அத்தியாயம்….3

சொரூபாவை பார்க்கச் சென்றாள் கல்பனா. தனி அறையில் அவளின் அம்மா அவளுக்கு ஜூசை வாயில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கொண்டிருந்தாள்.

“வாம்மா கல்பனா. இவளுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணு. வேகமா ஸ்கூட்டியில் போகாதேன்னா கேக்கறாளா.?”

“அய்யோ அம்மா…. பேசாம இருக்கியா.? இதை சொல்லிச் சொல்லி என் மானத்தை வாங்கற. மேம் விபத்து நடந்ததுக்கு நான் காரணமில்லைன்னு எவ்வளவோ முறை சொல்லியும் அம்மா நம்ப மாட்டேங்கறாங்க. “

“சொரூபா டென்ஷன் ஆகாதே. அம்மான்னா அப்படித்தான். கவலைப்படாம இருக்க முடியுமா.? கால் எப்படி இருக்கு.?”

“பயங்கரமா வலிக்குது. ஊன முடியலை. தேர்வுக்குள் சரியாயிடும்னு நினைக்கிறேன். எல்லாம் என் கெட்ட நேரம்.” சலித்தாள்.

“அப்பாடா…. நல்ல வேளை என் வயத்திலே பாலை வாரத்தே.” அந்த நேரம் நர்ஸ் உள்ளே வந்து….

“விசிட்டர்ஸ் கொஞ்சம் வெளியே இருங்க. டாக்டர் ரவுண்டஸ் வர நேரம்.” என்று பரபரத்தாள்.

கல்பனா வெளியே செல்லவும்…. டாக்டர் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. மோதிக் கொண்டார்கள்.

“ஸாரி…. ஸோ ஸாரி….” என்றவள் நிமிர்ந்து பார்த்தாள். திகைத்தாள்.

“நீங்களா.?” இருவரும் சேர்ந்த குரலில் சொல்லி வியப்படைந்தனர்.

“நீங்க பேஷன்ட்டை பாருங்க.” என்று நகர்ந்தாள் அவள். அவளையும் அறியாமல் அவள் முகம் சிவந்து போயிற்று. அவன் கண்கள்

கனிந்து மின்னியது. இளநகை அரும்ப நின்றான்.

“காலையிலே சேத்தை பூசிட்டு நின்னீங்க. மாலையில் முகம் சிவந்து நிக்றீங்க. எதையாவது பூசிட்டு நிக்கறது தான் உங்க ஸ்டைலா.? இன்டரெஸ்டிங்.” என்றான் அவன்.

“காலையில் டிரைவர் அவதாரம். மாலையில் டாக்டர் அவதாரம்…. அடுத்து என்ன அவதாரம் மிஸ்டர் கிருபாகர்.?”

“கவிஞர் அவதாரம். இவ்வளவு அழகான பெண்ணைப் பற்றி ஒரு கவிதை எழுதலாம்னு உத்தேசம். ஆனா என் பேஷன்ட்ஸ் பார்க்கும் நேரம் இது.” என்று குறும்பாக சொன்னான். எவ்வளவு திமிர் இவனுக்கு.? ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கறானே.! அடக்கி வைக்கணும். இல்ல ஜொள்ளு ஜாஸ்தியாகி விடும்….

“உள்ளே உங்க பேஷண்ட் கால் வலியில் துடிச்சிட்டு இருக்காங்க. உங்களுக்கு கவிதை வருதா.? நல்ல டாக்டர்….”

“ஓ…. நீங்க சீரியஸ் டைப் போலிருக்கு…..”

“பார்த்திட்டு வாங்க…. கடமை அழைக்கிறதல்லவா.?”

“எஸ்.. எஸ்….” அவன் சிரித்துக் கொண்டே உள்ளே சென்றான்.

தாழ்வாரத்தில் நின்ற போது அவளுக்கு வியப்பு ஏற்பட்டது. இவன் டாக்டரா.? அந்தம்மாவோ இவனோ அது பற்றி மூச்சே விடலையே. கைப்பையில் அந்தம்மா கொடுத்த விசிட்டிங் கார்டை எடுத்துப் பார்த்தாள். டாக்டர் ஜி. கிருபாகரன் என்று நீளமாய் அவன் வாங்கிய பட்டங்களோடு மிளிர்ந்தது. அவள் தான் கவனிக்கவில்லை. என்ன துணிச்சல் அவனுக்கு கவிதை எழுதுவானாமே.! போக்கிரி டாக்டரா கைராசி டாக்டரா? இவள் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே அவன் வெளியே வந்தான்.

“இப்ப நீங்க பேஷன்ட்டை பார்க்கலாம்.”

“சொரூபா எப்படி இருக்கா.?”

“ஒரு பிரச்சனையும் இல்ல. பெட் ரெஸ்ட் முக்கியம். ஒரு ரெண்டு நாள். அப்புறம் எழுந்து டான்ஸ் கூட ஆடலாம். சந்தோஷமா.?”

“உங்களுக்கு கவிதை எல்லாம் வருமா.?”

கால்பனாவுடன் டாக்டர் பேசுவதை சொரூபாவின் அண்ணன் பிஜு பார்த்துவிட்டான். தங்கைக்கு மருந்துகள் வாங்கி வந்தவன் முன் இந்தக் காட்சி. முகம் வியர்த்து கொட்டியது.

‘என் கூட ஒரு வார்த்தை ஆசையா பேச புடிக்கலை அவங்களுக்கு. ஆனா இந்த சோதா டாக்டர் கூட சிரிச்சு சிரிச்சு பேசறாங்களே.’ அவன் மனசில் பொறாமையும் கண்ணில் நீரும் வந்தது. கல்பனா மேம் இது நியாயமா.? வேக வேகமாக வந்தான். அதற்குள் டாக்டர் போய்விட கல்பனா இதழில் குழைந்த சிரிப்பு விளையாடியதை கடுப்புடன் பார்த்தான். டாக்டரைப் பார்த்து என்ன குழைவு.?

“மேடம்…. இந்த டாக்டரை நம்பாதீங்க. இவருக்கு கல்யாணமாயிடுச்சு. பொண்டாட்டியை பயித்தியம்ன்னு பட்டம் கட்டி அவங்க அம்மா வீட்டுக்கு அனுபிட்டார். இவரோட அம்மா இவருக்கு பொண்ணு பார்த்திட்டு இருக்காங்க. உண்மை தெரிஞ்சு யாரும் பொண்ணு குடுக்க முன் வரலை. அதான் உங்களை கணக்கு பண்ண பார்க்கிறார். ஏமாந்திடாதீங்க…. சரியான பிராடு கேஸ்….” என்றான் மூச்சி விடாமல். கல்பனா திகைப்பும் குழப்பமுமாக நின்றாள். பிஜு திருப்தி அடைந்தான். எங்க ஸ்வீட் கல்பனா கேக்குதாடா உனக்கு.?

கல்பனா சிரித்துவிட்டு….

“அவர் கதை எனக்கெதுக்கு பிஜு. கர்டிசிக்கு பேசிட்டு இருந்தேன். வா சொரூபாவை பார்க்கலாம்.”

அவள் பிஜூவுடன் சொரூபாவை பார்த்து பேசவிட்டு செல்ல சென்றாள். சிறிது நேரம் அவளுடன் பேசிவிட்டு..

“உடம்பை பார்த்துக்க…. நான் வரேன்….” என்று சொல்லி வீடு திரும்பினாள். அவள் மனம் சஞ்சலம் அடைந்திருந்தது. ஆண்களே ப்ராடுகள் தானோ.? அவள் கட்டிக் கொண்ட சுதாகர் தான் அப்படி என்றால்…. இந்த டாக்டர் போன்றவர்களும் பெண்களை ஏமாற்றி கைபிடிக்க நினைக்கிறார்களே. இவ்வளவு ஓட்டையை வச்சுக்கிட்டு என்னைப் பார்த்து காதல் சிரிப்பு சிரிக்கிறான்….. ம்ம்ம் ஜாக்கிரதையா இருந்துக்கோ கல்பனா…. ஒரு தரம் ஏமாந்தே…. மீண்டும் ஏமாறாதே.

விசாலம் காப்பி பொட்டுக் கொண்டு வந்து அம்மா கையில் கொடுத்தாள். விசாலம் கல்பானவின் அக்கா.

அம்மா வைதேகி காப்பியை வாங்கி உறிஞ்சுனாள். கேட்டாள்.

“விசாலம்…. அரை ஸ்பூன் சீனியாவது போட்டேன் டீ…. கசக்குது.”

“வயசு அறுபதை தாண்டியாச்சு. நாக்கை கட்டுப்படுத்த தெரியலை. சுகர் இருக்குங்கறது மறந்து போச்சா.?” சிடுசிடுத்தாள் விசாலம்.

“ஏம்மா…. பாவம் பாட்டி. ஸ்வீடனர் வாங்கி போட்டுக் கொடுங்களேன்.” என்றபடி வந்தான் பன்னிரெண்டு வயது முரளி.

“ஆமான்டா…. அது ஒண்ணு தான் பாக்கி. ஏற்கனவே உங்கப்பா கிழவி எப்போ கிளம்பறான்னு கெட்டு உயிரை வாங்கிட்டு இருக்கார்.”

வைதேகி குரல் தழுதழுக்க, கண்ணை கசக்கியபடி கூறினாள்.

“ஒரு பையனை பெத்திருந்தா எனக்கு இந்த கதி வந்திருக்குமா.? ரெண்டும் பொண்ணாப் போச்சு. மருமகன் வீட்டுக்கு வந்தா மரியாதை கிடைக்குமா.? உங்கப்பா போனதுமே நானும் போயிருக்கணும்.” மூக்கை சிந்தினாள். விசாலத்துக்கு எரிச்சல் வந்தது. புருஷனின் கோபத்தை சமாளிக்க முடியாமல் திணறும் அவளுக்கு அம்மாவின் அழுகை ஒப்பாரி போலவே பட்டது.

“அம்மா காலங்கார்த்தாலே எதுக்கு ஒப்பாரி வச்சிட்டு இருக்கே.? ஸ்வீட்டனர் அவருக்குத் தெரியாம வாங்கணும். பார்த்தா கத்துவார். இங்க வந்து அதுக்கெல்லாம் ஆசைப்படாதே. நீ எழுந்து அறைக்குள் போ. அவர் கண்ணில் பட்டால் வாய்க்கு வந்தபடி பேசுவார்.” என்ன கருணை இல்லாத வார்த்தைகள் என்று வைதேகி நொந்து போனாள்.

“துரத்தாதே போறேன்.” எழுந்து அறைக்குள் புகுந்து கொண்டாள்.

“அம்மா…. ஏம்மா பாட்டி மனசை நோக்கடிக்கிற.?” என்றபடி வந்தாள் உமா. அவள் விசாலத்தின் ஒரே பெண். முரளி ஒரே ஆண்பிள்ளை.

“நானாடி நோக் வைக்கிறேன்.? உங்கப்பாகிட்டே போய்ச் சொல்லு. அவர் எப்பபார் கிழவி இன்னுமா போகலைன்னு தினம் கத்றார்.”

“ச்சே…. அப்பா ஏன் தான் இப்படி இருக்காரோ.? பெரியவங்களை மதிக்க தெரியாத ஜென்மம்.” கசப்புடன் சொன்னாள் உமா.

பேத்திக்கு பாட்டிய பார்க்க பாவமாக இருந்தது. தாத்தா இறந்து இரெண்டு வருடம் ஆகிறது. தாத்தாவின் பென்ஷன் பணம் பாதி பாட்டிக்கு வருகிறது. பணப்பிரச்சனை இல்லை. சொந்த வீடு இருக்கு பாட்டிக்கு. ஏதோ தனிமை தாங்காம பெண்ணையும், பேரன் பேத்தியையும் பார்த்திட்டு, ரெண்டு நாள் இருந்திட்டு போக பாட்டி வருகிறாள். இதுக்கு அப்பா பண்ணுகிற ஆர்ப்பாட்டம் தாங்க முடியலை. ச்சே…. இவருக்கு மட்டும் வயசாகாதா.? சரி…. கல்பனா சித்தியாவது பாட்டியை வச்சிக்க கூடாதா.? என்ன பெண்களோ.?” எண்ணியபடி ஷாவரை திருக்கி குளிக்க முற்பட்டாள் உமா.

வைதேகி அறிக்குள் முடக்கினாள். இனி அவள் மருமகன் மூர்த்தி ஆபீஸ் கிளம்பிப் போகும் வரை ஜெயில் கைதி தான்.

ஒன்பது மணிக்கு மேல் தான் அவன் போவான். அதுவரை அவஸ்தை பாட வேண்டியது தான். தேவையா இதெல்லாம்.? பாழும் மனது சொந்த பந்தங்களை தேடுகிறது. அவள் கண்களில் தன்னிரக்க நீர் சுரந்தது. இப்படி ஒரு மருமகன்.! நெஞ்சில் ஈரமே இல்லாத கல்நெஞ்சன். மகள் விசாலம் என்ன தான் பண்ணுவாள் இப்படி ஒரு  கணவனை வைத்துக் கொண்டு.?

என்னென்னவோ எண்ணியபடி இருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. ‘அம்மா, நீ வெளியே வரலாம்’ எண்டு விசாலம் குரல் கொடுத்ததும்.. அப்பாடா என்று எழுந்து முதலில் டாய்லெட் பக்கம் போனாள் வைதேகி. இவ்வளவு நேரம் போக முடியாமல் அவஸ்தையில் இருந்தாள்.

“அம்மா…. ஸாரிம்மா, உன் கிட்டே கோபமா பேசிட்டேன்.” என்று மகள் வந்து கொஞ்சினாள். பதில் ஏதும் சொல்லாமல் இட்லிகளை பிட்டு சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் வைதேகி.

“அம்மா பிளீஸ் தப்பா நினைக்காதே….”

“விசா போதும்…. என்னை நிம்மதியா சாப்பிட விடு.”

“அதில்லேமா…. இவர் இடிக்கிற இடி தாங்க முடியலை. நானே இங்க ஒரு கைதி தான். உனக்கிருக்கிற சுதந்திரம் கூட எனக்கில்லை.”

“நான் சாப்பிட்டதும் கிளம்பிப் போயிடறேன். யாருக்கும் பாரமா இருக்க விரும்பலை. என் புருஷன் பென்ஷன் வருது. சொந்த வீடு இருக்கு. உங்ககிட்டே இடி சோறு திங்கணுமா என்ன.? உன் தங்கச்சி கல்பனா தனியாத் தானே இருக்கறா, அவ கிட்டே போக வேண்டியது தானேன்னு நீயும் உன் புருஷனும் நினைக்கலாம். அவ…. எனக்கு பிரைவசி வேணும், உன் தொனதொனப்பு தாங்க முடியலைன்னு சொல்லி, வீடு பார்த்து போயிட்டா. சம்பாதிக்கிறா…. யார் தயவும் தேவை இல்லைன்னு நினைக்கிறா. வயசான அம்மாவை வேண்டாத சாமான் மாதிரி தானே நினைக்கறீங்க.?”

சாப்பிட்டு முடித்து விட்டு தட்டை கழுவப் போட்டுவிட்டு கை கழுவினாள் வைதேகி. விருட்டென்று அறைக்கு சென்று தன் பையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

“வரேன்டீயம்மா. புள்ளைகளை நல்லா பார்த்துக்க.”

“உன்னை இருன்னு சொல்ல வக்கத்து நிக்கிறேன்.” மாலை மாலையாக கண்ணீர் விட்டாள் மகள். தாய் மனம் இளகியது.

“அழாதே. நான் கொடுத்து வச்சது அவ்வளவு தான். தனியா இருக்க பழகிக்கிறேன். நீ வருத்தப்படாதே.” என்றாள் வைதேகி.

விசாலம் சோகமாக பார்த்தாள். அம்மாவுக்கு உறுதுணையாக இருக்க முடியலையே என்ற சோகம் தான் அது.