அத்தியாயம்…. 9

ஜானகி அம்மாள் மனசில் எவ்வளவு வலி.! இதையெல்லாம் ஒளித்து வைத்துக் கொண்டு சிரித்து ஜோக்கடித்து கலகலப்பாக பழகுகிறார்களே.! அதிசயம் தான்.

“கவலைபடாதீங்க மா. எல்லாம் சரியாயிடும். நம்பிக்கை….”

“எனக்கு நம்பிக்கை விட்டுப் போச்சு கல்பனா. இதோ இந்த தொட்டி மீன்கள் மாதிரி ஆகிப் போச்சு எங்க வாழ்க்கை. கடலிலும் ஆற்றிலும் சுதந்திரமாக திரியும் மீன்களைப் போய் யார் வேடிக்கை பார்க்கிறார்கள்.? தொட்டியில் நீந்தும் மீன்களைத் தான் நாம வேடிக்கை பார்க்கிறோம். அது போல் எங்களையும் வேடிக்கை பார்க்கிறார்கள். வேடிக்கை பொருளாகி விட்டோம். இயல்பா இருக்க முடியலை. நிறைய பட்டுட்டேன் கல்பனா.”

“அம்மா…. நீங்க ஏன் இப்படி அடுத்தவங்க அபிப்ராயம் பத்தி ரொம்ப கவலைப்படறீங்க.?” என்றாள் கல்பனா.

“பதினெட்டு வயசிலிருந்து நான் விமர்சிக்கப்படும் மனுஷியாக வாழ்கிறேன். வெறுத்துவிட்டது. கிருபாகரன் பிறந்த புதிதில் பிஸினஸ் டல்லாகி கடன் சுமை ஏறியதால் என் கணவர் காணாமல் போய்விட்டார். இன்று வரை எங்கிருக்கார்னு தெரியலை. எப்படியோ போராடி மகனை ஆளாக்கிவிட்டேன். இப்போ அவன் வாழ்வில் சிக்கல் என்பதை தாங்க முடியலை. நான் கஷ்டப்பட்டது பெரிய விஷயமில்ல. இப்போ அவன் கஷ்டப்படறதைப் பார்க்கிற திராணி எனக்கில்லை.” என்ற ஜானகியின் கண்ணீரை தான் துடைக்க முடியும். அவள் வலியை துடைக்க முடியாது என்று உணர்ந்தாள் கல்பனா. அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

சிறிது நேரத்தில் ஜானகி தன் நிலை அடைந்தாள். பிறகு அன்புடன் அவள் தலை கோதி கேட்டாள்.

“உன் வாழ்வில் ஏதோ பிரச்சனைன்னு சொன்னியேம்மா. என்கிட்டே சொல்லலாம்னா சொல்வேன்.” என்று கேட்டுக் கொண்டாள் ஜானகி.

கல்பனா சடாரென்று ஜானகி மடியில் கவிழ்ந்து குலுங்கி அழுதாள். மனதில் அடைந்து கிடந்த துன்ப ரேகைகள் கரைந்தது. தற்காலிக நிம்மதி கிடைத்தது. இந்த ஒரு அவுட் பர்ஸ்ட் அவசியம். அதை அவளால் யாரிடமும் காட்ட முடியவில்லை. நன்றியுடன் அவள் ஜானகியை கடவுளாக நினைத்தாள். கடவுளிடம் தானே கொட்ட முடியும். விமர்சனம் பண்ணி நோக வைக்க மாட்டார்.

கல்பனா பின் தன்னை சேகரம் பண்ணிக் கொண்டு தன் கதையை சொன்னாள். மழை பெய்து விட்டது போல் இருந்தது.

“அடப் பாவமே…. இப்படியொரு பாவி இருப்பானா.?” இதற்கு மேல் பேச முடியாமல் அதிர்ச்சி அடைந்தாள் ஜானகி.

“நானும் ஒரு தொட்டி மீன் தான் மா. வேடிக்கைப் பார்க்கிறார்கள். ஏளனமாக சிரிக்கிறார்கள் என் முதுகுக்குப் பின். உங்க கிட்டே சொன்னதாலே மனசு லேசாச்சு.”

“எனக்கும் தான். துயரம் சந்திச்ச மனசுகளால் தான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியும். அடடே கல்பனா…. மணி ஒன்பதாகிவிட்டது. பேசிக் கொண்டிருந்ததில் நேரமே தெரியலை. வா சூடா அடை வார்த்துதர்றேன்.”

“சரிம்மா…. எனக்கு அடை ரொம்பப் பிடிக்கும். எங்கம்மா அடை மாதிரி மொறு மொறுன்னு இருக்குமா.?”

“போடி இவளே…. அடைன்னா கனமாத் தான் இருக்கும்.”

“என்னவோ சாப்பிடும்படி இருந்தால் சரி. டாக்டருக்கு அடை பிடிக்குமா.?” என்று கிண்டல் செய்தாள்.

“போஷண்ட்ஸ் கிட்டே ரொம்ப எண்ணை சேர்க்க கூடாதுன்னு அட்வைஸ் பண்ணுவான். ஆனா அவள் அடையிலே இன்னும் கொஞ்சம் எண்ணை ஊத்துமான்னு அடம் படிப்பான்.”

“அப்படியா…. இந்த டாக்டர்களே இப்படித்தான். தனக்கு ஒரு நீதி பேஷண்ட்சுக்கு ஒரு நீதி…..”

ஜானகி மனம் விட்டுச் சிரித்தாள் கலகலப்பாக பலதும் பேசியபடி அடை சாப்பிட்டார்கள்.

“என்ன அநியாயம் இது.? வீட்டை திறந்து போட்டிட்டு இப்படியா நான் உள்ளே வந்தது கூட தெரியாம கொஞ்சிக் குலாவிட்டு இருப்பீங்க.?” என்றபடி கிருபா உள்ளே வந்தான்.

“அம்மா சாயங்கால நேரம் விளக்கேத்தும் போது லட்சுமி வரட்டும்னு கதவு திறந்தாங்க. பிறகு லட்சுமியை பாதுகாக்கணுங்கறதை மறந்துட்டாங்க. லட்சுமியை திருடன் திருடிட்டு போகப் போறான்..”

கல்பனா லட்சுமி என்று சொன்னது காசு பணத்தை.

“அம்மா…. என்ன இப்படி கேர்லெஸ் சா இருக்கே. இது ஜோக்கடிக்கிற விஷக=யம் இல்ல.”

“டென்ஷின் ஆகாதே டா. அவ்வளவு எளிதாக லட்சுமியை திருடு கொடுத்திடுவேனா.? எங்க ஐஸ்வர்யத்தை எப்படி பாதுக்காகணும் கறது எனக்குத் தெரியாதா.?” என்ற ஜானகி கல்பனாவை கட்டிக் கொண்டாள். ஜானகி ஐஸ்வர்யம் என்று குறிப்பிட்டது தன்னைத் தான் என்று கல்பனா புரிந்து கொண்டாள்.

“அடுத்தவங்க ஐஸ்வர்யத்தை நாம திருடலாமான்னு யோசிங்க தாய்க்குலமே.” என்று கிருபா கல்பனாவைப் பார்த்தான். கல்பனா முகம் சிவந்தாள். அவன் தன்னைத் தான் சொல்கிறான்….

“போதும் போதும்… லட்சுமி புராணம். டாக்டர் கை கால் அலம்பிட்டு வாங்க. உங்களுக்கா ஸ்பெஷல் டிபன் ரெடி..” கிருபாகரன் குளித்துவிட்டு, லுங்கியில் நுழைந்து, சாப்பிட வந்தான். ஜானகி சூடாக அடையை வார்க்க ஆரம்பித்தாள்.

“கல்பனா…. கொஞ்சம் பரிமாறு. ப்ளீஸ்.” என்றாள். கரும்பு தின்ன ப்ளீஸ் எதுக்கு.? இருந்தாலும் பிகுவுடன் சொன்னாள்.

“உங்களுக்காக பரிமாறுகிறேன் ஆன்ட்டி.” அடையுடன் சென்றாள்.

சூடான அடையை அவன் தட்டில் வைத்து சட்னியை வைத்தாள். ஒரு விள்ளல் சாப்பிட்டவன்….

“அடை எக்ஸ்டிரா டேஸ்டா இருக்கு.”

“அப்படியா.? என்ன ஸ்பெஷல் தெரியுது.?”

“அடை ஒரு விடை சொல்லுது.”

“அட…. உங்க வீட்டு அடை பேசுமா.? எனக்கு கேக்கலையே.”

“இந்த அடை…. கடை அடை இல்ல. கடனேன்னு உட்கார்ந்திருக்க. இது நீங்க எல்லாம் பேசின லட்சுமி கரம் பட்ட அடை அல்லவா.? அதான் பேசுது. கல்பனா முகம் அழகாக சிணுங்கியது. மெல்லிய குரலில் சொன்னாள்.

“போச்சுடா லட்சுமி உங்க வீட்டுக்குள் நுழஞ்சாலும் நுழஞ்சா…. அவளை வம்புக்கு இழுக்காமல் விட மாட்டேங்க போலிருக்கே. சரி அடை என்ன விடை சொல்லுது.?”

“இந்த அடை அன்புங்கற உடை அணிந்து எக்ஸ்டிறா டேஸ்டுடன் இருக்கு. அதான் கொடையா இதைக் கொண்டு வந்த கைக்கு ஒரு வளை போடலாமுன்னு இருக்கேன்.”

“லட்சுமி நழுவிட்டா.?”

“எங்க வீட்டிலே இப்ப தான் ஒரிஜினல் லட்சுமி காலடி எடுத்து வச்சிருக்கா. நழுவ விட்டிடுவோமா.?” என்றான் கிருபா. அவர்கள் இருவர் கண்களும் சந்தித்து மீண்டன.

“நம்பிக்கை தான் வாழ்க்கை கல்பனா.” என்றான். கை துடைக்க துண்டு கொடுத்த அம்மா.. “என்ன, நம்பிக்கை அது இதுன்னு பேச்சு அடிபடுது.” என்று கேட்க….

“அம்மா…. உன் அடை சாப்பிட்டும் நான் உயிரோட இருப்பேன்னு எனக்கு ஒரு நம்பிக்கை தான்னு சொல்லிட்டிருந்தேன். நீ இடையிலே புகுந்திட்டே.”

“அடை சுடச் சுட சாப்பிட்ட கொழுப்புடா உனக்கு.”

“அம்மா…. நான் வீட்டுக்குப் போணும்.” என்றாள் கல்பனா.

“கல்பனா…. காலையில் போலாமே. இப்ப இரவு நேரத்திலே போய்..”

“10.20 க்கு ஒரு பஸ் இருக்கு. அதை பிடிச்சா….”

“நோ சான்ஸ். கல்பனா காலையிலே போகலாம்.”

“ப்ளீஸ் டாக்டர்…. கட்டாயம் போகணும். இரவு தங்க விரும்பலை.”

அவள் முகத்தில் உறுதி தெரிந்ததை ஜானகி உணர்ந்தாள்.

“கிருபா…. கொஞ்சம் சிரமம் பாரராமல் கல்பனாவை அவள் வீட்டில் விட்டு விடேன்…. இது ரவுடிகள் சுற்றும் காலம்.”

கார் விரைந்து கொண்டிருந்தது. வண்டியோட்டும் கிருபா அருகே கல்பனா மௌனமாக அமர்ந்திருந்தாள். அவளை ஒரிஜினல் லட்சுமி என்றானே.! கேட்க நன்றாகத் தான் இருக்கு. ஆனால் ஏற்கனவே வந்திருக்க இன்னொன்று எப்படி வரமுடியும.? சசிரேகா விடுவாளா.? அவள் வீட்டவர் சும்மா விடுவார்களா.? இவள் தான் விலகணும்.

கல்யாண சிக்கலில் மாட்டி அவஸ்தைப் பட்டு வெளிவந்த பின் இப்போ காதல் என்பதிலும் சிக்கலில் தவிக்கிறதே அவள் எதிர்காலம்.!மனசே உனக்கு விவஸ்த்தை என்பதே கிடையாதா.? கிட்டாதாயின் வெட்டென மாற என்கிற வாக்கு புரியாதா.? புரியாதது போல் நடிக்கிறாயா .? ஆசைக்கும் நியாயத்துக்குமான போராட்டமே அவள் மௌனத்துக்கு காரணமா.

“கல்பனா…. என்ன பேசாமடந்தையா இருக்கீங்க.?” என்று அவள் எண்ண ஓட்டத்தை உலுக்கினான்.

“போதும் இந்த ங்ங்க மரியாதை எல்லாம்.”

“ரைட்…. எப்ப அதுக்கு விடை கொடுக்கலாம்ன்னு நானும் தவிச்சிட்டு இருந்தேன். நீயே எடுத்து கொடுத்திட்டே.” என்றபடி சி. டி யை ஆன் பண்ணினான். பொருத்தமான பாடல் கேட்டது \.

‘என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சூழலுவதேன்.? உன்னருக்கே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்.?”

அவர்கள் பேச நினைத்ததை எல்லாம் அந்த பாட்டு பேசியது.

‘இளமையிலே காதல் வரும்.? எதுவரையில் கூட வரும்.? முழுமை பெற்ற கதாலெல்லாம் முதுமை வரை ஓடி வரும்.”

இந்த வரிகள் கேட்டு சடாரென்று ஒருவரை ஒருவர் அர்த்த புஷ்டியுடன் பார்த்துக் கொண்டனர். வீடு வந்து அவள் இறங்கி  கையசைத்த போது, தன் இதயத்தையே மிதித்துக் கொண்டு அவள் செல்வதை உணர்ந்தான். லட்சுமியாக வந்தவள் என் ஐஸ்வர்யமான இதயத்தை ஏன் திருடிக் கொண்டு போகிறாள்.? இணையவும் அவர்களுக்கு உரிமை இல்லை. பிரியாவும் அவர்களுக்கு மனமில்லை. ஏங்கித் தவிக்கத் தானா காதல்.?

“டாக்டர்…. கொஞ்சம் சிரித்து கையசைத்து விடை கொடுத்தால் என்னவாம்.? அடை சாப்பிட்டதில் மந்தமாகிவிட்டீர்களா.?”

“ஸாரி கல்பனா. விளையாட்டுக்கு கூட நான் உனக்கு டாட்டா சொல்ல விரும்பலை. மீண்டும் மீண்டும் வருக என் இல்லத்துக்கு.” என்றான். கல்பனா முகத்தில் அலதிஉயன ஒரு புன்னகை தோன்ற…. அதைப் பரிசாக பெற்றுக் கொண்ட தெம்புடன் திரும்பினான்.

வைதேகி நன்மை தருவார் பெருமாள் கோவிலில் இருந்தாள். மணி காலை எட்டாய் நெருக்கிக் கொண்டிருந்தது. பெருமாளை தறிசனம் பண்ணிவிட்டு பிரகாரத்தை சுற்றி விட்டுப் படிக்கட்டில் வந்தமர்ந்தாள். அவள் மனம் அலாதியான அமிதியுடன் இருந்தது. எவ்வளவு காலமாயிற்று இத்தகைய அமைதியை அடைந்து.! மகள் விசாலம் பேரன் பேத்தியுடன்  சேர்ந்து இருந்தால் தான் வாழ்க்கை நிறைவாக இருக்கும் என்று நினைத்திருந்தாளே.! அவர்களை விட்டு வந்த இந்த ரெண்டு மாதத்தில் அவள் தனிமையின் இனிமையை உணர்ந்தாள். சதா காலமும் அவளை குறை சொல்லிக் கொண்டிருந்த பெண்களிடமிருந்து தப்பித்து வந்துவிட்டது போல் விச்சிராந்தையாக இருந்தது. அவரவர் வாழ்க்கையில் போராடி வாழ்கிற போது இவளுக்கு ஏது இடம்.?

“இருக்கிற பிரச்சனைகள் போதாதா.? நீ வேற ஏழரையை கூட்டாதே.” என்று விடுவார்கள்.

பெருமாளே…. இருவரின் வாழ்க்கையிலும் நிம்மதியையும் சந்தோஷத்தையும் நீ தான் தரணும். அம்மா…. என்று ஓடி வந்து என் முந்தானையில் தஞ்சமடைந்து, அம்மா பார்த்துப்பா என்று அவர்கள் வாழ்ந்த அந்தக் காலம் முடிவடைந்து விட்டது. அம்மாவை நம்பிய காலம் போய் அவர்கள் தங்களை நம்பும் காலம் வந்துவிட்டது. தங்கள் வாழ்க்கையில் எதை எப்படி செய்ய வேண்டும் என்று வகுத்துக் கொள்ளும் உரிமை பெற்றுவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அதுவும் நியாயம் தானே. அவர்கள் கண்ணோட்டம் வேறே. இவளின் கண்ணோட்டம் வேற…. கால இடைவெளி இருக்கும்போது அன்று சொன்னது இன்று செல்லுபடி ஆகாதே.! நல்லபடியாக அவர்களுக்கு வழிகாட்ட்ப்பா… என்று மனசார வேண்டிக் கொண்டாள். அத்துடன் அவர்களைப் பற்றிய கவலையை விட்டுவிட்டாள். வெறும் கவலையை வைத்துக் கொண்டு மனபாரம் அடைய அவள் பூஞ்சை மனம் இனி இடம் கொடுக்காது.

கவலைபட்டு அவர்களிடம் அறிவுரை சொல்லப் போய்

“சும்மா இரும்மா…. உனக்கு ஒண்ணும் தெரியாது.” என்ற பதிலில் காயப்படுவது தேவை தானா என்று அறிவு அறிவுருத்தியது.

அனுபவம் அவர்களுக்கு நல்லது கெட்டது உணர்த்தும். அவளுக்கு இந்த வயதில் வந்த ஞயானம். இந்த முதுமை காலத்தில் அவளுக்கு நிம்மதி வேண்டுமென்றால்….

பழுத்தப் புளியம்பழம் ஓட்டோடு ஒட்டாமல் இருப்பது போல் ஒட்டியும் ஓட்டமாலும் பிள்ளைகளோடு உறவு வைத்துக் கொள்வதே நல்லது. இப்பொழுது வேறு வழியில்லாமல் அவள் தனக்காக வாழ ஆரம்பித்து விட்டாள். அவளைச் சுற்றி புதுப்புது உறவுகள் முளைத்தன. அதுவும் ஒரு ஸ்வாரஸ்யம் தான்.