அத்தியாயம்…. 14

எதிர்பாராமல் வந்து நின்ற இளஞனை ஆச்சரியத்துடன் பார்த்தாள் கல்பனா. “யார் நீங்க.? என்ன வேணும்.?”

“ஸாரி….மணி அடிக்க நினைத்தேன். அதற்குள் நீங்களே கதவு திறந்துட்டீங்க. நீங்க தான் கல்பனாவா.?”

“நான் தான். வாங்க. உக்காருங்க. என்ன விஷயம்.?”

“விளக்கேற்றும் நேரம், வாசல் கதவை திறந்த வைத்தா லட்சுமி வருவான்னு சொல்வாங்க. உங்க விஷயத்திலே அது சரியாகிவிட்டது. ஐஸ்வர்யம் உங்களைத் தேடி வந்திருக்கு.”
நீங்க என்ன சொல்றீங்க.? ஒண்ணுமே புரியலை.”

“நான் உங்க கணவர் சுதாகரோட ப்ரெண்ட். ஒரு துக்க செய்தி. ஒரு சந்தோஷ செய்தி. எதை முதலில் சொல்ல.?”

“எதையும் சொல்ல வேண்டாம். அந்த ப்ராடோட ப்ரெண்ட்…. நீங்களும் ஒரு ப்ராடாத் தானே இருப்பீங்க கிளம்புங்க.”

“உங்க கோபம் எனக்குப் புரியுது. நான் சொல்ல வந்ததை சொல்லிட்டுப் போயிடறேன். முதல்ல கெட்ட செய்தி. உங்க கணவர் போன மாசம் இறந்துட்டார். ப்ளட் கான்சர்.”

“அவங்க மனைவி மிருணாளினிக்கும்….. குழந்தைக்கும் என் ஆழ்ந்த அனுபத்தை தெரிவியுங்க.”

“தெரிக்கலாம். ஆனா அப்படியொரு மனைவி குழந்தை இருந்தா தானே தெரிவிக்க.? இரண்டாவது நல்ல செய்தி. சுதாகர் சாகும் முன் இந்தக் கடிதத்தை எழுதி என்னிடம் கொடுத்து, இதை நீ இந்தியா போகும்போது நேரில் சென்று என் மனைவி கல்பனாவிடம் கொடுத்துவிடுன்னு சொன்னான். அதான் வந்தேன். எல்லா விவரமும் இந்தக் கடிதத்திலே இருக்கு. படிச்சுப் பாருங்க. அவன் நல்ல மனசு புரியும். இது என் ஃபோன் நம்பர். இரண்டு மாசம் இங்கே தான் இருப்பேன். கடிதத்தை படிச்சுப் பார்த்திட்டு என்னைக் கூப்பிடுங்க. நான் ஆவண செய்வேன். இப்ப கிளம்பறேன்.”

ஒரு கவரையும் அவனின் செல் நம்பரையும் கொடுத்துவிட்டுச் சென்றான். கல்பனா சிறிது நேரம் அசைவற்று உட்கார்ந்திருந்தான். ஏதோ மர்மத் தொடர் படிப்பது போல் இது என்ன திருப்பம்.? பிறகு மெல்ல கவரை எடுத்துப் பிரித்து கடிதத்தை படித்தாள்.

அன்புள்ள கல்பனா

எப்படி இருக்கே.? நான் மெல்ல மெல்ல செத்திட்டிருக்கேன். உன்னோட வாழ்ற பாக்கியத்தை கடவுள் எனக்குக் கொடுக்கவில்லை. மனிதர்கள் தான் விபத்தை உண்டாக்குவார்கள். ஆனால் இங்கு கடவுள் சற்று கண்ணயர, நம் திருமணம் என்கிற விபத்து நடந்துவிட்டது.

கல்பனா…. எத்தனையொ ஆசையுடன் உன்னைக் கைபிடித்தேன். ஹனிமூன் போக வேண்டிய நேரத்தில் ஹாஸ்பிடல் போனேன். டெஸ்டுகள் நிருபித்தன, எனக்கு ப்ளட் கேன்சர்…. இது திருமணத்திற்கு முந்தியே தெரிந்திருந்தால்…. உன் கழுத்தில் தாலி கட்டியிருக்க மாட்டேன். மனசைக் கல்லாக்கி கொண்டு உன்னிடமிருந்து விலகினேன். நான் கண்ணீர் விட்டதேயில்லை….. ஆனால் உண்மை தெரிந்த பின் உனக்காக நான் அழுதேன். என்னோட இருந்த என் வியாதியோடு நீ போராடுவதை நான் விரும்பவில்லை. நீ வாழ வேண்டிய இளம்தளிர். என்னால் பட்டுப் போய் விடக் கூடாது. நீ நல்லா இருக்கணும்….

கல்பனா…. நான் அறியாமல் செய்த தவறுக்காக என்னை மன்னித்துவிடு. இந்த இரண்டு வருடமாய் நீ தான் என் கனவிலும் நினைவிலும் சிரிக்கிறாய். கல்யாணத்தன்று உன் கைபிடித்து நின்ற அந்த ஸ்பரிசம் இப்பவும் என் நெஞ்சில் இனிக்கிறது. பட்டாபிஷேகம் ஆன அன்றே ராமன் காட்டுக்குப் போக பண்ணிக்கப் பட்டது போல்.. கல்யாணமான உடனேயே நான் ஹாஸ்பிடல் போக பண்ணிக்கப் பட்டேன். இங்கே கடவுள் என்ன காரணத்தாலோ கூனியாக மாறிவிட்டார். மறுபிறவி என்று ஒன்றிருந்தால் நான் மறுபடி பிறந்து உன்னோடு தித்திக்க தித்திக்க வாழ வேண்டும். இது தான் நான் கடவுளிடம் வேண்டிக்கிறேன். இந்த ஜென்மத்தில் உன்னை விட்டுக் கொடுக்கிறேன். உனக்கு ஆரோக்கியமான நல்ல கணவன் கிடைத்து நீ ஆனந்தமாக குழந்தை குட்டியுடன் வாழ என் வாழ்த்துக்கள்.

கல்பனா…. எனக்கு கடைசியாக ஒரு ஆசை. நிறைவேற்றுவாயா.? என் மனசென்னும் சொத்தை உனக்கு அளித்தேன். அந்த நீரூற்று அடங்கப் போகிறது. பிராயச்சித்தமாக நான் சம்பாதித்த சொத்தை உன் பெயரில் எழுதியிருக்கேன். அதற்கான டாக்குமெண்டஸ், அட்டாச் பண்ணியிருக்கேன். பெற்றுக் கொள்வாயா ப்ளீஸ்.? என் நண்பன் விமல்.. இக்கடிதத்தை உன்னிடம் ஒப்படைத்தவன், உனக்கு இது விஷயமாக எல்லா உதவிகளும் செய்வான். தயங்காமல் கேள். என் உடல் அழிந்தாலும்…… அந்த என் சொத்துக்களை அழியாத என் மனதாக நினைத்து ஏற்றுக் கொள்வாயா.? ப்ளீஸ் கண்ணம்மா…. அப்போதான் என் மனம் சாந்தி அடையும். என் கடைசி முத்தங்கள்.

என்றென்றும் அன்புடன்

சுதாகர்.

கடிதத்தை படித்து ஸ்தமித்துப் போய்விட்டாள் கல்பனா. அவளையும் அறியாமல் கண்ணீர் துளிகள் படபடவென வெகு நேரம் இறங்கியது. இவளின் கண்ணீர் பூக்கள் அஞ்சலியாக எங்கோ கல்லறையில் உறங்கும் அவனின் சமாதியில் கண்டிப்பாக போய்ச் சேரும்.

“சுதாகர்…. எவ்வளவு உயர்ந்த மனிதர் நீங்கள்.”

“நான் வாழ வேண்டும் என்று இரண்டு வருடமாய் தவம் இருந்தீர்களே.! என்னை வெறுப்பது போல் நடித்தீர்களே.! அப்பொழுதாவது நான் வேறு வாழ்க்கை அமைத்துக் கொள்வேன் என்று ஆசைப்பட்டீர்களே.! எத்தனை பேருக்கு வரும் இந்த மனசு.? ஒரு மனைவியா உங்கள் அருகில் இருந்து உங்களை கவனிக்கும் உரிமையை என்னைக் கேட்காமலேயே பறித்துக் கொண்டு விட்டீர்களே.! உங்கள் சொத்தை எழுதிவிட்டால் என் மனம் சந்தோஷம் அடைந்து விடுமா.? அதை அடைகிற தகுதி எனக்கில்லை. என்னை மன்னித்துவிடுங்கள் சுகதாகர்…… உங்களை கவனிக்கிற கடமையைக் கூட செய்யாமல் அந்த சொத்தை எபபடி நான் அனுபவிக்க முடியும்.? உங்கள் நண்பருக்கு ஃபோன் பண்ணி அதையெல்லாம் ப்ளட் கேன்சர் நோயாளிகளில் வசதியற்றவர்களின் சிகிச்சைக்கு நன்கொடையாக அளித்து விடுமாறு சொல்லிவிடப் போகிறேன். அது தான் சிறந்த அஞ்சலியாகும்.—மானசீகமாக இக்கடிதத்தை அனுப்புகிறேன் சுதாகர். பெற்றுக் கொள்ளவும். அடுத்த ஜென்மத்தில் சந்திப்போம்.

என்றென்றும் அன்புடன்

கல்பனா.