Kadanthu Sel Kaathaludan 3 1 11174 கடந்து செல் காதலுடன்! 3 சம்யுக்தாவிற்கு அவன் கையை பற்றவும் படபடத்து போனது. அதிலும் அவன் கண்கள் அவளையே அடித்து பார்த்ததில் பெண்ணுக்கு மேலும் திகைப்பு. இவள் கைகளில் அவன் அழுத்தம் கொடுக்க, இவள் விரல்களோ அவன் கீழ் உதட்டில் அழுத்தம் கொடுத்துவிட்டது. குவிந்த உதட்டுடன் அவளை கண்களை சுருக்கி பார்க்க, சம்யுக்தாவிற்கு அவன் மென்மையான உதட்டின் ஸ்பரிசம் உணரவும் வேகமாக விரலை எடுக்க, அவன் இவள் கையை விடவேண்டுமே! அவன் உதடுகள் எதையோ முணுமுணுக்க, சம்யுக்தாவிற்கு ஒன்றும் கேட்கவில்லை. அவளை அருகில் வருமாறு அவன் தலையசைக்க, சம்யுக்தாவிற்கு அருகில் செல்வதா? வேண்டாமா என்ற கேள்வி. அவன் திரும்ப ஏதோ முணுமுணுத்து இவள் கையை அவனை நோக்கி இழுக்க, அவனிடம் பலமே இல்லை என்பதை நன்றாக உணர உடைந்தது. சம்யுக்தா தடுமாறி அவனுக்கு அருகில் செல்ல, “என்னை கொல்ல வந்தியா?” என்று கேட்டிருந்தான். ‘எதே‘ பெண் அதிர்ந்து போக, “சீக்கிரம் கொன்னுடு” என்றான் அவன். கிண்டல் அடிக்கிறானா என்று பார்க்க, அவன் பார்வையோ இவளை யாசித்து கொண்டிருந்தது. உயிர் வாழும் ஆசை அவனிடம் கொஞ்சம் கூட தென்படவில்லை. அப்படியென்ன கஷ்டம் இவருக்கு? சம்யுக்தா விழிகளில் பரிதாபம் அமர்ந்து கொள்ள, சட்டென அவள் கையை உதறினான் அவன். “என்னை கொல்ல தானே வந்திருக்க. கொன்னுடு. நானே சொல்றேன் இல்லை. சீக்கிரம். ம்ம்” என்று குரலில் வலிகூட்டி கத்த, சம்யுக்தா இதை எதிர்பார்க்காமல், “ஷ்ஷ். கத்தாதீங்க” என்று அவனை அடக்க முயல, அவனோ எழுவதற்கு தடுமாறி கட்டிலில் இங்கும், அங்கும் வேகமாக அசைய, “என்ன பண்றீங்க நீங்க. ப்ளீஸ். கொஞ்சம் அமைதியா இருங்க” என்று அவனை அப்படியே கட்டிலில் படுக்க வைக்க, அவன் இவள் கைகளை தட்டிவிட்டு இன்னும் வலு கூட்டி எழுவதற்கு போராட என்று இருவருக்கும் சில நிமிடம் தள்ளு முள்ளே நடந்தது. ஓர் கட்டத்தில் இவன் கட்டிலை விட்டு விழ போக, சம்யுக்தா அவனை இரு கைகள் நீட்டி தாங்கி கொண்டாள். அவன் கோவமாகி இவளை விலக்க பார்க்க, மண்டியிட்டு அமர்ந்த பெண்ணால் அவன் எடையை தாங்க முடியாததோடு அவனும் அதகளம் செய்ததில் இருவருமே கீழே விழுந்துவிட்டனர். சம்யுக்தா தலை நங்கென தரையில் பட்டதில், “ஸ்ஸ்” என்றவள், எங்கோ பயங்கரமாக சுள்ளென வலி வேறு. இந்த நல்லவன் அவள் மேல் விழுந்ததோடு முழங்கை எலும்பை வைத்து அவள் இடையில் அழுத்தி வேறு கொண்டிருந்தான். “ஆஹ். ரொம்ப வலிக்குது. என்ன பண்றீங்க நீங்க. நகருங்க” என்று சம்யுக்தா வலியில் கத்த, இந்த நல்லவனோ திரும்ப மயக்கத்துக்கு அல்லவா சென்று கொண்டிருந்தான். அவன் தலை தள்ளாடி இவள் கழுத்து பகுதியிலே விழுந்து வைக்க, கைகள் வேறு அவளை நன்றாக வளைத்து கொண்டது. “உன்னை விட மாட்டேன் நான்” என்று முணுமுணுப்பு வேறு. “என்ன பண்றீங்க. எழுந்திருங்க, என்மேல இருந்து எழுந்து தொலைங்க” சம்யுக்தா மூச்சு விட முடியாமல் மொத்தமாக திணறி போனாள். “ஹலோ சார் உங்களை தான். பயங்கர வெய்ட்டா இருக்கீங்க. எழுங்க ப்ளீஸ்“ “சார்ர்ர்“ “யோவ். எழுந்து தொலையா“ “டேய் மலைமாடு. உன்னை தான். டேய்” என்று வலியில் கடுப்பாகி கத்தி, அவனிடம் சிறிதும் அசைவில்லாததில், “மயக்கம் போட்டுட்டாரா என்ன? போச்சு” அவள் உணர்ந்து, சில பல நிமிடம் போராடி அவனை கீழே தள்ளி விட்ட பின்னே இவளுக்கு கண் நன்றாக தெரிந்தது. தன் பக்கத்தில் விழுந்து கிடந்தவனை பார்த்தவள், ‘ஆள் பார்க்க தான் ஒல்லியா இருக்கார். ஆனா என்ன கனம் கணக்கிறார்‘ நன்றாக மூச்சை இழுத்துவிட்டாள் பெண். மின்னலாக இவன் அவளிடம் கேட்டது நினைவிற்கு வர, “அதெப்படி என்னை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்கலாம்? என்னை பார்த்தா கொலைக்காரி மாதிரியா இருக்கு?” சம்யுக்தா வாய்விட்டே புலம்பினாள். “திரும்ப இவரை எழுப்பணுமா?” “அதென்ன எப்போ பார்த்தாலும் நான் இருக்கும் போதே மயங்கி விழுகிறார். அட போயா” என்றானது பெண்ணுக்கு. தண்ணீர் தெளித்தாலும் எழ மாட்டானே என்ற கவலை. சிறிதும் தெம்பில்லாமல் இருக்கிறான். சாப்பிட்டால் தானே! மருந்து, மாத்திரையிலே உயிர் வாழ முடிவெடுத்து விட்டாரா? க்கும். உயிர் வாழ ஆசை இருந்தால் ஏன் என்னை கொன்னுடு என்று கேட்க போகிறார்? தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றாள். முகத்தை நன்றாக ஈரத்துணியால் துடைத்தாள். முகத்தில் பாதி தாடி தான் இருந்தது. பெண்ணுக்கு உள்ளங்கை கூசிப்போனது. முதல் ஆண்மகன் இவ்வளவு பக்கத்தில் இருப்பதும், அவனை இவள் தொடுவதும் என்பதால் இயல்பான கூச்சம் இருக்க தான் செய்தது. பயிற்சி நேரம் மாசிலாமணியிடம் சண்டையே இட்டிருக்கிறாள் என்றாலும் இவன் வேறாயிற்றே! அவன் வயதும், இவள் வயதும் தான் முக்கிய காரணம்! சம்யுக்தா களைத்து போனவள், ‘இனி முடியாது. அப்பாவை கூப்பிட்டே ஆக வேண்டும்‘ என்ற முடிவுக்கு வந்தாள். தந்தையிடம் மாட்டிக்கொள்வோமா என்ற பயம் அதிகளவு இருந்தாலும், இரவெல்லாம் இவனை இப்படியே விடவும் முடியாதே! டார்ச்சை ஞாபகமாக எடுத்து கொண்டவள், தான் வந்த தடம் ஏதும் இருக்கிறதா என்று ஆராய்ந்து அதன் பின்னே அந்த பட்டனை அழுத்தி விட்டு ஓடினாள். கதவு அடைக்கும் நேரம், தனியாக விழுந்து கிடந்தவன் மனதை கனக்க செய்தான். ஏன் இந்த தலையெழுத்து இவருக்கு? பாவம். பெண்ணுக்கே உண்டான கருணை மனது. என்ன செய்ய? குருமூர்த்தி வேகமாக அவன் அறைக்குள் வந்தவர், கீழே விழுந்திருந்தவனை கையில் அள்ளி படுக்கையில் படுக்க வைத்தார். ‘என் பொண்டாட்டி, பொண்ணை கூட இப்படி தூக்கியிருக்க மாட்டேன்‘ குருமூர்த்தி எண்ணமிது. பிறகென்ன மருத்துவர் வந்து வைத்தியம் பார்த்து, “அவனை சாப்பிட வைத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் மிகவும் கஷ்டமாகிவிடும்” என்றார். “நான் என்ன சாப்பாடா கொடுக்க மாட்டேன்னு சொல்றேன். இந்த அடங்காதவன் சாப்பிடலைன்னா நான் என்ன பண்ண?” மனிதருக்கு எக்கச்சக்க கடுப்பு. அந்த நேரத்திலும் அவருக்கு போன் வந்துவிட்டது. முன்னாள் முதலாளியின் வலது கை தான் போனில் பேசுவார். இப்போது என்னவென்றால் முதலாளியே பேசுகிறார். “எப்படியாவது அவரை சாப்பிட வைச்சிடு மூர்த்தி” என்றார் மனிதர். “பிடிவாதம் பிடிக்கிறவனை நான் என்ன செய்ய முடியும்? சொல்லுங்க” என்றார் குருமூர்த்தி. “அவர் உயிர் வாழணும்ன்னு தான் இவ்வளவு போராட்டம் மூர்த்தி“ “சாப்பிடலைன்னா போய் சேர்ந்துடுவோம்ன்னு அவனுக்கும் தெரியணும்” என்றார் கடுப்பாக. “அவருக்கு தெரிஞ்சதால தான் சாப்பிட மாட்டேங்கிறார் மூர்த்தி“ “என்ன சொல்றீங்க” குருமூர்த்திக்கு இதென்ன புது பஞ்சாயத்து என்றானது. “அதனால தான் சொல்றேன். எப்படியாவது சாப்பிட வைச்சிடு. அப்புறம்” என்று மேலும் சிலது சொல்ல, “என்னால செய்ய முயடியாது” என்றார் குருமூர்த்தி. “அவரும் யாரோ ஒருத்தங்களுக்கு புள்ள தான் மூர்த்தி, உன் பொண்ணை போல” என்றார் முதலாளி நிதானமாக. குருமூர்த்தியின் தந்தை எனும் உணர்வை தொட முயன்றார் அந்த முதலாளி. “இவனை என் பொண்ணு இடத்துல வைக்காதீங்க. என்கிட்ட ஆட்டமா ஆடிட்டு இருக்கான்” என்றார் குருமூர்த்தி கடுப்பாக. “அவர் உன்னை மாதிரி மூர்த்தி” “ஆஹ்ன், நான் இவ்வளவு அடங்காதவனா?” “இல்லைன்னு சொல்லிடுவியா நீ” முதலாளி சவாலாக கேட்ட்டார். குருமூர்த்தி அனுபவித்த பாதி துன்பங்களுக்கு காரணம் அவரே தானே? எப்படி மறுப்பார் மனிதர். “இப்போ என்ன தான் சொல்ல வரீங்க? இவனை சாப்பிட வைக்கவே என்னால முடியலை, இந்த லட்சணத்துல நீங்க எதிர்பார்க்கிறதை எல்லாம் எப்படி என்னால செய்ய முடியும்?” குருமூர்த்தி கேட்டார். “உன்னால முடியும் மூர்த்தி. அவரை நீயா நினைச்சுக்கோ. நான் அவர்கிட்ட உன்னைத்தான் பார்த்தேன். நீயும் அவரை அப்படியே பாரு” என்று வைத்துவிட்டார். குருமூர்த்தி நெற்றியை சுருக்கி கொண்டார். நல்ல மயக்கத்தில் இருந்தவனை பார்த்தபடி நின்றார். விடிந்ததும் மாசிலாமணியை துணைக்கு வைத்து குருமூர்த்தி அவரின் அறைக்கு சென்றார். கற்பகம் பாட்டியிடம் அவன் நலத்தை விசாரித்து கொண்ட சம்யுக்தா கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள். குருமூர்த்தி ஓய்வுக்கு பிறகு கையில் உணவுடன் அந்த ரகசிய அறைக்கு செல்ல, மாசிலாமணி மறுப்பாக தலை அசைத்தார். “நேத்து அவரே பிரஷ் எல்லாம் பண்ணிகிட்டார்ண்ணா. இன்னைக்கு கட்டிலை விட்டு நகர கூட மாட்டேங்கிறார்” என்றார் மாசிலாமணி. “சரி நீ கிளம்பு நான் பார்த்துகிறேன்” என்று அவன் பக்கத்தில் சென்று அமர்ந்தார். இவர் வந்தது தெரிந்தும் அவன் சுளித்த புருவங்களுடன் கண் மூடி படுத்திருந்தான். நேற்றிரவு நடந்தது அவனுக்கு நினைவில் இருந்தது. சம்யுக்தா முகம் அவனுள் மின்னி மறைய, “யார் அது?” என்ற கேள்வி. “நைட் திரும்ப மயக்கமாகிட்டிங்க, டாக்டர் வந்தார்” என்று மாசிலாமணி சொல்லியிருக்க, ஒருவேளை அவள் வந்தது கனவோ என்ற எண்ணம் வந்த உடனே இல்லை என்று அடித்து சொன்னது அவன் விரலில் சிக்கியிருந்த நீள முடி. “இந்த ரூம் ஏதோ அண்டர்கிரவுண்ட் போல இருக்கு. இங்க எப்படி வந்திருப்பா? என்னை கொல்ல வந்திருந்தா ஏன் கொல்லலை? நான் அவகிட்ட சொன்னேனே என்னை கொன்னுடுன்னு“ ‘அவ என் கீழ் உதட்டை கூட பிடிச்சிருந்தா இல்லை‘ சட்டென குறுகுறுத்தது அவன் உதடு. வாய்க்குள் இழுத்து கொண்டான்.