அத்தியாயம்…. 4

நெருங்கின சொந்தங்கள் துயரமாக அழும்போது. உள்ளம் பதறும். எனவே அம்மாவுக்கு விசாலம் ஒரு வழி சொன்னாள். அது வேறு ஒரு வகை ஆதாரம் என்று நினைத்து சொன்னாள்.

“ஏம்மா…. கல்பனாவுக்கு போன் பண்ணி உன்னை அழைச்சுக்க சொல்லவா.?”

“வேண்டவே வேண்டாம். அவ போக்கே தனி.”

“சரிம்மா…. உடம்பை பார்த்துக்க. ஃபோன் பண்ணறேன். நீயும் பண்ணு.” என்றாள் விசாலம் கண்ணை துடைத்தபடி.

“விசா…. உன் புருஷன் டூர் போனால், அப்பவாவது முரளி, உமாவை அழைச்சிட்டு வருவியா.?” கெஞ்சலுடன் கேட்ட அம்மாவிடம் தலையை ஆட்டினாள். கண்டிப்பா கூட்டிட்டு வரேன்னு சொல்லிக்கிற தைரியம் கூட அவளுக்கு இல்ல. தளர்ந்த நடையுடன் அம்மா செல்வதை காண அவள் நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது. கேட்டை தாழ்பாள் போட்டு வந்து டைனிங் டேபிள் மேல் முகம் கவிழ்த்து ஏங்கி அழுதாள் விசாலம்.

தன் வீடு திரும்பிய வைதேகி குக்கரில் ஒறு கப் அரிசியை வைத்து அடுப்பில் ஏற்றினாள். நாலைந்து விசில் வர இறக்கினாள். ரசத்தைக் கூட்டி அடுப்பில் வைத்து இறக்கினாள். அவள் வைக்கும் ரசத்துக்கு ஏக டிமாண்ட் உண்டு. அவள் கணவன் வெங்கடேசன் உறுஞ்சி உறுஞ்சி குடிப்பான். கல்பனா தக்காளியை சாதத்தில் பிழிந்து ரசம் விட்டு சாப்பிடுவாள். விசாலம் ரெண்டு முறையும் ரசம் விட்டு சாப்பிடுவாள். மோர் சாதம் வேண்டாம் என்று விடுவாள்.

கல்யாணம் ஆகும்வரை தான் பெண்கள். பிறகு அவர்களுக்கு புருஷனின் கட்டுப்பாடுகள். பாவம் விசாலம். கல்பனா தனி டைப். விசாலம் பிறந்து பத்து வருடம் கழித்து பிறந்த செல்லப் பெண். பேராச்சி என்று அம்மன் பெயர் அவளுக்கு வைக்கப்பட்டது. அடம் பிடித்து கல்பனா என்று அதிகாரபூர்வமாக மாற்றிக் கொண்டாள்.

அவளுக்கு செவ்வாய் தோஷம். அம்பது ஜாதாகங்களுக்கு மேல் அலசி ஆராய்ந்து சுதாகரைப் பிடித்தார் அவள் தந்தை வெங்கடேசன். கல்யாணத்தை தன் சக்திக்கு மீறி செலவழித்து தடபுடலாக செய்தார். நாற்பது பவுன் நகை. ஒரு லட்சம் வரதட்சணை. விவாகரத்தானதும் சுதாகர் மாமனாருக்கு ஒரு லட்சத்திற்கான செக் எழுதி கடிதமும் எழுதி அனுப்பிவிட்டான்…

உயர்திரு மாமா அவர்களுக்கு

எதிர்பாராத விதமாக உங்கள் மகள் கல்பனாவை விவாகரத்து செய்யும்படி ஆயிற்று. மன்னித்துக் கொள்ளுங்கள். இத்துடன் நீங்க கொடுத்த வரதட்சணை பணம் ஒரு லட்சத்தை திரும்பத் தருகிறேன். பெற்றிக் கொள்ளவும். உங்கள் பெண்ணுக்கு நீங்க போட்ட நகைகள், கொடுத்த வெள்ளிப் பாத்திரங்கள், மற்றும் இதர பொருட்களை உங்க பெண்ணிடம் ஒப்படைக்க ஏற்பாடு பண்ணிவிட்டேன். வந்ததும் சரி பார்த்துக் கொள்ளவும். நாங்கள் தாம்பத்திய வாழ்க்கையை தொடங்கவே இல்லை. முதலிரவு கூட நடக்கவில்லை. ஸோ.. நீங்க தாராளமா கல்பனாவுக்கு வேறு நல்ல வரன் பார்த்து திருமணம் செய்து வைக்கலாம். என் மேல் கோபப்படாதீங்க.

மரியாதையுடன் சுதாகர்.

வெங்கடேசன் செக்கை திருப்பி அனுப்பிவிட்டார். கூட ஒரு கடிதம்.

டியர் சார்

பெண்ணை பெற்றவர்களின் வலி தெரியாமல் நீங்க எழுதியிருக்கும்

கடிதம் வருத்தத்தை தான் தருகிறது. என் மகளை மறுமணம் செய்து கொள்ளும்படி டிப்ஸ் கொடுதிருக்கீங்க. வேடிக்கை.

சேர்ந்து வாழ நாங்க அட்வைஸ் பண்ணியதை அலட்சியப் படுத்திவிட்டு, வேறு மாப்பிள்ளை பார்த்து கட்டி வையுங்கன்னு சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சி.? அவளை பாரதி கண்ட புதுமைப் பெண் என்ற பட்டம் சூட்டி உள்ளீர்கள். உங்களை விவாகரத்தது பண்ணி புரட்சிப் பெண் என்ற பட்டத்தை கல்பனா ஏற்கனவே பெற்று விட்டாள்.

தம்பி ஒரு விஷயம் சொல்ல ஆசைப்படறேன். அம்மாவாக மகளாக, சகோதரியாக இருக்கும் பெண்களிடம் இப்படிப் பேசுவீங்களா.?

வேண்டாத மனைவியிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லல்லாம் இல்லையா.? உங்க வீட்டு பெண்களை ஒதுக்கி வைப்பீர்களா.? மனைவியை மட்டும் ஒதுக்க முடியும். ஏனென்றால் அவள் இன்னொரு வீட்டுப் பெண் தானே.! வலி உங்களுக்கு இல்லை அல்லவா.? முகத்தில் கரியை பூசியத்துக்கு நன்றிப்பா.

உங்கள் செக் திரும்ப உங்களுக்கே வருகிறது. பெற்றுக் கொள்ளவும். ஒரு லட்சத்தை திருப்பித் தந்துவிட்டால் பெண் பாவம் போய்விடுமா.? இனி எங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம்.

ஆசிகளுடன் வெங்கடேசன்.

இந்தக் கடித்தத்தை அனுப்பியவுடன் அவர் மனம் நிம்மதி பெற்றது. விவாகரத்தான மகளை தங்கம் போல் பார்த்துக் கொண்டார்.

“குழந்தை ஏற்கனவே நொந்து போய் வந்திருக்கா. அவளை நாம சந்தோஷமா வச்சிருக்கணும்.” என்று மனைவிடம் சொல்வார்.

“ஏங்க…. அவளுக்கு இன்னொரு கல்யாணம்….”

“அவசரப்படாதே வைதேகி. அவ மனசு ஆறட்டும். பிறகு ஆற அமர நல்ல வரன் பார்ப்போம்.” என்றார். அதற்குள் அவர் இறுதிக் காலம் நெருங்கிவிட்டது. அவர் மறைவு திடீரென ஏற்பட்டதும், தூண் போல் இருந்த கணவர் இறந்ததும், திக்கு தெரியாதவளாக கலங்கி தவித்தாள் வைதேகி. ஒரு வருடம் முடிந்து, மனசு சற்றே இழப்பைஏற்றுக் கொண்ட பின் யதார்த்தத்துக்கு வந்தாள்.

“கல்பனா…. உங்கப்பா போய் விளையாட்டு பொல ஒரு வருடம் ஓடிடுச்சு. உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணணும்னு சொல்லிட்டு இருந்தார். நான் வரன் பார்க்கவா.?”

கல்பனா கோபமாக சொன்னாள்.

“போதும்…. நீங்க வரன் பார்த்தது. ஜாதகம், நட்சத்திர பொருத்தம் , அது இதுன்னு பார்த்துப் பண்ணிய கல்யாணம் தான் பொம்மை கல்யாணம் ஆயிடுச்சே. எந்த மண்ணும் பார்க்க வேண்டாம்.”

“கண்ணு…. சொன்னாக் கேளு. எனக்கப்புறம் உனக்கு யார் இருக்கா.? தனியா கிடந்து நீ திண்டாடணுமா.?”

“நீ தானே அந்த சுதாகரை எனக்கு பண்ணி வச்சே.? உங்க கண்ணு முன்னாலேயே நம்மை ஏமாத்திட்டு ஓடிவிட்டான். என்னை எங்கே காப்பாத்தினீங்க.? நானே தானே மனசு தேறினேன். இத்தோடு கல்யாண பேச்சை விடுங்க. நான் ஒண்ணும் சின்னக் குழந்தையா.?”

“உன் கோபம் நியாயமானது தான். நீ என்ன தான் பிரச்சனை உங்களுக்குள்ளேன்னு சொல்லியிருந்தா நான் உதவி இருப்பேனே.”

“கிழிச்சிருப்பே. என் மேலேயே பழியை போடு. அவன் தாலி கட்டினதும் என்ன செய்தான் தெரியுமா.? கல்பனா டையர்டா இருக்கு, தப்பா நினச்சுக்காதேன்னு சொல்லி, மறுபக்கம் திரும்பி படுத்து தூங்கிட்டான். அப்புறம் நடந்தது எல்லாம் உனக்குத் தான் தெரியுமே.? அம்மா…. புரிஞ்சுக்க.”

மறுநாள் பரபரப்பா அவனும் அவன் அக்காவும் குசுகுசுன்னு பேசினாங்க. என்னைக் கண்டுக்கவே இல்லை. பிறகு திடீரென அக்கா கூட யூ. எஸ் போறேன், வர ஒரு வருஷம் ஆகும்னு டாட்டா காட்டிட்டு போயிட்டான். அந்த ஒரு வருஷமும் என் கூட பத்து வார்த்தை தான் பேசியிருப்பான். ஒரு வருஷம் கழிச்சு வந்து என்னை பார்க்க கூட இல்லை. ஏதோ ஹோட்டலில் தங்கிக்கிட்டு, விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிட்டான். உன் மகளால் எந்த பிரச்சனையும் இல்ல. புரியுதா.? ஏதோ நான் அவனை எடுத்தெறிந்து பேசி வீரத்தின மாதிரி அவங்க சொல்றாங்க. நீயும் நம்பிட்டே இல்லே.? எனக்கு அவமானமா இருக்கு. நீயெல்லாம் ஒரு அம்மாவா.?” என்ற படபடவென்று பொரிந்து தள்ளினாள்.

“கல்பனா…. ஆம்ளைங்க  என்ன சொன்னாலும் அதை இந்த உலகம் நம்பும். நம்ம மேலே தப்பு இலாட்டியும் அப்படித்தான் பேசும். எனக்குத் தெரியாதா உன்னைக் குத்தம் சொல்லலைடி. என்ன ஏதுன்னு சொல்லியிருந்தா அவங்க வாயை அடக்கியிருப்பேன்..”

“போதும் சப்பைக் கட்டு கட்டாதே. எனக்கு நீ எந்த வரனும் பார்க்க வேண்டாம் கிரனும் பார்க்க வேண்டாம். வாயை மூடிட்டு இரு போதும். என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும். அப்பா இருந்திருந்தா…. எனக்கு குடுத்து வைக்கலை.”

“அம்மா முழு முண்டம் பொல உயிரோட நிக்கிறேன். அப்பாவுக்கு பதில் நீ செத்து போயிருந்தா தேவலைன்னு சொல்றியா.?”

“கேட்டுக்க…. உன் கூட பேசறது முட்டாள்தனம். நான் தனியாப் போறேன். ஐ வான்ட் பீஸ்.” கல்பனா தீர்மானமாக சொன்னாள். வைதேகி விக்கித்து நின்றாள். இப்படித்தான் கல்பனா தனியாக வந்த கதை. அது வைதேகி உள்ளத்தை நொறுக்கியது.

ஜானகிக்கு வீட்டிலேயே அடைந்து கிடந்து எரிச்சலாகி விட்டிருந்தது. சித்திரை திருவிழா ஆரம்பமாகிவிட்டது. திருக்கல்யாணம் முடிந்து மீனாட்சி பூப்பல்லக்கில் வருவதைப் பார்க்க ஆசையாக இருந்தது. எத்தனை வருஷங்கள் ஆயிற்று இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் பார்த்து.? கிருபாகரனுக்கு ஃபோன் செய்தாள்.

“என்னம்மா.?” என்றான் எரிச்சலை அடக்கிக் கொண்டு. வேலையாக இருந்தான். அதனால் ஃபோன் கொஞ்சம் இடஞ்சலாக பட்டது.

“இன்னிக்கு பூப்பல்லாக்கு டா. பார்க்கணும். நீயும் வாயேன்.”

“அம்மா…. யாரையாவது கூட்டிட்டுப் போயேன். நான் அவசர கேஸ் பார்த்துக்கிட்டிருக்கேனே மா.”

“இது ஒரு நல்ல சாக்கு டா உனக்கு. ஹிட்லர் மாதிரி கத்தாதே.”

“ஹிட்லர் எப்படி கத்துவார்ன்னு உனக்கு தெரியுமாக்கும்.?”

“எல்லாம் ஒரு யூகம் தான்.”

“சரி…. நான் கல்பனா நம்பர் தரேன். அவங்களை கூட்டிட்டுப் போயேன். உனக்கு என்னை விட அவங்க தான் சரியான ஜோடி.”

“நல்ல ஐடியா. நம்பர் எப்படி கிடச்சுது.? கில்லாடி டா நீ.”

“இந்த ஆராய்ச்சி எதுக்கு இப்ப.? சொன்னதை செய். என்னை ஆளை விடு.?” நம்பர் கொடுத்தான் . சொரூபாவிடமிருந்து அவனுக்கு அவள் நம்பர் கிடைத்தது. கல்பனா நம்பருடன் ஜானகி தொடர்பு கொண்டாள். ஆவலுடன் காத்திருந்தாள். ரிங் போனது. பிறகு தொடர்பு தூண்டிக்கப்பட்டது.

“ச்சே இவளும் பிஸியா.?” என்று அலுப்புடன் முணுமுணுத்தாள். சம்பகாவின் குரல் வாசலில் கேட்டது. சம்பகா அந்த தெருவில் வசிக்கும் ஜானகி வயது ஒத்தவள். மிகப் பெரிய வம்புளப்பு வாய்.

“ஜானகி…. பூம்பல்லக்கு பார்க்கப் போறேன். வர்றியா ஜானகி.? இப்பவே கிளம்பினா தான் பார்க்க முடியும். மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் பக்கத்திலே தான் என் தங்கை வீடு. அங்கே இருந்திட்டு பல்லக்கு வரும்போது வீதிக்கு ஓடிப் போய் பார்க்கலாம்.”

ஜானகி அரை மனதுடன் சம்மதித்தாள். பல்லக்கு பார்ப்பது மட்டுமில்லாமல் நாலு ஜனங்களைப் பார்த்தால் மனசுக்கு இதமாக இருக்கும்.. மகனுக்கு மீண்டும் ஃபோன் செய்து….

“நான் பூம்பல்லக்கு பார்க்க கிளம்பிட்டிருக்கேன். நான் திரும்பி வர இரவு பத்தாயிடும். தோசை ஹாட் பாக்ஸ்ல இருக்கு. வந்து சாப்பிடு. புதினா சட்னி இருக்கு.” என்று தகவல் தந்தாள்.

“ஓ. கே மா. கல்பனா கூடத் தானே போறே.?”

“ரிங் போச்சு. அவ எடுக்கவே இல்ல. பக்கத்து வீட்டு மாமியுடன் போறேன். சரி வச்சிடறேன்.”

ஜானகிக்கு கல்பனா வராதது ஏமாற்றமாக இருந்தது. இந்த சம்பகாவுடன் போக வேண்டிய கட்டாயம் வந்ததுக்காக கல்பனாவை மனசுள் திட்டிக் கொண்டாள். சம்பாகவின் வாய் அவல் மெல்லும் வாய். வாயை கிளறி ஏதாவது வம்பு கிடைக்குமா.? என்று அலைபவள். ஏதாவது கை சரக்கு சேர்த்து பரப்பி விடுவாள். இதனாலேயே ஜானகி இவளிடம் பேச்சு வைத்துக் கொள்வதில்லை.

பூம்பல்லக்கு வீதியில் வந்தது. அடடா கண்கொள்ளாக் காட்சி.! வீதி நிறைய பக்தர்கள். எல்லோரும் கண் விரிய பயபக்தியுடன் சேவித்தார்கள். விறுவிறுவென்று நகர்ந்து விட்டது. நெரிசலில் சிக்க வேண்டாம் என்று ஓரமாக ஒதுங்கினாள். சம்பகா சொன்னாள்.

“ஜானகி வாயேன் என் தங்கை வீட்டுக்கு. இரவு சப்பாத்தி போடப் போறதா சொன்னா. சாப்பிட்டு கிளம்பேன். நான் தங்கப் போறேன். கூட்டம் அதுக்குள்ளே குறஞ்சிடும்.”

அய்யோ…. இவள் தங்கை மங்களம் இவளை விழுங்கி விடுகிற ரகம். அவ்வளவு வாய் பேசுவாள்.

“இல்ல சம்பகா… கூட்டம் நகர்ந்திட்டு இருக்கு. நான் இப்படியே கிளம்பறேன். நீ சந்தோஷமா தங்கை வீட்டிலே இருந்து விருந்தாடிட்டு வா” என்று விட்டாள். அப்பாடா வம்பியிடமிருந்து தப்பித்தோம்…. என்று ஜானகி மகிழ்ந்தாள்.

“ஏய் ஜானகி…. அது உன் மருமகள் தானே.? சம்பந்தியம்மாவும் கூட நிக்கறாங்க.  பேச கூச்சமாயிருந்தா நான் வேணா கூட வரேன்.” சடாரென்று சம்பா காட்டிய திக்கில் பார்த்தாள்.

மருமகள் சசிரேகா தான். இரெண்டு வருஷமாயிற்று இவளை கண்ணால் பார்த்து. பிள்ளையார் கோவில் வாசலில் பூ வாங்கிக் கொண்டிருந்தாள் சம்மந்தி அம்மா சந்திரா. சிறிது நேரத்தில் நடக்கவிருக்கும் கலாட்டா பற்றி ஜானகிக்கு எப்படி தெரியும்.?