Kadanthu Sel Kaathaludan 3 2 10876 அவனையே கவனித்திருந்த குருமூர்த்தி “பசிச்சா சாப்பிட வேண்டியது தானே?” என்றார். அவர் குரல் கேட்டும், கண் திறக்க மாட்டேன் என்ற வைராக்கியம். இங்கு வந்த உடனே அவரிடம் பேச முயன்றான். காரில் இருந்து இறங்கி இந்த அறைக்குள் வரும் வரை “சார். ப்ளீஸ். நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க. உங்க ஹெல்ப் வேணும். நீங்களாவது எனக்கு உதவி பண்ணுங்க ப்ளீஸ்” என்று அவர் கையை பற்ற, குருமூர்த்தி சட்டென உதறிவிட்டார். முகத்தில் அடித்தது போலான அவர் செயலில், உண்மையாகவே அடித்திருந்தால் கூட வாங்கியிருப்பான். ஆனால் இது? இவர் எனக்கு உதவி செய்வார் என்ற ஓர் நம்பிக்கை இல்லை நப்பாசை. ஆம் இதுவரை அவன் பலரிடம் உதவி கேட்டுவிட்டான். ஒருவரும் செய்யவில்லை. இவரும் செய்யவில்லை. வெறுத்து போனது. இப்போதும் அவர் முகம் பார்க்க பிடிக்கவில்லை. முகத்தை திருப்பி கொண்டான். குருமூர்த்தியின் அப்போதைய மனநிலை வேறு. வயது ஆண்மகனை காணவும், அவருக்கு அதிருப்தி. என்கிட்ட ஏன் அவங்க சொல்லலை என்ற கோவம். இதில் இவன் வேறு ஏதேதோ பேசியது, அவர் கைப்பற்றியது என்று அவருக்கே தெரியாமல் செய்தது தான். நல்ல மனநிலையில் இருந்தாலும் அவர் இப்படி தான் செய்திருப்பார் என்பது தான் அங்கு கவனிக்க பட வேண்டிய விஷயம். ஆக மொத்தம் இவரை பற்றி அவனுக்கு தெரியவில்லை. அவனை பற்றி இவருக்கு தெரியவில்லை. அவ்வளவு தான். முகம் திருப்பியவனை கண்டு குருமூர்த்திக்கு கோவம் வந்தாலும், “உனக்கு என்ன பிரச்சனை?” என்று கேட்டார். அவன் விரல் மட்டும் அவர் பக்கம் நீட்ட, “நான் தான் உன் பிரச்சினையா?” குருமூர்த்தி கேட்டு, அவன் விரல் ஆம் எனும் விதமாக அசைய, “என்ன பண்ணலாம்?” என்று அடுத்து கேட்டார். “வெளியே போ” என்று விரலசைவு. ‘அப்படியே இந்த விரலை உடைச்சுட்டா என்ன?’ குருமூர்த்தி கண்கள் அந்த விரலையே உறுத்து பார்த்தது. “உனக்கு மட்டுமில்லை எனக்குமே நீ தான் பிரச்சனை!” என்றார் குருமூர்த்தி பொறுக்க முடியாமல். “இதை தீர்த்துடலாம்” என்றான் அவரை பார்த்து. “பேசுனியா? அதுவும் என்கிட்ட” குருமூர்த்தி பெரிதாக அதிர்ச்சி காட்டி கேட்க, “உங்களுக்கு நான், எனக்கு நீங்க பிரச்சனை, இதை இப்போவே தீர்த்திடலாம்” என்றான். “எப்படி?” குருமூர்த்தியிடம் ஓர் புதிரான புன்னகை. அவரின் அந்த புன்னகையை அவன் சிறிதும் ரசிக்கவில்லை. முகத்தை சுருக்கி அவரை பார்த்தவன், “மேன் டூ மேன் பைட் பண்ணலாம்” என்றான். “நீயும், நானுமா? ஹாஹா. என்னை கொலை கேசுல உள்ள தள்ள பிளான் போடுற இல்லை” என்றார் அட்டகாசமாக சிரித்தபடி. “எனக்கு விடுதலை கொடுக்கிற உங்களுக்கு நான் கொடுக்கிற கிப்ட்” அவன் நிதானமாக சொல்ல, “ஓஹ் அப்படி வரீங்க” என்ற குருமூர்த்தி, “ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கே” என்றார். “நான் என் கடமையில இருந்து பின் வாங்குற ஆள் இல்லை. இப்போதைக்கு நீங்க என்னோட பாதுகாப்புல தான் இருக்கீங்க. நானே எப்படி உங்களை கொல்ல முடியும்?. வேணும்ன்னா ஒன்னு செய்யலாம். உங்க கை, காலை உடைச்சு ஓரிடத்துல உட்கார வைச்சு, என் பேச்சை கேட்க வைக்கலாம்” என்றார். அப்பட்டமான மிரட்டல்! “கை, காலை உடைச்சா உங்க பேச்சை கேட்டுடுவேனா?” என்றவனிடம் நக்கலே! “சார் பேர் என்ன?” குருமூர்த்தி கேட்க, “இது கூட தெரியாம தான் என்னை உங்க பாதுகாப்புல வைச்சிருக்கீங்க. என்னே உங்க கடமை” என்றான் அவன். “உங்க பேரை பாதுகாக்கிறது என்னோட கடமை இல்லைங்க சார். இதோ இந்த ஐம்பது கிலோ எலும்பை தான் நான் பார்த்துக்கணும்” என்று அவனை முழுதும் காட்டி சொன்னார். எவ்வளவு எகத்தாளம்? அவனுக்கு கோவத்தில் முகம் சிவந்து போனது. “என்னோட ஸ்ட்ரென்த் என்னன்னு ஒத்தைக்கு ஒத்தை வந்து தெரிஞ்சுக்கோங்க” என்றான் ரோஷமாக. ‘சும்மாவே முறுக்கிட்டு இருக்கான். இதுல இது வேறயா?’ “சாப்பிட்டு தெம்பா என்கிட்ட சண்டை போடுறது பத்தி பேசலாம்” என்றார் குருமூர்த்தி. “பேச என்ன இருக்கு? என்னால சண்டை போட முடியும், நான் இப்போவே ரெடி தான்” “நோயாளிங்ககிட்ட எல்லாம் நான் சண்டை போடுறதில்லை” என்றார். “நீங்க எல்லாம் என்னை நோயாளியா மாத்தி வைச்சிருக்கீங்க. நான் கேட்டேனா? இதையெல்லாம் நான் கேட்டேனா?” என்று கத்திவிட்டான். அவனால் உண்மைக்கும் முடியவில்லை. இயலாமை அவனை வெறிபிடிக்க வைத்தது. சோர்ந்து போகவும் வைத்தது. “என்னை யாராவது கொன்னுட்டு போகட்டும். என்னை விட்டு தொலைங்களேன்” என்றான். “உங்களுக்கு உங்க உயிர் தேவையில்லாம இருக்கலாம். ஆனா உங்க அப்பாம்மாக்கு நீங்க நிச்சயம் தேவை. ரொம்ப யோசிச்சு உங்களை கஷ்டப்படுத்திக்காம ஓய்வெடுங்க” என்று குருமூர்த்தி செல்ல, “நான் என் அம்மாகிட்ட பேசணும்” என்றான். “அனுமதி இல்லைங்க” என்றார் குருமூர்த்தி நின்று. “அம்மாகிட்ட பேசுறதுக்கு கூட பர்மிஷன் வேணும். இப்படி வாழ்ந்து நான் என்ன செய்ய போறேன்” என்று வெடித்தான். “உங்க கோவத்தால எதையும் சாதிக்க முடியாது” குருமூர்த்தி கண்டிப்புடன் சொன்னவர், “உங்க அம்மாகிட்ட என்ன பேசணும் சொல்லுங்க” என்று கேட்டார். “ஒன்னு சண்டை போடணும், இல்லை சாகணும்ன்னு சொல்லுங்க” என்றான் வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து. குருமூர்த்தி திகைத்து போனார். ஒரு காலத்தில் அவரின் தொழிலே இதுதான். “சண்டை செய்யணும்ண்ணா, இல்லை செத்து போயிடணும்” தன் வார்த்தைகள் இன்று வேறொருவனிடம் இருந்து வருகிறது. குருமூர்த்தி இப்போது தான் அவனை ஊன்றி பார்த்தவர், “யார்?” என்று கேட்டார். “என் ப்ரெண்ட்” சொல்லும் போதே அவன் இமையோரம் கண்ணீர் துளிகள் சேர்ந்துவிட்டது. குருமூர்த்தி எதையோ நினைத்து தலையை குலுக்கி கொண்டவர், “ரெஸ்ட் எடு” என்று சென்றுவிட்டார். அன்றும் அவன் உண்ணவில்லை. குருமூர்த்தி ஹாலிலே தலை பிடித்தபடி அமர்ந்திருந்தார். சம்யுக்தா இரவு உணவுக்கு வந்த நேரமும் தந்தை அங்கேயே இருந்ததில், “என்னாச்சு?” என்று ரகசியமாக கற்பகம் பாட்டியிடம் விசாரித்தாள். “அந்த பையன் இன்னைக்கும் சாப்பிடலை” என்றார் அவர் ரகசியமாக. சம்யுக்தாவிற்கு அவன் பிடிவாதம் கவலையை அளித்தாலும், இனி அந்த பக்கமே செல்ல கூடாது என்று முடிவெடுத்துவிட்டாள். மறுநாள் குருமூர்த்தி அதிகாலையிலே எங்கோ காணாமல் போய்விட, அவனை கவனிக்கும் பொறுப்பு கற்பகம் பாட்டியிடம் வந்தது. “இந்த மணியை விட்டுட்டு போயிருக்கலாம். அந்த பையன் என்னை கால் தூசிக்கு கூட மதிக்க மாட்டேங்கிறான்” என்று பாட்டி இரவு சம்யுக்தாவிடம் புலம்பினார். “மருந்துல தான் இருக்கான். டாக்டர் என்ன சொல்லியும் கேட்கலை. வயசு பையன். இப்படி படுத்து கிடக்கிறதை பார்த்தா மனசெல்லாம் பிசையுது கண்ணு” என்றார். அன்றிரவு குருமூர்த்தி வரவில்லை. “நான் அவனோடே தங்கிக்கிறேன். தனியா விட பயமா இருக்கு” என்று பாட்டி சொல்ல, “அப்பாக்கு தெரிஞ்சா கோவப்பட போறார் பாட்டி” என்றாள் சம்யுக்தா. “பரவாயில்லை கண்ணு. சாயந்திரம் இருந்து கண்ணு கூட திறக்க மாட்டேங்குது அந்த தம்பி” என்று பாட்டி அந்த அறைக்கு செல்ல, சம்யுக்தாவும் மறைமுகமாக இதை ஆதரித்தாள். நள்ளிரவு போல் அவன் உடல் தூக்கி போட, கற்பகம் பாட்டி பயந்து போய் இவளிடம் ஓடிவந்தார். மருத்துவருக்கு அழைக்க வேண்டும் என்றால், அந்த குறிப்பிட்ட மருத்துவர் எண் இவர்களிடம் இல்லை. குருமூர்த்தி, மாசிலாமணி போனை எடுக்கவில்லை. “இப்போ என்ன பண்றது கண்ணு?” என்ற பாட்டிக்கு கைகால்கள் வெடவெடக்க, “பாட்டி நீங்க இருங்க. நான் போய் அவரை பார்க்கிறேன்” என்றாள் சம்யுக்தா. “நீ போறியா? வேணாம், வேணாம் கண்ணு. உங்க அப்பாக்கு தெரிஞ்சா என்னை கொன்னுடுவார்” என்றார் பாட்டி அச்சத்துடன். “பாட்டி. இப்போ அதையெல்லாம் யோசிக்க முடியாது. அப்பாவோட பொறுப்புல தான் அவங்க இருக்காங்க. அவருக்கு ஏதாச்சும் ஆனா அப்பாக்கு தான் பிரச்சனை” என்ற சம்யுக்தா அவன் அறைக்கு ஓடினாள். தூக்கி போட்ட அவன் உடலை தன் கைகளால் பிடித்து கட்டுப்படுத்த வெகுவாக முயன்றாள் சம்யுக்தா. இன்னமும் அதிர்ந்து கொண்டிருந்தவனை கட்டிலோடு பிடித்து வைத்தவளுக்கு அடுத்து என்ன செய்ய என்று தெரியவில்லை. “கண்ணு. இதை குடிக்க வை. வெறும் வயித்துல இருக்கிறதால தான் இந்த பாடு” என்று கற்பகம் பாட்டி நீர் ஆகாரத்தை சம்யுக்தா கையில் கொடுக்க, நின்றபடி கொடுக்க முடியாமல் தடுமாறியவள், கட்டிலில் அமர்ந்து அவன் தலையை தன் நெஞ்சில் சாய்த்து கொள்ள, கற்பகம் பாட்டி அவன் வாயை வம்படியாக திறந்து சிறிது சிறிதாக குடிக்க வைத்தார். அந்த நிலையிலும் அவன் மறுப்பாக தலையசைக்க, அதில் அந்தளவு பலம் இல்லை. “சுயநினைவு இல்லாதப்போவும் வேணாம்ன்னு சொல்றதை பாரேன். சாப்பிட கூடாதுன்னு அவ்வளவு வைராக்கியமா?” கற்பகம் பாட்டி அங்கலாய்த்து கொண்டார். “நீங்க கொடுங்க பாட்டி. இப்போ கொடுத்தா தான் உண்டு” என்று சம்யுக்தா அவனை இறுக்கமாக பிடித்து கொண்டாள். மெல்ல, மெல்ல கொடுத்ததில் சில நிமிடங்கள் ஆனது. “போதும் கண்ணு. அவரை படுக்க வைச்சிடு” என்று கற்பகம் பாட்டி எல்லாம் எடுத்து கொண்டு செல்ல, சம்யுக்தா சில நிமிடம் அவனை தாங்கியே அமர்ந்திருந்தாள். “ஏன் கண்ணு” பாட்டி திரும்பி வந்து கேட்க, “சாப்பிட்ட உடனே படுக்க வைக்க வேணாம்ன்னு தான் பாட்டி” என்றவள், பாட்டியின் உதவியுடன் அவனை படுக்க வைத்தாள். அவன் கழுத்தோரம் சிதறி இருந்ததை கண்ட சம்யுக்தா, துண்டில் துடைக்க செய்ய, “என்கிட்ட கொடு கண்ணு. நான் பார்த்துகிறேன். நீ போ. உன் ரூமுக்கு போ” என்ற பாட்டி அவளை விரட்ட, “என்ன நடக்குது இங்க” என்ற குருமூர்த்தியின் கோவக்குரலில் மகள் பதறியடித்து கொண்டு திரும்பினாள்.