அத்தியாயம்.. 10

வைதேகியின் உலகமே வேறாயிற்று. அவளுக்கு பிடித்த சமையல்…. அவளுக்குப் பிடித்த டி. வி சேனல் தொடர்கள், பாட்டுக்கள்…. விருப்பம் போல் நிதானமாக கோவில் தரிசனம் என்று வாழ்க்கை உயிரோட்டமாக அமைந்துவிட்டது. அக்கம் பக்கத்தார்..

“அம்மா…. அம்மா….” என்று வந்து யோசனை கேட்டார்கள். பெரிய மனுஷி என்று மரியாதை தந்தார்கள். இருமுறேளே மாமி…. என்று விக்ச கொண்டு வந்து தந்தார்கள். இப்படியும் தனக்கான  ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று கூட தெரியாமல் இதுவரை இருந்தது வாழ்ந்து விட்டாளே. சதா பிள்ளைகளே உலகம் என்று ஓடிப் போய் கட்டிக் கொண்ட கசப்புகள் மறையத் தொடங்கியது.

‘ஈஸ்வர எல்லாம் உன் செயல்..’ என்றபடி எழப் போனவளை அம்மா.. என்ற குரல் கட்டி நிறுத்தியது. கல்பனா அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள். மகளை புதிதாக பார்ப்பது போல் தடவிக் கொடுத்தாள். அவள் தாய்மை கனிந்து மலர்ந்தது.

“என்னம்மா கல்பனா.? எப்படி இருக்கே.?” என்று வாஞ்சையுடன் கேட்டாள். நெகிழ்வான குரலில் அவள் கேட்டாள்.

“நல்லாயிருக்கேன் மா. நீ எப்படிம்மா இருக்கே.? உன்னைத் தனியா விட்டிட்டு வந்திட்டேனே…. நான் மோசமான மகள்.” கல்பனா

கண்ணில் நீர் கட்டியது. அவள் குரலில் வருத்தம்.

“சேச்சே…. அதெல்லாம் இல்ல. எனக்கும் இப்போ என்னோட தனிக்குடித்தனம் பிடிச்சிருக்கு.”

“அம்மா ஸ்வீட் அம்மா. பெண்களை விட்டுக் கொடுக்க மாட்டியே. அக்கா வந்து பார்த்தாளா.? உமா, முரளி வந்தாங்களா.?”

“விசாலம் இப்ப நல்லாயிருக்கா கல்பனா. உமா அவ அப்பாவை எதிர்த்துப் பேசி, அம்மாவைத் திட்டினே நாங்க சும்மா இருக்க மாட்டோம்ன்னு போர் கொடி உயர்த்திட்டா. மனுஷன் மகள் பேச்சை மீரலை. விசாலத்துக்கு பெருமாள் புண்ணியத்தில் ஒரு விடிவு வந்தாச்சு.” சொல்லும் போதே வைதேகி முகம் பளபளத்தது.

“அம்மா, எனக்கும் ஒரு விடிவு காலம் வருமா.?” கல்பனா கேட்டதும் தாய் மகளின் முகத்தைக் கனிவுடன் பார்த்தாள். கல்பனா இந்த ரெண்டு மாசத்தில் மிக அழகாக, மெருகூட்டப்பட்டவளாக தளதளப்புடன் இருப்பதை கவனித்தாள். அவள் மனம் செழுமையடைந்து விட்டதை அது சொல்லியது. மகளுக்கு ஏதோ நல்ல வழி கிடைத்திருக்கிறதோ என்று எண்ணினாள். அர்த்தமில்லாத தெனாவட்டு, சஞ்சலம் கோபம் என்று கொதித்திருந்த கல்பானவின் மனம் மாறி நிதானமாக ஒரு ஆறு போல் மனம் தெளிந்திருப்பதை வைதேகி தன் அனுபவ உணர்வால் புரிந்து கொண்டாள். கடவுள் ஏதோ ஒரு வழிகாட்டியிருக்கிறாரோ.!”

“எல்லோருக்கும் கடவுள் அவரவர் வாழ்க்கையில் ஒரு வானவில்லைக் காட்டுவார் தங்கம். வானவில்லை நாம் தான் அடையாளம் கண்டு கொள்ளணும்.”

“அம்மா இரு. பிரசாதம் வாங்கிட்டு வரேன். சாப்பிடாமல் வந்திட்டேன்.” கல்பனா பிரசாத ஸ்டாலிருந்து புளியோதரை, சர்க்கரை பொங்கலும் அதிரசமும் வாங்கி வந்தாள்.

“சாப்பிடும்மா….” இருவரும் சாப்பிட்டபடி பேசினார்கள். இந்த பெருமாள் கோவில் புளியோதரைக்கு ஒரு தனி ருசிம்மா.”

“ஆமாடி. அதிரசம் கூட நல்லாயிருக்கு. சரி உனக்கு ஒரு வழி பிறக்கணும். உன் முகத்தைப் பார்த்தா பிரகாசமா தோணுது.” கல்பனா கலகலவென்று சிரித்தாள். மகள் ரொம்ப நாளைக்கு அப்புறம் மனம் விட்டுச் சிரிப்பதை ரசித்துப் பார்த்தாள் தாய். மனம் அப்படியே வெள்ளி ஓடை போல் சலசலத்து ததும்பிற்று மகள் சிரிப்பதை பார்ப்பது எவ்வளவு அழகு.! அதைத்தானே அவள் விரும்பினாள். கடவுள் கண் திறந்து விட்டாரா.?

“சிரிச்சு மழுப்பாதே. என்ன என் ஜோசியம் சரியா.?”

“அம்மா …. உன்கிட்டே சொல்லணும் போல இருக்கு. ஆனா பயமாகவும் இருக்கு திட்டமாட்டியே.?”

“கல்பனா வெறும் அம்மாவாத் தான் முன்னே இருந்தேன். இப்போ தோழியாகவும் இருக்கேன். நீ தைரியமா சொல்லு. உன்னைப் புரிந்து கொள்கிற தோழி நான்.” கல்பனா முகம் மலர்ந்தது. வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக பூக்களாய் உதிர்ந்தது.

“அம்மா…. நான் டாக்டர் கிருபா என்பவரை விரும்பறேன். அவரும்  விரும்பறார். முதல் முதலா காதலிக்கப்படுவதும் காதலிப்பதுமான உணர்வு தெய்வீகமானதா இருக்கு. சந்தோஷமா இருக்கு.”

மகளின் முகத்தில் தேஜஸ் கூடியது. சொல்லும் போதே பனிதேங்கிய தாமரை மலர் போலிருந்தாள்.

“ம்…. நல்ல விஷயம் தான். மேலே சொல்லு.”

“கிருபா ஒரு ஜென்டில்மேன் அம்மா. சசிரேகாங்கற பொண்ணுக்கும் அவருக்கும் மூன்று வருடம் முன் கல்யாணமாச்சு. என்ன கதை இப்படிப் போகுதேன்னு பயமாயிருக்கா.?”

“கதை எப்படி வேணா போகட்டும்மா. முடிவு நம்ம கையிலே தானே இருக்கு.” சாமர்த்தியமாக பதில் சொன்னாள் தாய்.

“சரியாச் சொன்னேம்மா. கல்யாணம் ஆன நாளிலிருந்தே அவ ரொம்ப வித்தியாசமா நடந்திட்டிருக்கான்னு அவருக்கு தோணுச்சாம். முதலிரவு நாளிலேயே அவரிடம் ‘நீங்க ஆண்மை உள்ளவரா.?’ அப்படின்னு கேட்டாளாம். மறுநாள் நம் சம்பிரதாயப்படி தம்பதிகளிடம், ஒரு வெள்ளி கிரிஷ்ண பொம்மையை கொடுத்து பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவாங்க இல்ல.? ஆசீர்வாதம் வாங்கி முடித்த பின் அந்தத் தவழும் கிருஷ்ண பொம்மைக்கு முத்தம் கொடுத்து சீராட்டி கொஞ்சினாளாம். நமக்கும் இப்படி குழந்தை பிறக்குமில்லன்னு ஆர்வமா கேட்டாளாம்.”

“குழந்தைகள்ன்னா அவளுக்கு ரொம்ப பிடிக்கும் போலிருக்கு. இதில் என்ன தப்பு கல்பனா.?”

“சரி…. குழந்தை வேணும்கற ஆசை கொஞ்சம் அதிகமாகவே இருக்குன்னு யாவரும் தெளிவடைஞ்சாராம். அம்மா…. உன்கிட்டே சொல்ல தயக்கமா இருக்கு. ஆனா ஜானகியம்மா சொன்னதைச் சொல்றேன். கணவரிடம் நெருங்கி பழகும் போது, நான் கர்ப்பம் ஆயிடுவேன் இல்ல. ஏமாற்றம் இருக்காதேன்னு கேட்பாளாம். பகலில் ஆசையுடன் தொட்டு அணைச்சா, முத்தமிட்டா…… எல்லாம் ராத்திரி பார்த்துக்கலாம்ன்னு ஓடிடுவாளாம்.” என்றாள் கல்பனா.

“கல்பனா…. சில பெண்கள் ரொம்ப வெட்கப்படுவாங்க.”

“அவரும் முதலில் அப்படித்தான் நினைச்சாராம். போகப் போக அவருக்கு ஒரு விஷயம் புரிஞ்சுதாம். புருஷன் என்பவன் ஒரு குழந்தையை கொடுக்கும் ஒரு யந்திரம் என்று நினைத்தவள் போல் நடந்து கொண்டாளாம்.”

“ஒரு வேளை அவளுக்குப் புருஷனை பிடிக்கவில்லையோ.? வேறு யாரையாவது விரும்பி, பெற்றோருக்காக இவரைத் திருமணம் செய்து கொண்டாளோ.?”

“இப்படித் தான் அவரும் குழம்பினாராம். என்னைப் பிடிச்சிருக்கான்னு கேட்டாராம். அதுக்கு அவ தெரியலைன்னு சொன்னாளாம்.”

“ஏன் கல்பனா…. மூளை வளர்ச்சி இல்லாத பெண்ணோ.?”

“நல்லா சொன்னே போ. எம்.ஏ. எம்.பில் படிச்சிருக்கா. தமிழ் இலக்கியத்தை கரைச்சு குடிச்சவள். அவளுக்கு தமிழ் இலக்கியத்திலேயே பிள்ளைத் தமிழ் தான் ரொம்பப் பிடிக்குமாம். பெரிய புராணம்….கந்தபுராணம் இப்படி பக்தி இலக்கியத்திலேயே பின்னிடுவாளாம். இலக்கிய சொற்பொழிவுகள் ஆற்றுவாளாம். அறிவு ஜீவியாம். அவ மனசிலே என்ன பிரச்சனைன்னு தெரியலை.”

“வித்தியாசமான பெண்ணா இருக்காளே.” அம்மா ஒப்புக்கொண்டாள்.

“சுருக்கமா சொன்னா சசிரேகா மனதில் காதலே இல்லைன்னு அவருக்கு பட்டுதாம். அவளால் எந்த ஆண் மேலும் காதல் கொள்கிற இயல்பான பெண்ணின் மனம் இல்லை என்று தோன்றியதாம். ஆனால் குழந்தை வேணும்கற தாய்மை உணர்வு மட்டும் இருந்துச்சாம். கல்யாணமாகி முதல் மூன்று மாதம் வீட்டுக்கு விலக்கான போது, குடியே மூழ்கியது போல் உட்கார்ந்து அழுது….

“உங்களுக்கு எந்தக்குறையும் இல்லையே.?” என்று சட்டைக் காலரை கொத்தாகப் பிடித்துக் கேட்டாளாம். அவர் குற்றம் தான் என்று கோபப்படுவாளாம். பாவம் பிறகு இரட்டைக் குழந்தைகள் பிறந்து…. அவள் மடியிலேயே இறந்ததால் சித்த பிரமை ஏற்பட்டதாம்.”

“பாவம்….”

“யாரை பாவம்ங்கற.?”

“டாக்டர் கிருபாவைத் தான்.” ஆச்சர்யமாய் அம்மாவைப் பார்த்தாள் கல்பனா.

“என்னம்மா இப்படி சொல்றே.? சசிரேகா பாவமில்லையா.?”

கல்பனா வியப்புடன் கேட்டாள். பேசியபடி கோவில் வாசல் அருகே வந்தனர். கிருபாகரனின் தாய் காரில் வந்தார். கிருபா அம்மாவுக்காக கார் கதவைத் திறந்து விட்டபோது கல்பனா சொன்னாள்.

“அம்மா.. அங்க பார். அது தான் கிருபா. அது அவங்க அம்மா.”

“இந்தப் பிள்ளையாண்டான் தானா.?” கார் சென்ற பிறகு அவளையும்  அறியாமல் வைதேகி சொன்னாள்.

“அம்சமா இருக்கான். நல்ல பையனாத் தெரியறான். அம்மாவிடம் பிரியமா இருப்பான் போலிருக்கு. அம்மாவிடம் பிரியமா இருப்பவன் மனைவியையும் நேசிப்பவனாத் தான் இருப்பான்.”

“வாம்மா…. ஜானகியம்மாவை உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.” என்று கல்பனா ஒரு துளிசி மாலையும். தாமரைப் பூ ஒன்றையும் வாங்கிக் கொண்டு விரைந்து ஜானகியை அடைந்தார்கள்

“அம்மா வணக்கம்.. எப்படி இருக்கீங்க.?”

“ஹே கல்பனா…. கோவிலுக்கு வந்தியா.? அது யார் அம்மாவா.?”

“வணக்கங்க” கைகூப்பினாள் ஜானகி. வைதேகி கைகூப்பி வணக்கம் என்றாள். கல்பனாவைப் பார்த்ததில் அவள் முகம் சூரியகாந்தி பூப் போல் மலர்ந்ததை கவனித்தாள்.”

“உங்களை சந்திச்சதிலே ரொம்ப சந்தோஷம்.” என்றாள்.

ஜானகியை பார்த்த மாத்திரத்திலேயே அவருக்குப் பிடித்து விட்டது. கல்பனா துளசி மாலையையும், தாமரைப் பூவையும் கொடுத்தாள்.

“உங்களை பார்த்தவுடனே உங்களுக்கு தேவைபடும்ன்னு வாங்கிட்டேன்.”

“நானே வாங்கினா தானே எனக்குப் புண்ணியம். பார்த்தீங்களாம்மா உங்க பொண்ணு சொல்றதை. பூரா புண்ணியமும் அவளுக்கே போய் சேரணுமாம்.” பொய் கோபம் காட்டினாள்.

“என்ன பயந்துட்டியா.? நீ வாங்கினா என்ன.? நான் வாங்கினா என்ன.? நீயும் எங்க வீட்டுப் பொண்ணு தானே.?” வாஞ்சையுடன் கூறினாள். கல்பனா மனம் குளிர்ந்தது. வைதேகி முகம் மலர்ந்தாள்.

“அவசியம் அம்மாவை கூட்டிட்டு வீட்டுக்கு வாம்மா.” என்று கல்பனா தோள் தொட்டு பிரியமுடன் அழைத்து விடை பெற்றாள் ஜானகி.

“அம்மா எப்படி.? இந்தக் குடும்பத்தை பிடிச்சிருக்கா.?”

“ஒரு குறையுமில்ல. சசிரேகாவால் பாவம் இந்தப் பிள்ளையாண்டான் நிலை திரிசங்கு சொர்க்கமா இருக்கு.”

“சரிம்மா…. நான் பெரியார் போய் பஸ் பிடிக்கணும் வா. ஆட்டோவில பெரியார் வரை போகலாம். பிறகு நான் இறங்கிக்கிறேன். நீ அதே ஆட்டோவில வீட்டுக்குப் போ.”

கல்பனா பெரியாரில் இறங்கிக் கொண்டு, ஆட்டோக்காரனிடம் பணம் கொடுத்துவிட்டு..

“அம்மாவை பத்திரமா காலேஜ்கிட்டே உள்ள அப்பார்ட்மென்டில் இறங்கி விட்டிடுங்க.” என்றபடி அலுவலகம் செல்ல பஸ் பிடிக்க ஓடினாள். அவள் மனமும் அன்புடன் ஜானகி கிட்டே ஓடியது.

வைதேகி மனம் சிறுபிள்ளை போல் துள்ளிற்று. மகளின் சந்தோஷ முகமும் அந்தப் பையனின் அடக்கமான புன்னகைத் தோற்றமும் மனசை நிறைத்தது. ஜங்காய் அம்மாள் கல்பனா மேல் கொள்ளை பிரியம் வைத்திருப்பதை ஒரு நொடியில் புரிந்து கொள்ள முடிந்தது. இந்தத் திருமணம் மட்டும் நடந்தால்…. சடாரென்று பிரேக் போட்டு ஆட்டோ குலுங்கி நின்றது. குறுக்கே ஒரு ஆள்….

“ரோட் சென்சே இல்லாம நடக்கிறது தான் இந்த மதுரை ஜனங்களோட ஸ்பெஷாலிட்டி, பாருங்க…. ராஜா வீதியிலே நடக்கிற மாதிரி, வண்டி வருதே ஒதுங்கணுமேன்னு கவலைப்படாம நடக்கறாங்க. பக்கிங்க.” என்று வைதபடி வண்டியை இயக்கினான் ஆட்டோ டிரைவர்.

“வாஸ்தவம் தான்….” என்று சொன்ன வைதேகி மனதுள் நினைத்தாள்

“நானும் பக்கி தான். எந்த சென்சும் இல்லாமல் மகிழ்கிறேனே.! சசிரேகா குணமாகி வந்தால் கல்பானவின் கதியென்ன.? மகளை கண்டிக்காமல் விட்டதோடல்லாமல் நல்ல பையன் நல்ல குடும்பம் என்று தூபம் போட்டுவிட்டு வந்திட்டேனே. ஏற்கனவே திருமணம் நடந்த பின் எவளோ ஒருத்தியுடன் தொடுப்பு வச்சுக்கிட்டு ஓடிட்டான் மருமகன் சுதாகர்.

அதற்கு திட்டும் என் வாய் அதே தவறை தன் மகளுக்காக அந்த கிருபாகரன் செய்ய வேண்டும் என்று நினைப்பது…. சுயநலமில்லையா.? சந்தர்ப்பம் வந்தால் எல்லா மனிதர்களும் சுயநலமானவர்கள் தானே.! வேண்டாம்…. தவறான எண்ணங்களில் லயிக்கிற போது மனசாட்சி விழித்துக் கொண்டு வேர்வையாக வெளிவந்து பதற்றத்தைத் தந்து விடுகிறது. விசாலத்திடம் சொல்லி கல்பனாவிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்தாள் வைதேகி. கல்பனா செவி சாய்ப்பாளா.?