்டேன். இப்ப குழந்தை மூலமா மாமா எனக்கே கிடைக்க ஒரு வாய்ப்பு வந்துருக்கு கதிர். அதை எப்படி நான் மறுப்பேன்னு சொல்லு”
“உன் மனசுல இப்படி ஒரு ஆசை இருக்கும்னு நான் எதிர் பாக்கவே இல்லை. ஆனா சரண்யா, வாசு கிட்ட முன்னாடியே இதை சொல்லிருக்கலாமே?”
“எப்படி முடியும்? உன் மனசுல கூட தான் என்னைக் கட்டிக்கணும்னு எண்ணம் இருந்துச்சு. நீ ஒரு தடவை கூட என்கிட்ட வந்து சொன்னது இல்லை. ஒரு பையனா உனக்கே தயக்கம் இருந்தா எனக்கு எப்படி இருக்கும்? இனியும் என் மனசுல இருக்குறது மாமாக்கு தெரியாது. தெரியவும் விட மாட்டேன்”
“ஏன்? அவனுக்கு உன் காதல் தெரிஞ்சா என்ன?”
“இதுக்கு சரியான பதில் தெரியலை. ஆனா ஒரு வேளை தெரிஞ்சு அதுக்காகவே என்னை பரிதாபப் பட்டு ஏத்துக்க கூடாதுள்ள? அதான்”
“இது என்ன பதிலோ, எனக்கு புரியலை. சரி, இந்த காரணத்துக்காக தான் நீ அவன் கல்யாணத்துக்கு கூட வரலையா?”
“ஆமா”
“ஓ, இந்த கல்யாணம் முடிஞ்சா நீ சந்தோஷமா இருப்பன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா? வாசு உன்னை ஏத்துக்க வாய்ப்பு குறைவு சரண்யா”
“ஆமா, எனக்கும் தெரியும். மாமா என்னை ஏத்துக்கலாம், கடைசி வரை ஏத்துக்காமலும் போகலாம். ஆனா வாசு பொண்டாட்டின்னு தானே கல்யாணத்துக்கு அப்புறம் என்னை எல்லாரும் சொல்லுவாங்க. எனக்கு அதுவே போதும்”
“ரெண்டாம் தாரம்னும் சேத்து சொல்லுவாங்க, சரண்யா”
“திருப்பி திருப்பி நீயும் அதையே சொல்லாத கதிர். எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. ஆனா இதுல என்னோட முடிவு இது தான். நீ இதை யார் கிட்டயும் சொல்லக் கூடாது. உனக்கானவ கூடிய சீக்கிரம் உன்கிட்ட வருவா”
“நீ இவ்வளவு தெளிவா இருக்கும் போது நான் உன்னைக் குழப்பலை. நான் கிளம்புறேன்”
“ஆமா, ஆமா நீ இவ்வளவு நேரம் குழப்பவே இல்லை. நல்லா குழப்பி குழப்பி கேள்வி கேட்டுட்டு நல்லவன் மாதிரி பேசுறதைப் பாரு”
“ஏய், வாலு”, என்று சொல்லி சிரித்தவன் “நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் சரண்யா. நான் வரேன்”, என்று சொல்லி விட்டு அவனுடைய வீட்டை நோக்கி நடந்தான். அவனைப் பார்த்து ஒரு பெருமூச்சை வெளியேற்றி விட்டு வீட்டுக்குள் சென்றாள் சரண்யா. 
இந்த நிகழ்வை நினைத்து பார்த்தவன் அவள் நினைவில் அதிக நேரம் அங்கே அமர்ந்திருக்க முடியாமல் “அம்மா நான் வயலுக்கு போயிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான். 
அவனுடைய காதல் கதை தெரிந்த நண்பன் ஒருவன் “விடு மச்சான், யாருக்கு யாருன்னு கடவுள் தான் முடிவு பண்ணனும் போல?. நீ விரும்பின பொண்ணு நல்லா இருக்கணும்னு நினைச்சிக்கோ. அது தான் டா உனக்கும் நல்லது. ஆனா நீ காதலிச்ச விஷயம் நம்ம நண்பன் வாசுவுக்கு தெரியாம மட்டும் பாத்துக்கோ டா. அப்புறம் அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கைலயும் விரிசலைக் கொண்டு வந்துரும். வாசுவுக்கு மட்டும் இல்லை. வேற யாருக்கும் தெரியாம பாத்துக்கோ. உனக்குன்னு ஒருத்தி வருவா டா”, என்று ஆறுதல் சொன்னான். 
அவன் அப்படிச் சொன்னதும் தன்னுடைய நினைவுகளில் இருந்து வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தான் கதிரேசன். வேலை செய்வதன் மூலம் தன்னுடைய வலிகளை மறைக்க முயன்றான். 
வாசுவின் வீட்டுக்கு சென்றதும் “கோதை சரண்யா வை உள்ளே கூட்டிட்டு போ மா. மருமகளா வரவளை ஆரத்தி எடுத்து தான் உள்ளே கூப்பிடணும். இங்க நிலைமை அப்படியா இருக்கு? சரி சரி, ரெண்டு பேரும் உள்ள போய் உக்காருங்க. நான் ஊர் பெரியவங்க நாலு பேரை கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றார் சீனிவாசன். 
“இந்த அண்ணா முன்னாடியே அவங்களை கூட்டிட்டு வந்துருக்க கூடாதா? சும்மா இந்த வீட்டுக்குள்ள போனாலே இந்த மதினிக்கு பிடிக்காது. இப்ப இப்படி ஒரு நிலையில் நாங்க எப்படி உள்ள போறது?”, என்று நினைத்த கோதை தவிப்புடனே சிறிது நேரம் நின்றாள். பின் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு “உள்ள வா சரண்யா”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள். 
உள்ளே சென்றதும் விசாலமான ஹால், ஒரு ஓரத்தில் சமையல் அறை, மற்றொரு புறம் சாமி அறை, அதன் அருகே இரண்டு படுக்கை அறைகள். பாத்ரூமை ஒட்டி மாடிக்கு செல்வதற்கான படிக்கட்டு என்று விசாலமாக இருந்தது அந்த வீடு. 
ஹாலில் போடப் பட்டிருந்த சோபாவில் அமரத் தோன்றாமல் ஒரு ஓரத்தில் தாயும் மகளும் வேண்டாத பொருள் போல நின்றார்கள். 
வேறு எந்த அரவமும் அங்கே இல்லை. மாடிக்கு சென்று குழந்தையைக் காண சரண்யாவுக்கு ஆசை தான். ஆனால் அவளுக்கு அங்கே செல்ல கால் வர வில்லை. 
ஒரு காரணம், தன்னுடைய இப்போதைய உரிமை இல்லாத நிலை. மற்றொன்று வாசு என்ன சொல்வானோ என்ற பயம். அதனால் கால் மாற்றி மாற்றி நின்று கொண்டிருந்தாள். 
எதற்கோ தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்த வைதேகிக்கு இருவரையும் கண்டதும் உடல் எல்லாம் மிளகாயை அரைத்து பூசியது போல இருந்தது. 
அவர்களை முறைத்து பார்த்துக் கொண்டே அவர்களை நெருங்கினாள். அவள் முறைப்பைக் கண்டு சரண்யா தலையை குனிந்து கொள்ள ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக “மதினி ஏதாவது வேலை இருக்கா? நான் செய்யவா?”, என்று கேட்டாள் கோதை. 
“வேலையா? இங்கயா? நீங்க ரெண்டு பேரும் வேலை செய்யவா இங்க வந்துருக்கீங்க? ஆட்சி செய்ய வந்துருக்கீங்கன்னு நினைச்சேனே?”, என்று நக்கலாக கேட்டாள் வைதேகி. 
“என்ன மதினி சொல்றீங்க?”
“நான் என்ன சொல்றேன்னு உனக்கு புரியலை, அப்படித் தானே? இதை நான் நம்பணுமா? நீங்க ரெண்டு பேரும் இங்க வந்துருக்குற நோக்கம் எனக்கு தெரியாதா? இனி இந்த வீட்டுக்கு மகாராணி இவ தானே? அப்ப இனி அவளுக்கு நான் தான் வேலைக்காரி. நான் வேணும்னா உங்களுக்கு உபசரிப்பு செய்யட்டுமா?. காப்பி போட்டுத் தரவா? கால் அமுக்கி விடவா?”, என்று ஏகத்தாளமாக கேட்டாள் வைதேகி. 
“எதுக்கு மதினி இப்படி எல்லாம் பேசுறீங்க?”
“அடச்சி, வாயை மூடு. இந்த நடிப்பு மாய்மாலம் எல்லாம் என்கிட்ட வச்சிக்காத. ஆனா உன்னை பாராட்டியே ஆகணும் டி. உன்னை மாதிரியே உன் மகளுக்கும் வித்தை சொல்லி கொடுத்து வளத்துருக்கியே?”
“இப்படி எல்லாம் பேசாதீங்க மதினி. நான் அப்படி எல்லாம் இல்லை”

Advertisement