மனதில் எந்த சஞ்சலமும் இல்லாமல் கிருபாகரனை கோவில் வாசலில் பார்த்த சந்தோஷத்தில் அலுவலகத்துக்குள் நுழைந்தாள் கல்பனா.
“கல்பனா…. ஏதாவது லாட்டரி அடிச்சிட்டியா.? முகம் இவ்வளவு ப்ரைட்டா இருக்கு.” என்றான் க்ளார்க் சந்தானம்.
“ஆமா சார். புதையல் கிடைச்சிருக்கு கூடிய சீக்கிரம் எல்லோருக்கும் விருந்தே வைக்கிறேன்.” கல்பனா குரலில் பட்டின் வழவழப்பு, முகத்தில் பூக்களின் மலர்ச்சி. நடையில் நாட்டிய சுழற்சி. ஊகிக்க முடிந்தது. ஏதோ நடந்திருக்கு.
“கல்யாண விருந்தா.? நடக்கட்டும் நடக்கட்டும்…” கல்பனா பூக்கடை தன் மேல் கவிழ்ந்தது போல் மகிழ்ச்சியும் வெட்கமும் கொண்டாள்.
மறுநாள் அதே மலர்ச்சியுடன் விசாலத்தை சந்திக்க கோவிலுக்குள் சென்றாள். அவள் நவகிரகங்களை சுற்றும் போதே அக்கா விசாலம் வருவதை பார்த்துவிட்டாள்.
“அக்கா…. அம்மா வரலையா.?”
“வீட்டுக்கு சித்தியும், ரேவதியும் வந்திருக்காங்களாம். என்னை போகச் சொன்னா. இருவரும் படிகளில் உட்கார்ந்தார்கள். தங்கை முகம் இத்தனை பொலிவுடன் இருந்ததை விசாலம் இதுவரை பார்த்ததில்லை. புடம் போட்ட தங்கம் போல் மின்னுகிறாளே.!
“கல்பனா…. அம்மா எல்லாம் சொன்னா. இந்த உறவில் சிக்கல் இருக்கேடீ. நீ மறுபடியும் காயப்பட்டுடக் கூடாது.”
“அட்வைஸ் பண்ண உன்னை அனுப்பினாளா அம்மா.? அக்கா எனக்கு ஒண்ணும் இரண்டும் கெட்டான் வயதில்லை. சசிரேகா குணமாகி வந்தால் நான் விலக்கிட வேண்டும் தான்.
இப்படி மனநிலையில் உள்ள மனைவியை விவாகரத்து செய்ய அவரால் முடியலை. குற்ற உணர்ச்சியா இருக்கு. குணமாகிவிட்டால் புருஷன் தன்னை இப்படி விட்டிட்டு போய் விட்டானேன்னு பீல் பண்ணா தன் வாழ்க்கை நல்லா இருக்காதுன்னு நினைக்கிறார்.”
“என்ன இது.? நிச்சயமில்லாத சூழ்நிலை.? அப்போ உன் கதி.?”
“இரண்டு மாசம் பழகின இந்த அறுபது நாட்களே போதும். காதல்னா என்னன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அது மனசை எப்படி பதப்படுத்துது. பிறரை நேசிக்க வைக்குது….விட்டுக் கொடுக்க வைக்குது. மொத்தத்தில் பிறவி எடுத்த பயனையே உணர வைக்குது…. ஒரு புதிய உலகத்தை அறிமுகப்டுத்திடுச்சு. அந்த சுகம் போதும். அந்த எண்ணக் கயிற்றை பிடித்துக் கொண்டே கடைசி மூச்சு வரை பயணிச்சிடுவேன் அக்கா.”
“எங்களோட நிஜமான நேசமே ஒரு வழியைக் காட்டும். ப்ளீஸ் எனக்கு நாலாளது நடக்கணும்னு வாழ்த்துங்களேன்.”
இருவர் கண்களிலும் நீர் கோர்த்தது. தங்கையை அணைத்துக் கொண்டாள் விசாலம்.
“சரி…. இந்த கோவில் சன்னதியில் வச்சு மனசார வாழ்த்தறேன். மனம் போல் மாங்கல்யம் உனக்கு கிட்டட்டும். கல்பனா நான் அட்வைஸ் பண்ணலே ஒண்ணு சொன்னா கேப்பியா.?”
“சொல்லுக்கா….”
“இப்படி இரண்டு வருஷமா கிணத்திலே போட்டக் கல்லா ஒரு பிரச்சனை இருக்கறதிலே என்ன புண்ணியம்.? சரியாகி அவள் கணவனோடு சேரணும். இல்லே முறைப்படி பிரியணும். நீ சசிரேகா வீட்டுக்குப் போய் அவ அம்மாவோட பேசு.”
“என்னக்கா சொல்றே.?
“சொர்கவாசல் திறக்கும்ன்னு மணிக்கதவே தாழ்திறவாய் அப்படின்னு பாடிட்டு காத்துக்கிட்டிருக்கிறதிலே என்ன பிரயோஜனம்.? இரண்டிலே ஒண்ணு முடிவு தெரியணுமா வேண்டாமா.? தைரியமா போ…. இல்ல கிருபாவையோ அல்லது அவங்கம்மாவையோ போய் பேசச் சொல்லு. காயை நகரத்து. நேர்மையாவே விளையாடு. கடவுளின் திருவிளையாடல் சோதணையை ஜெயிப்பது பெருமாள் கை கொடுப்பார். கிளம்பு எனக்கும் நேரமாகிறது.”ன முடித்தாள் விசாலம்.
மனதில் விதை விதை விழுந்துவிட்டது. இனி நீருற்றி அதன் வளர்ச்சியை கவனிக்க வேண்டியது தான். பட்டுப்போகுமா.? துளிர்க்குமா.? அது இறைவனின் கையில். ஜானகி தெப்பத்திருவிழா பார்க்க அழைத்தாள் நேரே வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் வருவதாக சொல்லிவிட்டாள் கல்பனா. கூட்டம் நெருங்கிற்று இங்கு ஜானகி அம்மாளை கண்டுபிடிக்க முயல்வது வைக்கோல் பிரியில் விழுந்த ஊசியைத் தேடுவது போலத்தான்.
பதினாறாம் நூற்றாண்டு. நாயக்கர்கள் மதுரையை ஆண்ட காலம். திருமலை நாயக்கர் பூச நட்சத்திரத்தில் பிறந்தவராதலால் இத்திருவிழா தைபூசத்தில் நடக்கிறது. ஜனனங்கள் பெரிய குளத்தின் நாலாபுறமும் நெருக்கியடித்துக் கொண்டு நின்றிருந்தனர். முழு நிலவின் அழகில் குளத்தில் சாமி தெப்பத்தில் மிதந்து வருவதைப் பார்க்க கண்கோடி வேண்டும்.! கலர் கலர் விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் திருவிழா களைகட்டியது.
காலையில் வந்திருந்தால் மைய மண்டபத்திற்கு படகில் சென்று மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் தரிசித்திருக்கலாம். இப்பொழுது சாமி தெப்பத்தில் மிதந்து கரைசேர்ந்து மீண்டும் மீனாட்சி கோவிலுக்கு புறப்பட்டு போகிற வைபவத்தை பார்க்கலாம். யானை ஒட்டகம் பரிவாரத்துடன் சாமி புறப்பாடு முடிந்த பின் ஜனக் கூட்டம் சாரி சாரியாக பஸ்ஸிற்கும் ஆட்டோவிற்குமாக கலைந்து போய்க் கொண்டிருந்தது.
ஜானகி அம்மாளை தேடித்தயங்கி நின்றாள் கல்பனா. கல்பனாவைஸ் தேடி தோற்றுப் போய் ஜங்காய் வீடு நோக்கி போய்விட்டாள். கூட்டம் சற்றுக் குறைந்தது. அப்பொழுது தான் அது நடந்தது.
ஒரு இளம் பெண் கையில் ஒரு குழந்தையை பற்றிக் கொண்டு ‘தர மாட்டேன்…. போ போ. இது என் குழந்தை….’ என்று கத்திக்கொண்டிருந்தாள். குழந்தை வீல் வீல் என்று அலறிற்று. ஒரு நடுத்தர வயதான அம்மாள் இளம் பெண்ணின் கையைப் பற்றி இழுக்க இவள் குழந்தையுடன் திமிறிக் கொண்டு ஓட….வேறு பெண்
“அய்யோ…. இந்தப் பையித்தியம் என் குழந்தையை கொன்னுடும் போலிருக்கு….. யாராவது காப்பாத்துங்களேன்…. என்று அலற….. ஒரு நிமிஷம் ஸ்தமித்துப் போனாள் கல்பனா. எங்கிருந்தோ வந்த ஒரு பெண் போலீஸ் அந்த இளம் பெண்ணை லத்தியால் முதுகில் அடித்து குழந்தையை தாயிடம் ஒப்படைத்தாள்.
“எல்லோரும் போங்க. கூட்டம் போடாதீங்க. அம்மா உங்க பொண்ணை அழைச்சிட்டுப் போங்க.” என்று பெண் போலீஸ் கட்டளையிட்டாள். எல்லோரும் கலைய தொடங்கினர்.
அந்த இளம் பெண்ணைப் பார்த்தாள் கல்பனா. அது சசிரேகா என்று புரிந்தது. கிருபாகரனின் மனைவி புகைப்படத்தில் பார்த்ததை விட நேரில் அழகாக தெரிந்தாள். ஆனால் கண்களில் மிரட்சியும், மனம் பேதலித்தவர்களின் இலக்கற்ற பார்வையும் அவள் மனநோயாளி என அறிவுறுத்திற்று. கல்பனா கண்களில் நீர் கட்டியது. எவ்வளவு புத்திசாலியான பெண்… இப்படி அடி வாங்கிக் கொண்டு பேந்தபேந்த நிற்கிறாளே என்ன பரிதாபம்.!
“அது என் குழந்தை…. தரச் சொல்லும்மா….” என்று விசும்பியபடி அம்மாவின் தோள் மேல் சாய்ந்தாள். போலீஸ் பெண் இரக்கமற்று பேசினாள். கேட்க நாராசமாக இருந்தது.
“பௌர்ணமி சமயம் பைத்தியங்கள் இன்னும் கொஞ்சம் ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள். தெரியாதா உங்களுக்கு.? இப்படி கூட்டத்தில் கூட்டி வரலாமா.? கிளம்புங்க….” என்றாள் லத்தியை தட்டியபடி.
“போறேன்…. அடிக்க வேண்டாம்னு சொல்லும்மா….” என்று கெஞ்சிய சசி…. பயந்து நடுங்கி கார் கதவைத் திறந்து அமர்ந்து கொண்டு….
“வாம்மா…. உன்னையும் அடிச்சிடுவா….” என்றாள். அந்த அம்மாளும் காரில் ஏற, கார் விரைந்து சென்றுவிட்டது.
“வந்துட்டாளுங்க…. பயித்தியத்தை எல்லாம் கூட்டிக் கொண்டு…. என் குழந்தையை கொன்னிருப்பா. நல்ல வேளை காப்பாத்திக் கொடுத்தீங்க…. ரொம்ப நன்றி போலீஸ்காரம்மா.” என்று கையெடுத்து கும்பிட்டாள் அந்த இளம் தாய்.
“சரி சரி… பிள்ளையை ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க. பிள்ளையை அவள் பிடிச்சிருந்த விதமே சரியில்லை. அதன் அடிச்சிட்டேன் அந்தப் பெண்ணை. பாவம்.” என்றபடி போனாள் போலீஸ்காரப் பெண்.
கல்பனா உறைந்து நின்றாள். அவள் மனதை யாரோ கைவிட்டு பிசைவது போல் உணர்ந்தாள்.
‘இரட்டைக் குழந்தைகளை பறிகொடுத்ததால் இப்படி ஆகிவிட்டாளே.! கடவுளே உனக்கு கண் இல்லையா.? அவள் மனசாட்சி சொல்லியது..
“ஓ…. உனக்கு மட்டும் கண் இருக்கா.? இந்த நிலையில் உள்ளவர்கள் வீட்டுக்குப் போய் ‘அவள் புருஷனோடு சேர்ந்து வாழப்போகிறாளா மாட்டாளா.? விவாகரத்து பண்ணப் போறீங்களா.? என்று அறிந்து வர தயார் ஆயிட்டியே. நீ மனுஷி தானா.?” கனத்த மனதுடன் வீடு வந்து சேர்ந்தாள் கல்பனா.
இரவு தூக்கம் வர மறுத்தது. அந்த இளம் பெண்ணின் கதறல் பரிதவிப்பு…. எதையும் உணரச் சக்தியில்லாத மனப்பிறழ்வு எல்லாம் அவள் நெஞ்சை சுட்டது. இந்தப் பேதை இப்படி இருக்கும் போது அவள் அறியாமல் அவள் இடத்தைப் பிடிக்க ஆசைப்படுகிறேனே.! நான் மனுஷி தானா.? எவ்வளவு பெரிய துரோகம்.? எனக்கும் என் புருஷனை பறித்துக் கொண்ட அந்த மிருணாளினிக்கும் என்ன வித்தியாசம்.? என்று கல்பனாவின் மனசாட்சி இடித்துக் கூற தன் மீதே வெறுப்பு வந்தது அவளுக்கு. இதற்கெல்லாம் ஒரு முடிவு தேவை. கல்பனா தீர்மாணித்துக் கொண்டாள். கிருபகரனின் வாழ்வில் ஒளி திரும்ப வேண்டும். சசிரேகா குணமாக வேண்டும். அதற்கு அவள் கருவியாக பயன்பட வேண்டும்.
அந்த ஞயாறு ஒரு நல்ல தொடக்கத்தைப் பார்த்தது. கல்பனா உமாவை அழைத்துக் கொண்டு சசிரேகா வீட்டுக்கு சென்று பெல் அடிக்கப் போனாள். கதவு லேசாக திறந்திருந்தது.
“சித்தி கதவு திறந்திருக்கு.”
“எதுக்கும் பெல் அடிப்போம். சடாரென்று எப்படி நுழைவது.?” பெல்லில் கை வைப்பதற்குள் உள்ளே கூக்குரல் கேட்டது.
“பாவிப் பெண்ணே ஏன் இப்படி அழிச்சாட்டியம் பண்ணறே.? என்ன தான் வேணும் உனக்கு.? இரண்டு வருஷமா போராடி போராடி நான் நொந்து போயிட்டேன். முடியலை வாடி வா…. குளிக்க. நாலு நாள் குளிக்கலை.” என்று ஒரு அம்மாள் கத்தும் சத்தம் கேட்டது. அது சசிரேகாவின் அம்மாவாக இருக்க வேண்டும். “முடியாது பாப்பாக்களை காட்டு. அப்ப குளிப்பேன்.” இது சசிரேகாவின் குரல்.
“பாப்பாக்கள் செத்துப் போச்சுன்னு எத்தனை தரம் சொல்றது.?”