அத்தியாயம்…. 13

அலுவலகம் விட்டு ஒரு நாள் அம்மாவைப் பார்க்கச் சென்றாள் கல்பனா. “வா கல்பனா.. என்ன சாப்பிடற குழிப் பணியாரம் இருக்கு.”

“ஓகே மா. நீ எப்பாடு இருக்க.?”

“பேஷா இருக்கேன். எப்படி போகுது சசிரேகா பிரச்சனை.?”

“ரேகாவுக்கு என்னை மிகவும் பிடிச்சுப் போச்சு. அவள் அம்மாவுக்கு வயதானால் இவளை எப்படி ஹாண்டில் பண்றதுன்னு தெரியலை. பொறுமை இழந்து அடிச்சிடறாங்க. அதனாலே என் கிட்டே நல்லா ஒட்டிக்கிட்டா. பரிதாபமா இருக்கு. யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது. மெல்ல மெல்ல தான் சரியாகும். ஆனா சரியாகும்னு நம்பறேன். எனக்கு நம்பிக்கை இருக்கு.”

“அவ சரியாகட்டும். பிறகு உன் கதி.? கிருபாகரன் தன் மனைவியோடு வாழறது தான் முறை.”

“அம்மா நான் அந்த நாளுக்கு தான் என்னை தயார் பண்ணிட்டிருக்கேன். கிருபாகரன் ரேகாவுடன் நல்லபடியா வாழணும்.

அது தான் என் ஆசை. அவர் சந்தோஷமா இருக்கணும். அவர் முகத்தில் நான் நிம்மதியைப் பார்க்கணும். நான் இப்ப அவர் மனைவி ஸ்தானத்துக்கு போட்டி போடலை.”

“அவர் என்ன நினைக்கிறார் கல்பனா.?”

கிருபாகரன் வீட்டுக்கு ஒரு நாள் மாலை சென்றபோது அவன் அவளுடன் நேரம் செலவழிப்பதற்காகவே வீட்டில் இருந்தான். இருவரும் மொட்டை மாடிக்கு சென்றார்கள்.

“சொல்லு கல்பனா இந்த ரெண்டு வாரமா நீ போனதில் ஏதாவது முன்னேற்றம் தெரியுதா.?” கல்பனா எல்லாவற்றையும் சொன்னாள்.

“கூடிய சீக்கிரம் ரேகா உங்க ரேகாவா நார்மலாகி வாழ வருவாள்ன்னு நம்பறேன். எனக்கு சந்தேகம் இல்ல.”

“கல்பனா நீ எபபடி இவ்வளவு நுணுக்கமா விஷயத்தை அணுகற. ரியலி கிரேட்.”

“நீங்க எல்லாம் சம்பந்தப்பட்டவங்க. உணர்ச்சி வசப்படுவதால் நிதானமா யோசிக்க முடியாது. நான் மூணாம் மனுஷி தானே.? சிக்கல் எங்கேன்னு சுலபமா புரிஞ்சுக்கிட்டேன். இதே என் வீட்டில் இப்படி நடந்தால், மீளத் தெரியாமல் திண்டாடிட்டு இருப்பேன்.”

ஜானகி மாடி ஏறி வந்து இருவருக்கும் வீட்டில் செய்த சீடை தட்டை, திரட்டுப்பால் கொண்டு வந்து வைத்தாள்.

“நீங்க எதுக்கு மா சிரமபட்டுக்கிட்டு மாடி ஏறி வரணும்.? கூப்பிட்டிருந்தா நாங்க வந்திருப்போமே.”

“இருக்கட்டும் டா. கல்பனா இப்ப சசி எப்படி இருக்கா.?”

“உங்க ஒருஜினல் லக்ஷ்மி, சீக்கிரம் உங்க வீட்டுக் கதவைத் தட்டுவாங்க. டோன்ட் வொர்ரி.”

“கிருபாகர்…. இது பெரிய சாதனை டா. இரண்டு வருஷமா படாதபாடு பட்டும் எதுவும் நடக்கலை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதே

சமயம் வருத்தமாகவும் இருக்கு. நான் ஒரு பாவி. முட்டாள் அவசரப்பட்டு கல்பனா கிட்டே உளறிக் கொட்டிடேன். அவளுக்கு உன் மேல் காதலை விதைச்சிட்டேன். சசிரேகா வருவது சந்தோஷம். ஆனா கல்பனா விலகுவது மனசை பிசையுதுடா. கல்பனா எத்தனை நல்ல பெண். உன்னை காதலித்தும்…. சசிரேகாவை குணமாக்கி உன்னுடன் சேர்க்க நினைக்கிறாளே..” கேவல் வெடித்து வர ஜானகி கண்ணீருடன் கீழிறங்கி சென்றாள்.

கல்பனாவை ஏற்கனவே ஒருவன் ஏமாற்றிவிட்டுச் சென்று விட்டான். இப்பொழுது அதே போல் ஏமாற்றுகிறேனே என்று வருந்தினான் கிருபா. கல்பனா எபபடி தாங்குவாள்.? அவன் உள்ளம் உடைந்தது.

அவன் கடமைக்காக தான் ரேகாவை ஏற்றுக் கொள்கிறான். அவள் ஒரு இயந்திர மனைவி. கடமைக்காக வாழ்ந்த மனைவி. அவன்  இதயத்தை தொடாத மனைவி. தாய்மைக்காக கணவனைப் பயன்படுத்தியவள்.

கல்பனா அப்படி இல்ல. அவனை அவனுக்காகவே காதலித்தவள். காதல் உணர்வுகளை முதல்முதலாக உணர்த்தியவள். உணர்ந்தவள். அவன் திருமண பந்தத்தை மதிப்பதை புரிந்து கொண்டவள். எனவே தான் சசிரேகாவை சரிப்படுத்தி அவளிடம் ஒப்படைக்க நினைத்துவிட்டாள். எத்தகைய அழகான மனசு.!

“கல்பனா…. அம்மா தவிர எனக்குன்னு யாருமில்ல. தக்க சமயத்தில் தென்றலாக, குளிர் நிலவாக வந்தாய். ஒளி கொடுத்துவிட்டு என் உயிரையே பறித்து கொண்டு போகப் போகிறாய். உன் மனசில் ஆசையை வளர்த்த குற்றத்திற்காக என்னை நொந்து கொள்வேனா.? இல்லை, இந்த சிறிது நேர வெளிச்சம் கிடைத்ததற்காக சந்தோஷப்படுவேனா.?” உன் பிரிவை தாங்குவேனா.? புரியலை கல்பனா. நான் ஒரு பாவி.”

கல்பனா அவன் அருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்து அவன் மடியில் தலை சாய்த்தாள்.

“காதலை யாரும் தூண்டிவிட்டு வரவழைக்க முடியாது கிருபா. அது தானாக வருகிறது. நீங்கள் தேவையில்லாமல் உங்களை குறை சொல்லிக் கொள்ளாதீர்கள். வானத்தில் நிலா வந்ததும் சூரியன் மறைந்து தானே போகணும். ஒன்றும் அழிந்துவிடவில்லையே.! காதல் சூரியன் போல் வீரியமானது. மறைந்தும் வாழும். நாம் பிரிதாலும் அது மனதை ஊடுருவும். நாம் பிரிந்தாலும் நம் காதல் பிரியாது. அதுக்கு ஆயுசு கெட்டி.”

“நீ என்னமோ சொல்றே. எனக்கு மனசுக்கு ஒப்பலை. வேறு வழியும் தெரியலை. குறுஞ்சிப் பூ போல் நீ அபூர்வமானவ. ஒரே ஒரு வேண்டுகோள் கல்பனா. சசி குணமாகி வரும் வரை நாம் காதலித்துக் கொண்டே இருப்போமா.? பிறகு பிரிவை அந்த இனிய நினைவுகளை வைத்து இட்டு நிரப்புவோம். முடிந்தபோதெல்லாம் இங்கு வருவாயா கல்பனா.?” மிகவும் கெஞ்சிக் கேட்டான். அவளுக்குமே அது ஆறுதலாக இருந்தது. கடைசி நேர காதல் படகில் பயணிக்கலாம். சரி என்று தலையாட்டினாள்.

கிடைக்கப் போற கொஞ்ச காலத்தை அவர்கள் மனதளவில் கணவன் மனைவியாக வாழப் போகிறார்கள். இந்த விசித்திர பந்தத்தை அவள் அம்மாவிடம் எப்படி சொல்ல முடியும்.? மூஞ்சியை பெயர்த்துவிடுவாள். எனவே அம்மாவிடம் நயமாக எடுத்துச் சொன்னாள். மென்மையாக சொன்னாள்.

“எதிர்காலம் நம் கையில் இல்லை அம்மா. நிகழ்காலம் இது தான். சசிரேகா கிருபாவுடன் வாழணும். அத்துடன் அந்தக் கம்பார்ட்மெண்டிலிருந்து இறங்கி விட வேண்டும். என் பயணம் முடிகிறது. அடுத்து என்னன்னு அப்புறம் பார்க்கலாம். நான் தற்போது எக்ஸ்பைரி டேட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்.” வைதேகி பெருமூச்சுவிட்டாள். இது தானா பிரச்சனை.!

“என்னமோ செய்.” என்று அதிர்ப்தியுடன் பேச்சை முடித்தாள். வாழ்க்கையை இப்படி விளையாட்டாக எடுத்துக் கொள்கிறாளே

என்று வைதேகி வருந்தினாள். கல்பனா அம்மாவிடம் தன் நிலைமையை ஒப்புக் கொண்டாலும், ஏதாவது ஒரு அதிசயம் நடந்து கிருபா அவளுக்கே சொந்தமானால்.! அந்த நப்பாசை அவளுள் இருக்கவே செய்தது. பாவம் அம்மா துரதிர்ஷ்டம் பிடித்தப் பெண்ணைப் பெற்றதால் கடைசி காலத்தில் நிம்மதியின்றி தவிக்கிறார்கள். சாயங்காலம் ஆகிவிட்டது. விளக்கேற்றினாள். அன்று ஜானகி விளக்கேற்றுவதற்காக வாசல் கதவை திறந்தபோது, அவள் நின்றதைப் பார்த்து ‘லட்சுமி வந்தாச்சு’ என்று ஆனந்தபட்டது ஞயாபகத்துக்கு வந்தது. அப்போது நிலைமை வேறு. இப்போது நிலைமை வேறு.

சசிரேகாவிடம் நாளுக்கு நாள் தெளிவு ஏற்படுவதை கல்பனா உணர்ந்தாள். அவள் தானே ஒரிஜினல் லட்சுமி.! அவள் வரும்வரை அந்த வீட்டின் தற்காலிகமான லட்சுமி கல்பனா. கிருபா தன்னிடம் கெட்ட கேள்வி கல்பனாவின் ஞயாபகத்திற்கு வந்தது.

“சசி என்னைப் பார்த்து அலறுவதும், என் அம்மாவை பார்த்து பயப்படுவதும்…. எங்கள் வீட்டில் காலடி வைக்க மறுப்பதும் மாறுமா.?” நியாயமான கேள்வி தான்.

“கிருபா…. சசி குழந்தைகளை பறிகொடுத்துவிட்டாள். உங்களுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தால் மீண்டும் கர்ப்பம் தாங்கி குழந்தை பெற்று, மீண்டும் பறிகொடுக்க நேரிடுமோ என்ற உள்மனம் பயம் இன்னும் போகவில்லை அவளுக்கு. அதுதான் உங்களைப் பார்த்து அலறுகிறான். உங்கம்மா எங்கே உங்களுடன் வாழச் சொல்லி வற்புறுத்துவார்களோ என்று உங்கம்மாவைப் பார்த்து பயப்படுகிறாள். உங்கள் வீட்டில் ஹாலில் குழந்தைகள் கிடத்தப்பட்ட இடம் பார்த்தால் அந்தக் காட்சி அவள் ஞாபகத்துக்கு வருவதால் இந்த ரீயாக்சன். அதை மெல்ல மெல்ல போக்க முயற்சிக்கிறேன்.” என்று பதில் சொல்லி இருந்தாள்.

ஒவ்வொரு ஞாயிரும் போய் சசிரேகாவிடம் பேசுகிறாள். ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று அவர்கள் தரும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வைக்கிறாள். மருத்துவர் ஆலோசனை படி சசியை பொறுமையுடனும் அன்புடனும் பார்த்துக் கொள்கிறாள். சசிரேகாவுக்கு தேவை திடமான மனசு. அவளிடம் சிறையில் இருந்த தேவகி தன்னுடைய ஏழு குழந்தைகளும் தன் சகோதரனால் அவள் கண் முன்னாலேயே சுவற்றில் எறியப்பட்டு இறந்த கதையைச் சொன்னாள். தேவகி கலங்கினாள் ஆனால் சித்தம் கலங்கவில்லை. எட்டாவதாக கண்ணன் பிறக்கவில்லையா.? உலகையே வாயில் காட்டவில்லையா.? நீயும் தேவகி போல் திட மனசுடன் போராடு. உனக்கும் கண்ணன் பிறப்பான். பிறக்காவிட்டாலும் போகிறது தத்து எடுத்து அம்மாவாகலாம். கிருபா அக்குழந்தையிடம் அன்பாக இருப்பார். ஜனாகியும் அன்புடன் ஏற்பார்கள்.

சாவு இயற்கை. கடவுளிடம் வளரும் உன் குழந்தைகள். எனவே அந்த வீட்டில் அந்த இடத்தைப் பார்த்து கலங்காதே….. என்றாலும் பக்குவமாக திரும்ப திரும்பச் சொல்லி வருகிறாள் கல்பனா. கிருபாகரன் அவளை பிரமிப்புடன் பார்த்துப் பாராட்டினாள்.

“இது ஒரு வகை சுயநலம் தான் கிருபா. நான் நேசிக்கும் நீங்கள் குற்ற உணர்விலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழணும். உங்கள் முகத்தில் பௌர்ணமி போல் ஒரு புன்னகையை வரவழைக்கத் தான்  இப்படி பாடுபடுகிறேன். மேலும் சசி நன்றாக இருந்த பெண். இப்படி புத்தி பேதிலித்துப் பார்க்க மனசைப் பிசைக்கிறது. அவள் நன்றாக ஆகி உங்களுடன் சேர்ந்து வாழ்வதைப் பார்த்தால் எனக்கு முழு விருந்து சாப்பிட்ட மாதிரி மனசு நிறையும்.” என்று பதில் சொல்லியிருக்கிறாள். எவ்வளவு பெரிய மனசு.!

“மேகம் மழையை பொழிந்தாலும், அதற்கும் தாகம் உண்டு.”

“இந்த மேகம் வித்தியாசமானது. பொழிந்த மழையில் பயிர்கள் செழிப்பாக வளர்வதைப் பார்த்து தாகம் தீர்த்துக்கும்.”

“என்ன சொல்லு…. என் ஒரு கண் புன்னகையுடனும், ஒரு கண் அழுதுகொண்டும் தான் இருக்கும்…..”

“டோன்ட் பீ சில்லி கிருபா. காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும்.” கிருபாவுக்கு தைரியமாக வாக்கு கொடுத்தாள். அவளால் இந்தப் பிரிவைத் தாங்க முடியுமா.? முடியணும் என்று தீர்மானித்தவளாய். விளக்கேற்றியவள் வாசல் கதவைத் திறந்து வைக்க எண்ணி கதவை திறந்தாள். அங்கே அறிமுகமில்லாத ஒரு இளைஞன் நின்று கொண்டிருடந்தான். ‘யாரிவன்’? குழம்பினாள்.