காவியத் தலைவன் – 35

சுந்தரி அம்மாவின் போக்கு சரியாவதற்கான அறிகுறியே இல்லை. அம்மா வீணாக கவலைப்படுகிறாரே என்று நந்தினிக்கு தான் மிகவும் அங்கலாய்ப்பாக இருந்தது. சொல்லவும் முடியாத, மறைக்கவும் தெரியாத பக்குவமற்ற பதின்வயது அவளுக்கு! அவளின் அந்த பலவீனம் தான் அண்ணனின் சில கேள்விகளிலேயே உண்மைகள் மொத்தத்தையும் உடைக்க வைத்திருந்தது.

இப்பொழுதும் அதே மனம் உண்மையை எடுத்துச் சொல்லி, எதுவும் நடக்காது பயப்படாதீர்கள் என்று எடுத்துரைத்து அன்னையின் துயரைப் போக்கி விட்டால் என்ன என்று ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை காக்க முடியாமல், அண்ணன் உறங்கிய நேரம் பார்த்து தன் அன்னையிடம், “நீங்க எதுக்காகம்மா தேவையில்லாம பயப்படறீங்க? அப்படி என்ன உண்மை தெரிஞ்சா அண்ணன் நம்மள விட்டு போயிடுவாரா? அண்ணன் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?” என்று கொஞ்சம் ஆதங்கத்துடன் கேட்க, சுந்தரிக்கு மகளின் கேள்வியில் கோபம் வந்தது.

இருந்த எரிச்சலில், “இதெல்லாம் பேசறதுக்கு உனக்கு வயசு கிடையாது சரியா? பேசாம இங்கிருந்து போ. வீணா ஆத்திரத்தைக் கிளப்பி என்கிட்ட அடி வாங்காத” என்று நந்தினியை அதட்டி இந்த பேச்சை அவள் மேலும் தொடரும் முன்பேயே விரட்ட பார்த்தார்.

நீண்ட நாட்கள் தள்ளாட்டத்திற்குப் பிறகு நந்தினி ஒரு முடிவிற்கு வந்திருந்தவள், அவ்வளவு எளிதாக ஒற்றை மிரட்டலுக்கு எல்லாம் அவள் பின்வாங்குவதாக இல்லை. அதில் ஆதங்கமும் தவிப்புமாக, “ஆமா எனக்குத் தான் இதெல்லாம் பேசறதுக்கு வயசு பத்தாது. உங்களுக்கு தான் நிறைய வயசு இருக்கு தானே! அப்ப நீங்க பேசுங்களேன். எதுக்கு இப்ப விவேக் அண்ணன் மேல நம்பிக்கை இல்லாம இந்த உண்மையை மறைக்கிறீங்க? அது மட்டுமில்லாம எதுக்கு சத்யா அண்ணனை பார்த்தாலே வெறுத்து ஒதுக்கறீங்க? சத்யா அண்ணனைப் பார்த்தா அப்பா ஞாபகம் வருதும்மா. உங்களுக்கு அப்படி எதுவும் வரலையா?” என்று கண்ணீருடன் அம்மாவிடம் நியாயம் கேட்டாள்.

அவ்வ்ளவுதான் இந்த கேள்விகளில் சுந்தரி பொங்கி விட்டார். அவர் மனதிலிருக்கும் பச்சை ரணத்தை மகளின் கேள்விகள் இன்னும் ஆழமாகக் கீறி விடுவதால், அதன் வலியை, அதை வெளிப்படுத்த முடியாத இயலாமையை மகள் மீது கோபமாகக் கொட்டினார்.

“அப்பா ஞாபகம் வருதா உனக்கு? அப்பா ஞாபகம் வருது என்ன?” என்று திடீரென்று ஆத்திரமாகக் குரல் உயர்த்தி கேட்டவரைப் பார்த்து மிரண்டு விழித்தாள் சின்னவள்.

தன் ஆத்திரம் துளியும் குறையாமல், “முதல்ல உங்க அப்பா ஞாபகம் ஏன் உனக்கு வரணும்? அதுவும் இந்த வயசுலேயே? சொல்லு…” என்று மகளைப் பார்த்து சீற, அவள் இதுவரை அறியாத அம்மாவின் ஆக்ரோஷத்தில் பயந்து நடுங்கத் தொடங்கி விட்டாள். கண்ணிலிருந்து கரகரவென்று நீர் பொழியத் தொடங்கி விட்டது. அம்மா இப்படி இவ்வளவு தூரம் கோபப்பட்டு இன்று தான் பார்க்கிறாள்.

உள்ளுக்குள் அழுத்தி அழுத்தி வைத்த பாரங்கள் மொத்தமாகப் பொங்கும் நிலைக்கு வந்து விட்டது சுந்தரிக்கு. அதில் அவர் தன்னிலை இழந்து போனார். துரதிர்ஷ்டவசமாக அதற்கு பலியாக நந்தினி மாட்டிக் கொண்டாள்.

மகளின் கண்ணீருக்கும் இரக்கம் காட்டாமல், “ஏன்னா உனக்கு உங்க அப்பா இல்லை. அப்ப அதை போலியா வெறும் ஞாபகங்கள் மூலம் மட்டும் ஈடுகட்டும் நிலமையில நீ இருக்க. ஆனா வெறும் ஞாபகங்கள் மட்டும் போதுமா உனக்கு? நியாயப்படி பார்த்தா உங்க அப்பாவே கூட இருந்து உனக்கு கிடைக்க வேண்டிய சந்தோசங்கள் எல்லாம் கிடைச்சிருக்கணும். உங்க அண்ணன் தான் ஆசைப்பட்டதைப் படிக்க வேண்டிய வயசுல, தன் கனவு, லட்சியத்தை எல்லாம் சிதைச்சுட்டு வேலைக்கு போகாம இருந்திருக்கணும். ஆனா எதுவும் இல்லை, இப்ப வெறும் ஞாபகம் மட்டும் தான் நமக்கு? இதெல்லாம் ஏன்னு உனக்கு தெரியுமா?

நீ கேட்டியே அவனை பார்த்தா அப்பா ஞாபகம் வரலையான்னு… அப்படி வந்ததால தான் இத்தனை இழப்பும். உங்க அப்பாவுக்கு அவனைப் பார்த்து ரத்தம் துடிச்சு போயி தேடிப் போனதால தான், நம்ம குடும்பத்துக்கு இந்த நிலைமை! இன்னும் நானும் தேடிப்போயி நான் வளர்த்த பிள்ளையை தொலைச்சிட்டு நிக்கணுமா?” என்று கண்கள் சிவக்க, முகம் இறுக பெரும் ஆக்ரோஷத்துடன் கேட்க, அவள் ஸ்தம்பித்துப் போனாள்.

இதில் தொலைக்க என்ன இருக்கிறது? சத்யா அண்ணன் வேண்டும் என்றால், விவேக் அண்ணன் வேண்டாம் என்றா அர்த்தம்? அவளுக்கு அது புரியவில்லை. ஆனால், அம்மாவின் ஆக்ரோசத்துக்கு முன்பு அதைக் கேட்கும் தைரியமும் அவளிடம் சுத்தமாக இல்லை.

மகளை பேசவிடும் எண்ணம் சுந்தரிக்கும் இல்லை போல! “பெத்த மகனையே வேண்டாம்ன்னு சொல்லற என்னை பார்க்கும் போது உனக்கு கல்நெஞ்சக்காரியா தெரியலாம். ஆனா இப்ப அவன் தான் சொந்த மகன்னு தெரிஞ்சு போச்சு, சரி அதுக்கு என்ன பண்ணலாம்? வா மகனே அப்படின்னு கூப்பிட்டு நான் அவனை கூட வெச்சுக்க முடியுமா? இல்லை நீ என் மகன் இல்லை போடான்னு விவேக்கை அனுப்பிட முடியுமா?

முடியாது தானே! அப்படி எதையும் யோசிக்கக் கூட முடியலை தானே? சின்ன செடியைத் தான் இடம் மாத்தி வளர்த்த முடியும். வளர்ந்த மரத்தோட வேரை மாத்தறது பெரிய முட்டாள்த்தனம். அப்பறம் எதுக்காக இந்த உறவை வளர்க்கணும்? அவனைப் பார்க்கும்போது ஏங்கி தவிக்காத மாதிரி நான் இருந்தாலும் மனசு எப்படி பரிதவிக்குது தெரியுமா? ஏழு வயசுல இருந்து அம்மா இல்லாத பிள்ளையா வளர்ந்திருக்கான். அவனை பெத்த அம்மா நான் இருந்தும், அம்மா, அப்பா இல்லாத குழந்தையா வளர்ந்திருக்கான். இந்த உண்மையை தெரிஞ்சுக்கிட்ட அப்பறம் எப்படி துடிச்சு போயிட்டேன்னு உனக்கு தெரியுமா?

ஆனா, வேற வழி என்ன? இதுதான் நிதர்சனம்ன்னு ஆயிடுச்சு. இதை ஏத்துக்க தானே வேணும்! அவன் வாழ்க்கை அங்கே தான்! என் புள்ளையோட வாழ்க்கை என் கூட தான்! இதுல எந்த மாற்றமும் இல்லை. இதை குழப்புற மாதிரி அப்பப்ப கண்ணுல பாத்து ஐயோ ஐயோன்னு ஏங்கி யாருக்கு என்ன கிடைக்கப்போகுது? அதுக்கு அவன் எப்பவும் போல எங்கேயோ நல்லா இருந்துட்டு போறான். எனக்கு நீங்க ரெண்டு பேரு மட்டும் போதும். அமைதியா ஒதுங்கி இருந்துக்கறேன்.

அவன் மேல பாசம் நிறைய இருக்கு தான். பெத்த அம்மா நான் அப்படின்னு என் மனசு துடிக்குது தான்! ஆனாலும் அவனை ஏத்துக்க முடியாது. பெத்த பாசத்துக்காகவும் வளர்த்த பாசத்துக்காகவும் ரெண்டு பசங்களும் வேணும்ன்னு சுயநலமாவும் என்னால யோசிக்க முடியலை. அது இன்னொரு குடும்பத்துக்கு செய்யற பாவம் இல்லையா?

இதெல்லாத்தையும் விட எனக்காகவும், உனக்காகவும் தன்னோட கனவை பெருசா மதிக்காம வேலைக்குப் போன என் புள்ளையை எப்படி என்னால விட்டுக்கொடுக்க முடியும்? பிடிச்ச வேலையில பல படி கீழே ஒரு வேலை கிடைச்ச போதும், அதை பிடிச்ச மாதிரி செஞ்சானா? எங்கே அப்பாவுக்கு ஆபத்து வந்த மாதிரி நானும் நேர்மையா இருந்து எனக்கும் ஆபத்து வந்துட்டா அம்மா, தங்கச்சியோட நிலைமை என்ன ஆகும்ன்னு யோசிச்சு எத்தனை பேருகிட்ட இறங்கி போயிருப்பான். எத்தனை இடத்துல மனசாட்சிக்கு விரோதமா வளைஞ்சு கொடுத்திருப்பான். அப்ப எல்லாம் என் புள்ள தினம் தினம் செத்து பிழைச்சானே! யாருக்காக நம்ம ரெண்டு பேருக்காகவும் தானே?

இப்பவும் ஏன் இப்படி ஒரு ஆபத்துல மாட்டிகிட்டான்னா… ரத்த பாசம்… அவன் சொந்த அண்ணன், இன்னொருத்தன் அப்பாவோட ஞாபகத்தை தூண்டற மாதிரி தோட்டத்துல இருந்திருக்கான். இதுல தான் உணர்ச்சி வசப்பட்டு ஆபத்துல மாட்டிட்டான். இல்லாட்டி நம்மளை மறந்து இந்த நிலைக்கு வந்திருக்கவே மாட்டான். இப்படிப்பட்ட மகனை ஒரு நாள் ஒரு பொழுது கூட என்னால விட்டுக்கொடுக்க முடியாது. அவனுக்கு நான் பெத்த அம்மா இல்லைங்கிற உண்மை காலத்துக்கும் தெரியவே கூடாது” என்று ஆவேசமும் அழுகையாக சுந்தரி அம்மா தன் மனப் போராட்டங்களை, தவிப்புகளைக் கொட்டி முடிக்க,

‘அம்மாவின் மிகப்பெரிய நம்பிக்கையை எதிர்பார்ப்பை மொத்தமாக உடைத்து விட்டோமே!’ என்ற குற்றவுணர்வில் முகத்தை அடித்துக் கொண்டு அழத் தொடங்கி விட்டாள் நந்தினி.

அம்மா அண்ணனுக்கு தெரியவே கூடாது என்று எண்ணியிருக்க இவள் கொஞ்சமும் யோசிக்காமல் மொத்தத்தையும் கொட்டி கவிழ்த்திருக்கிறாள். தான் செய்து வைத்த காரியத்தை நினைக்கவே குற்றவுணர்வில் தேகம் நடுங்கியது.

மகளின் நிலையைக் கவனிக்கும் நிலையில் சுந்தரியும் இல்லை. அவர் ஒருபுறம் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். விவேக்கிற்கு உண்மை தெரிந்து விடக்கூடாதே என்னும் தவிப்பு ஒரு பக்கம்! சத்யாவை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே என்கிற பரிதவிப்பு மறுபக்கம்!

அவரின் மனதின் வேதனைகளைக் கோபமாக கொட்டி தீர்த்தவர், மகன் எழுந்து விட்டதையும் உணரவில்லை. வாசலில் நின்றிருந்த ஆதி, சத்யாவையும் கவனிக்கவில்லை.

ஆம், அலக்கியா, தான்பாபுவை விமான நிலையத்தில் ஏற்றிவிட்ட கையோடு, தாராவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு விவேக்கை தேடித்தான் இருவரும் வந்தார்கள். வீட்டின் அருகில் வந்தபோது விவேக்கிற்கும் கைப்பேசியில் அழைத்து சொல்லியிருக்க, விவேக்கும், ‘இவர்கள் இருவரும் வரட்டும். அனைவரும் பொதுவாக இருக்கும்போது அம்மாவிடம் பேசிவிடலாம்’ என்று எண்ணி உறக்கத்திலிருந்து விழித்திருந்தவன், கூடத்தில் அம்மாவின் சத்தம் ஆக்ரோஷமாகக் கேட்பதைக் கேட்டு பதறிக்கொண்டு வெளியே பார்த்தான்.