ஆதியும் சத்யாவோடு அதே நேரம் வாசலுக்கு வந்திருக்க அவனும் சுந்தரி அம்மாவின் மொத்த தவிப்பையும் கேட்க நேர்ந்தது.

ஆதிக்கு, ‘இந்த அம்மா ஏன் இந்த விஷயத்தை இந்தளவிற்கு சிக்கலாக்குகிறார்?’ என்று புரியவே இல்லை. அம்மா, மகன் உறவு மருமகள் என்கிற உறவு வந்தபிறகு எத்தனை தூரம் விலகியிருக்கிறது. அதையெல்லாம் பக்குவத்தோடு சூழலுக்குத் தக்க ஏற்றுக்கொள்ளும் நிதர்சனம் புரிந்த பெண்கள் இருக்கும்போது, பெத்த மகனுக்கும், வளர்த்த மகனுக்குமிடையே மனதளவில் இந்தளவிற்குப் போராடுகிறாரே என்றிருந்தது.

அவனுக்கு சுந்தரி அம்மாவின் மனநிலை நன்கு புரிந்திருந்த போதும், ‘என் பிள்ளை என் பிள்ளை’ என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லியதிலிருந்து அவர் விவேக் மீது வைத்திருக்கும் பாசத்தை முழுமையாக உணர்ந்த போதும், தன் மகனுக்கு வளர்ப்பு மகன் என்கிற உண்மை தெரிந்து விடக்கூடாது என்று தவிப்பது புரிந்த போதும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஸ்தம்பித்து நின்றிருந்த சத்யாவின் கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துப் போனான்.

சில நேரங்களில் காயத்தைக் கீறித்தான் வைத்தியம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இப்பொழுது அவன் நிலையும் அதுதான்!

அவர்கள் இருவரும் வீட்டிற்குள் வருவதை உணர்ந்து விவேக்கும் தன்னிலை அடைந்து, கண்ணில் வழிந்திருந்த கண்ணீரைத் துடைத்தபடி கூடத்திற்கு வேகமாக வந்தான்.

நந்தினியும் சுந்தரி அம்மாவும் அழுது கொண்டிருக்க, “நீ ஏன்மா இப்படி அழற?” என்று பரிவுடன் ஆதி கேட்டான்.

புதிய குரலில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தவள், இவர்கள் இருவரும் என்றதும் இன்னும் நடுங்கினாள். சுந்தரியும் ஆதியின் குரல் கேட்டுப் பதறி எழ, “உங்க கிட்ட இருந்து எந்த மகனையும் பிரிக்கத் திட்டம் இல்லைம்மா. இலவசமா இன்னும் ஒரு மகனா என்னையும் கூட சேர்த்துக்கங்க. சத்யா மாதிரி நானும் அம்மா இல்லாத பையன் தான்! நீங்க பயந்து ஓடி ஒளியற அளவுக்கு நாங்க மோசமானவங்க இல்லை” என்று ஆதி பேச, அவர் வேகமாகத் திரும்பி மகன் இருந்த அறையைப் பார்த்தார்.

விவேக்கின் முகம் கலங்கியிருந்ததிலேயே அவனுக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று புரிய, நெஞ்சு அடைப்பது போல ஆகி விட்டது சுந்தரி அம்மாவுக்கு. அதில் தொப்பென்று எழுந்த சோபாவிலேயே மீண்டும் அமர, “அவன் கலங்கி நிக்கிறது வளர்ப்பு மகன்னு உண்மை தெரிஞ்சு இல்லைம்மா. நீங்க அவன் மேல வெச்சிருக்க பாசத்தை நினைச்சு” என்று ஆதி சரியாகக் கணித்துச் சொல்ல, அவர் மீண்டும் விசும்பினார்.

அதில் விவேக் ஓடி வந்து அவரின் காலின் அடியில் அமர்ந்து, “இந்த உண்மை எனக்கு தெரிஞ்சா மட்டும் என்ன மாறிட போகுதும்மா… எதுக்கு இப்படி அழறீங்க?” என்றான் வேதனைக் குரலில். பெற்ற மகனையே தனக்காக ஒதுக்கி வைக்கும் அம்மா பாசத்தில் அவன் என்ன மாதிரியாக உணர்கிறான் என்று வார்த்தைகளால் சொல்லத் தெரியவில்லை. இப்படி ஒரு பாசத்தை ஒரு தாயால் வளர்த்த மகன் மீது வைக்க முடியுமா என்று பிரமிப்பில் அவன் மனம் தளும்பித் தள்ளாடியது.

ஆனால், பெற்ற பிள்ளைக்குப் பாசத்தை மறுப்பது சுயநலம் இல்லையா? அப்படியிருக்க அவனால் முடியுமா என்ன?

“உங்க பாசம் எனக்கும் முழுசா வேணும் தான் மா. ஆனா, சத்யாவுக்கு நீங்க பாசம் கொடுக்கக் கூடாதுன்னு நான் மட்டும் எப்படிம்மா சுயநலமா யோசிப்பேன். என் உடம்புல உங்க ரத்தம் ஓடாட்டியும் நான் உங்க வளர்ப்பு இல்லையா? நந்தினிக்கு நீங்க பாசத்தை தரும்போது, நீங்க பாசத்தை பங்கு போடறீங்கன்னு நான் என்ன குறையாவா நினைக்கிறேன்? இல்லை அவதான் அப்படி நினைச்சிருப்பாளா? அப்பறம் ஏன்மா இப்படி எல்லாம் யோசிச்சு உங்களை நீங்களே வருத்திக்கறீங்க” என்றான் கண்ணீருடன்.

கேட்ட சுந்தரிக்கும் கண்ணில் நீர் பொங்கியது. ஒரு கையால் மகனின் தலையை வருடியபடி, தன் கண்ணீரைக் கூட துடைக்காமல் மகனின் கண்ணீரைத் துடைத்து விட்டார். பார்த்திருந்தவர்களின் உள்ளம் அந்த அன்னையின் செய்கையில் நெகிழ்ந்து போனது.

“நீங்க பயப்படற மாதிரி வேற எதுவும் நடக்காதும்மா. நீங்க பெத்த மகன் மேல உங்களுக்கு இருக்க பாசத்தை இனியும் மறைக்காதீங்க. நீங்க சொன்ன மாதிரி எதுவும் மாறப்போறதில்லை தான்! என்ன கூடுதலா உங்க கூட்டுல நாங்களும், எங்க கூட்டுல நீங்களும் சேர்த்துக்க போறோம் அது மட்டும் தான் வித்தியாசம்!” என்று ஆதி சொல்ல, விவேக்கின் தலையை வருடுவதை ஏக்கமாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த சத்யாவைப் பார்த்த சுந்தரி அம்மாவின் மனம் பரிதவித்தது.

அவனையும் கைநீட்டி தன்னருகே அழைக்க, அதற்காகவே காத்திருந்தவன் போல ஆசையும் ஏக்கமுமாக வேகமாக ஓடி வந்து இன்னொரு மடியில் படுத்துக் கொண்டான். சின்ன சிரிப்புடன் அவன் தலையையும் வருடிக் கொடுத்தார்.

பார்த்திருந்த ஆதீஸ்வரனுக்கு சிரிப்பு மலர்ந்தது என்றால், சின்ன குட்டி நந்தினிக்கு உரிமையுணர்வு தலைதூக்க வேகமாக ஓடி வந்து அன்னையின் இரு கால்களுக்கும் நடுவில் தலை முட்டி அமர்ந்து கொண்டாள். அந்த காட்சியைப் பார்த்த ஆதியின் முகத்தில் விரிந்த சிரிப்பு.

சுந்தரி அம்மாவும் ஒரு நொடி திகைத்து பின் சிரித்தவர், மகளின் தலையையும் ஆசையோடு வருடிக் கொடுத்தார். சத்யாவும் விவேக்கும் சின்னவளின் செய்கையில் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

இந்த காலத்துப் பிள்ளைகள் இத்தனை இலகுவாக யோசிக்கும் விஷயத்தை நாம் தான் குழப்பிக் கொண்டு சிக்கலாக்கிக் கொள்கிறோம் என்று எண்ணிய சுந்தரி அம்மாவின் மனம் நிறைந்திருந்தது.

ஆதியை நன்றியுடன் நோக்கியவர் அவனையும் தன் மடியில் நிறைந்திருந்த மூன்று பிள்ளை செல்வங்களையும் ஒருமுறை பார்த்துவிட்டு, “உனக்கும் அம்மா மடியில எப்பவும் இடம் இருக்கும் பா” என்றார் மனமார.

அவரின் அந்த சொல்லை ஆதி எதிர்பார்த்திருக்கவில்லை. வயதில் மூத்த பெண்மணிகள் கூட அவனை ஐயா என்று அழைத்துத் தான் பழக்கம். அவனது பதவியும், பணமும் அனைவரையும் அவனிடமிருந்து சில அடிகள் தன்போல தள்ளி நிற்க வைக்கும். ஆனால், இதை எதையும் கருத்தில் கொள்ளாது அன்பும் அரவணைப்புமாக சுந்தரி அம்மா சொன்ன வார்த்தைகளில் அவனது விழிகள் சட்டென்று கலங்கி கண்ணீரைச் சிந்தி விட்டது.

எத்தனை வயதானாலும் தாயின் அன்புக்கு ஏங்காத பிள்ளைகள் எங்கிருக்கிறார்கள்? கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகள் அவன் இழந்த அன்னையின் பாசத்தையும் ஆதரவையும் ஒற்றை நொடியில் தர துணிந்து விட்டவரின் பாசத்தில் அவன் மனம் உருகியது. அதுவும் அவனுடைய பதவியையும் உயரத்தையும் கருத்தில் கொள்ளாது அவனையும் மகன் ஸ்தானத்தில் ஏற்றுக்கொண்டவரின் பாசம் அவனது நெஞ்சை முழுதாக நிறைத்து விட்டது. அதில் கண்களும் நிறைந்து விட்டது போல!

அதை வேகமாகத் துடைத்தவன், “அது என்னோட பாக்கியம் அம்மா” என்றான் நெகிழ்வான குரலில்.

*** ஆதியின் மனம் என்றுமில்லாத வகையில் இன்று நிறைந்து போயிருந்தது. அவன் எண்ணிய காரியங்கள் எல்லாம் சிறப்பாக முடிந்திருக்க, அவன் மனம் அத்தனை பூரிப்பில் இருந்தது.

அந்த கொண்டாட்ட மனநிலையோடு தன் கரகாட்டக்காரியைத் தேடி வீட்டிற்கு வர, முந்தைய நாள் ஆரத்தியோடு தனக்காகக் காத்திருந்தவள், இன்று கண்ணில் படவே இல்லை.

‘உங்களுக்குப் பெரிய பாராட்டு விழாவையே ஏற்பாடு பண்ணியிருக்கா’ என்று சொல்லிய சத்யாவின் குரல் தான் அவனது செவியில் ஒலித்தது. ‘உண்மை எல்லாம் தெரிஞ்சு ரொம்ப கோபமா இருப்பாளோ’ என்று ஒரு கணம் அதிர்ந்தாலும், ‘நம்மளை விட்டு தனியா தூங்கறதுக்கு தவிச்சு போயி ஏக்கமா நம்மளை பார்த்தா, அவளுக்கா கோபம் இருக்கும். இருக்காது இருக்காது’ என தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டான்.

‘நீ செஞ்ச எல்லா வேலையும் தெரிஞ்சிருக்கும். நியாயமா பார்த்தா இந்நேரம் உன்னை ஒண்டியா தவிக்க விட்டுட்டு போயிருக்கணும் அவ, அதை விட்டுட்டு இங்கேயே இருக்காங்கிறதுக்காக நீ அவளுக்கு கோபம் எல்லாம் இருக்காதுங்கிற ரேஞ்சுக்கு கற்பனை பண்ணறது எல்லாம் சரியில்லை பார்த்துக்க’ என்று அவனின் மனசாட்சியே அவனை உஷார் செய்ய, ‘ஹ்ம்ம் இன்னைக்கு நம்ம பொழப்பு எப்படி ஓடும்ன்னு தெரியலையே’ என்று தனக்காகப் பரிதாபப்பட்டுக் கொண்டான்.

‘அவனது வாழ்க்கைக்கான காத்திருப்பே அவனின் மனையாள் அவன் யார் என்று உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் வரை தானே! இப்பொழுது அவளுக்கு அவன் யார் என்று தெரியும், இன்னமும் நேசம் குறைந்ததாகத் தெரியவில்லை, இனி அவனுக்கு என்ன கட்டுப்பாடு இருக்கப் போகிறது? ஆனால், அவனின் மனையாள் என்ன மனநிலையில் இருக்கிறாளோ?’ நீண்டதொரு பெருமூச்சை விட்டுக் கொண்டான்.

அவன் மனநிலையைப் பற்றிப் புரியாமல், அவனுடைய மனைவியைப் பற்றி சிறுகுறிப்பு கூட சொல்லாமல், “ஆதி, சத்யா ரொம்ப நேரமாயிடுச்சு. சாப்பிட்டு ரூமுக்கு போய்க்கங்க” என்று ஆண்டாள் பாட்டி சொன்னவர், இருவரையும் உணவு உண்ட பிறகே அறைக்கு அனுப்பி வைத்தார்.

அதுவரையிலும் தாரா அவனின் கண்ணில் படவில்லை. ‘ரொம்ப கோபம் போலவே!’ என்று எண்ணியபடியே மேலே தங்கள் அறைக்குச் சென்றவன், அறையின் கதவைத் திறந்ததும் திகைத்துப் போனான்.

அறையைத் திறந்ததுமே மலர்களின் நறுமணங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு நாசியை நிறைக்க, அந்த அறையின் ரோஜா மற்றும் மல்லிகைப் பூக்களின் அலங்காரம், சின்ன சின்ன அழகான வாசனை மெழுகுவர்த்திகள், ஜவ்வாதும், பன்னீரும் கலந்து வந்த இதமான நறுமணம் எல்லாம் சேர்ந்து அவனை சுக மயக்கத்தில் ஆழ்த்தியது.

மந்தகாச புன்னகையுடன் அறைக்குள் வந்து அறையை தாளிட்டபடி நிதானமாக அனைத்தையும் பார்வையிட்டவன் இந்த வேலைகளை எல்லாம் செய்தவளைக் காணாமல் பார்வையாலேயே தேடி சலித்தது.