பூ வாங்காமலேயே மகளை இழுத்துக் கொண்டு கூட்டத்தில் மறைந்து போனாள் சந்திரா. சம்பகா கண்ணிலா இந்தக் காட்சி பட வேண்டும்.! தொண்டையில் பெரிய கல் அகப்பட்டது போல் தினறி நின்றாள் ஜானகி. சம்பகா போலி இரக்கத்துடன் அவளை கிளறினாள்.
“ஒரே பையன். கண்ணுக்கு கண்ணா வளர்த்து ஆளாக்கினே. உன் விதியை பார்த்தியா.? உன் சின்ன வயசிலேயே உன் புருஷன் ஒட்டிட்டார். இன்றைய தேதி வரை எங்கிருக்கார்ன்னே தெரியலை. நீயும் பெருசா குங்குமம் வச்சிருக்கே. சரி யாரும் விதவைன்னு சொல்ல முடியாதில்லே. பாவம் குங்குமம் வச்சுக்கு. எங்கோ இருக்கார்னு மனசை தேதிக்க. இப்போ ஒரே மருமகள்…. பயித்தியம் திரியறா பாவம். பார்க்க கஷ்டமாத் தான் இருக்கு.”
ஜானகிக்கு அவளை சப்பென்று அறைய வேண்டும் போல் இருந்தது. ச்சே…. இதனால் தான் அவள் யாருடனும் கூட்டு சேர்ந்து எங்கும் போவதில்லை. அந்த கல்பனா வந்திருந்தால் இவளிடம் சிக்கி அசிங்கப்பட்டிருக்க வேண்டாம்.
“ஜானகி…. கண்ணீர் விடாதே. தைரியமா இரு. நான் இருக்கேன் உனக்கு.” என்று நையாண்டியாக பேசினாள் அவள்.
“சம்பகா…. யார் சொன்னா நான் கண்ணீர் விட்டிட்டு இருக்கேன்னு.? நடந்ததெல்லாம் நம்மை மீறிய செயல். அழுது புலம்பி வீணாப் போகணும்கறியா.? தேவையில்லாம பேசாதே சம்பகா.”
“ஏதோ ஆறுதல் சொன்னேன். கோவிச்சிக்கற. மருமக எப்படிப் போனா என்ன.? உன்னை மாதிரி கண்டுக்காம விலகிப் போறது தான் புத்திசாலித்தனம்.”
இதற்கு மேல் நின்றிருந்தால் இவளைக் கை நீட்டி அடிக்க வெறியே வந்திடும். நைசாக நழுவி விடுவது நல்லது.
“அப்புறம் பார்க்கலாம் சம்பா. நீ உன் தங்கை வீட்டுக்குப் போய் சப்பாத்தி சாப்பிடு. நீ தான் சாப்பாட்டு பிரியை அச்சே.” என்று விட்டு ஒரு ஆட்டோவை கை தட்டி பிடித்து. அதில் ஏறி கிளம்பிவிட்டாள்.
சம்பகாவுக்கு ஒரு கிக். இது பற்றி பேச தங்கை வீட்டுக்கு ஓடி சென்றாள். அவளுக்கு குஷி பயித்துக் கொண்டு போனது.
இரவு பத்து மணிக்கு ஆய்ந்து ஒய்ந்து வந்த கிருபாகரன் அம்மா உட்காரந்திருந்த விதம் பார்த்து ஏதோ அவள் மனசு காயப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொண்டான்.
“என்னாச்சு மா.? ஏன் ஒரு மாதிரியா இருக்கே.? பூப்பல்லக்கு பார்க்க போனியா இல்லையா.?”
அவள் பதில் சொல்லாமல், இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீரை இறக்கினாள். மவுனமான கண்ணீர். அம்மா தோள் தொட்டான். கனிவுடன் சொன்னான். அம்மாவாகவே மாறினான்.
“அம்மா…. பார், உன் மகன் ஒரு பெரிய ஆப்ரேஷனை வெற்றிகரமா முடிச்சிட்டு வந்திருக்கேன். உன் இரண்டு கையால் கன்னம் வழித்து திருஷ்டி சொடக்கு போடு…. கம் கம் கம்….” சிரித்தான். ஜானகி கிரே வண்ண வானத்தில் பளிச்சென்று தோன்றும் மின்னல் போல் சிரித்து, பின் அமைதியாக நடந்ததை சொன்னாள்.
“விடுமா…. யாரோ ஒரு சம்பகா மாமி சொல்றதை எல்லாம் பெரிசா எடுத்துண்டு அழுவற.? நீ தைரியசாலின்னு நினைச்சேன்.”
“அதுக்கில்ல டா. உன்…. மனைவி சசியையும் அவள் அம்மாவையும் கூட்டத்தில் பார்த்தேன். நினச்சா மனசை பிசையறது…. இன்னும் அப்படியே இருக்கா.? கூட்டத்தில் கத்தினா. பார்க்க பரிதாபமா இருந்துச்சு. நமக்கெல்லாம் விடிவு காலமே இல்லையா.?” கிருபாகரன் முகம் வாடியது.
“குளிச்சிட்டு வரேன்ம்மா.” குளிக்கும் போதே கண்ணீர் விட்டு நீரோடு நீராக வலியை குறைத்துக் கொண்டு கிருபாகரன் தலையை துவட்டியபடி வந்தான். அம்மாவை மகிழ்ச்சிப்படுத்த எண்ணி….
“அம்மா…. உன்னை மாதிரி ருசியா புதினா சட்னி அரைக்க யாராலும் முடியாதம்மா. என்ன ருசி தெரியுமா.?”
“அந்த டெக்னிக்யை கத்துக் கொடுத்ததே சசி தானே டா.” கண்ணீரை துடைத்தவள்….
“இரண்டு தோசையோட எழுந்துக்காதே. இன்னும் இரண்டு போட்டுக்கோ.” புன்னகைத்தாள். கண்ணீரும் புன்னகையும் சேர்ந்த அம்மாவின் முகம் அவனுக்கு அவள் கவலையையும் பாசத்தையும் உணர்த்தியது. அம்மா என்ற அன்பு மலை தரும் கொடை அது. அவனுக்காக சந்தோஷமாக இருக்க பிரயாசனப்படுக்கிறாள். புரிந்தது.
நைட் டிரெஸ் அணிந்து படுக்கையில் படுத்தான் கிருபாகரன். தூக்கம் வரவில்லை. துக்கம் திரண்டது. மனுஷ பிறவி உயர்ந்த பிறவி. அதுவும் மருத்துவ சேவை செய்யும் பாக்கியம் கிடைத்தது. அதனினும் உயர்ந்த விஷயம். சசியை நினைத்து மனதை தளர விட வேண்டாம் என்று அவனுக்கு அவனே ஆறுதல் சொல்லிக் கொண்டான். ஊஞ்சல் எப்பவுமே உயரவே நிற்குமா.? தாழ்ந்து வந்து தானே ஆகணும். என்ன தான் மருத்துவ சேவையில் கரைத்துக் கொண்டாலும் அவனும் சாதாரண மனுஷன் தானே.! ஆசாபாசங்கள் அவனுக்கும் உண்டு தானே.? சுயபச்சாதாபம். நமக்கு மட்டும் ஏன் இப்படி என்று பொங்கும் ஆதாங்கம் எல்லாம் முட்டி மோதிக் கொண்டு வரத்தான் செய்கிறது. அவன் மெதுவாக செல்லில் கல்பனாவை அழைத்தான்.
“ஹலோ….” என்றாள் கல்பனா.
“கல்பனா…. நான் கிருபா பேசறேன். ஏதாவது கோபமா.? அம்மா கூப்பிட்டாங்களாம். நீங்க போனை எடுக்கலையாம்….”
“ஸாரி கிருபா. அப்ப கெஸ்ட் வந்திருந்தாங்க.”
“கல்பனா…. அது தான் நிஜமான காரணமா.? இல்லே ஆவாய்ட் பண்றீங்களா.?” என்றான் ஆதாங்கத்தோடு.
“அப்படியெல்லாம் ஒன்றும் இல்ல.”
“கல்பனா…… ப்ளீஸ் வில் யூ பிஇஇ மை ட்ரு ப்ரெண்டு.”
“ஷ்வர்…. இதில் என்ன சந்தேகம்.”
“தாங்க்யூ. குட் நைட் உங்க குரல் கேட்டதே என் கனமான மனசை நீவி விட்ட மாதிரி இருக்கு. தப்பா எடுத்துக்காதீங்க கல்பனா. நான் ரொம்ப மனசு உடைஞ்சு போயிருக்கேன்.”
“கிருபாகரன்…. எதுவானாலும் மனம் விட்டுப் பேசுங்க.”
“உங்களுக்கு அழகான மனசு. என் கூட பேசறதை நிறுத்திடாதீங்க. ப்ளீஸ்.” அந்த கெஞ்சல் அவள் மனசை என்னவிவ செய்தது.
“ச்சே…. ச்சே. நிறுத்தமாட்டேங்க.”
“தேங்க்ஸ் கல்பனா. அது போதும். குட் நைட்.”
“குட் நைட்.” கிருபாகரன் மனசு லேசாயிற்று. மனசில் பாரமாக உட்கார்ந்திருந்த இமையமலை பொடிப் பொடியாக நொறுங்கியது போல் போயிற்று. அவனுக்கு கால்பனாவின் நட்பு தேவையாக இருந்தது. குழந்தை போல் நிம்மதியாக தூங்கினான்.
நைட் டிரெஸ் அணிந்து படுத்திருந்த கல்பனாவுக்கு மனம் பாகாக உருகியிருந்தது. ‘பாவம் கிருபாகர் எவ்வளவு நல்லவர். குரலில் எவ்வளவு மரியாதை, கனிவு. இவரா தன் மனைவியை துரத்தியிருப்பார்? பிஜூவுக்கு என்ன தெரியும்.? அறைகுறையாக தெரிந்து கொண்டு ரெண்டுங்கெட்டான் வயதின் கோளாறால் தப்பாக ஏதோ சொல்கிறான். அதை நம்பி ஜானகி அம்மாள் கூப்பிட்ட போது கட்ட பண்ணியது எவ்வளவு தவறு.!
கிருபாகரணின் அழகிய கம்பீர முகம் அவள் கனவில் புன்னகையுடன் வந்து போயிற்று. பால் நிலவின் குளிர்ந்த ஒளியில் முதல் முதலாக ஒரு ஆடவனைப் பற்றிய கனவோடு உறங்கிப் போனாள் கல்பனா.
கழுத்தில் தாலி கட்டிவிட்டு, யாருக்கு வந்த விருந்தோ என்று அவளை அம்போ என்று விட்டு விட்டுப் போனான். சுதாகரனால் ஏற்பட்ட புண்கள் சடாரென காணாமல் போக…. கல்பனா கன்னிப் பெண்ணின் மனதோடு முதல் முதலாக காதலில் விழுந்தாள். தாலி ஏறியதை தவிர…. அவள் கன்னிப் பெண் தானே.! சிக்கல்கள் ஏதாவது வருமா.? வரட்டும். மனசுக்குள் காதல் வந்து விட்டால் சிக்கல்களை தீர்க்க வழியும் பிறந்து விடுமே. என்று அவள் நம்பினாள்.
தோட்டத்து செடிகளுக்கு ஜானகி நீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். நன்றி சொல்வது போல் செம்பருத்தியும், ரோஜாவும் பூத்து குலுங்கியது. பூக்களோடு பேசுவது அவளுக்குப் பிடிக்கும். ஆனால் பூக்களோடு மட்டும் தான் பேச வேண்டும் என்ற கட்டாயம் பிடிக்கவில்லை. ஜானகி பொதுவாக கலகலப்பானவள். ஊசி கூட நுழை முடியாத அளவு மன நிறைவுடன் வாழ்ந்தாள்.
கணவன் கைலாசம் காவி உடுத்திக் கொண்டு ஒரு நாள் திடீரென காணாமல் போனபோது பலருடைய கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் ஆளானாள். கிருபாகரன் பிளஸ் டூ முடிக்கும் வரை கிராமத்தில் வாசம். அப்பா இருந்தார். மகளை பிறர் பேச்சு தீண்டாமல் பாதுகாத்தார். அவர் வீட்டில் இல்லாத போது அக்கம் பக்கத்தில் வம்பு கூட்டம் நோட்டம் போட வருவார்கள்.
“என்ன ஜானகி சோப்பு வாசனை வருதே. சோப்பு பொட்டு குளிச்சியா என்ன.?” என்று ஆராய்வார்கள். கணவன் ஓடிப் போய் விட்டதால் அவளுக்கு சோப்பு தேய்த்து குளிக்கும் உரிமை கிடையாதாம். மனசை கல்லாக்கிக் கொண்டு பதில் பேசாமல் மௌனம் காப்பாள்.
கணவன் போனதும் மகனின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என்று நிர்மலமான எண்ணத்துடன் வாழ்ந்து வந்த ஜானகியை பழி வாங்க விதிக்கு எப்படி மனசு வந்ததோ.! மகனின் வாழ்க்கையில் சிக்கல் வர அதை ஜானகியால் ஜீரணிக்க முடியவில்லை. சொந்த பந்தங்களின் கூரிய பார்வையும் சேற்றை வாரிப் பூசும் விமர்சனங்களும் அவளுக்கு சோர்வை கொடுத்தன. யாரிடம் பேசினாலும் முடிவில்..
“ஆமா… உங்க மருமக எப்ப வீடு வரப் போறா.? கிருபாகரனுக்கு ஒரு வழி பிறக்காதா.?” என்பதில் முடியும். அவளுக்கே தெரியாத விஷயத்துக்கு எப்படி பதில் சொல்வது.?
பூக்களோடும் புத்தகங்களோடு பேசி அலுத்துவிட்டது. சதையும் ரத்தமுமாக மனுஷர்களோடு பேசப் துடித்தாள். கல்பனாவை அவளுக்குப் பிடித்தது. அவளும் அடிபட்டிருக்கிறாள் என்று சொன்னாளே. அப்ப வம்பு பேச மாட்டாள். புரிந்து கொள்வாள். கல்பனாவுடனான நட்பை ஜானகியும் விரும்பினாள்.